இந்த முறை 18+

சிபிக்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது. மீட்டிங் ரூமிலிருந்து இன்னும் அவனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் அந்தச் சிரிப்பலைகள் அவன் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல, இல்லை, இல்லை கொஞ்ச கொஞ்சமாகத் துகிலுரிப்பதுபோல் அத்தனை அவமானமாக இருந்தது.

கண்ணாடிக் கதவினூடே அந்த நான்கு ஜோடிக் கண்கள் இன்னும் தன்னைத் துளைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்த அவனுக்கு ஆத்திரமும் அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது. பேசாமல் வேலையை விட்டுவிடலாம் என்றால் அப்புறம் பிழைப்புக்கு என்ன வழி? ஆதி வேறு தன் சினிமா கனவுகளுக்காக வேலையை விட்டு ஆறு மாதங்களாகின்றன. இன்னும் ஒரு கதையை எழுதி முடிக்காமல் இருக்கிறாள்.

குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் அதிகரித்திருக்கிறார்கள். மாமனாரின் மருத்துவச் செலவு, வீட்டுச் செலவு எல்லாம் இவனது வேலையை மட்டுமே நம்பி இருப்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு எல்லாப் பொறுப்புகளையும் சுமந்துகொண்டிருக்கிறான்.

மனைவி வேலையில் இருந்த போதெல்லாம், “உங்களுக்கென்ன பொண்டாட்டி நல்ல வேலைல இருக்காங்களே. நீங்க எதுக்கு இப்படிக் கஷ்டப்படணும்?” என்று அக்கறையுடன் ஈஷிக்கொண்டு பேசுவார்கள் பெண்கள்.

இப்போது இந்த வேலைதான் அவனது ஜீவாதாரம் என்று அறிந்து கொண்ட பின்பு அவளையும் அவளது உழைப்பையும் மலிவாகவே எடை போடத் தொடங்கி இருந்தார்கள். எந்தப் புள்ளியில் அக்கறை அவமரியாதையாக மாறுகிறது, அதற்குத் தன்னுடைய எந்த நடவடிக்கை காரணமாக இருந்தது என்ற மன உளைச்சலில் தவிக்கத் தொடங்கி இருந்தான் சிபி.

டீமில் இருக்கும் ஒரே ஆண் சிபிக்குத் திங்கள்கிழமை என்றால் வேலை நாள் என்பதைத் தாண்டி ஸ்டேட்டஸ் மீட்டிங்கை நினைத்துதான் வயிறு கலங்கும். வேலையில் எந்தக் குறையும் வைக்காவிட்டாலும் எப்போதும் ஏதோ ஒருவிதத்தில் தாக்கப்படுவது நிச்சயம்.

“சிபி, குட் மார்னிங்!”

“குட் மார்னிங் ஜான்சி”

அவன் வரும்வரை தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டிருந்த நான்கு பேரும் அவன் மீது கவனம் குவித்தனர். அவர்களின் பார்வையில் இருந்த குறுகுறுப்பு, ஏளனம், அவன் மீதான சுவாரசியம் எல்லாமே அவனை நெளிய வைத்தன.

“புது ஷூஸா? செமயா இருக்கு!” – இது சங்கீதா.

“ஆமாங்க, என் ஒயிஃப் ப்ரெசெண்ட் பண்ணா.” மனைவி பெயரை அழுத்தமாகப் பதிவு செய்தால் அவர்களின் கேலி குறையும் என்று கணக்குப் போட்டது தவறாகிவிட்டது.

அவன் பதிலைக் கேட்ட மாத்திரத்தில் நேஹாவும் சஃபியும்கூடச் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்கள்.

“அப்படி வெடித்துச் சிரிக்கும்படி என்ன சொல்லிவிட்டேன்?” புரியாமல் கேட்டே விட்டான் சிபி.

“இல்ல, உங்க பையனோட ஷூஸை மாத்திப் போட்டுட்டு வந்துடீங்களோன்னு நினைச்சோம்.”

“எனக்குப் பையனே இல்ல, பொண்ணுதான்.” குழப்பத்துடன் அவன் அளித்த பதிலைக் கவனிக்காமல் மீண்டும் பொங்கிய சிரிப்பில் அவனது மேலாளர் ரூபாவும் லேசாகக் கலந்துகொண்டார்.

