மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்த புரிதல் பெரும்பாலான பெண்களுக்கே இல்லை. மாதவிடாய் என்பது பேசக் கூடாத ஒரு விஷயமாக, மறைபொருளாக, பெண்களின் தனிப்பட்ட பிரச்னையாக, சமூகத்தால் கவனப்படாத ஒரு விஷயமாகவே கையாளப்படுகிறது. இன்னும் குடும்பங்களில் இது பற்றிப் பொதுவில் பேசப்படுவதில்லை. இதை இயல்பாக எடுத்துக்கொள்ளவும் யாரும் பழகவில்லை. மாதவிடாய் குறித்த ‘புரிதல்’களே இப்படி இருக்கும் போது அந்தச் சுழற்சி நிற்கும் சமயமான மெனோபாஸ் குறித்த தெளிவு நம்மில் எத்தனை பேருக்கு உண்டு? மெனோபாஸ் காலம் என்பது எல்லாருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை. அம்மா, மகளுக்குக்கூட இந்தச் சுழற்சி நிற்பது வேறுபடும். மாதவிடாய் ஏற்படுவது ஒருவகையில் பெண்களின் உடலியக்கம் சீராக இருக்கிறதா இல்லையா என்று அறிந்துகொள்ளவும் உதவுகிறது. பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் அவர்களின் மகிழ்ச்சி, சிரிப்பு போன்ற உணர்வுகளைக் கையாளுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோனான ‘எண்டோர்பின்’ அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதற்கு ஈஸ்ட்ரோஜன்தான் உதவுகிறது. உடலில் மெட்டபாலிசத்தை ஏற்படுத்துகிறது. இந்த வளர்சிதை மாற்றத்தால்தான் உடலின் கழிவுகள் சீராக வெளியேறுகின்றன. 

மேலும் எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தையும் கொடுக்கிறது. எலும்புகளைப் பலப்படுத்தி ஆஸ்டியோஸ்போரோஸிஸ் எனப்படும் எலும்பு மென்மையாகும் நோய் வராமல் தடுக்கிறது. பெண்களது உடலுக்குள் கால்சியம் கரைந்து செல்லாமல் தடுத்து, எலும்புகளின் உடையும் தன்மையைக் குறைக்கிறது. 

நரம்புகளுக்கும் ஈஸ்ட்ரோஜன் நன்மையே செய்கிறது. பெண்களது உடலில் செரொடோனின் என்னும் திரவத்தின் அளவைப் பெருக்க ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது. இது மூளையிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்குக் கட்டளைகளையும் உடலின் பிற பகுதிகளிலிருந்து உணர்வுகளை மூளைக்கும் கடத்த உதவுகிறது. இதன் மூலம் நரம்புகளின் செயல்பாடுகள் இயல்பாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்தால், மிகவும் இளமையாகக் காட்சியளிப்பார்கள் என்று சொல்கிறது. என் மேனி எழிலின் ரகசியம் … சோப்தான் என்று கப்ஸா அடிப்பதை நம்பாதீர்கள். ஈஸ்ட்ரோஜன் சுரப்புதான் அதைத் தீர்மானிக்கிறது என்று புரிந்துகொள்வோம். ஏனென்றால் ஈஸ்ட்ரோஜனானது, சருமத்தைத் தடிப்பாக்கி, கொலாஜன் அளவையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் குறைகின்றன. மேலும் சருமத்திற்குள் இருக்கும் ஈரத்தன்மையையும் சரியான அளவில் பேணி, பெண்கள்   பிரகாசமாகத் தோற்றமளிக்கவும் உதவுகிறது. 

ஈஸ்ட்ரோஜனானது இதய தமனி, சிரைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதாவது ரத்த நாளங்களில் கொழுப்புப் படியாமல் அவற்றைப் பாதுகாக்கிறது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பால் உங்களுக்குக் கொழுப்பு ஜாஸ்தி என்று யாரும் சொல்லிவிட முடியாது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ட்ரைகிளிசரைடு அளவையும் கட்டுப்படுத்துகிறது. லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஈஸ்ட்ரோஜனுக்கும் பெண்களுக்கு ஏற்படும் தொற்றுகளிலிருந்தும் வீக்கங்களிலிருந்தும் அளிக்கும் பாதுகாப்பிற்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வில் பெண்களுக்குக் காயங்கள் ஏற்படும்போது ரத்தக் குழாய்களிலிருந்து வெள்ளை ரத்த அணுக்கள் வெளியேறும் வீதத்தை ஈஸ்ட்ரோஜன் குறைக்கிறது என்றும் இதன் மூலம் வீக்கம் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, உடலானது தொற்றுக் கிருமிகளை எதிர்த்து வலிமையுடன் போராட முடிகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெனோபாஸ் காலம் என்பது 45 முதல் 55 வயதுக்குள்ளாக ஏற்படுகிறது. அந்தக் காலகட்டத்திற்கு முன்போ அல்லது பின்போ ஏற்படுவது அவரவர் உடல் நிலைக்குத் தகுந்தாற்போல் வேறுபடும். எழுபத்தைந்து சதவீதப் பெண்கள் அதிகப்படியான உடல்சூடு, வியர்வை, ஹாட் ஃப்ளாஷ் எனப்படும் காய்ச்சல் போன்றவற்றை உணர்வார்கள். இது இரவு, பகல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். சிலருக்குத் தசை, மூட்டு வலிகள் ஏற்படும். இது மனநிலை மாற்றம் (mood swing) என்று அழைக்கப்படுகிறது.

