வருணின் பெற்றோர் வீடு.
நிலாவும் வருணின் அம்மாவும் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மருமகள் வந்திருக்கும் பரபரப்பில் வருணின் அப்பா சமையலறையில் விருந்து சமைத்துக் கொண்டிருந்தார்.
வருண் தன்னறையில் இருந்து வெளியே வரவில்லை.
“நாங்க எவ்வளவோ எடுத்துச் சொல்லிட்டோம் மருமகளே. செல்லமா வளர்ந்த பையன். நாங்ககூட கை நீட்டுனதில்ல.”
“பல தடவை சாரி கேட்டுட்டேன் அத்தை. எனக்கு முன்கோபம் ஜாஸ்தி. அதுவும் அன்னிக்கு நைட் ஆபிஸ்ல வேலை ஜாஸ்தி, லேட்டா வந்தேன். கொஞ்சமாதான் குடிச்சேன். அதுக்குள்ள வந்து நை நைன்னு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தான். எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்கத்தை. அதான்…” தலையை லேசாகக் குனிந்து கொண்டாள் நிலா.
“ம்ம்… ” வருணின் அம்மா எதுவும் பேசவில்லை.
வருணின் அப்பா டீயும் முறுக்கும் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சொன்னார்.
“பொண்டாட்டி புருசனுக்கு இடையில இதெல்லாம் சகஜம் தான். (மனைவியைக் காட்டி) இவங்ககூட என்ன எவ்ளோ அடிச்சிருக்காங்க. அதுவும் அவங்க அப்பா கோள் மூட்டி ஏதாச்சும் சொல்லிட்டா போதும், என்னைத்தான் அடிப்பாங்க. ஆனா, நைட் மல்லிப்பூ வெச்சிக்கிட்டு வந்து மயக்கிடுவாங்க!” என்று சிரித்தார்.
‘அப்பாவி’ என்பது போல் கணவனைப் பார்த்துச் சிரித்தவாறே ஸ்டைலாகக் கால் மேல் காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டார் வருணின் அம்மா.
மருமகளிடம் தேவையில்லாமல் அதிகம் பேசி விட்டோமோ என்று லேசான கூச்சத்துடன் சமையலறைக்குத் திரும்பினார் வருணின் அப்பா.
”ஏய்…”
“என்னாங்க?” மறுபடியும் வெளியே ஓடிவந்தார் வருணின் அப்பா.
“அந்தக் கழுதை, அதான் உன் புள்ளைய வெளில வரச்சொல்லு.”
அப்பா போய் அதட்டியவுடன் முகத்தைத் தூக்கி வைத்தவாறே வெளியே வந்தான் வருண். அழுது அழுது முகம் வீங்கி இருந்தது.
“சரி, நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. வருண், பொறுமை நல்லதுப்பா” என்று அவனது தலையை வருடிக் கொடுத்துவிட்டு எழுந்து வெளியே போனார் வருணின் அம்மா.
வருண் நின்றுகொண்டே இருந்தான்.
“வருண்…” நிலா மென்மையாக அழைத்தாள்.
“ஹும்…” முகத்தைத் திருப்பிக்கொண்டான் வருண்.
அவன் கையைப் பிடித்து இழுத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்ட நிலா, அவன் கைகளை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக்கொண்டாள்.
“சாரிடா, இனிமே அடிக்க மாட்டேன்…”
“…….”
“ப்ளீஸ், நீ இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்படுவேன்னு நினைச்சுப் பார்த்தியா?”
வருணின் மனம் லேசாக இளகியது.
“பாரு, நானே காலைல தோசை சுட்டு, கைல தீக்காயம்” என்று கையைக் காட்டினாள் நிலா.
‘ஓ… சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுறத சொல்றாளா?’ மனம் கசந்தான் வருண்.
ஆனால், அதற்குள் வருணின் அப்பா அந்தப் பக்கம் வந்தார்.
“நீ செய்யறது உனக்கே நியாயமா இருக்காப்பா? மருமகள் பாவம் எவ்ளோ நாள்தான் ஓட்டல்லயும் தானே சமைச்சும் சாப்பிட்டுக் கஷ்டப்படுவாங்க? உனக்கு ரொம்பச் செல்லம் குடுத்தது தப்பாப் போச்சு. எல்லாம் உங்கம்மா குடுத்த செல்லம்” என்று மோவாயை நொடித்தார் அப்பா.
“அப்பா…”
“சாப்டப்புறம் ஒழுங்கா மருமகளோட கிளம்பி உங்க வீட்டுக்குப் போ. புரிஞ்சுதா? என்ன புள்ள வளத்துருக்கான்னு எல்லாரும் என்னைத்தான் திட்டுவாங்க.”
வெளியிலிருந்து வந்த வருணின் அம்மா மருமகளுக்குப் பிடித்த பியரையும் ஸ்வீட்ஸ் காரத்தையும் வாங்கி வந்திருந்தார்.
சாப்பாட்டுக்கு முன்பாக மாமியாரும் மருமகளும் ஜாலியாக ஒரு ரவுண்ட் அடித்தனர். பின்னே, மருமகளை கூல் செய்ய வேண்டாமா? இரண்டாவது ரவுண்டில் கொஞ்சம் அழுது, வருணை இனிமேல் அடிக்க வேண்டாம் என்று கைகூப்பிக் கேட்டுக் கொண்டார் அவனது அம்மா.
நிலா நாத்தழுதழுக்க அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு, இனிமேல் எப்போதும் கை நீட்டுவதில்லை என்று வாக்குக் கொடுத்தாள்.
நிலாவையும் வருணின் அம்மாவையும் உட்கார வைத்துச் சாப்பாடு போட்ட பிறகு, வருணும் அப்பாவும் சாப்பிட்டார்கள்.
வருண் மனைவி தன்னை அழைத்துப் போக வந்ததை எண்ணி உள்ளூரப் பெருமையுடன் மூட்டைகளைக் கட்டத் தொடங்கினான். அடுத்த வீட்டு அண்ணன் சேகர் வந்து உதவி செய்து கொண்டிருந்தான்; நிறைய புத்திமதிகளுடன்.
சேகர் பாவம், மனைவியைப் பிரிந்து வந்து ஆறு மாதங்களாகின்றன. இன்னும் அழைத்துப் போக வரவில்லை. வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாகக் கேள்வி. பெருமூச்செறிந்த சேகர், வருண் எவ்வளவு கொடுத்து வைத்தவன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்; நிலாவையும் ஓரக்கண்ணால் சைட் அடித்தபடி!
வருணின் அப்பா, “இங்கே பாரு வருண், மருமகளுக்குப் பிடிச்ச புளிக்காய்ச்சல், முறுக்கு, உனக்குப் பிடிச்ச பருப்புப் பொடி எல்லாம் கட்டி வெச்சிருக்கேன். மறக்காம எடுத்து வெச்சிக்கோ.”
கண்களில் கண்ணீருடன் ஆனால், நெஞ்சு நிறைய நிறைவுடன் மகனை மருமகளுடன் அனுப்பி வைத்துப் பெருமூச்சுவிட்டனர் வருணின் பெற்றோர்.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்:
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.