முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் முகில். ஆதி, சிபியின் எட்டு வயது மகள்.

“என்னடா செல்லம்? ஏன் சோகமா இருக்கே?” என்று குழந்தையை நெருங்கி அணைத்து முத்தமிட்டான் சிபி.

“போ, நான் உன்கூடப் பேச மாட்டேன்.” ஆசையாய்க் கன்னத்தை வருடிய அப்பாவின் கைகளைத் தட்டி விட்டாள்.

“சாரிடா, இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங், அதான் அப்பாவுக்கு லேட்டயிடுச்சு. இன்னிக்கு ஒருநாள் மட்டும் அம்மாவைக் கூட்டிட்டு வரச் சொல்லி மெசெஜ் அனுப்பினேன். ஆனா, அம்மா பார்க்கலை போலருக்கு. போன் பண்ணாலும் எடுக்கலைடா.”

“எவ்ளோ நேரமா வெயிட் பண்றேன் தெரியுமா? என் பிரெண்ட்ஸ் யாரோட அப்பாவும் வொர்க் பண்ணலை. தினமும் லஞ்ச்கூட அவங்கதான் வந்து ஊட்டி விடுறாங்க.”

சிபிக்குச் சுருக்கென்றது. குழந்தை பிறந்ததும் வேலையைவிட்டு வீட்டோடு இருக்கலாம் என்றுதான் அவனும் நினைத்தான். ஆதி அவனைவிட அதிகம் சம்பாதித்தாலும் அவ்வளவு பொறுப்பு கிடையாது. முணுக்கென்று கோபம் வந்து எப்போது வேண்டுமானாலும் வேலையைத் துறப்பாள். அடுத்த வேலை கிடைக்கும்வரை அவளது கைச்செலவை இவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, தனது திறமைகளை மிளிரச் செய்யும் வேலையில் இருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. “நீ என்னத்துக்கு இப்போ வேலைக்குப் போகணும்?” என்ற மாமனார், மாமியாரின் வசவுகளை எல்லாம் வாங்கிக்கொண்டுதான் வேலைக்குச் சென்று வருகிறான். அவனது பெற்றோரோ, “திருமணமானதும் இதெல்லாம் உன் பாடு. உன் மனைவி அனுமதித்தால் வேலைக்குப் போ, இல்லாட்டி வீட்டோடு இரு” என்று கைகழுவி விட்டார்கள்.

குழந்தையைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் மணி ஏழாகி இருந்தது. மாமியார் வாசலிலேயே இடுப்பில் கைவைத்து நின்றிருந்தார். இவர்களைக் கண்டதும் அதிருப்தியுடன் தொண்டையைச் செருமிக்கொண்டு உள்ளே போனார்.

உள்ளே போனதும் மாமனார் பிடித்துக்கொண்டார். “எங்கேடா போனே இவ்வளவு நேரம்? அப்பா எப்போ கண்ணு ஸ்கூலுக்கு வந்தார்?”

“இப்பதான் தாத்தா, ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” முகில் பொய்யான வருத்ததுடன் சொன்னது.

“ஆபிஸ் அஞ்சரை மணிக்கு முடியுது. அப்புறம் எங்கேதான் போவானோ? வயசான காலத்துல நானே எல்லாம் செய்யணும்னா முடியுமா?” கடுகடுத்த மாமனார் சீரியல் பார்க்க உட்கார்ந்துவிட்டார்.

“இந்த ஆம்பளைங்க சண்டை நமக்கெதுக்கு!” என்று குழந்தையைக் கொஞ்சியபடி, வாக்கிங் கூட்டிச் சென்றுவிட்டார் மாமியார்.

உடை மாற்றிவிட்டு, நேரே கிச்சனுக்குள் நுழைந்த சிபி எல்லாம் போட்டது போட்டபடி கிடப்பதைப் பார்த்தான். சமையல் மூன்று வேளையும் அவன்தான். மாமனார் அவ்வப்போது கீரை ஆய்வது, வெங்காயம் உரித்துத் தருவதோடு சரி.

அவன் சமைக்கும்போது பின்னாலிருந்து அணைக்க மட்டுமே கிச்சனுக்குள் வருவாள் ஆதி. சில நேரம் சிகரெட் பற்றவைக்கவும்.

