மனித வாழ்வை நோயின்றி சீராகக் கடக்க பெரிதும் துணைபுரிவது ஹார்மோர்ன்கள்தாம் என்றாலும், பெண்கள் வாழ்க்கையில் இந்த ஹார்மோர்ன் செய்யும் கலகங்கள் அவளின் பதின் பருவத்திலேயே தொடங்கிவிடும். இந்த ஹார்மோர்ன்கள் சீராகச் சுரந்து செயல்படுபவர்களுக்குப் பெரிதாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், இதே ஹார்மோர்ன்கள் தாறுமாறாகத் தனது இருப்பையும் இல்லாமையையும் தெரிவித்து ஆடும் நர்த்தனங்கள் பெண்ணின் இயல்பை அடியோடு புரட்டித் துவைத்து துவளச் செய்கின்றன. அதனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால், அதனுடன் கைக்கோத்து நடனம் ஆடி வாழ்வை எளிதாகக் கடந்துவிடலாம்.

பெண்கள் பூப்படையும் காலம் தொட்டு ஆரம்பிக்கும் ஹார்மோன்களின் ஆட்டம், கிட்டத்தட்ட ஐம்பது வயது வரை அவளை ஆட்டிப்படைத்துவிட்டுதான் விடைபெறுகிறது. ‘அதெல்லாம் சும்மாங்க, அந்தக் காலத்துல பெண்கள் நல்லா சாப்பிட்டு, நல்லா வேலை செஞ்சு நல்லாதான் இருந்தாங்க. எப்போ பெண்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றார்களோ அப்பல இருந்துதான் பிரச்னை’ எனப் பெண்ணை மீண்டும் கற்காலத்துக்கு இட்டுச் செல்ல ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கும் நிலையில், இதைப் பற்றி உடைத்துப் பேசியாக வேண்டிய அவசியமும் இருக்கிறது.

உண்மையில் இவர்கள் சொல்வதுபோல பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருந்தபோது எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தார்களா என்றால், இல்லவே இல்லை என்பதுதான் உண்மையான பதிலாக இருக்க முடியும். ஏனென்றால் இந்தப் பிரச்னையை அந்தக் கால பெண்கள் கொடூரமாக அனுபவித்து இருக்கிறார்கள். உதிரப்போக்குக் கட்டுங்கடாமல், துணிகூட வைக்க முடியாமல், கொல்லைப்புறத்தில் நின்று மணலை அள்ளிக் கொட்டி மூடி, தூரத்தில் கொட்டியதை எல்லாம் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

அதேபோல பெண்கள் பூப்படையாமல் போனதற்கான காரணம் என்ன ஏது என்று தெரியாமல், கோயில் கோயிலாகச் சென்று விளக்கேற்றி, ஜோசியர் சொன்ன பரிகாரங்கள் எல்லாம் கேட்டு மன உளைச்சலோடும், விடை தெரியா கேள்விகளோடும் போராடிய பெண்களும் உண்டு.

அப்போது இவை பொதுவெளியிலோ வேறு எங்குமோ பேசப்படவே இல்லை. அப்படியே பேசினாலும் பெண்களுக்குள்ளாக மட்டும்தான் பேசப்பட்டது. ஆணிடம் இதைப்பற்றி பேசுவது அநாகரிகம் (!), இன்னும் சொல்லப் போனால், ஆண்களிடம் சொல்வதுகூடப் பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்ட சமூகம் நம்முடையது. அதனால் பல ஆண்களுக்குப் பெண்கள் என்ன மாதிரி பிரச்னைகளை எதிர்கொண்டார்கள் என்றே தெரியாது,

நிலைமை அவ்வாறு இருக்க, பெண் உடல் பற்றிய புரிதல் துளிகூட இல்லாத ஆண்களும் ஆணாதிக்கச் சிந்தனையுள்ள பெண்களும் பேட்ஸ் உபயோகிப்பதால்தான், ஜீன்ஸ் அணிவதால்தான், ஆண்கள்போல விளையாட்டுகளில் ஈடுபடுவதால்தான் எனத் தாங்கள் படித்த ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ பதிவுகளில் அருளப்பட்டிருக்கும் தத்துவ முத்துகள் அனைத்தையும் உதிர்த்து, ஏற்கெனவே உடலாலும் மனதாலும் நொந்து கொண்டிருக்கும் பெண்ணை, நாம்தான் சரியில்லையோ என்று நினைக்கச் செய்துவிடுகிறார்கள்.

