ஒரு பெண் தன் வீட்டின் பாதுகாப்பைவிட்டு வெளியே செல்லும்போது கடந்து வரும் பாதை எத்தனை கடினமானது என்று படிக்க, வேலைக்குத் தனியாக வெளியே சென்று வரும் பெண்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பார்கள். அவளும் அறிந்துகொள்ள வேண்டிய காலம் வந்தது.

சினிமா மற்றும் பிற வெளி இடங்களுக்குச் செல்லும் போது அவளுக்கும் அவள் சகோதரிக்கும் அம்மாவுக்கும் அவள் தந்தையும் அண்ணனும் பாதுகாப்பு அரணாக நின்று அழைத்துச் செல்வதைக் கண்டு அவளுக்கு, ‘அப்படித் தனியாகப் போனால்தான் என்ன, கடித்தா தின்னப் போகிறார்கள்’ என்று மனதுக்குள் பல நேரம் சிரிப்பு வரும். ஆனால், அது வெளியுலகை அறிந்த வீட்டில் உள்ள ஆண்களின் எச்சரிக்கை நடவடிக்கை என்று மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்த அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

பெண் தெய்வங்களைக் கோயிலில் வழிபடும் இந்தச் சமூகம், பெண்களை ஒரு சக உயிராக மதிக்கிறதா என்கிற கேள்விக்கு நிச்சயம் எல்லாப் பெண்களுக்கும் பதில் தெரியும். மனசாட்சியுடன் நடந்து கொள்ளும் சில ஆண்களுக்கும் அது தெரியும்.

பொது இடங்கள், பேருந்து, ரயில், ஏன் சாலையில் தனியாக நடந்து செல்லும் ஒரு பெண் தான் பாதுகாப்பாக இருக்க எத்தனை எத்தனை முன்னெச்சரிக்கைகள்?

“ஒரு பெண் இரவில் சுதந்திரமாகச் சாலையில் நடக்க முடிகிறதோ அன்றே இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்ல முடியும்” என்று காந்தி சொன்ன சுதந்திரம் 75 வருடங்களாகியும் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்ததா என்றால், இல்லை என்பதுதான் நிதர்சனம்.

அவளுக்கு வெளியுலகில் கிடைத்த முதல் கசப்பான அனுபவம், அவள் முதல் வேலைக்காக வீட்டிலிருந்து மூன்று மணிநேரம் பயணித்த பேருந்து பயணத்தில். கூட்ட நெரிசலில் நெடுநேரம் நின்று பின் ஒருவழியாகக் கிடைத்த இருக்கையில் ஆசுவாசமாக அமர்ந்த போது, இருக்கையின் இடைவெளிகளில் முளைத்த விரல்கள் தந்த அசௌகரியம். ஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பின் சுதாரித்துக் கொண்டு அந்தக் கைகளைப் பிடித்துத் திருகி, எழுந்து சத்தமிடும் முன் ஓடி மறைந்தது அந்த அருவருப்பான கைகளுக்குச் செந்தமான ஜந்து.

இரவு நெடுநேரம் உறக்கமின்றி அன்று விழித்திருந்த அவள் அதைப் பற்றி அடுத்த நாள் தன் நெருங்கிய தோழியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாள். தன் பெற்றோருடன் பகிர்ந்து அவர்களைப் பயமுறுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். ஒருவேளை, இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த வேலைக்குச் செல்ல வேண்டுமா என்று கேட்டு, வீட்டில் இருக்க வைத்துவிட்டால்? அவள் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பெண் பட்டதாரி. செயல்கள் அதன் பின் வரப்போகும் பல பெண்களுக்கு உதாரணமாகவோ தடையாகவோ இருக்கக்கூடும் என்று எண்ணி, முகம் காட்டத் துணிவில்லாத சில அற்பர்களின் செயலால் தன் கனவுகளையும் பிறரின் கனவுகளையும் கலைக்கப்போவதில்லை என்று உறுதிகொண்டு, தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். அந்த நிகழ்வையும் வேறு சந்தர்ப்பங்களில் அதுபோல் அதன் பின் நிகழ்ந்த பிற நிகழ்வுகளையும் மறக்கவே நினைக்கிறாள், அது முடிந்திருந்தால் இன்று இதை எழுதியிருக்கமாட்டாள்.

