மனம் என்பது ஒரு பிரபஞ்சத்தையே உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு இந்த அண்டத்தையே அடக்கி ஆளும் வலிமை இருக்கிறது. மனம் ஒரு விஷயத்தை உறுதியாக நினைத்தால் அது நனவாகும் சாத்தியம் இருநூறு சதவீதம் இருக்கிறது. மனம் செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்று கூறுகிறது திருமூலர் வாக்கு. மனம் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களால் நிரம்பி வழிகிறது. எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் திறன் எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை.

அத்தகைய வலிமை வாய்ந்த மனம் இன்று அவளுக்கு அடங்காமல் சண்டித்தனம் பண்ணியது. நேற்றெல்லாம் நன்றாக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தவளுக்கு இன்று காலையில் பின்னந்தலை லேசாக வலித்தது. எரிச்சலாக உணர்ந்தாள். காரணமின்றி அழுகை வரும்போல இருந்தது. சலிப்பான மனநிலையில் இருந்தாள். குடும்பத்தில் சிறிது சலசலப்பு எழுந்தது. வழக்கமாக பதினைந்து நிமிடங்கள் சைக்கிள் ஓட்டிவிட்டு, இருபது நிமிடங்கள் எளிய உடற்பயிற்சிகள் செய்பவள், அந்தப் பக்கமே போகவில்லை. மனம், “எந்திரி… சைக்கிளை எடு… போ…” என்று சொல்ல, அதை அடக்கிவிட்டு இன்னொரு குரல் மண்டைக்குள், “வேண்டாம், பேசாம உக்காரு” என்று அதட்டியது. ஏனென்று புரியாமல் இருந்தவள் காலண்டரை நோக்க, நாற்பதுகளின் மத்தியில் இருந்தவளுக்கு அப்போதுதான் இது ‘மூட் ஸ்விங்’காக இருக்குமோ என்று தோன்றியது.

இந்த மூட் ஸ்விங் எனப்படும் அலைவுறு மனதால் Premenstrual dysphoric disorder (PMDD) எனப்படும் கடுமையான உணர்ச்சி வசப்படும் மனநிலை இருக்கும். Prementural Syndromeஇல் பதற்றம், எரிந்து விழுவது, தேவையற்ற வாக்குவாதம், குழம்பிய மனநிலை, எதிலும் முடிவெடுக்க முடியாத அளவிற்கான கோளாறு அல்லது மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் சிலசமயம் தற்கொலை வரைக்கும்கூட கொண்டு போய்விடும். இந்த மனநிலை மாற்றங்கள் மாதவிடாய்க்குச் சரியாக ஏழு நாள் முன்பு தோன்றி, மாதவிடாய் வரும் இரண்டொரு நாளுக்கு முன்பு சரியாகும். “இதெல்லாம் பெரிய விஷயமா? எங்க பாட்டி, அம்மால்லாம் இந்த மாதிரி அலட்டுனதே இல்லை…” என்று பேசும் ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது இதுதான், “ஆமாங்க… இதெல்லாம் பெரிய விஷயம்தான். உங்க பாட்டி, அம்மால்லாம் இதைப் பத்தி வெளிப்படையா பேசுற அளவுக்கு நீங்க நடந்துக்கலை” என்பதுதான்.

ஒரு பெண்ணின் பொதுவான மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒரு முறை. அப்போது ஹார்மோன்கள் பலவிதமான மாற்றங்களுக்கு உட்படும். அதிலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாதவிடாய் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். மூன்றாவது வாரத்தில் உச்சத்திற்குப் போகும், பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பிக்கும். நான்காவது வாரத்தில் படிப்படியாக அதல பாதாளத்துக்குச் சரியும் போதுதான் இந்த ‘மூட் ஸ்விங்’ மெல்ல எட்டிப் பார்க்கும். மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுவலி, தலைவலி, அடிவயிறு கனமாவது, வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி, மார்பகங்கள் இரண்டும் கல் போல  கனப்பது போன்றவையும் தோன்றலாம்.

