வடசென்னை என்று சொன்னாலே தமிழ்நாடு குடிசைமாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகள்தாம் எனக்கு நினைவில் வரும். கேசவப்பிள்ளை பூங்கா குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகள் (K. P. PARK HOUSING BOARD). 1980ஆம் ஆண்டு சென்னையில் கட்டப்பட்ட முதல் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.
ஒவ்வொரு கட்டிடமும் மூன்று மாடிகள். தரைத்தளத்தையும் சேர்த்து நான்கு மாடிக் கட்டிடம் என்று கூறுவார்கள். தரைத்தளம் அவர்களுக்கு முதல் மாடி. ஒவ்வொரு தளத்திலும் நான்கு வீடுகள் வீதம் மொத்தம் பதினாறு வீடுகள். இவ்வாறு மூன்று கட்டிடங்கள் சேர்ந்து ஒரு பிரிவு, பிளாக் என்று அழைப்பர். (பிளாக் A, B, C என்று வரிசைப்படுத்தப்படும். இப்பொழுது இந்த அமைப்பு மாற்றிக் கட்டப்பட்டுள்ளது.) ஒரு வரவேற்பறை, சமையல் அறை, கழிவறையைக் கொண்ட வீடுகள். ஒவ்வொரு பிளாக்கிற்கும் ஒரு பொது தண்ணீர்க் குழாய். அடிபம்புதான், தண்ணீர் அடித்துத் தூக்கிச் செல்ல வேண்டும். நான்காவது மாடி என்றால் நாற்பது படிகட்டுகளுக்கும் மேல். நான்காவதுமாடியில்வசிக்கும்நிறைமாதக்கர்ப்பிணிப்பெண்கள்தண்ணீர்சுமந்துசெல்லும்வலியைவார்த்தைகளால்சொல்லமுடியாது.
இங்கு தமிழ் மக்களுக்கு மத்தியில் தெலுங்கு பேசும் மக்களும் சேர்ந்து வாழ்ந்துவந்தனர். அப்படி வாழ்ந்து, மறைந்த இரண்டு பெண்களின் கதை. சரித்திரம் காணாத மாமியாரின், மருமகளின் கதை. இருவரும் துப்புரவுத் தொழிலாளர்கள் (முன் களப்பணியாளர்கள்). இன்று படித்த மாமியாரும் மருமகளும் பேணிகாக்க முடியாத குடும்ப ஒற்றுமையை, மிகவும் சுலபமாக வாழ்ந்து காட்டி மறைந்த நல்ல உள்ளங்கள்.
இளம் வயதில் கணவனை இழந்த கங்கம்மா, தன் ஒரே மகனை வளர்த்து திருமணம் செய்து வைத்தார். அவர்களின் மகனும் இளம் வயதில் மறைந்தார். மருமகள் சுலோக்சனா, கைக் குழந்தை ரேகா இருவரின் எதிர்காலமும், தலை பாதி நரைத்துவிட்ட கங்கம்மாவின் தலையில் விடிந்தது. ரேகாவைப் பற்றி எழுதுவதா? அவள் பாட்டியைப் பற்றி எழுதுவதா? இல்லை, அவள் அம்மாவைப் பற்றி எழுதுவதா? இந்த மூன்று பெண்களுமே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய போராளிகள். அதனால், முதலில் கங்கம்மா, சுலோக்சனாவைப் பற்றிப் பார்ப்போம். பிறகு ரேகாவைப் பார்ப்போம்.
சுலோக்சனா சுவரில் சாய்ந்து, தன் ஒன்பது மாதக் குழந்தை ரேகாவைத் தன்னோடு அணைத்துக்கொண்டு தனக்குள் பேசிக்கொண்டாள். யாரிடம் பேசப் போகிறாள், மறைந்த தன் கணவரிடம் பேசுவதாக நினைத்து உளறிக்கொண்டு இருந்தாள்.
அவள் அருகில் சென்ற கங்கம்மா, “ஏம்மா, இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிக் கண்ணுல தண்ணியும் கையில புள்ளையுமா இருப்ப, புருசன் செத்து ஆறுமாசம் ஆச்சு, பொழப்ப பாக்க வேண்டாமா? நா சொல்றத கேளு, உன்ன மாறிதான் எம்பொழப்பும், சின்ன வயசுல தாலி அறுத்தவ தனியா வாழ முடியாதுமா. நா ஆம்புள புள்ளைய பெத்ததால பொழச்சேன். நீ பொம்பள புள்ளைய பெத்து இருக்க, தனியா வாழ முடியாது. புள்ளைய எங்கையில குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. நா பட்ட கஷ்டம் உனக்கு வேணாம்டியம்மா. எங்க காலம் வேற , உனக்கு வாழ வேண்டிய வயசு உன் புள்ளைய நா வளத்து ஆளக்குறேன், நீயும் என்ன மாதிரி நரக வாழ்க்க வாழாத. ஊரும் வுலகமும் பேசும், ஆனா ஒதவாது நா சொல்றத கேளும்மா” என்றார்.