ஒருவேளை அவள் பெற்றோரிடம் சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்கிற கேள்விக்கு இன்று வரை அவளுக்கு விடை தெரியாது. ஆனால், வெளியுலகைப் பற்றிய அவள் கண்ணோட்டம் அதன்பின் வெகுவாக மாறியது. தன்னை எப்பொழுதும் பாதுகாத்துக்கொள்ள ஒருவரால் மட்டுமே முடியும், அது ‘தான் மட்டுமே’ என்று உணர்ந்து கொண்டாள். அதன்பின் கூட்ட நெரிசலில் செல்லும் போது கையில் திறந்த ஊக்கு, தனியாக நடந்து செல்லும் போது சிறு கத்தி, ஆள் நடமாட்டமில்லாத இடங்களைத் தவிர்த்தல், எங்கு சென்றாலும் அந்த இடம் பாதுகாப்பாக இருக்குமா என்று முதலில் கேட்டுத் தெரிந்துகொள்ளுதல், எப்போதும் எச்சரிக்கையுடன் இருத்தல் போன்ற தற்காப்பு செயல்களைச் செய்து கொண்டாள். அவளிடம் இருந்த பெரிய ஆயுதம் அவள் தைரியமும் எந்தச் சூழ்நிலையிலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கையுமே.

சில நேரம் அவள் வீட்டின் பாதுகாப்பை அவள் மனம் தேடியது. ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் தன் சிறகுகளைத் தானே வெட்டி எறியவோ, தான் கஷ்டப்பட்டு வெளியே வந்த தன் மனத்தின் கூட்டுக்குள் சென்று தன் உலகை மீண்டும் சுருக்கிக்கொள்ளவோ கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

புறநகர் ரயிலில் மது அருந்திவிட்டு அவளிடம் தவறாக நடக்க முயன்ற ஓர் அறிவிலியை, “சீ நாயே தள்ளிப்போ” என்று தள்ளிவிட்டு, தன்னைப் பாதுகாத்துக் கொண்ட போது, அவள் அப்பா மட்டும் அவளுடன் அன்று இருந்திருந்தால்…

ஓர் அடைமழை நாள் மாலை நேரத்தில் தனியாக அவள் நடந்து வந்தபோது, மழையில் நனைந்து இருசக்கர வாகனத்தில் வந்து வழிகேட்டவனுக்குப் பாவம் பார்த்து வழி சொல்ல நின்ற போது, தவறான எண்ணத்தில் அவன் கைகள் அவள் முன் நீண்ட போது, அவள் குடை வைத்து அவன் கண்களை குத்தி விரட்டியடித்த போது, “மாலையில் எப்போதும் எங்கும் தனியாக செல்லாதே” என்கிற அவள் அம்மாவின் வார்த்தைகள் அவள் மனதில் அப்போது ஒலிக்காமல் இருந்திருந்தால் என்கிற எண்ணங்கள் தந்த வருத்தத்தைவிட, வெவ்வேறு ஊர்களில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களைப் பற்றி அவள் நெருங்கிய தோழிகள், மற்ற சக அறைத் தோழிகளிடம் பகிர்ந்து கொண்ட போது, அதைவிட மோசமான சம்பவங்கள் தங்களுக்கோ அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ நிகழ்ந்திருக்கிறது, இதெல்லாம் பழகிவிடும் என்று அவர்கள் சொன்ன சமாதானத்தைக் கேட்டுதான் அதிகம் வலித்தது அவளுக்கு.

இத்தகைய சமுதாயத்தில் பெண் குழந்தைகள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கவலையுடன் அவள் தோழியிடம் கேட்டபோது, ‘நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டதுபோல், அவர்களும் தங்களைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வார்கள்’ என்று கூறினாள். அது உண்மைதான், ‘ஆனால் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்பு கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளிடம் எப்படி மரியாதையுடனும், அவர்களும் நம்மைப்போல் சக மனிதர்கள், அவர்களை நம் வீட்டுப் பெண்களை எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்போமோ அதைப் போன்ற பாதுகாப்பான உணர்வுடன் வெளியுலகைக் காணும்படியும் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்’ என்கிற அவள் வார்த்தைகள் தனிப்பட்ட கருத்து என்பதைவிட, சமூகக் கடமையாக மாறினால் இந்த நிஜ வாழ்க்கை பூச்சாண்டிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் குடும்பத்தினர்கள், நண்பர்கள் போன்ற நான்கு பேர் இருக்கும் அதே சமூகத்தில்தான், மூலைக்கு மூலை தவறான நோக்கத்துடன் அவள் பாதையில் காத்திருக்கும் நாலுபேரும் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில்தான் அவள் போன்ற அத்தனை அவள்களின் வாழ்க்கையும் பயணப்படுகிறது. அங்கே அவளுக்கு இளைப்பாறுதல் தரும் வேடந்தாங்கல் அவள் சக பயணிகள். அவர்கள் அவள் வாழ்க்கையை அழகாக்குவார்கள்!

(தொடரும்)

படைப்பாளர்:

rbt

பொ. அனிதா பாலகிருஷ்ணன்

பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.