பயன்பாட்டில் இருந்த பொருட்கள்-2
மிருதுவான வெளிர்சாம்பல் நிறக் கருங்கல் மாக்கல் எனப்படுகிறது. தேய்த்தால் கையில் வழவழப்பாக வருமளவிற்கு இது மிருதுவானது. அனைவருக்கும் தெரிந்த பொருள் என்றால், இப்போது பயன்படுத்தப்படும் பலப்பம் என்னும் சிலேட்டுக் குச்சி இந்த மாக்கல்லில்தான் செய்யப்படுகிறது.
இப்போது பயன்படுத்தப் படும் என ஏன் சொல்கிறேன் என்றால், நாங்கள் பயன்படுத்திய சிலேட்டுக் குச்சி, இதைவிடக் கடினமாக, கறுப்பாக இருக்கும். ஏறக்குறைய மெழுகு நீளத்தில், மெழுகு வரும் பெட்டி அளவிலான பெட்டியில் வரும்.
மாக்கல்லைக் குடைந்து மாக்கல் சட்டி செய்யப்படுகிறது. நிறம் ஏறக்குறைய எருக்குப்பூ நிறத்தில் இருப்பதால், எருக்கஞ்சட்டி என்றும் அழைக்கப்படுகிறது. மிக நல்ல உவமை.
மாக்கல் சட்டியை அடுப்பில் வைத்து சமைக்க வேண்டுமென்றால், ஓரிரு நாட்கள் பாத்திரம் முழுவதும் எண்ணெய் தேய்த்து வெயிலில் காய வைப்பார்கள். அப்படிச் செய்யும் போது, துளைகள் அடைபட்டு பாத்திரம் உறுதியாகிறது. சூட்டைத் தாங்கும் திறனைப் பெறுகிறது. இந்த முறையைப் பழக்குதல் என்கிறார்கள். அப்படிப் பழக்காத பாத்திரத்தைச் சூடாக்கினால், விரிசல் ஏற்பட்டுவிடும்.
பழக்கப் பட்ட சட்டி
பழக்காத பாத்திரத்தில் ஊறுகாய், உப்பு, புளி போன்றவற்றை வைக்கிறார்கள்.
மண் சட்டி
மட்பாண்டங்கள் தற்போது பல்வேறு வடிவங்களில் வருகின்றன என்றாலும் பயன்பாடு என்பது மிகவும் குறைவு தான்.
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போதே மண்பாண்டங்களில் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது என்றாலும் சில குழம்புகளை மண்சட்டியிலேதான் வைப்பார்கள். மீன், கருவாட்டுக் குழம்புகள் மண்சட்டியில் மட்டுமே வைக்கப்படும். அதற்கென தனிச் சட்டி, அகப்பை எல்லாம் எல்லா வீட்டிலும் இருக்கும்.
அதே போல பருப்பு குக்கரில் வேகவைக்கும் வழக்கம் இல்லை என்பதால், மண் சட்டியில் வேகவைத்துக் கடைந்தால், விரைவில் கடைபடும் என்பதற்காகப் பருப்பும் மண்சட்டியில் வேகவைப்பார்கள்.
புதிதாக மண்சட்டி வாங்கி அதை அப்படியே பயன்படுத்தினால், மண்வாசனை வரும். விரைவில் சட்டி விரிசல் காணும். அதனால், ஓரிரு நாட்கள் சோறு வடித்த தண்ணீர், அல்லது மோர் ஊற்றி வைத்துப் பின் அதைக் கழுவிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
எங்கள் வீட்டில் இப்போதும் அனைத்தும் மண்சட்டி சமையல்தான். சட்டியின் அடிப்பாகம் நமது அடுப்பில் நிற்குமா எனப் பார்த்து வாங்கினால் எரிபொருள் குறைவாகச் செலவாகும். சட்டி சூடாவதற்கு நேரமாகும். ஆனால், அதிக நேரம் சூடாக இருக்கும். அதனால் வழக்கத்தைவிட ஓரிரு நிமிடங்களுக்கு முன் எடுத்துவிடலாம். அடிப்பாகம் கனமாக இருப்பதால், எண்ணெய் இல்லாமல் அல்லது எண்ணெய் குறைவாகச் சேர்த்து சமைக்கலாம். Microwave அடுப்பிலும் பயன்படுத்தலாம்.
சமீபத்தில் பார்த்த ஒரு வீடியோவில் இலங்கையில் ஓர் உணவு விடுதியில் பிரியாணியைப் புது மண்சட்டியில் வைத்துக் கொடுக்கிறார்கள். இதை அனைவருமே நடைமுறைப்படுத்தலாம். ஒரு சட்டியின் விலை நாற்பது ரூபாய்தான். மொத்தமாக வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும். வீணாகப் போகும் பொருள்கள் கொண்டு கட்டிக் கொடுப்பதைவிட இது பயனுள்ளதாக இருக்கும்.
எண்ணெய் இல்லாமல் பொரியல் போன்றவை செய்யும் போது சட்டியின் அடிப்பகுதி சீக்கிரம் விரிசல் விட்டுவிடும். ஆனாலும் நான்கு சட்டி வாங்கிப் பயன்படுத்தினால், ஓர் ஆண்டின் அனைத்துச் சமையலுக்குமே பயன்படுத்தலாம். அடுத்த ஆண்டு புதுச் சட்டி வாங்கிக்கொள்ளலாம். அதனால் தான் பழைய பானைகளை அப்புறப்படுத்திவிட்டு, பொங்கலுக்குப் பொங்கல் புது மண்பானைகள் வாங்கும் வழக்கம் வந்தது.
