இதுவரை:
மதி அஃதரின் மீது கோபம் கொண்டிருக்கிறாள் விடுப்பினை ரத்து செய்ததற்காக. இனி அஃதரிடம் பேசுவோம்.
விடுப்பை ரத்து செய்யச் சொல்லியபோது அவளின் ஏமாற்றம் பொதுவானது என்றுதான் எண்ணினேன். வந்த ஒரு வருடம் நான் கவனித்த வரை அவள் மாதம் ஒருமுறையேனும் வீட்டிற்குச் சென்று வருவாள். முக்கிய வேலைகள் ஏதும் இதுவரை தவறியதில்லை. ஆனால், இம்முறை அவளது முக வாட்டமும் அதன் பிறகான அவள் செயல்பாடுகளும் என்னை ஏதோ செய்தன. அந்த நிமிடம் எனக்குள் கேள்வி எழுந்தது. என்ன ஆயிற்று, நினைத்து இருந்தால் திறன்பேசியில் பேசியிருக்கலாம்தான். ஆனால், ஏதோ ஒன்று தடுத்து விட்டது மறுநாள் பேச வாய்ப்பு இல்லை என்று அறிந்திருந்தும்.
டெல்லியில் இருக்கும்பொழுது ஒருமுறை இது பற்றிச் சிந்தித்தபோது அவள் சரியாகி இருப்பாள் என்றே எண்ணி இருந்தேன். பிறகு நினைக்கவில்லை. ஆனால், சனிக்கிழமை அத்தனை வேலைகளிலும் அவளை ஒருமுறை பார்த்த கனம், அவள் முகவாட்டத்தில் சென்ற நாள் முதல் இந்த நாள் வரை அவள் அப்படித்தான் இருந்திருக்கிறாள் என்று புரிந்துபோனது. சரி, அன்றாவது பேசலாம் என்று எண்ணிகூட முடியாமல் வேலை வேலை என்று பறக்க வேண்டியதாயிற்று. எங்கே காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் முடித்தாகிவிட்டு வீட்டுக்குச் சென்றதும் தூங்க மட்டுமே சக்தி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அழைக்கலாமென தொலைபேசியை எடுத்துவிட்டேன். ஆனால், ஏதோ ஒன்று தடுத்துவிட்டது. திங்கள் முதல் வாரம் முழுக்க வேறு நிறுவன உயர் அதிகாரிகளிடமும் அதில் பணியாற்றிய குழுவிடமும் நேரம் முழுதாகக் கரைத்தது.
மதி சற்றுத் தெளிந்திருந்தாள். அடுத்த வாரம் உயர்குழு திட்ட வரைவுக்கான கூட்டம். மதியின் தேவை அதில் இல்லை. ஆதலின் அவன் விடுப்பினை ரத்து செய்யும் நிலை நல்லவேளை எனக்கு வரவில்லை. புதன்கிழமை அவள் நிச்சயம் இருக்க வேண்டும் என்றபடியால் அழைத்தேன். முதல் முறை அவள் பயம் என்னைக் கூசச் செய்தது. அப்படி என்னதான் செய்துவிட்டேன்? இப்படிப் பதறுகிறாள். விடுப்புதானே இந்தப் பெண்ணை என்னதான் செய்வது? கோபமா, ஆதங்கமா என்று புரியவில்லை. அவள் சென்ற பிறகு அன்று உண்மையிலேயே என் மன அமைதி குலைந்துவிட்டது. தீர்க்கமாக முடிவு செய்தவனாக அவளை இடைவேளையில் அழைத்தேன். மதியம் உணவிற்கு என்னோடு வர இயலுமா, சற்று அலுவலக ரீதியாகப் பேச வேண்டியது உள்ளதென. அவள் சோர்ந்திருந்த குரலில் சரியென்றாள். அருகில் இருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றேன். இப்படிச் சில குழு உறுப்பினர்களை மதிய உணவிற்கு அழைத்துச் சென்றது உண்டு. சமயங்களில் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க. சமயங்களில் குறைகளைச் சுட்டிக்காட்ட. இன்னும் சில சமயங்களில் உண்மையாகவே அலுவலக விஷயம் பேச. ஆனால், இம்முறை சற்று மாற்றமாக எனது குழப்பம் தீர்க்க. அவள் முகத்தில் குழப்பரேகைகள் என்னை உண்மையில் பதறவே செய்தன. உணவை ஆர்டர் செய்த பிறகு மதி என் மேல் என்ன அப்படிக் கோபம் என்றேன். அதிர்ச்சி பார்வை பதிலாக வந்தது.
“என்ன கோபம் மதி?”
“ஒன்றுமில்லை.”
“என்னிடம் நேரடியாகப் பணிபுரிய விருப்பம் இல்லையா?”
“ஒருபோதும் அவ்வாறு நான் எண்ணவில்லை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”
அதில் ஒரு பதற்றம் தெரிந்தது. அது உண்மையின் கூற்று என நான் அறியாதது இல்லையே.
பிறகு ஏன் என்னைப் பார்த்தால் நடுங்குகிறாய்? ஒரு வருடமாக இல்லாமல் இன்று ஏன் இப்படி?