இன்று உள்ளே நுழைந்ததுமே தேய்க்காத பாத்திரங்களின் நெடி குடலைப் புரட்டியது. பசியும் அயர்ச்சியும் வேறு படுத்தி எடுத்தது. ம்… எதையும் யோசிக்க முடியாது. எந்திரமாக வேலையில் இறங்கினான். மனச்சோர்வும் மாமனாரின் கடுகடுப்பும்கூட லேசாக மறைந்த மாதிரி இருந்தது.

இன்னும் ஆதி தனது மெசஜையும் பார்க்கவில்லை, திரும்பி அழைக்கவும் இல்லை என்பது நெருடியது. திருமணத்துக்கு முன் உல்லாசமாக அமர்ந்துகொண்டு, அப்பா தருவதைச் சாப்பிட்டுக்கொண்டு, நண்பர்களுடன் அரட்டையடித்ததெல்லாம் நினைவுக்குவந்தது. நண்பர்களுடனும் இப்போது ரொம்பத் தொடர்பில்லை. அவனவன் மனைவி, குழந்தை என்று செட்டிலாகிவிட்டான்.

”மாமா, அத்தை… சாப்பிட வாங்க.” சப்பாத்தியும் பருப்பும் செய்திருந்தான்.

“என்ன இது? மதியம்தான் சாம்பார். நைட்டு திரும்ப பருப்பா?”

“இல்ல… சிக்கன்தான் செய்யலாம்னு நினைச்சேன். லேட்டாயிடுச்சு…”

“ஹ்ம்ம்… எதுலயும் பொறுப்பில்ல, ஏதாவது சொன்னா மட்டும் போய் என் மக கிட்டப் போட்டுக் குடுக்க வேண்டியது…” லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டே முணுமுணுத்தார் மாமனார். சிபி உதட்டைக் கடித்துக்கொண்டு அழுகையை அடக்கினான். ஆதிக்கு மேலும் சில மிஸ்ட் கால்கள் போயின.

காலிங் பெல் அடித்தது. ஓடிப் போய்த் திறந்தவனின் மீது பொத்தென்று விழுந்தாள் ஆதி.

“செல்லம், மை டார்லிங் ஹஸ்பெண்ட்… ” ஆரவாரமாக உள்ளே நுழைந்தவள் முட்டக் குடித்திருந்தாள் என்று புரிந்தது.

மாமனாரும் மாமியாரும் எப்பவோ தூங்க எஸ்கேப்.

“என்னடி இன்னிக்கும் குடிச்சிட்டு வந்திருக்க? எவ்ளோ போன் பண்ணேன். ஏன் எடுக்கல?”

“சாரி, சிபி டார்லிங்! ஆபிஸில் பார்ட்டி. அவாய்ட் பண்ண முடியலை!”

“பார்ட்டியா? அந்த சுரேஷ் வந்திருந்தானா?” பொறாமைத்தீயுடன் கேட்டான் சிபி.

“சீ… அவன்லாம் ஒரு ஆளா? தங்கம் நீ இருக்கும்போது அந்த அட்டு ஃபிகர் சுரேஷை எவ பார்ப்பா? அவன்தான் என்கிட்ட சும்மா வழியுறான். இது ஒன்லி லேடிஸ் பார்ட்டி.”

சிபிக்கு லேசாக நிம்மதியானது.

“இந்தா, உனக்குப் பிடிச்ச கார்னெட்டோ ஐஸ்க்ரீம். வரவழியில வண்டியை நிறுத்தி வாங்கிட்டு வந்தேன்.”

சட்டென்று எல்லா வேதனைகளும் மறந்து முகம் மலர்ந்தான் சிபி.
ஆயிரம் கஷ்டங்கள் திருமண வாழ்க்கையில் இருந்தாலும் மாமனார், மாமியார் கொடுமைகளைத் தினசரி சகித்தாலும் குடிகாரியாக இருந்தாலும் ஆதி ஏகபதிவிரதை; தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்பதை ஐஸ்க்ரீமின் சுவையில் உணர்ந்தான் சிபி. பசித்தது, சாப்பிட வேறு இல்லை அல்லவா?

“சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு….” பாத்ரூமிலிருந்து ஆதியின் பாட்டு கேட்டது. டவலை எடுத்துக் கொண்டு சிரித்தபடி ஓடினான் சிபி.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.