நெதர்லாந்துக்குச் சென்று வந்ததின் அடையாளமாக, நீங்கள் உங்கள் நண்பரை ஏதேனும் வாங்கி வரச் சொன்னால், அவர் ஷூ அடையாளமிட்ட ஒரு பரிசுப் பொருளை வாங்கி வந்து கொடுத்தால் எப்படி இருக்கும்? என்னை அவமானப்படுத்துகிறாயா என்று சண்டைக்குச் செல்லாதீர்கள். அந்த ஷூவுக்குப் பின் பெரிய வரலாறே இருக்கிறது.
சிறிய கடைகள் தொடங்கி பெரிய கடைகள் வரை இந்த ஷூவை மையப்படுத்திய பல பரிசுப் பொருட்களை நீங்கள் பார்க்கலாம். என்னைச் சற்றே ஆச்சரியப்படுத்திய விஷயத்தைப் பற்றி ஒரு கடையில் கேட்டபோது, அந்தக் காலத்தில் சேரும் சகதியுமாக இருந்த நிலத்தில் ஷூ இன்றி நடக்க முடியாமல் இருந்ததால், அதன் அடையாளமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். சற்றே ஆராய்ந்து பார்த்தபோது மேலும் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
நெதர்லாந்து என்றால் தாழ்ந்த நிலப் பகுதி என்று பொருள். நாட்டின் கால் பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் பெரும்பாலும் சதுப்பு நிலமாக இருந்த நாடு, நில மீட்புத் திட்டங்களின் மூலம் மக்கள் வாழத் தகுந்ததாக மாறி இருக்கிறது. கடல் மட்டத்திற்கு இவ்வளவு கீழே உள்ள நாடு இன்னமும் கடலில் மூழ்காமல் இருப்பது அதிசயம் அல்ல. மிகச் சிறப்பான திட்டமிடலுடன் செயல்படுத்தப்பட்டுள்ள மனித முயற்சியின் அடையாளம்.
திட்டமிட்டுக் கட்டப்பட்ட அணைகள், மணற்குன்றுகள், வெள்ளத் தடுப்பு வாயில்கள், பம்ப் ஹவுஸ்கள் எனப்படும் நீரை இறைத்து வெளியேற்றும் அமைப்புகள் என்கிற கூட்டுத் திட்டங்களின் மூலம் நெதர்லாந்தின் நீர்மட்டங்கள் உயராமல் பாதுகாப்பாக இருக்கிறது.
கடலின் அடிப்பகுதியில் இருந்து மணலை அள்ளி எடுக்கும் பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் குன்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மணல் குவிக்கப்பட்டு, அதன் மேல் மண் அரிப்பைத் தடுக்க புற்கள் நடப்படுகின்றன. கடல்மட்டம் அதிகரிக்கும் போது, மணல் குன்றுகள் வெள்ளத்தைத் தடுக்கின்றன. வெள்ளத் தடுப்பு வாயில்களாக விளங்கும் வாய்க்கால்கள், நகரம் முழுவதிலும் இருந்து நீரை வெளியேற்றுகின்றன. வட ஐரோப்பாவின் வெனிஸ் என்று ஆர்ம்ஸ்டர்டாம் அழைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் இந்த வாய்க்கால்கள். பம்ப் ஹவுஸ்கள் எனப்படும் நீரை இறைத்து வெளியேற்றும் அமைப்புகளை நிறையவே காணலாம். இந்த பம்ப் ஹவுஸ்களுக்குக் காற்றாலை மூலம் மின்சக்தி அளிக்கப்படுகிறது. நெதர்லாந்து காற்றாலைகளின் நாடு என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இதுதான். ஆம்ஸ்டர்டாம் போன்ற பெரு நகரங்களில் நவீன காற்றாலைகள் அமைந்திருந்தாலும், இன்னமும் மரத்தினால் ஆன பதினேழாம் நூற்றாண்டு காற்றாலைகள் நகரத்துக்கு வெளியே இயங்கிக் கொண்டுள்ளன. இந்தக் காற்றாலைகளைச் சென்று பார்ப்பது ஒரு முக்கியச் சுற்றுலாவாக மேம்பட்டுள்ளது.