தன் அத்தையின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, விக்கி அழத் தொடங்கியவள், தன் அத்தையையும் அணைத்துக்கொண்டு அழுதாள். காரணம் புரியாமல் குழந்தையும் அழுதது.
அந்தக் காலம், இந்தக் காலம் , எந்தக் காலமாக இருந்தாலும் இரண்டாம் திருமணம் இன்றும் குற்றமாகத்தான் பேசப்படுகிறது. “படித்த திமிரு, சம்பாதிக்கும் திமிரு அதான் விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா. புருஷன் செத்து இரண்டு வருசம்கூட ஆகல, அதுகுள்ள அந்த எதிர்வீட்டுப் பொண்ணுக்கு மாப்புள பாக்குறாங்க, அவ புள்ள ஸ்கூலுக்குப் போவுது இப்போ போய் அந்த அக்காவுக்கு இரண்டாம் கல்யாணமாம்” என்று இன்றும் புறம் பேசும் மக்கள் எல்லாச் சமூகத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை புரட்சியாளர்கள் வந்தாலும் புரட்சி என்பது மக்களின் மனதில் இருந்து எழுந்தால் மட்டுமே இந்தச் சமூகம் மாறும். முதலில் பெண்கள் மனதில் இருந்து பழமைவாதம் மாற வேண்டும்.
கங்கம்மாவும் குழந்தையும் உறங்கிவிட்டனர். சுலோக்சனா மட்டும் அவளின் நிலையை நினைத்து விம்மினாள். “என் கல்யாணக் கடனே இன்னும் பாக்கி இருக்கு, எனக்குப் பிறவு ரெண்டு பொம்பளபுள்ள, ஒரு தம்பி. இதுங்கல வளக்கவே முடியல நைனாவுக்கு, இதுல எனக்கு ரெண்டாங் கல்யாணம். ஊரு என்ன பேசும், பிறவு தங்கச்சிங்கள யாரு கட்டுவா?” இப்படியே யோசித்துக்கொண்டு இருந்தாள். பொழுது மட்டும் நன்றாக விடிந்தது.
மாமியாரும் மருமகளும் ஒன்றாக அமர்ந்து, காலை உணவு கஞ்சியைக் குடித்தார்கள். (பழைய சோற்றில் உப்பும் தயிரும் கலந்து, நன்றாகக் கரைத்து, வெங்காயம் அல்லது பச்சைமிளகாய் சேர்த்துக் குடிக்கும் பழக்கம் இன்றும் வடசென்னையில் வழக்கத்தில் உள்ளது.) ‘அத்த வேற கல்யாணம் எனக்கு வேணா. அதுல விருப்பமும் இல்ல, எம் புள்ளைய நல்லா வளத்து ஆளாக்குனா போதும் .நீங்க எங்களுக்குத் தொணையா இருந்தா போதும்’ என்றவளை, கண்ணில் நீர் பெருக கட்டி அணைத்துக்கொண்டாள். “உனக்குத் தொணையா நா இருக்கேம்மா, வருசம் போகட்டும், நீ மனசு மாறினா நானே உனக்கு வேற கல்யாணம் பண்ணி வெக்குறேன்” என்றார் கங்கம்மா.
மருமகளின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள மாமியார் கங்கம்மாள் என்பதில் மருந்துக்கும் சந்தேகம் தேவையில்லை. பிடிவாதமாகத் தன் குழந்தையை வளர்ப்பது மட்டுமே வாழ்க்கை என்று கூறும், மருமகளின் எதிர்காலத்திற்காக, தனக்குப் பிறகு இவளுக்கு உறவுகள் வேண்டும் என்று சுலோக்சனாவின் ஆதரவற்ற குடும்பத்தையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஒன்றாக வாழ்ந்தார்கள். சுலோக்சனாவின் தாயும் தந்தையும் இறந்துவிட, அவளின் உடன்பிறந்தவர்களுக்கும் திருமணம் செய்து வைத்தார் கங்கம்மா. அவர்கள், அவர்களின் குடும்பச் சுமைகளில் இவர்களை மறந்துவிட்டனர். யாரிடமும் மனம்விட்டுப் பேசாத இந்த இரண்டு பெண்களும் தனியாக வாழ்ந்து, இந்தக் குழந்தைகளை கரைசேர்த்த விதம், வடசென்னையின் தெருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்று மருமகளின் கைபைவரை சோதனை செய்த பிறகே தாய்வீடு அனுப்பும் மாமியார்களுக்குக் கங்கம்மா ஓர் எடுத்துக்காட்டு. கங்கம்மாவும் சுலோக்சனாவும் சரித்திரம் காணாத மாமியாரும் மருமகளும்.