“ஒன்றும் இல்லை.”
“இது போல் நீ ஒரு வாரம் இருப்பதன் காரணம் என்ன? உனக்குத் தெரியாது மதி. இந்த ப்ராஜெக்டிற்காக எத்தனை பேர் காத்திருந்தார்கள் என்று. நான் ஒவ்வொன்றாக அலசி உன்னையும் தீக்சித்தையும் தேர்வு செய்தேன். உங்கள் இருவரையும் வேண்டாம் என்று கூறியவர்களிடம் உங்களைத் தகுதியானவர்கள் இதற்கு என்று எத்தனை முயன்று நிறுவினேன் தெரியுமா? இது புரியாமல் உனது விடுப்பிற்காக நீ இத்தனை வருந்துகையில் எனக்கு எதுவுமே புரியவில்லை மதி.”
இதை நான் ஆதங்கத்தில் கூற, அவளும் எதிரில் கலக்கத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். உணவு வந்தபடியால் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தோம்.
ஐந்து நிமிடம் கழித்து சமநிலையை அடைந்தவனாக நான் பொறுமையாகக் கேட்டேன் என்ன பிரச்னை என்று.
சாரி என்றாள்.
என்ன பிரச்னை என்று கேட்டேன். வீட்டிற்குப் போகவில்லை என்றதும் தாங்க முடியவில்லை, இந்த ஏமாற்றத்தை என்னால் ஏற்க முடியவில்லை என்றாள்.
இதில் என்ன ஏமாற்றம் புரியவில்லை என்றேன்.
“அஃதர் இது மிடில் கிளாஸ் திங். எனக்குப் பணி நிரந்தரத்திற்குப் பிறகான முதல் முழுச் சம்பளம். இதில் என் வீட்டிற்கு நான் செய்ய வேண்டியவை பற்றி நிறைய கனவு கொண்டிருந்தேன், நீண்ட வருடங்களாக. உண்மையில் உழைப்பின் பயன் ஊதியம்தான் அஃதர். இந்தத் தருணம் என் வாழ்நாள் கனவு. ஒருகால் பணம் அனுப்பினால் போதாதா என்று நீங்கள் கேட்கலாம. சரிதான். ஆனால், அதையும் அம்மாவும் அப்பாவும் என் திருமணத்திற்காக ஒரு பைசா எடுக்காமல் சேர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த முறை ஆரம்பித்தால் அது தொடர்கதை ஆகி என் விருப்பங்கள் தரைமட்டமாகிவிடும். அவர்கள் சம்பளப் பணம் எங்கே என்று என்னை டிமாண்ட் செய்யும் நிலைக்கு உள்ளாகிவிடும். அதில் அவர்களோடு சேர்ந்து அவர்கள் விரும்பியதை அவர்களே அறியாது வாங்கித் தர ஆசை கொண்டேன். கனவுகள் தள்ளிப்போனது ஒரு வாரம்தானே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நிச்சயமாய் எனக்கு வரவில்லை.”
கனவுகள் கைவரும் நேரம் மனம் நிறையாவிடில் வாழ்வின் அர்த்தங்கள் புதிர்களாகி புன்னகை பறித்துவிடுகின்றன. நான் என்ன செய்வேன்? மதி ஏக்கமாக எடுத்துரைக்கையில் அவள் வலி என்னையும் தொற்றிக்கொண்டது.
நான் ஏதோ சொல்ல வாய் எடுக்க, அவள் அதைக் கவனிக்காமல் மீண்டும் தொடர்ந்தாள்.
ஆனால், அஃதர் உங்களுடன் இன்று பேசியதில் ஒரு புதுக் கதவு திறந்து இருக்கிறது என்பதும் மனதில் பதிகிறது. மிக்க நன்றி. சாரி என்றாள்.
பிறகு சிறிது நேரம் புது ப்ராஜெக்ட் வழிமுறைகளைப் பற்றிப் பேசிவிட்டுக் கிளம்பினோம்.
அன்று என் மனம் ஒரு விஷயத்தல் லேசானது. என் மீதான அவளின் பயத்தையும் கோபத்தையும் சரி செய்துவிட்டேன். அவளின் ஆசைகள் நிறைவேறாத வருத்தம் என்னைத் தொற்றிக்கொண்டது. உண்மையில் தூரப் பார்க்கையில் இது பெரிய விஷயமே அல்ல. அருகில் பார்க்கையில் அவ்வளவு எளிதும் அல்ல. ஆனால், அவளுடைய நீண்ட கனவுகளுக்கான பாதையை நான் அவளுக்கானதாகத் திறந்துவிட்ட சாவி என்று நினைக்கையில் மனம் அமைதியுற்றது. அவள் வீட்டிற்குச் சென்று வந்தால் இன்னும் சரியாகிவிடுவாள் என்று நான் உறுதியாக நம்பினேன்.
மதியின் வீட்டிற்குச் சென்று தன் ஆசைகளை நிறைவேற்றினாளா? அவளிடமே கேட்போம். காத்திருங்கள்.
(தொடரும்)
படைப்பாளர்:
மோகனப் பிரியா கெளரி
நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம். சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’