சதுப்பு நிலத்தில் ஷூ இன்றி வாழ முடியாத நிலையில் இருந்த மக்கள் சரியான திட்டமிடலுடன், அறிவார்ந்து யோசித்து, தொழில்நுட்பத்தின் துணை கொண்டு நாட்டைக் கட்டி எழுப்பி உள்ளனர். இன்றைக்கு எல்லா விதமான போக்குவரத்து வசதிகளும் மிகுந்த நாடாக வளர்ச்சி அடைந்திருக்கிறது நெதர்லாந்து.

சீரான திட்டமிடலுடன் அமைந்திருக்கும் இந்த நகரத்தின் சாலைகள் மையப் பகுதியில் நகரத்தின் பரபரப்பைக் கொண்டிருந்தாலும், சற்றே தள்ளிச் செல்லும்போது, அமைதியான கிராமத்து வாழ்க்கையின் அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. நகரத்தை ஊடறுத்துச் செல்லும் ஆம்ஸ்டெல் நதி எந்தக் குறுக்கீடுகளும் இன்றி நகரத்தைக் கடந்து அமைதியாகக் கடலைச் சென்று சேர்கிறது. அந்த நதி செல்லும் வாய்க்கால்கள் அனைத்திலும் படகுப் போக்குவரத்து இருக்கிறது. டிராம், மெட்ரோ, பேருந்துப் போக்குவரத்தைப் போல படகுப் போக்குவரத்தும் பயன்பாட்டில் உள்ளது. எல்லாவற்றிலும் ஒரே கார்டை உபயோகப்படுத்திப் பயணம் செய்யலாம்.
மணல் குன்றுகளைப் பாதுகாக்க, புற்கள் நடப்பட்டன அல்லவா, அந்தப் புற்கள் மாடுகளுக்கு நல்ல தீவனமாக அமைந்தன. இது பாலை உற்பத்தி செய்வதற்கான திறனை அதிகரித்ததால் நெதர்லாந்தில் வளர்க்கப்படும் ஹால்ஸ்டீன்-ஃப்ரிஸியன், அதாவது முழுக்க வெள்ளை, கறுப்பு நிறத் திட்டுகள் காணப்படும் மாடுகள், ஒரு நாளுக்கு 30 லிட்டருக்கும் மேல் பாலை வழங்கக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. அதிகப்படியான பால் உற்பத்தி அதன் துணைப் பொருட்களின் உற்பத்திக்கும் வழிவகுத்தது. கிட்டத்தட்ட பதினெட்டாம் நூற்றாண்டில், குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைப்பது கஷ்டமாக இருந்தபோது, பால் அதிகப்படியாக இருந்திருக்கிறது. எனவே பாலும் பால் பொருட்களும் முதன்மை உணவுப் பொருட்களாயின. சீஸ் இன்றி டச்சு மக்களின் உலகம் விடிவதே இல்லை. வேகவைத்த பீன்ஸும், கொஞ்சம் சீஸும் மட்டுமே மதிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர். பின்னர், கொஞ்சம் உருளைக்கிழங்கும் சேர்ந்து அமைந்தால் கேட்கவே வேண்டாம்.