இன்னொன்று அனைத்துப் பெண்களுக்கும் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதாலேயே, சில பெண்களும் மாதாந்திர தொந்தரவுகளில் அவதிப்படும் பெண்களிடம், ‘நாங்களும்தான் மாசா மாசம் குளிக்கிறோம், என்னவோ அதிசயமா உனக்கு மட்டும்தான் வந்திருக்குறது போல ஓவரா ஸீன் போடுற’ என்று அடக்கும் கொடுமையும் நடக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் 14 வயதில் பூப்படைந்தாள். மாதா மாதம் வயிற்று வலியில் துடிப்பாள். மருத்துவர்களிடம் காண்பிக்க, அவர் பரிசோதனை செய்துவிட்டு பயப்பட ஒன்றும் இல்லை, வலி நிவாரணி மட்டும் அந்த நேரம் எடுத்துக்கொள்ளுமாறு கூறியதோடு, சிலருக்குப் பூப்படைந்த ஆரம்ப காலத்தில் இந்த வலி இருக்கும், சில வருடங்களிலோ அல்லது திருமணம் ஆன பின்போ இந்த வலி இருக்காது, நல்ல சத்தான உணவு, பழங்கள் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைத்து அனுப்பிவிட்டார்.

இன்னும் ஒரு பெண்ணுக்குக் கட்டிகட்டியாக உதிரப்போக்கு இருந்ததுடன், ஒழுங்கற்று இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்ததால், அந்தப் பெண் அடைந்த மன உளைச்சல் சொல்லி மாளாது. அதன்பின் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று தொடர்ந்து மாத்திரைகள் உட்கொண்டு இப்போது சீரடைந்து வருகிறாள்.

யாருக்கு என்ன மாதிரி பிரச்னை இருக்கும் என்று மருத்துவர்தான் கூற முடியும். அதேபோல அதற்கான சிகிச்சையும் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு பெண்ணுக்கு இருக்கும் சிக்கலே இன்னொரு பெண்ணுக்கும் இருக்க வாய்ப்பில்லாத நிலையில் மருத்துவர் அல்லாத ஆண்கள், பெண்கள் உடுத்தியிருக்கும் உடையோடும் பாரம்பரிய காரணங்களை அடுக்கியும் தீர்வு சொல்லவரும் அந்தக் கரிசனம் இருக்கே… சில மருத்துவர்களே பிற்போக்குத்தனமாக முன்னோர் சொல்லிய முறை என உளறிக்கொட்டிக் கொண்டிருப்பது கொடுமை.

ஓரளவு சத்தான உணவும், நல்ல உடற்பயிற்சியும் பெண்களை ஹார்மோர்ன்களின் சதிராட்டத்தில் இருந்து காக்கும் என்றாலும், வீட்டு வைத்தியங்களுடன் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியம்.

உடல்ரீதியாக எதிர்கொள்ளும் இந்தப் பிரச்னைகள் ஒருபுறம் என்றால், பதின்பருவத்திற்குள் வரும் பெண் குழந்தைகள் மனரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். உடலும் மனமும் போட்டி போட்டுக்கொண்டு உள்ளும் புறமும் நடத்தும் மாற்றங்களைக் கண்டு அவர்கள் தங்களுக்குள்ளாக கலவரமடைகின்றனர். பெற்றோர்களுடன் தோழமையுடன் இருக்கும் குழந்தைகள் ஓரளவு இந்தப் பிரச்னைகளை எளிதில் கடந்துவிடுகின்றனர் என்றாலும், அவர்களுக்குள் நடக்கும் கலவரங்களால், தங்களுடைய குழப்பங்களைப் பகிர தயங்கி தனிமையையோ அல்லது தோழமைகளையோ நாடுவதும் இயல்பானதுதான்.

