அப்பா கந்தசாமி, அம்மா பூர்ணம், தம்பி வேலன் ஆகியோருடன் தென்றலும் வீட்டில் அரசியல், நாட்டு நடப்பு பற்றி எல்லாம் பேசுவாள். இதன் மூலம் ஒருவருக்குத் தெரியாத தகவல் இன்னொருவர் மூலம் தெரிந்துவிடும். ஒவ்வொருவரின் அரசியல் பார்வையும் புரிதலும் வெளிப்படும். “சில நேரம் அரசியல் சொல்லிக் கொடுத்த அப்பாவின் கருத்தையே மீறி நாங்க கருத்து தெரிவிப்போம். அப்பாவும் என்னடா நம் கருத்துக்கே மாற்றுக் கருத்து சொல்றாங்களேன்னு நினைப்பார். அப்பா, உங்களைத் தாண்டி வளர்ந்தால்தான் நீங்க வளர்த்தவங்கன்னு அர்த்தம். அது உங்களுக்குப் பெருமைதானே?” என்று அப்பாவைச் சரியான நேரத்தில் சரியான கருத்தால் சாந்தப்படுத்திவிடுவாள் தென்றல்.
இப்படியான உரையாடல்களை கல்யாணம் ஆகி, பெற்றோரை விட்டு வெளியூரில் இருப்பதால் நினைவில் மட்டுமே இருத்த முடிகிறது இப்போது. தற்போதும் பிறந்த வீட்டை நினைக்கும் போது, நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பாள் தென்றல்.
அன்று இரவு அப்பாவும் தம்பியும் குழுக் காலில் (GROUP CALL) தென்றலை அழைத்தனர். ஒருவரை இன்னொருவர் நலம் விசாரித்துவிட்டு, நேரே முடிவுகள் வெளியாகி உள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்த உரையாடலில் தொலைந்து போனார்கள் மூவரும்.
“இந்தத் தொகுதில இவரைத் தொடர்ந்து 5வது முறையா மக்கள் தேர்ந்தெடுத்திருக்காங்களாமே? சேலம் மாவட்டத்து இந்தத் தொகுதி தவிர மத்ததெல்லாம் இந்தக் கட்சிதானாமே? பத்து வருசமா இருந்த கட்சியை விட்டுட்டு இந்த முறை ஓட்டு மாத்தி போட்டுட்டாங்களே மக்கள்?”
அவரவர் குடியிருக்கும் தொகுதியில் எப்படி, யார் பெரும்பான்மை எனப் பகிர்தலும் கூடவே அக்கா, தம்பி இருவரும் பிறந்த ஊர் தொகுதி குறித்து, கூடுதல் தகவல் கேட்டு அறிந்தனர். அப்புறம், ‘ஒன்றிய அரசுக்கு இனி டஃப்தான் இந்த அரசாங்கம் கொடுக்கப் போகுது? கல்வில முன்னேற்றம் வரும்ன்னு நினைக்கறேன்’ என்றெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பேச்சு தொடர்ந்துகொண்டிருந்தது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளையும் அலசி அக்குவேர் ஆணிவேராகப் பிரித்திருந்தார்கள் மூவரும்.
கந்தசாமியோ தன் 75 ஆவது வயதிலும் தன் குழந்தைகள் மூலம் பலவற்றை ஆவலோடு கேட்டுத் தெரிந்துகொண்டார். உரையாடல் முடிந்து தென்றல் நினைவுகளை அசைபோடத் தொடங்கினாள். பொதுவாகக் குழந்தைகள் அப்பாவிடம் குடும்பம், உறவினர்கள், ஊரில் நடந்தது என்ன என்று கேட்பார்கள். இது என்ன வித்தியாசமாக இருக்கிறோம் என்று வியந்தாள் தென்றல்.
அவள் அப்பா அடிக்கடி சொல்வார், “அரசியலில் நாம் தலையிடவில்லை எனில் அரசியல் நம் வாழ்வில் தலையிடும்” என்று.
தன் குடும்பத்தை எண்ணிப் பெருமையாக இருந்தது. தொலைக்காட்சித் தொடர்களே பார்க்காமல் தினமும் செய்தித்தாள் படித்து, தான் வைத்திருந்த கடையில் அரசியலை விவாதிக்கும் அம்மா, இப்படிப்பட்ட தன் குடும்பத்தை எண்ணிப் பூரித்தாள்.