மீண்டும் மாமியார், மருமகள், ஐந்து வயது தொடங்கிய ரேகா. ரேகா தன் வேலைகளைத் தானே செய்யும் அளவு வளர்ந்து விட்டாள். காலையில் கங்கம்மாவும் சுலோக்சனாவும் ஒன்றாகத்தான் வேலைக்குப் புறப்படுவார்கள்.
“ரேகா, ரேகா அம்மா வேலைக்குப் போறேன்டா, வாடா கண்ணு வந்து கதவ மூடிக்கோம்மா. நாஸ்தா வாங்கி வெச்சி இருக்கேன், துண்ணுட்டு ஸ்கூலிக்குப் போமா” என்றாள் சுலோக்சனா. ரேகா தன் மலர்விழி மெல்ல திறந்து, சிரித்துக்கொண்டே, “அம்மா கேக்கு” என்றாள். “அம்மா வூட்டுக்கு வரச் சொல்ல வாங்கியாறேன், நீ நாஸ்தா துண்ணுட்டு ஸ்கூலுக்குப் போம்மா, மதியானம் ஸ்கூல்ல நல்லா துண்ணுமா, அம்மா வறேன்” என்றவள் அவசர அவசரமாக ஓடினாள். காரணம் அவள் யார் முன்னாலும் செல்லக் கூடாது. இதற்கு இரண்டு காரணம் உண்டு, ஒன்று கணவனை இழந்தவள், இரண்டாவது துடைப்பம் கையில் வைத்துக்கொண்டு வெளியில் செல்பவர் முன் வரக் கூடாது. எத்தனை மூடநம்பிக்கைகள், எல்லாம் பெண்களுக்கே.
கதவுகளைச் சற்று மூடியும் சற்றுத் திறந்தும் தன் அம்மாவும் ஆயாவும் செல்வதைப் பார்த்துக்கொண்டு இருந்த ரேகா, தன் ஆயா அவளைத் திரும்பிப் பார்த்தவுடன், தன் பிஞ்சு விரல்களை ஒன்றாகக் குவித்து, கேக் வாங்கி வரச் சொல்லி சைகை காட்டினாள். ஆயாவும் அம்மாகிட்டா நான் சொல்றேன் என்பது போல சைகையில் சொல்லிவிட்டுச் சென்றார்.
பட்டாளம், தட்டாங்குளம், சூளை, வசந்தி தியேட்டர், புரசைவாக்கம் தெருக்களிலும் தெருமுனைகளிலும் இவர்களைப் பார்க்கலாம். அவர்களின் வேலை முடிந்ததும் இந்த வட்டாரங்கில் உள்ள வீடுகளில், உணவகங்களில் கழிவறையைச் சுத்தம் செய்வார்கள். இந்த வருமானத்தை ரேகாவின் எதிர்காலத்திற்கு என்று சேர்த்து வைப்பார்கள். இவர்கள் கொடுக்கும் மிச்சமான உணவுகளை இரவு உணவாக வைத்து உண்பர்.
இவர்களுக்கு என்றே தனியாகப் பின்வாசல் இன்றும் உண்டு. கொதிக்கும் வெயிலில் ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்கவே, கொட்டும் மழையில் ஒதுங்க இடம்கொடுக்கவே யாரும் இன்றுவரை இல்லை இவர்களுக்கு. அழுக்கு படிந்த மனம் கொண்ட மனிதனின் கழிவறையை மட்டுமே இவர்களால் சுத்தம் செய்ய முடியும். சமூகத்தின் அழுக்குகளை யாரால் சுத்தம் செய்ய முடியும். நல்லவேளையாக அடுக்கு மாடி கட்டிடங்களில் பின்வாசல் அமைப்பு வைக்க இடவசதி இல்லை. அடுக்கு மாடிகள் வாழ்க!