“கேர்ள்ஸ், போதும்” என்று அவர் மேலோட்டமாக அதட்டியதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

“எதுக்குச் சிரிக்கிறீங்கன்னு சொன்னா நானும் சிரிப்பேன்ல!” கோபப்பட்டால் சென்சிடிவ் என்று பட்டம் கட்டிவிடுவார்கள் என்பதால் வலிந்து ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு தானும் அவர்களுடன் கலந்துகொள்ள முயன்றான்.

உடனே மேலாளர் அவசரமாக வேலையைப் பற்றிப் பேசத் தொடங்க, அடுத்த கணம் சிபி இருப்பதையே மறந்து மீட்டிங் தொடங்கியது. சிபி செய்து அனுப்பிய வேலையைக் குறித்து ஜான்சியே பேசத் தொடங்க, தனது கருத்துகளைத் தெரிவிக்கவும் கவனம் பெறவும் இப்போது சிபி கடுமையாகப் போராட வேண்டி வந்தது.

மீட்டிங் முடிந்ததும் மீண்டும் அவனைக் குறிப்பிட்டு ஜான்சியும் சங்கீதாவும் ஏதோ பேசிச் சிரிக்கத் தாங்க முடியாமல் வெளியேறினான் சிபி.

“சாப்பிடப் போலாமா சிபி? என்ன ஒரு மாதிரி இருக்கே?”

விஷ்ணு நின்றிருந்தான்.

உணவு இடைவேளையில்கூடச் சாப்பிட ஓர் ஆண் வேண்டும் என்பதற்காக விஷ்ணுவுடன் நட்பாக இருக்கிறான் சிபி. பெரிதாக அவனைப் பிடிக்காது. கலரிங் தலையும் ஜிம்மில் மெருகேறிய உடலும், நெஞ்சு முடி தெரியும்படி பட்டன்களைக் கழற்றி விடப்பட்டிருக்கும் உடையுமாகப் பெண்களின் ஒட்டுமொத்தக் கவனத்தைப் பெற்றவன்.

ரிசப்ஷனிஸ்டாக வேலைக்குச் சேர்ந்த விஷ்ணுவுக்கும் இதற்கு முன்பு இருந்த எம்.டி மைதிலிக்கும் தவறான தொடர்பு இருந்ததாகவும் அதன் மூலமே பதவி உயர்வு அடைந்ததாகவும்கூட ஒரு கதை உண்டு.

‘இவனிடம் சொல்லலாமா வேண்டாமா? பெண்களைப் பற்றி நம்மைவிட அறிந்தவன். ஏன் சிரித்தார்கள் என்று சொல்லக்கூடும்.’

விஷயத்தைக் கேட்டறிந்த விஷ்ணு, “மை புவர் பாய்!” என்று சிபியை அணைத்துக்கொண்டான். ஆனால், அவன் நமட்டுச் சிரிப்பு சிரித்தது சிபிக்குத் தெரியாமலில்லை.

“நீயாவது சொல்லுடா… ஏண்டா சிரிச்சாங்க?”

“நிஜமாவே உனக்குப் புரியலையா? ரொம்ப இன்னசெண்ட் நீ!”

”ப்ளீஸ் சொல்லு.”

பாதங்களின் அளவுக்கும் ஆணுறுப்பின் நீளத்துக்கும் உள்ளதாகச் சொல்லப்படும் அறிவியல் அடிப்படையற்ற கட்டுக்கதைதான் அது.

சிபியின் ஷூஸ் சிறியதாக இருப்பதால் அதை வைத்துப் பாலுறவுக்கான அவனது தகுதியைக் கேலி செய்திருக்கிறார்கள் என்று விஷ்ணு விவரித்துச் சொல்லச் சொல்ல நெஞ்சடைத்துப் போனான் சிபி.

‘சீ! இவ்வளவு மோசமாகவா பேசுவார்கள் பெண்கள்? அதுவும்கூட வேலை பார்ப்பவன் குறித்து? இனி எப்படி அவர்கள் முகத்தைப் பார்ப்பது?’ கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

“ஐயோ… அசடு மாதிரி அழாதேடா. எல்லாரும் பார்க்கறாங்க பாரு.

வா சாப்பிடப் போவோம்” என்று அவனை அரவணைத்தவாறு அழைத்துச் சென்ற விஷ்ணு தனது பாதங்களைக் குனிந்து பார்த்துக் கொண்டான்.

எது எப்படி இருந்தாலும் தனது ஷூ சைஸ் பத்து என்பதில் ஒரு சின்ன திருப்தி அவன் மனதில் தோன்றியது.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.