அந்த வருடம் அவளுக்கு ஒரு போர்க்களம் போல் இருந்தது. ஒரு போர்க்களத்தில் எதிரிகளின் முன்னால் ஆயுதங்கள் எதுவுமின்றி தன்னந்தனியாக நின்றால் எப்படி இருக்குமோ, அதே மாதிரியான உணர்வு தான் அவளுக்கும் இருந்தது.

ஆனந்தம் என்ற சொல், அவள் அகராதியில் அற்றுப் போயிருந்தது. உற்சாகம் என்பது எங்குமே காணக்கிடைக்காத ஒன்றாக இருந்தது. பசி என்ற உணர்வு இல்லை. உணவின் மீது விருப்பமும் இல்லை. எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும், அல்லது படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று உடல்நிலை சொல்லியது. நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதற்கோ சின்ன சின்ன வேலைகள் செய்வதற்ககோ உடல் ஒத்துழைக்கவில்லை.

மனதில் ஒரே மாதிரியான எண்ணங்கள் மாறி மாறி வந்துகொண்டிருந்தது. உணர்ச்சிகள் மாறிக்கொண்டிருந்தன. ஒரு நிமிடம் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது என நினைத்த மறு நொடி ஐயோ வாழ்க்கை முடிந்துவிட்டது, இனி எல்லாம் அவ்வளவுதான் என்று தோன்றியது. சில நேரம் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பாள். அடுத்த நொடி தலையணையில் முகம் புதைத்து அழுதாள். அல்லது அடுத்தவர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, குற்றம் சுமத்தி, சண்டையிட்டுக்கொண்டிருப்பாள்.

உடலும் மனமும் இப்படி ஆட்டம் போட்டது என்றால், வாழ்க்கையின் பிற அம்சங்களான நட்பு, குடும்பம், பொருளாதாரம் போன்றவையும் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன.

‘நான் உனக்காக அம்மனிடம் வேண்டிக் கொண்டுவந்த பிரசாதம் வைத்துக்கொள்’ என்று கையில் திணித்து விட்டுச் சென்ற தோழியின் அன்பைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. மாறாக அது எரிச்சலைத் தந்தது.

சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் சதிவலை பின்னுவதாக ஓர் எண்ணம். யாருமே துணை இருக்க மாட்டார்கள்; எல்லாரும் குழி பறிக்கவே பார்க்கிறார்கள். யாருமே அன்பு செய்வதுமில்லை; மதிப்பதும் இல்லை.

எல்லாமே இப்படிச் சரியில்லாமல் ஒரு சாபம் போல் இருக்கிறது. இவையெல்லாம் சரியாவது எப்படிச் சாத்தியம்? ஏதோ ஒன்று சரி இல்லை என்றால் சரி செய்துவிடலாம். எதுவுமே சரியில்லை என்றால் எப்படிச் சரி செய்வது எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு மூளை கொடுத்த குடைச்சலில், பேசாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் மனதில் வந்தவுடன் ஏதோ ஒரு பொறி தட்டியவளாக விழித்துக்கொண்டாள்.

அடுத்த நாளே சென்னையில் சிறந்த ஒரு மனநல மருத்துவரின் முன்னால் அமர்ந்திருந்தாள். அவளின் கண்ணீரும் சோகக் கதையும் அந்த மருத்துவரின் கண்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது கண்டு மருத்துவரின் மேல்கூடக் கோபம் வந்தது அவளுக்கு.

தான் வைத்திருந்த ஐபேடில் குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்த மருத்துவர் நிமிர்ந்து பார்த்துச் சொன்னார், “நீங்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள்.” இந்த வார்த்தைகள் அவள் காதில் தீயாக விழுந்தவுடன் சொன்னாள், “எனக்கு மன அழுத்தம் எதுவும் இல்லை, நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நான் நன்றாகவே இருக்கிறேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் தாம் எவரும் சரியில்லை. என்னைச் சுற்றி நடப்பவைதாம் சரியல்ல.”

சுமார் 5 அடி இடைவெளியில் அமர்ந்திருந்த அந்தப் பிரபலமான மனநல மருத்துவர் மீண்டும் கேட்டார், உங்களிடம் உள்ள இந்த அறிகுறிகளுக்கு… அதாவது,

1. தற்கொலை எண்ணம்

2. மாறிக்கொண்டே இருக்கும் உணர்ச்சிகள் (mood swing)

3. பசியின்மை (அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதும் இதில் அடங்கும்.)

4. எதன் மீதும் ஈடுபாடு இல்லாமல் இருத்தல்.

5. உடல் சோர்வு

இவற்றிற்கு ஒரு மனநல ஆலோசகராக, நீங்கள் என்ன சொல்வீர்கள்? அதற்கு அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

பதில் சொல்லாமல் வெளியே வந்த அந்த மனநல ஆலோசகர் நானேதான். மேற்சொன்ன அத்தனையும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தாம்.