அன்றொரு நாள் அப்பாவை உள்ளூர்த் திருவிழா நாடகத்தின் தொடக்க விழாவிற்கு உரையாற்ற அழைத்திருந்தனர். அப்பா 1970களிலேயே பட்டப்படிப்பு முடித்த அந்தக் கிராமத்தின் முதல் பட்டதாரி, பொது விஷயங்களில் அப்பாவின் சமூகப் பங்களிப்பு இருக்கும் என்பதும் அவரை அழைத்திருந்ததன் கூடுதல் காரணம்.
அப்பா தென்றலைக் கூப்பிட்டு ஒரு தாளில் என்ன பேச வேண்டும் என எழுதி, “இதை நாடகத் தொடக்க விழாவில் பேசிடு” என்றார். அவளோ 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபெண், அவர் எழுதியதற்கு விளக்கமும் கொடுத்து, தொடர்ந்து எப்படிப் பேச வேண்டும் என பயிற்சியும் கொடுத்தார். பள்ளி விழாக்களிலும் இது போன்று எழுதிக் கொடுத்துப் பேசச் சொல்வார். முதல் தலைமுறையானதால் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுவார். ஆனால், மேடைகளில் வாய்ப்பு கிட்டியும் பேசியதில்லை. அவர் பேசி தென்றல் பார்த்ததும் இல்லை. சிறுவயதிலிருந்தே வாய்ப்பு மறுக்கப்பட்டே வளர்ந்ததால் இருக்கும் அச்சமோ என்னவோ? அப்பாவிடம் அதைப் பற்றி ஒரு நாளும் கேட்டதில்லை. அவராகவும் எதும் சொன்னதில்லை.
திருவிழாவில் நாடகத் தொடக்க நிகழ்வின் போது ஊர் பொறுப்பாளர்கள், பங்களிப்பாளர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். நாடகத்தைக் காண வந்த மக்களோ எப்போது நாடகம் தொடங்கும் என்ற ஆவலோடு அமர்ந்திருந்தார்கள். நிகழ்வைத் தொகுத்து வழங்குபவர் அப்பாவைப் பேச அழைக்க, அப்பாவோ எனக்காக என் மகள் பேசுவாள் எனக் கூறி அமர, சுட்டிப்பெண் தென்றலோ எழுதிக் கொடுத்ததைச் சற்றுப் பயத்துடன் பேசினாள். ஊரின் பொதுமேடை மக்களின் பலத்தக் கூட்டத்தைக்கொண்டிருந்தது கண்டு பயம் பேச்சில் தட்டுப்பட்டாலும் தடுமாறாமல் பேசி முடித்து, அனைவரும் கைதட்டிப் பாராட்டினர் தென்றலை. அப்பாவுக்கோ மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.
பெரும்பாலும் அப்பா நாட்டுப்புறப்பாட்டுக் கச்சேரி, பட்டிமன்றம் , அரசியல் கூட்டம் எனச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தாலும் தவிர்க்காமல் செல்வார். இப்போதெல்லாம் தென்றலும் விருப்பப்படுவதால் அவளையும் போகும் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறார்.
எங்கும் அப்பாவுடன் கூடவே செல்லும் தென்றல் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருக்க, அப்பாவும் தனக்குத் தெரிந்ததை மகிழ்வோடு பதில் சொல்வார். தன் குழந்தை அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறாளே என்ற பெருமிதம் இருக்கும். பொண்ணு இப்படி எடக்குமடக்காகக் கேள்வி கேட்கிறாயே என்று ஒரு நாளும் சொன்னதில்லை. மாறாக ஊக்கம் அளித்தே வந்தார்.
மகன் வேலனுக்கு வெளியில் வருவது அவ்வளவாக விருப்பம் இல்லை எனினும் தென்றலுக்கு இருக்கும் விருப்பத்தைப் பெரிதும் ஊக்கப்படுத்தியே வந்தார். வேலனிடம் இவையெல்லாம் அறிந்துகொள்ளணும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் அப்பா.