பால் பொருள்கள், கீரை வகைகள், ராகி, சின்ன வெங்காயம் போன்ற கால்சியம் அதிகம் உள்ள உணவுகள், சத்து நிறைந்த சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். வைட்டமின் டி சத்து உடலில் சேர்க்க வேண்டும். அதற்காக காலை, மாலை இளவெயிலில் நிற்கலாம். தவறாமல் சோம்பல் படாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தலை சுற்றல், இதயத் துடிப்பு மாற்றங்கள் ஏற்படலாம். அதனால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால் இதய நோயைத் தவிர்க்கலாம். ஹார்மோன் மாற்றங்கள் உடல் எடையை அதிகரிக்கலாம்.

எனவே யோகா, ஏரோபிக்ஸ், ஜும்பா டான்ஸ், ஜிம் என ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம். இது உடலையும் மனதையும் ஃபிட்டாக வைப்பதோடு இளமையாகவும் உணர வைக்கும். எனக்குத் தெரிந்த எழுபத்தி நான்கு வயது பெண் ஒருவர், அழகாகப் புடவை உடுத்தி, அணிகலன்களுடன்தான் வலம் வருவார். ஒரு விருந்தில் அவர் இளவயதினருடன் இணைந்து உற்சாகமாக நடனமும் ஆடினார். இந்த வயதிலும் மனதைச் சோர்வடைய விடாது உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அவர் உற்சாகத்தின் வழிகாட்டி.

மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும். ஆனால், இதைக் குடும்பத்தினரும் குறிப்பாகப் பெண்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலைப் பற்றிய தெளிவு முதலில் நமக்கு இருக்க வேண்டும்.

ஒருமுறை என்னுடைய தோழி அவரது அனுபவத்தைப் பகிர்ந்தார். சிறு வயதில் அவரது உறவினர் வீட்டிற்குச் சென்றபோது உறவினரது அம்மா யாருடனும் பேசாமல் திண்ணையில் ஒருபுறம் அமர்ந்திருந்தார். அவர் திடீர் திடீரென கூச்சலிட்டுப் பேசுவதாகவும், பொருள்களைத் தூக்கி வீசுவதாகவும் பிரமை பிடித்தது போல எங்கோ வெறித்துப் பார்த்து அமர்ந்திருப்பதாகவும் அவ்வப்போது மயங்கிச் சரிவதாகவும் தோழியிடம் சொல்லப்பட்டது. அப்போது அங்கு வந்த அவரது கணவர் தன் மனைவிக்குப் பேய் பிடித்திருக்குமோ என்னவோ என்று ஒரு சாமியாரை அழைத்து வந்து, ‘பேயோட்டும்’ முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கவே தோழி அவரது வீட்டிற்கு ஓட்டம் பிடித்ததாகச் சொன்னார். அப்போது அந்தம்மாவிற்கு ஐம்பதை நெருங்கும் வயது. மெனோபாஸ் காலம் நெருங்கி விட்டதும் ஹார்மோன்கள் மாறுதலால் மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டதையும் அறியாமல் பேய் பிடித்ததாக நினைத்த அன்றைய காலகட்டத்திற்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை இன்றைய நவீன சூழலும்.