இப்படிப் பால் பொருட்களை அதிக அளவில் உட்கொண்டதன் காரணமாக, உடலில் கால்சியம், புரோட்டின் அளவு அதிகரித்து, எலும்புகள் பலமாகின. இந்த உணவுமுறையின் விளைவாக, நெதர்லாந்து மக்களின் சராசரி உயரம் ஆறடிக்கு மேல் உயர்ந்துள்ளது. நெதர்லாந்து ஆண்களில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆறடிக்கும் மேல் உயரம் கொண்டவர்கள். பெண்களின் சராசரி உயரம் 5 அடி 17 அங்குலம் (170 செ.மீ). உலகம் முழுவதிலும் சராசரி உயரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, நெதர்லாந்து மக்கள் உலகிலேயே உயரமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
ஆனால் 18ஆம் நூற்றாண்டில், நெதர்லாந்து ஆண்களின் சராசரி உயரம் சுமார் 165 செ.மீ., பெண்களின் உயரம் சுமார் 154 செ.மீ. மட்டுமே இருந்தது. இது இன்றைய உலக சராசரியைவிடக் குறைவு. இன்றைய உயரத்துடன் ஒப்பிட்டால், சுமார் 15–20 செ.மீ. குறைவாக இருந்ததாக அர்த்தம். பல தலைமுறைகளாகப் பால் பொருட்களை முக்கிய உணவாக ஏற்றுக்கொண்டதன் காரணமே, அவர்களை உலகில் சராசரி உயரத்தில் கடைசி நிலையில் இருந்து முதன்மை நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.
நெதர்லாந்தில் அமைந்துள்ள சீஸ் மியூசியம், சீஸ் ஃபேக்டரி போன்ற இடங்களை இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம். பால் பொருட்களின் வாடையே ஆகாத எனக்கெல்லாம் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீஸ் கட்டிகளின் அருமை தெரியவில்லை. சீஸ் ஃபேக்டரியின் வாடை தாங்க முடியாமல் மாஸ்க் அணிந்து கொண்டு, அங்கே இலவசமாக ருசி பார்க்கக் கொடுக்கப்படும் சீஸ் பொருட்களையும் வேண்டாம் என்று கூறிவிட்டு, வெறும் கையை வீசிக்கொண்டு வெளியே வந்தேன்.
நெதர்லாந்து நகரங்களில், குறிப்பாக அல்க்மார், கௌடாஆகிய இடங்களில் நடைபெறும் சீஸ் மார்க்கெட்டுகள் மிகவும் பிரபலம். பாரம்பரியமாக வெள்ளை உடைகள் அணிந்த வியாபாரிகள் சீஸ் வியாபாரம் செய்வதை மக்கள் வேடிக்கை பார்க்க, அதுவும் ஒரு முக்கிய டூரிஸ்ட் இடமாக மாறியுள்ளது. ஒவ்வொரு கோடையிலும் இயங்கும் இந்த சீஸ் மார்க்கெட்டைப் பார்ப்பதற்காகவும், சீஸை வாங்குவதற்காகவும், மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கே குவிகின்றனர். பாரம்பரிய முறையில் சீஸ்களை எடுக்கும் நிகழ்வுகள் போன்றவை ஒரு பண்டிகையைப் போன்ற அனுபவத்தை வழங்குகின்றன.
2015ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் சீஸ் அருங்காட்சியகத்தில் இருந்து சீஸைத் துருவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சீஸ் ஸ்கிராப்பர் திருடப்பட்டது. அதைத் திருப்பிக் கொடுத்தால் மிகப் பெரும் வெகுமதிகள் வழங்கப்படும் என்று அறிவித்தும் அது திரும்பக் கிடைக்கவில்லை. திருடியவர்களையும் இன்றளவும் பிடிக்க முடியவில்லை. திருடும் அளவுக்கு அதில் என்ன சிறப்பம்சம் என்கிறீர்களா? பிளாட்டினத்தால் செய்யப்பட்டு 220 வைரங்கள் பதிக்கப்பட்ட சீஸ் ஸ்கிராப்பர் அது.
எங்கு பார்த்தாலும் சுழலும் காற்றாலை, சீராக ஓடும் வாய்க்கால்கள், நிரம்பி வழியும் பசுமை, பழமைவாய்ந்த கலாச்சாரம், அதேசமயம் நவீன வாழ்க்கைமுறை இவை அனைத்தும் சேர்ந்து பழங்காலக் கலாச்சாரமும் நவீன தொழில்நுட்பமும் இணைந்த ஓர் அற்புத நாடு எனும் அனுபவத்தைக் கொடுக்கின்றன.
(தொடரும்)
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.




