“அத்தை உங்களுக்கு இன்னொரு தோசை?” கிச்சனிலிருந்து கத்தினான் வருண். ஆரவல்லிக்குக் கேட்டது, ஆனாலும் பதில் சொல்லவில்லை. அடுப்பைக் குறைத்துவிட்டு ஹாலுக்கு ஓடிவந்து, “அத்தை…” என்றான்.
மெதுவாக நிமிர்ந்து பார்த்து, “ம்?” என்றார் நிதானமாக.
“உங்களுக்கு இன்னொரு தோசை?” இப்போது மிகவும் சன்னமாக ஒலித்தது வருணின் குரல். கத்தி இருக்கக் கூடாது, மனம் கண்டித்தது.
போதும் என்பதாகக் கையசைத்தார்.
“இன்னும் ஒண்ணு வெச்சிக்கோங்க அத்தை” என்று சொல்லியே ஆக வேண்டும்.
“இல்லப்பா போதும்.” இப்போது தான் வாய் திறக்கிறார்.
“சரிங்கத்தை. வேந்தன் இங்க வாப்பா. இந்தா, பாட்டி சாப்டாங்க பாரு. தட்டை எடுத்துட்டுப் போ.” மகனைக் கூவி அழைத்தான்.
”ஏவ்!”
ஏப்பமிட்டவாறே அந்த விளிம்பில்லாத தட்டில் கையைக் கழுவினார் ஆரவல்லி, நிலாவின் அம்மா.
படித்துக் கொண்டிருந்த எட்டு வயது வேந்தன், வருண் – நிலாவின் மகன் ஓடி வந்தான். கொஞ்சம்கூட அருவருப்பில்லாமல் தனது தளிர் விரல்களால் அலுங்காமல் நலுங்காமல் அதைத் தூக்கிக் கொண்டு கிச்சன் வரை சென்றான்.
கையில் ஒரு துப்பாக்கியுடன் டிஷ்யூம் டிஷ்யூம் என்று விளையாடிக் கொண்டிருந்தாள் வெண்பா, வேந்தனின் நான்கு வயதுத் தங்கை. அநியாய சேட்டை என்று வருண் அலுத்துக் கொள்வான். இரண்டு வயது வரை அவ்வப்போது கட்டிப் போட்டு விடுவார்கள். இப்போது ஸ்கூலுக்குப் போகத் தொடங்கியதும் கொஞ்சம் அடங்கி இருக்கிறாளாம்.
அண்ணனைப் பார்த்ததும் குறும்பு கொப்பளித்தது வெண்பாவுக்கு. சிங்கில் தட்டைப் போடும் முன் அவனை எட்டிப் பிடித்த வெண்பா, பின்னாலிருந்து வந்து அவன் முதுகில் துப்பாக்கியை வைத்து நெட்டித் தள்ளினாள்.
சிறுவன் கையிலிருந்து எச்சிற் தட்டு கீழே விழுந்து கிச்சன் தரையெல்லாம் எச்சிற் தண்ணீர் கொட்டி நாசமாக்கியது.
கோபமடைந்த வேந்தன் தங்கையின் முதுகில் ஓர் அடி வைத்தான். மறுபடி அவளும் அடிக்க, கோபம் அதிகமாகவே கொஞ்சம் பலமாகவே ஓர் அடியை அண்ணன் தங்கைக்குக் கொடுக்க, அவள் ஓ என்று அழத்தொடங்கினாள்.
“டேய் வேந்தா, தங்கச்சியைக் கை நீட்டக் கூடாதுன்னு எத்தனை தடவி சொல்லி இருக்கேன்?” என்று வருண் அதட்டினான்.
“அவ என்ன பண்ணி இருக்கா பாருப்பா.”
“ஒரு ஆம்பளப் புள்ள தட்டை ஒழுங்கா எடுத்து சிங்கில போடத் துப்பில்ல.” தரையைச் சுத்தம் செய்ய வேண்டுமே என்கிற ஆத்திரத்தில் மகனின் முதுகில் நாலு வைத்தான் வருண். வேந்தன் அழத் தொடங்கினான். வெண்பா ஓடிவிட்டாள்.