அதேபோல பாலியல் ஈர்ப்பு குழந்தைகளுக்கு ஆரம்பிக்கும் நேரமும் இதுதான். ஒருபுறம் ஹார்மோர்ன் தூண்டுதல்கள், மறுபுறம் இன்று மிகவும் எளிதாகிவிட்ட இண்டர்நெட், மொபைல் பயன்பாடு குழந்தைகளுக்கு வேண்டியது மட்டுமல்லாமல், தேவை இல்லாத பலவற்றையும் அவர்களுக்குக் காட்சிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாம் என்ன மறைத்தாலும், முற்றிலும் அவர்களிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

பள்ளியில் படிக்கும் சகமாணவன் ‘லவ் யூ’ சொல்லும்போது அதனை எப்படி எதிர்கொள்வது எனத் தடுமாறுவதும், அதே சமயம் அவள் அறியாமல் அவனை ஈர்க்கச் செய்யும் முயற்சிகளும் எனப் பெண் குழந்தை தனக்குள்ளாகப் பலவாறாக பிளவுறுகிறாள். அந்த வயதில் மாணவனின் ‘ஐ லவ் யூ’வை எப்படி ஒரு பெண் குழந்தை எதிர்கொள்ள வேண்டும் என்று பெண்ணுக்கு எந்தப் பள்ளியிலாவது கற்றுக் கொடுக்கப்படுகிறதா? அல்லது எந்தப் பெற்றோராவது அதனை எப்படிக் கையாள வேண்டும் என்று கற்றுத் தருகிறோமா என்றால், இல்லை என்பதுதான் பெரும்பாலோர் பதிலாக இருக்கும்.

குழந்தையை அடித்து மிரட்டி ஒடுக்க முயலுவோம், அல்லது பள்ளியில் ஒரு பெரிய களேபரத்தை உருவாக்கி சம்மந்தப்பட்ட ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் குற்ற உணர்வுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி அவர்களைப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்துவதை எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் செய்வதைத்தான் இன்றளவும் பலரும் செய்கின்றனர்.

ஒருவிதக் கிளர்ச்சியும் பயமும் குழப்பமுமாக இருக்கும் அந்தப் பெண் குழந்தைக்குத் தேவை எல்லாம், இதெல்லாம் இந்த வயதில் வரும் உணர்வுதான், இங்கே வா என அணைத்துகொண்டு தேற்றி அதில் இருந்து அவளை மென்மையாக மீட்டு, அவள் குழப்பங்களை, பயங்களை சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அன்பு மட்டுமே.

இந்த நேரத்தில் தவறான வழிக்காட்டுதலுக்குள் சிக்கிக்கொள்ளும் குழந்தைகள்தாம் காதல் பற்றிய புரிதல் இல்லாமல், அதற்குள் சிக்குண்டு தங்கள் கல்வியை, வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.

நம் பெண் குழந்தைகள் பூப்படைவதற்கு முன்பாகவே விளையாட்டுபோல அவர்கள் உடலுக்குள் நிகழ இருக்கும் மாற்றங்களையும் அதனை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் சொல்லித் தர முற்படலாம். அதேபோல் அந்த வயதில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பையும் தடுமாற்றங்களையும் கடந்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மென்மையாகப் புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்.

அதேபோல நம் பெண் குழந்தைகளுடன் படிக்கும் சக மாணவனும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் அதே போன்ற உடல், மனக் குழப்பங்களைக் கடந்து வருகிறான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளைத் தண்டித்தோ அவமானப்படுத்தியோ ஒருபோதும் உங்கள் வழிக்கு அவர்களைக் கொண்டுவர முடியாது. இதனைத் தெளிவாக முதலில் பெரியவர்கள் உணர்ந்து கொண்டாலே போதும்.

ஹார்மோர்ன் எனும் ரிங் மாஸ்டர் ஆட்டுவிக்கும் மாய ஆட்டத்துக்குள் நம் குழந்தைகள் சிக்கிக்கொள்ளாமல் அவர்களை அழகாக மலரச் செய்யலாம்!

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.