எனக்குத் தெரிந்த இன்னொரு பெண் நாற்பத்தைந்து வயதைத் தாண்டியவர். அவர் மூட் ஸ்விங்கில் இருப்பதைப் புரிந்துகொள்ளாத அவரது கணவர், “ரொம்ப சீன் போடாதே.. எங்கம்மா, சிஸ்டர் எல்லாரும் உன் வயசைத் தாண்டி வந்தவங்கதான். அவங்க இப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணதில்லை…” என்று வார்த்தைகளால் வறுத்தெடுப்பார். அந்தத் தோழியின் ‘மூட்’ இன்னும் கெட்டுப் போகும். அவர் குறிப்பிட்ட அம்மா, அக்காவின் ‘மூட் ஸ்விங்க்’ அட்டகாசங்களை அவர்கள் கணவர்களிடம் கேட்டுப் பார்த்தால்தானே தெரியும்? அதேபோல் மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் சரியாகக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் மிக முக்கியமானது. நன்றாக ஆடை அணிந்துகொள்ளவும் ஆளுமைத்திறனை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும். முக்கியமாக அடுத்தவர்களின் பேச்சுக்கும் விமர்சனங்களுக்கும் காதைக் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் இதைப் புரிந்து கொண்டோமென்று சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணிக்கை 0.001 விழுக்காடே. இதர ஆண்கள் புரிந்துகொண்டாலும் வீட்டுவேலை எங்கே நம் தலையில் விழுந்து விடுமோ என்று ‘அஞ்சி’ கண்டுகொள்ளாமல்தான் இருக்கிறார்கள். அதுவே அடுத்தவர் வீட்டில் இப்படி இருந்தால் மாய்ந்து மாய்ந்து அறிவுரை சொல்வார்கள். நிறைய ஆண்களின் எண்ணவோட்டம் இப்படித்தான் இருக்கிறது.

மெனோபாஸ் வயது என்பது மரபியல் சார்ந்தது கிடையாது. அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. ஆனால், இன்றைய பெண்களின் ‘இளமையான’ மனநிலை காரணமாக மெனோபாஸ் வயது தள்ளிப் போக ஆரம்பித்திருக்கிறது. இப்போதெல்லாம் வயதாகி விட்டது என்று யாரும் மூலையில் முடங்கிக் கிடப்பதில்லை. அறுபது, எழுபதைத் தாண்டிய பெண்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அதனால் ஹார்மோன்களுக்குள் கொஞ்சம் குழப்பம் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. நீங்களும் உங்கள் பங்குக்கு உங்கள் ஹார்மோன்களைக் குழப்புங்களேன். நமக்குள் பெருகும் தன்னம்பிக்கையே நமக்கான எனர்ஜிடிக் ஹார்மோன்.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மெனோபாஸ் குழு (IMS) உலக சுகாதார மையத்துடன் சேர்ந்து அக்டோபர் மாதத்தை உலக மாதவிடாய் நிறுத்த விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, அக்டோபர் 18ஆம் தேதியை உலக மெனோபாஸ் தினமாக அறிவித்தது.

மாதவிடாய் முழுவதுமாக நிற்பது மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலில், பெரி மெனொபாஸ்(Peri menopause) அடுத்தது மெனோபாஸ். தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் வராமல் இருப்பது இந்தக் காலகட்டத்தில்தான். இறுதியாக போஸ்ட் மெனோபாஸ் (Post menopause), இந்தக் காலகட்டத்தில் பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்திக்கும் இன்னல்கள், ஏற்ற இறக்கங்கள், பிற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தியாவில் மாதவிடாய் நிறுத்தத்திற்கான வயது வரம்பு 46 – 47. இது பல வளர்ந்த நாடுகளிலுள்ள வயது வரம்பைவிடக் குறைவாகும், 40 வயதிற்கு முன்னால் இந்த நிலையை அடைவதற்குப் பெயர் ’ப்ரீமெச்சூர் மெனோபாஸ்.’

அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மெனோபாஸ் தொடர்பான மருத்துவக் கொள்கைகள், காப்பீடு குறித்து இதுவரை எந்தவோர் அரசாங்கமுமே சிந்தித்தது இல்லை. மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பே இப்போதுதான் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெனோபாஸ் தொடர்பான மருத்துவக் கொள்கைகளை எங்ஙனம் எதிர்பார்க்க இயலும்? கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் இதுகுறித்து கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மெனோபாஸ் கொள்கைகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாள்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே பல நாடுகள் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பை அளித்துள்ள நிலையில், இந்தியாவில் மாதவிடாய் விடுமுறைக்குத் தனியாகச் சட்டம் எதுவுமில்லை. கல்வி நிறுவனங்களிலும் பணியிடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சைலேந்திர மணி திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், மாதவிடாய் விடுமுறை குறித்து மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கம் அறிவிக்கட்டும் என்று காத்திருக்காமல் பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மாதவிடாய், மெனோபாஸ் தொடர்பான மருத்துவக் கொள்கைகளை நாமே வகுத்து வரையறுக்க வேண்டும். இது தொடர்பான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு நாமே வழங்கலாம். மாதவிடாய் பிரச்னைகளால் பெண்கள் முன்னேற்றம் தடைப்படுவது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

பெண்கள் இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான சக்தி. அதை உடல்நலத்தைக் காரணம் காட்டி வீணடித்துவிடக் கூடாது.      

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.