ஜஸ்டினுக்குப் பதற்றமாக இருந்தது. இது வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் பணியாற்றி வந்தவனுக்குப் புதிய வேலையும் பதவி உயர்வும் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு சிக்கல்.
இருபாலரும் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்குக் கணிதம் எடுக்க வேண்டும் என்று நினைத்தாலே அவனுக்கு உதறல் எடுத்தது.
அதுவும் அந்தப் பள்ளி மாணவிகள் எல்லாம் படு பயங்கரமான ரவுடிகள் என்று ஊரில் பெயரெடுத்திருந்தார்கள். விடுதியில் சுவரேறிக் குதித்து இரவு ஊரைச் சுற்றி விட்டு வந்த மாணவிகளைக் கேள்வி கேட்ட ஓர் ஆசிரியரைக் கம்பளியைப் போட்டு மூடி அடித்து உதைத்ததில் அவர் பணி மாற்ற உத்தரவு வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு ஓடி விட்டார்.
இந்த வேலை கிடைத்ததும் தயங்கித் தயங்கித்தான் வீட்டில் சொன்னான் ஜஸ்டின். மனைவி உஷாவோ கிண்டலடித்தாள்.
”டேய்! நீயா? அந்த ஸ்கூல்லயா? பார்த்துடா. பொண்ணுங்க எல்லாம் ஒரு மாதிரி அங்க. சமாளிப்பியா? பார்த்து ஒழுங்கா ட்ரஸ் பண்ணிட்டுப் போ!”
முதல் நாள், கழுத்து வரை பட்டன் போட்ட சட்டை, கணுக்கால் வரை புரளும் வேட்டி, தோளில் நீளத்துண்டு என்று அடக்க ஒடுக்கமாகவே கிளம்பினான் ஆசிரியர் ஜஸ்டின். பள்ளியில் நுழைந்து தனது வகுப்பை நோக்கிச் சென்றான். லேசாக எட்டிப் பார்த்தால், பெண்களில் பாதி பேர் பெஞ்சில் உட்காரவே இல்லை. கடைசி பெஞ்சில் நான்கு பெண்கள் மேஜையின் மீது அமர்ந்து பையன்கள் இருக்கையை நோக்கி ராக்கெட் விட்டுக் கொண்டிருந்தார்கள். பையன்களில் சிலர் இவர்களின் குறும்பை ஓரக்கண்ணால் ரசித்தபடி இருந்தார்கள். சில ஒழுங்கு உத்தம புத்திரர்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டியபடி வகுப்பறைக்குள் நுழைந்தான் ஜஸ்டின்.
”குட்மார்னிங் சார்ர்ர்ர்ர்ர்”
”குட்மார்னிங்!” – லேசாகச் சிரித்தான். முகத்தில் பயத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று எவ்வளவு முயன்றும், பதின்வயதுப் பெண்கள் அத்தனை பேரின் கூர்மையான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பார்வை தாழ்ந்தது.
“சார் ரொம்ப வெட்கப்படுறார்டி!” – ஒருத்தி சத்தம் போட்டாள்.
”அழகா இருக்கார்ல. கல்யாணமாயிடுச்சா சார்?” – இன்னொரு குரல் கேட்டது.
ஜஸ்டினுக்கு அழுகை வந்து விடும் போல இருந்தது.
க்ளாஸ் லீடராக இருந்த மாணவி எழுந்து எல்லாரையும் அடக்கினாள்.
“சும்மா இருங்கடி. சார் பாவம்.”
அமைதியாக அடக்கமாக இருந்த ஜஸ்டினைப் பையன்களுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. சில நாட்களுக்குப் பின் பயம் தெளிந்து வகுப்புக்குச் சகஜமாகச் செல்லத் தொடங்கினான் ஜஸ்டின்.
அப்போதுதான் ஒரு நாள்…
வகுப்பறைக்குள் நுழைந்ததும் மேஜை மீது ஒரு காகிதம் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அதன் முகப்பில் இதயம் வரையப்பட்டு அதில் அம்புக்குறி இடப்பட்டிருந்ததைக் கண்டதும் ஜஸ்டினுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்ட போதும் கோபமும் வந்தது. எவ்வளவு துணிச்சல்? யார் செய்திருப்பார்கள்? அந்தத் துடுக்குக்காரி லீலாவாக இருக்குமோ?
அனைவருக்கும் பயிற்சிக் கணக்குகள் கொடுத்து விட்டு அதை ஓசைபடமால் பிரித்துப் பார்த்தான். கடிதத்தில் மிக அற்புதமான கவிதை ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் பதின் வயதுக்கே உரிய விரகம் கொட்டிக் கிடந்தது. யார் எழுதியதென்று பெயரில்லை.
பள்ளிக்கு வந்த நாள் முதல் ஜஸ்டின் அணிந்து வந்த சட்டை நிறங்களின் பட்டியல், ஒரு நாள் டையடிக்காமல் விட்டதால் காதோரம் லேசாகத் தெரிந்த நரை, சட்டை பட்டன் எதேச்சையாகத் திறந்துகொண்டால் நெஞ்சில் தெரியும் முடி, கரடுமுரடான தாடி என்று தன்னை அணு அணுவாக வர்ணித்து எழுதப்பட்டிருந்த அந்த கடிதம் ஜஸ்டினுக்கு லேசான போதையைக் கொடுத்தது உண்மைதான். சுதாரித்துக் கொண்டவனுக்குக் கோபம் மூண்டது. யாருடைய வேலையாக இருக்கும்? எவ்வளவு துணிச்சல்!!