ஐந்து வருடங்களுக்கு முந்தைய நான், அல்லது முந்தைய பதிப்பு என்றும் வைத்துக்கொள்ளலாம். மிகவும் பாதுகாப்பற்ற நிலை, எனக்காகப் பேச, என்னிடம் பரிவு காட்ட, யாரும் இல்லை என்ற எண்ணம்… உண்மையில் பிரச்னைகள் என்ற கடல் அலைகளுக்கு இடையில் சிக்கி மூழ்கிதான் போயிருந்தேன்.

அடக்க முடியாத கடல் அலை போன்று மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்த துன்ப உணர்வுகள் எழுப்பிய ஒரு விசித்திர கேள்விதான், என் வாழ்க்கையை மிக சந்தோஷமாக அமைக்கச் செய்தது, இன்று இந்த வாழ்க்கையை மிக ரசித்து வாழும்படியாகச் செய்துகொண்டிருப்பதும் எனக்குள் தோன்றிய, ‘இங்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது?’ என்ற கேள்விதான்.

உண்மையில் இங்கு, இந்த வாழ்க்கையில் இழப்பதற்கு எதுவுமே இல்லை. எல்லாமே உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக மட்டுமே அமைகின்றன. ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு விஷயமும் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக மட்டுமே.

பொருளாதாரமும் உறவுகளும் அல்லது சொத்து சுகங்களும் உங்களுக்கு இழப்பதற்கான ஒரு விஷயமாக இருந்தால், ஒன்றை நினைவில்கொள்ளுங்கள், எந்த நேரமும் அந்த விஷயங்களைப் பன்மடங்காக உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இழந்தால் அதை மீட்டுக்கொள்ளவே முடியாத இரு விஷயங்கள், உங்கள் உடல் மற்றும் உயிர். ஆனால், அந்த இரண்டும் உயிர் வாழும் வரை, உங்களிடம் ஒட்டிக்கொண்டே தான் இருக்கும்.

இந்தக் கேள்விக்குப் பின், நடந்து முடிந்த விஷயங்களைக் குறித்த என் கண்ணோட்டம் மாறி இருந்தது.

வெற்றிகொள்ள, வாழ்ந்து தீர்க்க, கொண்டாடி மகிழ, இந்த வாழ்க்கை முழுவதுமாக என்னிடம் இருக்கிறது. குடும்பமோ குழந்தைகளோ திருமண வாழ்க்கையோ அல்லது வேலையோ அவை வாழ்க்கையின் பகுதிகள் என்பது புரிந்தது. அவற்றோடு அடையாளப்படுத்திக்கொள்வதற்கான அவசியமும் குறைந்தது. வாழ்க்கையைக் கொண்டாட, இதுவே எனக்கு ஒரு பெரிய உந்துதலாக அமைந்தது.

மீளாத் துயர் என்று தோன்றிய ஒன்றை, கடலோர மண்ணில் வரைந்த ஓவியங்களை, கடலலை அழிப்பது போல இந்த ஒற்றைக் கேள்வி, அழித்துவிட்டுச் சென்றது.

யாராவது என்னைப் பார்த்து, நீங்கள் பெரிய மனோதத்துவ நிபுணரா, அல்லது சாதனையாளரா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால், நான் இன்னொரு முறை மூழ்கப் போவதில்லை என்பது தெரியும்; இன்னொரு முறை நான் என்னைக் கீழே விடப்போவதில்லை என்பதும் தெரியும். நான் வளர வேண்டிய பகுதிகளும் வளர்ச்சிக்கான மைல்கற்களுமே என் கண்களுக்குத் தெரிகின்றன.

நான் என்னை மீட்டெடுக்க உதவிய உத்திகள், சிந்தனைத் துளிகள் அத்தனையும் இங்கு தந்துகொண்டிருக்கிறேன். அத்தனையும் நான், என் வாழ்க்கையில் உணர்ந்து, நடைமுறைப்படுத்தி, அவற்றில் வெற்றி கண்ட சிந்தனை மாற்றங்களும் உத்திகளும் தாம்.

நீங்கள் வாழ்க்கையைக் கொண்டாட தொடங்கியவர்களாக இருந்தால், அல்லது கொண்டாடி வருபவர்களாக இருந்தால் மகிழ்ச்சி. என்னுடன் உங்கள் கருத்துகளைப் பகிரலாம். கேள்விகளாகவும் முன்வைக்கலாம்.

குடும்பத்தையே தன் வாழ்க்கையாகக் கருதி வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு, இந்தக் கட்டுரைகள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள பேருதவியாக அமையும். உங்கள் வாழ்வில் நிறைய சந்தோஷங்களையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும் என்பது உறுதி. என்னென்றால், இங்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை; ஆனால், வெற்றிகொள்ள ஒரு முழு வாழ்க்கையே இருக்கிறது.

எனவே வாழ்வைக் கொண்டாடலாம், வாங்க!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.