“இந்தா, இந்த தோசையைக் கொண்டு போய்ப் பாப்பாக்கு ஊட்டு.”
அழுத கண்ணைத் துடைத்துக் கொண்டு எந்திரம் போல், அப்பா சொல்லாமலே தோசையில் பாலைக் கொஞ்சம் ஊற்றி, வெண்பாவுக்கு ஊட்ட ஆரம்பித்தான். அவள் அடித்ததை எல்லாம் மறந்தாயிற்று.
தோசை கருகாமல் ஒருபுறம் அடுப்பைப் பார்த்துக் கொண்டு, மதிய சமையலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு, “அப்பா பசிக்குது” என்ற வேந்தனை, ”அப்படிச் சொல்லக் கூடாது” என்று லேசாக அதட்டினாலும் உடனே மகனுக்கும் இரண்டு தோசைகளை அவசர அவசரமாகச் சுட்டுக் கொடுத்தான்.
“அப்பா… வெண்பாவுக்கு மட்டும்தான் முட்டை தோசையா?”
“ஒரு முட்டைதான் இருந்துச்சு. அவ பாப்பால்ல?”
“ம்… சரிப்பா.”
நிலாவின் அப்பா கோயிலுக்குப் போய்விட்டுத் தன் நண்பனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். பெருமையுடன் அவரிடம் பேரனைக் குறித்துப் பீற்ற ஆரம்பித்தார்.
“எங்க வேந்தன் இப்பவே எவ்ளோ பொறுப்பு தெரியுமா? ஸ்கூல்லேருந்து வந்து அதுவே வீட்டைக் கூட்டிடுது. துவைச்ச துணியை மடிச்சு வெச்சிடுது. அவங்கப்பன் சப்பாத்தி சுட்டா போட்டுக் குடுக்குது.”
“இந்தா வேந்தன், பாப்பாவைக் கொஞ்சம் பார்த்துக்கோ. வீட்ல பாசிப்பருப்பு இல்லை. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக உடை மாற்றிவிட்டு வெளியில் கிளம்பினான் வருண்.
உள்ளே படித்துக்கொண்டிருந்த வேந்தன் வெளியில் வந்து வெண்பாவைத் தூக்கி வைத்து விளையாட்டு காட்டத் தொடங்கினான்.
“வருண்… வருண்…” ஞாயிற்றுக் கிழமை. ஆடி அசைந்து லேட்டாக எழுந்து வந்தாள் நிலா.
“இப்ப தாம்மா கடைக்குப் போச்சு! என்னா வேணும்?”
“என் வாட்ச்சைக் காணும்பா. பத்து மணிக்கு நான் வெளிய போகணும். ஒரு வேலை இருக்கு.”
மகளுக்குச் சூடாகக் காப்பியைக் கொண்டு வந்து ஆற்றிக் கொடுத்தவாறே அப்பா ஆரம்பித்தார்.
“இந்தா பாரும்மா, நிலா… உன் புருசன் போக்கே அவ்வளவா சரியில்ல. வர வர நான் எது சொன்னாலும் கேக்குறதில்ல. எதுத்து எதுத்துப் பேசுது. நேத்து சாயந்தரமே மழை பெய்யற மாதிரி இருக்கு. துணியெல்லாம் கொண்டு வந்து போடு மடிக்கிறேன்னு சொன்னேன். காதுலயே வாங்கிக்காம போயிடுச்சு. இப்ப காலைல கொண்டு வந்து சோஃபா மேல போட்டு வெச்சிருக்கு. பாதி துணி நச நசன்னு கெடக்கு. வயசானாலே மரியாதை இல்ல. உன்னை எல்லாம் வளர்த்து ஆளாக்க அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன். உன் புருசன் என்னை மதிக்க மாட்றான். நீயும் அவன் பேச்சை கேட்டுட்டு அப்பா மனசைப் புரிஞ்சிக்க மாட்ற.”
‘இந்த அப்பா ஏன் காலைலேயே நச்நச்ன்றாரு’ என்றது நிலாவின் மைண்ட் வாய்ஸ். ஆனாலும் அழுகிறாரே. இந்த வருணுக்கு வாய்க்கொழுப்பு அதிகம்தான்.