இனம் புரியாத சோகம், மனநிலையில் திடீர் மாற்றங்கள், கோபம், சோகம், அழுகை, மயக்கம், எரிச்சல், அதீத தூக்கம், நிலையற்ற மனநிலை, பதற்றம், தூக்கமின்மை, பலவீனம், எதிலும் ஆர்வமின்மை, சோர்வு என்று இந்த மூட் ஸ்விங் அட்டகாசம் செய்யும். இதைச் சரிசெய்வது அந்தந்தப் பெண்கள் கையில்தான் இருக்கிறது. இதற்கான முறையான மருத்துவ சிகிச்சையை இந்த ஊஞ்சலாடும் மனநிலை பேயாட்டம் ஆடும்போதுதான் கொடுக்க இயலும். அதற்காக வேறு உடல் உபாதைகளுக்கான எச்சரிக்கையாக இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தி விடாதீர்கள் பெண்களே. என் சின்ன வயதில் எங்கள் பக்கத்து தெருவில் ஓர் அக்கா தீ வைத்துக்கொண்டு இறந்துவிட்டார். இன்னொரு தெருவில் உறவினர் பெண் ஒருவர் தூக்கிட்டுக்கொண்டார். இருவருமே நாற்பதுகளில் இருந்தவர்கள். இறந்தவரின் மகளுக்குச் சின்ன வயது. பின் வளர்ந்து கல்யாணம் செய்து ஒரு குழந்தைக்கும் தாயானவர் அதே நாற்பதுகளில் அம்மா இறந்த அதே அறையில் அதே போல் தூக்கிட்டுக்கொண்டார். அப்போது எல்லாரையும் போல எனக்கும் எதுவும் புரியவில்லை. இப்போது யோசித்துப் பார்க்கையில் ஹார்மோன் மாற்றங்களால் தங்கள் உடலிலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றங்களை அவர்கள் புரிந்துகொள்ளாமலும், பகிர்ந்துகொள்ள ஆளில்லாமலும்தான் இதுபோன்ற முடிவுகளுக்கு வந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இன்னொரு தோழியின் கணவர்,”அவ எதுக்கெடுத்தாலும் கத்துறாங்க… ஓயாமப் பேசுறா… சும்மா சும்மா டென்ஷன்‌ ஆகுறா… அவ வெக்குறதுதான் இங்க சட்டமா இருக்கணும்னு நினைக்குறா. வீட்டுக்கு வரவே எரிச்சலாக இருக்கு” என்று புகார் வாசித்தார். ஐயாமார்களே, வெளியில் சென்று வரும் உங்களுக்கே எரிச்சல் வருகிறதென்றால் நாள் முழுக்க வீட்டில் பேச ஆளில்லாத பெண்களுக்கு எவ்வளவு எரிச்சல் வரும்? அவர்கள் ஏதாவது சொல்ல வருவதைக் கொஞ்சம்கூடக் காதில் போட்டுக்கொள்ளாமல், அலைபேசியிலோ தொலைக்காட்சியிலோ மதுவிலோ மூழ்கிக் கிடக்கும் உங்களுக்குப் பெண்களின் பிரச்னைகள் எப்படிப் புரியும்? எப்போது புரியும்? சொல்வதற்கு யாரும் இல்லாததால் அவர்கள் தங்களுக்குள்ளேயே புலம்பித் தீர்க்கிறார்கள். அவ்வாறான நேரத்தில் குடும்பத்தினரும் தங்கள் பங்குக்கு வறுத்தெடுத்தால் எப்படி? கணவரோ குழந்தைகளோ கொஞ்சம் அருகில் அமர்ந்து ஆறுதலாகப் பேசத் தொடங்கினாலே பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் சட்டென்று அடங்கிவிடுவார்கள். அதிகமாக எண்ணெய் பதார்த்தங்களை உண்பது, உடல் பருமன், ஒரே இடத்தில மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது, போதிய தூக்கமின்மை, அதிக அழுத்தங்கள் போன்றவை இந்தப் பிரச்னையை அதிகரிக்கவே செய்யும்.

உடற்பயிற்சியின்மை, சரிவிகித ஊட்டச்சத்து இல்லாமை, தூக்கமின்மை, மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை எல்லாம் மூடு ஸ்விங்ஸை அதிகரிக்கலாம். அதனால் இயன்ற அளவு யோகா, தியானம், மிதமான, எளிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, விட்டமின்கள், கால்சியம் சத்து, புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தாருக்கு என்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்துவிட்டு, தன் உடல்நிலை கெட்ட பிறகு புலம்பும் பெண்கள்தாம் இன்றும் அதிகம். நமது உடல்நிலையை நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். மட்டுமின்றி மாதவிடாய்க்கு முந்தைய வாரம் இது போன்ற உணர்வுக் கொந்தளிப்பு வருவதை இனம் கண்டு கொண்டு பெண்கள் தங்கள் உணர்ச்சிவசப்படுதலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது பலவிதத்திலும் நன்மை பயக்கும். எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்பவர்கள் உடற்பயிற்சி செய்ய சோம்பல் படுபவர்கள். வழக்கத்தைவிட சீக்கிரம் உறங்கச் சென்று, சீக்கிரம் எழுந்தால் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது அதிகமாகக் கிடைக்கும். ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்களாவது உடற்பயிற்சி கட்டாயம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நமக்கு விருப்பமான எந்தப் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். மாதவிடாய் நேரத்தில்கூட மிதமான பயிற்சி செய்வது மாதவிடாயின் தீவிரத்தைக் குறைக்கவே செய்யும். சம்பந்தப்பட்ட பெண்கள் இதற்குச் சுணங்கினால்கூட குடும்பத்தினர் அவர்களை உற்சாகப்படுத்தி, தாங்களும் உடல் பயிற்சி செய்தால் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் உறவுகளின் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த உதவும். அந்த நேரத்தை ஒதுக்கக்கூட நேரமில்லை என்று சொன்னால் உங்களை யாராலும் இந்தப் பிரச்னையிலிருந்து விடுவிக்க முடியாது. நமக்கான தீர்வை நாம்தான் தேட வேண்டும். நம் வாழ்க்கைக்கான மகிழ்ச்சி நம் மனதின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தே அமைகிறது. அதனால் நமது எண்ணங்களை நேர்மறைச் சிந்தனைகளால் நிரப்பிக் கொள்ளலாம். பிடித்த இசை கேட்கலாம். நடனம் ஆடலாம். புத்தகங்களை வாசிக்கலாம். இல்லையென்றால் ‘மூட் ஸ்விங்’கைத் தவிர்க்க அது குறித்த கட்டுரையைக்கூட எழுதலாம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.