வீட்டில் குடிதண்ணீருக்கென மண்பானை வைத்திருப்பார்கள். மண்பானைத் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இதமாக இருக்கும். பானையின் துளைகள் வழியாகத் தண்ணீர் சிறிது கசிந்து, பானையின் வெளிப்பக்கம் தடவிப் பார்த்தால் ஈரம் தெரியும். தரை நனையாமல் இருக்க சிலர், தரையில் சிறிது மணல் போட்டு அதன் மேல் பானையை வைப்பார்கள். சிறு பிரிமனை எனப் பாத்திரங்கள் வைப்பதற்கென பனை நாரில்/ வைக்கோலில் செய்யப்பட வட்டு உண்டு. அதில் சிலர் வைப்பார்கள். பள்ளி போன்ற பொது இடங்களில் ஏறக்குறைய மூன்று அடி உயரத்தில், மரத்தாலான முக்கோண அமைப்பு உண்டு. அதன் நடுவில் இடைவெளி இருக்கும். அதன் மீது பானையை வைப்பார்கள். பெரும்பாலும் பள்ளி போன்ற பொது இடங்களில் இவற்றைப் பயன்படுத்துவார்கள். பள்ளி பானையின் தண்ணீர் அம்பேத்கருக்கு மறுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் மீட்பின் தந்தை மார்ஷல் நேசமணி காலத்தில், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆதிக்க சாதியினருக்குத் தண்ணீர் அருந்த ஒரு பானையும் மற்றவர்களுக்கு வேறு பானையும் என்ற இரு பானை நடைமுறை இருந்திருக்கிறது. நேசமணி, ஒரு பானையை உடைத்து எறிந்திருக்கிறார். அதனையடுத்து, ஒரு பானை நடைமுறை வந்திருக்கிறது. இவ்வாறு பானையில் பெரிய வரலாறே புதைந்து உள்ளது.
பல வீடுகளில் சோறு மண்பானையில் பொங்கினார்கள். மண் பானையில் சோறு பொங்கினால், சோறு ஓரிரு மணி நேரம் கூடுதலாகக் கெட்டுப் போகாது. அதற்கென மூடியும் உண்டு. அதற்கு உலை மூடி என்று பெயர். சோறு பொங்கும் செயலை உலை வை, உலை கொதிக்குது, உலையை இறக்கு போன்ற சொற்களைக் கொண்டுதான் அழைப்பார்கள். அதற்கான மூடி உலை மூடி. விமானத்தில் மண்பானை கொண்டு வருவது சிரமம் என்பதால், பானை என்னிடம் இல்லை. ஆனால், சோறு வடிக்கும் போது உலைமூடி பயன்படுத்தும் வழக்கம் உண்டு. உலைமூடி பயன்படுத்தினால், சோறு வடிப்பது எளிது.
கலயம்
‘கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா – நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா’
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
வரதப்பா வரதப்பா
கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா
கஞ்சிக் கலயம் தன்னைத் தலையில் தாங்கி
வஞ்சி வருதப்பா
கஞ்சிக் கலயம் சுமந்து நானும்
தண்டைக் குலுங்க நடக்கணும்
நடந்து வரும் அழகைப் பாத்துப்
பசியும் கூடப் பறக்கணும்
கஞ்சிக் கலயத்த வஞ்சி சுமக்கயிலே…
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
எனக் கலயம் பாடல்கள் ஏழைகளின் வாழ்வில் ஓர் அங்கமாகவே இருந்திருக்கிறது.
கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை… கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தாயா?
இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் தெரியாத தமிழர்கள் மிகச் சொற்பமே!
கலம் என்ற பதமே கலயம் என மாறியிருக்கிறது என்கிறார்கள். சிலர் கலசம் எனச் சொல்வதும் உண்டு. நீராகாரம் குடிப்பதற்கு லகுவான பாத்திரமாக இருந்ததால், காடுகளில் வேலை செய்பவர்கள் இதைப் பெரிதும் பயன்படுத்தினர்.
பனைகளில் பதநீர் சேகரிப்பதற்குக் கலயத்தை இன்றும் பயன்படுத்துகிறார்கள்.
பானை பழசாகிவிட்டால் அதை இவ்வாறு கழுத்துப் பகுதியில் உடைத்து, தானியங்கள், நிலக்கடலை வறுக்கப் பயன்படுத்துவார்கள். கொல்லங்கொட்டை வறுத்து, அதன் தோலில் இருந்து வரும் திரவத்தை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். அந்தத் திரவத்தை வடித்து எடுப்பதற்கு இப்படி உடைத்த பானை வசதியாக இருக்கும். இது உடைத்த பானை அல்ல; பறவைக்கு உணவு வைக்கும் பானை.
இந்த மண் பாத்திரம் அமெரிக்காவில் ஒருவர் கொடுத்தது. எந்த அடுப்பிற்கும் ஏற்றது. கையாளுவதற்கும் மிகவும் எளிதாக இருக்கும்.
(தொடரும்)
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.