எழுதியது யாரென்று தெரிந்தால் பள்ளியை விட்டு நிச்சயம் நீக்கி விடுவார்கள். அந்த மாணவியின் எதிர்காலம் பாழாகி விடும். மெதுவாகத்தான் இதனைக் கையாள வேண்டும் என்று முடிவு செய்த ஜஸ்டின் மற்ற ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்தான்.
”என்ன சார் இது?”
”ஆமாங்க, எனக்கே படிச்சிட்டு அதிர்ச்சி ஆயிடுச்சு.”
”அதில்ல, நீங்க கொஞ்சம் கவனமா இருக்க வேணாமா?”
”என்ன சொல்றீங்க நீங்க?”
”பின்ன என்னங்க? வயசுப் பொண்ணுங்க படிக்கிற எடம். கொஞ்சம் அடக்க ஒடுக்கமா ட்ரஸ் பண்ணிட்டு வரணும். நீங்க காலேஜ் பையனாட்டம் ரொம்ப ஸ்டைலா வரீங்க. சட்டை என்ன இவ்ளோ டைட்டா? வேட்டி இவ்ளோ மெல்லிசா இருக்கு? என்னை மாதிரி ஃபுல் சேவ் பண்றதுக்கென்னா? டீச்சருக்கு எதுக்கு இப்டி ரஃபா மீசையும் தாடியும்?
ரிடையராகப் போகும் நரசிம்மன் சொல்ல, அனைவரும் ‘ஆமாம் ஆமாம்’ என்று தலையாட்டினர். ஜஸ்டினுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
”அது மட்டுமில்ல சார், ரொம்ப சத்தமா சிரிச்சிப் பேசுறீங்க ஸ்டூடண்ட்ஸ் கிட்ட. கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கணும் சார். பாடம் சொல்லித் தர ஆசிரியரைப் பார்த்தாலே ஒழுக்கமானவர்னு தெரியணும்.” – இது நிர்மலா.
கடிதத்தை வாங்கிப் பார்த்த திவ்யா சொன்னார்.
”கையெழுத்தைப் பார்த்தா காயத்ரியோ மைதிலியோ எழுதுன மாதிரிதான் இருக்கு. ஏற்கெனவே போன வருஷம் ஸ்கூல் க்ரவுண்ட்ஸ்ல பியர் அடிச்ச குரூப்ல இருந்தாங்க. சரி வயசுப் பொண்ணுங்கதானே, இந்த வயசுல இப்படித்தான் இருப்பாங்கன்னு வார்ன் பண்ணி விட்டுட்டார் அப்ப இருந்த ஹெச். எம். இப்ப இங்க வந்து நிக்கிறாங்க. ஆனா, சும்மா சொல்லக் கூடாது ரொம்பவே அழகா எழுதி இருக்காளுங்க.”
”விடுங்க மேடம், நாம அடிக்காத லூட்டியா? இவ்ளோ அழகான சார் க்ளாஸ் எடுக்க வந்தா மனம் சலனப்படத் தானே செய்யும்?”– நிர்மலா சொல்ல இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
ஜஸ்டினுக்குக் கோபம் வந்தது.
”என்னங்க இது? டீச்சர்ஸ் நீங்களே அவங்களைக் கண்டிக்காம என்னைக் கிண்டலடிக்கிறீங்க? அதுனாலதான் அந்தப் பொண்ணுங்க இவ்ளோ தூரம் வந்திருக்காங்க. எந்த ஆக்ஷனும் எடுக்கலைன்னா என்னை எப்படி மதிப்பாங்க? நான் எப்படி இனிமே க்ளாஸ் எடுக்கப் போவேன்?”
அனைவரும் ஜஸ்டினைப் பாவமாகப் பார்த்தனர்.
“இங்கே பாருங்க சார். நடந்ததுக்கு நீங்களும்தான் கொஞ்சம் பொறுப்பெடுத்துக்கணும். அழகா ஸ்டைலா ட்ரஸ் பண்ணிக்கிறதுக்கு இது எடம் இல்ல சார். புரிஞ்சிக்கங்க. மத்த சார் மாதிரி கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இருக்க ட்ரை பண்ணுங்க. நம்ம பொதுவா ஒரு வார்னிங் நிச்சயமா கொடுக்கலாம். இந்த விஷயத்தைப் பெருசு பண்ணா உங்களுக்குத்தான் அசிங்கம்.”
மனம் புழுங்கியபடி வீட்டுக்குச் சென்று மனைவியிடம் குமுறலைக் கொட்டலாம் என்று நம்பிய ஜஸ்டினுக்கு,
”இதுதான் நீ வேலைக்குப் போற லட்சணமா… வெட்கமா இல்ல? அய்யோ இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா எங்க குடும்ப மானமே போச்சு. அப்பவே சொன்னேன் எங்கப்பா கிட்ட… வேலைக்கிப் போற பையன் வேணாம் அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்குற பையனா பாருங்கன்னு…”
என்று வெடிக்கக் கூடிய ஒரு பூகம்பம் காத்திருந்தது.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்:
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.