மூட்டு வலியால் ‘ஸ் அப்பா’ என்றவாறே ஒவ்வொரு துணியாக பால்கனியில் எடுத்துச் சென்று அப்பா போடுவதைப் பார்த்த நிலாவுக்கு மேலும் பாசம் பொங்கியது.
“நீங்க இருங்கப்பா. கழுதை வரட்டும். நான் அதையே செய்யச் சொல்றேன்.”
வருண் கடைக்குச் சென்று சமையலுக்குத் தேவையானதை வாங்கி வருவதற்குள் நிலா காபியைக் குடித்து, குளித்து, தயாராகி நின்றிருந்தாள்.
வெளிர் மஞ்சள் நிற டீஷர்ட்டும் கறுப்பு ஜீன்ஸும் அணிந்து ஸ்டைலாக நின்றிருந்த மனைவியைப் பார்த்துப் பூரித்தபடியே அவளுக்குத் தோசை சுட அடுப்பில் கல்லை வைத்தான் வருண்.
கிச்சனுக்குள் வந்த நிலா அவனைப் பின்னிருந்து கட்டிப் பிடித்தாள்.
“ஏய், என்ன இது? அத்தை, மாமா யாராச்சும் பார்க்கப் போறாங்க!”
“ஷேவ் பண்ணலியா?” லேசான தாடியை வருடிக் கன்னத்தைக் கிள்ளினாள் நிலா.
வருணுக்குச் சிலிர்த்தது. மனதில் லேசாகக் காற்றடிப்பது போல் இருந்தது. மனைவிக்காக எக்ஸ்ட்ரா நெய் ஊற்றித் தோசையை முறுகலாகச் சுட்டு எடுத்து, தட்டில் வைத்துத் தந்தான்.
வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே மெதுவாக, “வருண் குட்டி, அப்பா வயசானவங்க. ஏதாச்சும் சொன்னா கேட்டுட்டுப் போயேன். ஏன் எல்லாத்துக்கும் ஆர்க்யூ பண்றியாம்?”
வெடுக்கென்று திரும்பினான் வருண்.
“ஓ, நான் வெளிய போயிருந்தப்போ என்னைப் பத்திப் போட்டுக் குடுத்துட்டாரா? அதான் வந்து கொஞ்சுறியா” என்று எரிந்து விழுந்தான் வருண்.
நிலாவுக்குச் சுர்ரென்று தலை எரிந்தது. ‘இவ்ளோ ஆசையா சொல்றேன். என் கிட்டையே திமிரா பேசுறானே? அப்பா கிட்ட எப்படிப் பேசி இருப்பான். இவனை எல்லாம் தட்டி வெக்கணும்.’
”ஏய், மரியாதையா பேசுடா. பல்லைத் தட்டிடுவேன். உன் தோசையும் வேணாம் ஒண்ணும் வேணாம் போ.” பாதி சாப்பிட்ட முறுகல் தோசைத் தட்டை வீசி எறிந்தாள். (போகும் வழியில் சரவண பவனில் சாப்பிட்டுக்கொள்ளலாம்.)
கோபித்துக் கொண்டு கிளம்ப எத்தனித்த நிலாவைச் சமாதானப்படுத்தி இரண்டு தோசைகளைச் சாப்பிட வைத்தான் வருண்.
கடிகாரத்தைப் பார்த்தான். பத்தே முக்கால். டான் என்று பதினோரு மணிக்கு, ”டீ” என்று வந்து நிற்பார் அத்தை ஆரவல்லி. இனி எதற்குத் தனக்குத் தோசை என்று கல்லை நிறுத்தி விட்டுட்டு டீ போடத் தொடங்கினான் வருண்.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்:
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.
புது முயற்சி .. மிக சிறப்பாக எழுத்தாக்கம் செய்துள்ளீர்கள். காட்சிகள் நிசமாகவே கண்களுக்கு முன்னால் திரையில் ஓடுவது போலே வாக்கியங்கள் அழகாக கையாளப்பட்டுள்ளது.. இக்கதை சூழல் நிசமாக நடக்கும் காலம் வந்து விட்டது என்றே கருதுகின்றேன்.. நிச்சயமாக நான் வருண் மாதிரியான ஆணாக இருக்கவே கனவு காண்கின்றேன்…