வயது முதிர்ச்சியால் கங்கம்மாள் மட்டும் சற்றுமுன்பே வீட்டிற்கு வந்துவிடுவார். பேத்தியுடன் நேரத்தைச் செலவிடுவார். அம்மா வருவதைப் பார்த்த ரேகா ஓடினாள். கைவீசி வந்தவளைப் பார்த்து முறைதாள்.
“ஏம்மா கேக்கு வாங்கிவரலயா?” “இல்ல அத்த, நா அந்த மொன வூட்ட கழுவி வுட்டுட்டு வறேன். அந்த அம்மாக்கு காலராவாம், அதான் நேர வூட்டுக்கு வந்துட்டேன். குளிக்காம எப்புடிப் புள்ளைக்கு வாங்கியாறது?” கங்கம்மா, ரேகாவுக்குச் சமாதானம் செய்து உணவகத்தில் இருந்து பெற்றுவந்த இட்லியை ஊட்டி உறங்க வைத்தார்.
சில நாள் கங்கம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்றாள் சுலோக்சனாவும். ரேகாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றால் கங்கம்மாவும் மாறி மாறி தங்கள் வேலையைச் செய்துகொள்வார்கள். ரேகா வளர்ந்துவிட்டாள். பதினைந்து வயது தொடங்கிவிட்டது. கங்கம்மாவும் ஓய்வு பெற்றார். ஓய்வு ஊதியத் தொகையைப் பத்திரமாகத் தன் பேத்தியின் பெயரில் வங்கியில் போட்டார். பேத்திக்குக் காவலாக வீட்டில் வாழ்ந்துவந்தார். வயதுவந்த தன் மகளுக்குத் துணையாக அத்தையை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றாள் சுலோக்சனா .
கங்கம்மாவிற்கு காக்கைக்குச் சோறு வைக்கும் பழக்கம் உண்டு. ஜன்னலுக்கு அருகில் தன் கட்டிலைப் போட்டுக்கொண்டு, காக்கைக்குச் சோறு வைப்பார். தன் மகனும் கணவரும் காக்கை வடிவில் வந்து உண்பதாக மகிழ்ந்து தினமும் சோறு வைப்பது வழக்கம். விந்தை என்னவென்றால் காக்கைக்கு கரண்டியில் சோறு ஊட்டுவார். அவர்கள் சிரிக்கும் தருணம் அதுமட்டுமே.
இந்த முன்று பெண்களும் இருந்த வீட்டில் மட்டும் சிரிப்பு, அழுகை என்று எந்தச் சத்தமும் வந்தது இல்லை. யாரிடமும் இவர்கள் அதிகம் பழகவும் இல்லை. இன்றும் பலர் இவர்களை அம்மா, மகள், பேத்தி என்றே நினைத்துக்கொண்டுள்ளனர். மாமியார், மருமகளை வைத்துக் கேலி செய்து, நகைச்சுவை செய்யும் ஊடகங்களே இது போன்ற நல்ல மாமியார், மருமகளைப் பற்றியும் பேசுங்கள், எழுதுங்கள்.
முதல் முறையாக இவர்கள் சிரித்தார்கள். ஆம்,ரேகாவிற்குத் திருமணம். பதினெட்டு வயது வந்ததும் திருமணத்தை முடித்து விட்டார்கள். ஒரே காரணம் ஆண் துணையில்லாமல் பெண் பிள்ளையை வளர்க்க முடியாது. சத்தம் இல்லாமல் இருந்த அந்த வீட்டில் இப்பொழுது, எப்பொழுதும் ஓயாத சத்தம் தான். அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று எடுத்தாள் ரேகா. கொள்ளுப்பேரன்களைக் கொஞ்சுவதும் சிரிப்பதுமாக வீடே திருவிழா கோலமாக மாறியது.
ஆண்துணைஇல்லாமல்ஒருபெண்வாழமுடியாதுஎன்றுரேகாவிற்கு அவசர அவசரமாகத்திருமணம்செய்துவைத்த, இந்தஇரண்டுபெண்களும்கடைசிவரைபுரிந்துகொள்ளவில்லை.இவர்கள்இருவருமேஆண்துணைஇல்லாமல்தனியாக, கௌரவமாகவாழ்ந்தார்கள்என்று!
முதுமை காரணமாக கங்கம்மா மறைந்தார். சுலோக்சனாவுக்குத் தனிமை புரிந்தது. அவளின் வயது நாற்பது. தனிமை, தனிமையுடன் ரேகாவின் கல்யாண வாழ்கையும் கசந்த சோகம். சில வருடங்கள் கடந்தன, சுலோக்சனாவும் மறைந்தாள்.
(தொடரும்)
படைப்பாளர்:
எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.