ஜனவரி 8-ம் தேதி திருப்பூரில் புற்று நோய் மருத்துவமனைக்காக மிகப் பெரிய அளவில் மாரத்தான், வாக்காத்தான் நடத்தப்பட்டன. நானும் அதில் பங்கு பெற்றேன். அதில் பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர்களில் திரைக்கலைஞர் கௌதமியும் ஒருவர்.

கௌதமி அழகாக ஒரு விஷயத்தைக் கூறினார். அவர் புற்று நோயிலிருந்து மீண்டுவந்தவர். அவர் கூறிய விஷயம் மிகவும் முக்கியமானது என்று எனக்குத் தோன்றியது.

“சுயநலமாக இருக்கப் பழகுங்கள்.”

ஆம் அவர் சுயநலமாக இருக்கப் பழகக் கூறினார்.

“சுயநலமாக இருங்கள். உங்கள் குழந்தைகள், குடும்பத்திற்காகச் சுயநலமாக இருங்கள். எனக்குப் புற்று நோய் பரிசோதனை செய்யும் போது என் மகளுக்கு நான்கு வயது. இப்போது என் மகள் இருபது வயதைத் தாண்டிவிட்டாள். நம் குழந்தைகள், குடும்பம் ஆகியவற்றிற்காகத் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம்.”

இது அவர் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான வகையில் கூறினாலும் இதில் பெண்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

பெரும்பாலான பெண்கள் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றால், சரியான ஓய்வு எடுப்பதில்லை. பல இடங்களில் ஓய்வு எடுக்க வாய்ப்பும் கிடைப்பது இல்லை. குடும்பத்தினருக்கு ஏதாவது என்றால் ஓடிஓடி கவனிப்பவர்கள், தங்கள் ஆரோக்கியத்தில் பல நேரத்தில் புறக்கணிப்பைக் காட்டிவிடுகின்றனர்.

அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. எங்கோ தான் சோர்ந்து போய் அமர்ந்தால் நாம் வேலை செய்வது இல்லை என்று குற்றம் சுமத்திவிடுவார்களோ என்ற ஓர் உணர்வும் ஒரு காரணம். என் பிள்ளை, என் கணவன் நான் இல்லை என்றால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அனைத்தையும்தான் அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும் என்ற அன்பும் காரணம்.

வேலை இடங்களில்கூட வேலை செய்பவர்களுக்குத் தக்க ஓய்வு நேரம் கொடுக்கப்படுகிறது. அதுபோல்தான் குடும்ப வாழ்க்கையும். தங்கள் குழந்தைகள், கணவன் ஆகியோரை வேலைகளைப் பகிர்ந்து செய்யப் பழக்குங்கள். நீங்கள் சோர்ந்து போனால் உங்களைத் தாங்கிப் பிடிக்கவும் ஆட்கள் இருக்க வேண்டும். உங்களுக்கும் ஓய்வு நேரம் அவசியம். ஆரோக்கியமும் முக்கியம்.

நம் வாழ்க்கை மாரத்தான்போல். நீண்ட நேரம் ஓட ஸ்டாமினா அவசியம். ஆரோக்கியம், வேலை, குடும்பம் அனைத்தையும் பேலன்ஸ் செய்தால் நீண்ட நாள்கள் ஓடமுடியும்.

HEALTH IS HAPPINESS. YOU ARE ALSO IMPORTANT. CARING YOURSELF IS NOT WRONG.

உங்களைப் பாதுகாக்க முடிந்தால்தான் உங்களுக்குப் பிடித்த அனைத்தையும் பாதுகாக்க முடியும். அதனால் சுயநலமாக இருங்கள்.

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.