பொதுவெளிக்கெல்லாம் எதுக்கு வரவேண்டும் என்று பெண்ணை வார்த்தைகளாலேயே தூற்றுவார்களே என்று பொதுபுத்தியை அவர் அறிந்திருந்தபோதிலும் தென்றலை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊக்குவிக்கத் தவறியதில்லை. பெண்தானே எதற்கு இப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. தனக்குக் கிடைக்காத வாய்ப்பு, அறிவு, இயங்கு வெளி அனைத்தும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் அனைத்தையும் மீறி வளர்ந்திருந்தது. பல அப்பாக்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
செய்தித்தாள் படிக்கும் பழக்கம் பெற்றோரிடம் இருந்ததால் வேலன், தென்றல் இருவரிடமும் அது தொற்றிக்கொண்டு இருந்தது. பொதுவெளியை, நாட்டு நடப்பை அறிய செய்தித்தாள் வாசிப்பு மிக முக்கியம் என அப்பா அடிக்கடி சொல்வார். பொதுவாகக் குடும்பத்தில் காலையில் காபி, டீ குடிக்கும் பழக்கம் போல எழுந்ததும் செய்தித்தாள் வாசிப்பு அனிச்சையாகக் குடும்பத்தில் அனைவரிடமும் இருந்தது. அது பற்றி உரையாடலும் அவ்வப்போது நிகழும்.
“அப்பா, பொதுவாக அரசியலே பேசக் கூடாது. அது ஒரு சாக்கடை அதைக் கண்டா ஒதுங்கிடணும்னு சொல்றாங்க. ஆனா, என்னப்பா நம்ம வீட்ல அரசியல் பத்தி உரையாடறோம்” என்றாள் தென்றல்.
“பொதுவாக சமூகத்தில் அரசியல் சார்ந்த அறிவு குறைவா இருக்கு பாப்பா. எல்லோரும் அரசியல் விழிப்புணர்வு அடைஞ்சிட்டா. மக்களை ஏமாத்தி ஓட்டு வாங்க முடியாதில்ல. அதனால அரசியல் ஒரு சாக்கடை, நமக்கெதுக்கு அப்படிங்கிற கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு, அக்கருத்துதான் சரின்னு பெருவாரியான மக்களால் நம்பப்படுது. அது ஒரு வகைல ஆட்சியாளர்களுக்கு எளிதா ஓட்டு வாங்க சாதகமாகவும் அமைஞ்சிடுது. நீங்க அடிக்கடி சொல்வீங்களே, அரசியல்ல நாம தலையிடலன்னா, அது நம்ம வாழ்க்கைல தலையிடும்னும் அரசியல்ன்னா என்ன? கட்சி, தேர்தல் பற்றிப் பேசறது தானா அரசியல்?” என்றாள் தென்றல்.
“அதாவது கண்ணு, அரசியல் கட்சி, தேர்தல், அரசியல்வாதிகள் இவை எல்லாம் உள்ளடக்கியதே அரசியல்தான். ஆனா, அது மட்டுமில்ல நாம் உண்ணும் அரிசில இருந்து நீ பயன்படுத்தற பொட்டு, நோட்டு, பேனான்னு எல்லாப் பொருளின் விலையையும் நிர்ணயிக்கிறது அரசியல் சார்ந்த நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம்தான். அப்போ நாம மக்களுக்காகச் செயல்படற பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அனுப்பிருந்தா மக்களைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடாம விளிம்புநிலை மக்கள் பக்கம் நின்னு அதிக கவனத்தோட யோசிச்சு செயல்படுவாங்க” என்றார் அப்பா.
“அப்போ அரசியல் இல்லன்னா வாழ்க்கையே இல்லைங்கிற அளவு சொல்றீங்களே அப்பா… நம்ம மக்கள் தேர்தலுக்குக் காசு வாங்கிட்டு ஓட்டு போடறாங்களே அதை என்னனு சொல்றது போங்க” என்று நொந்துகொண்டாள் தென்றல்.
“எலெக்ஷனில் ஒரு ஓட்டுக்குச் சில நூறு முதல் சில ஆயிரம் வரை வாங்குவாங்களா? நீயே யோசிச்சுப் பாரு நாம பயன்படுத்தும் அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், வண்டி, பெட்ரோல்னு எல்லாப் பொருள்களுக்கும் ஒரு மக்கள் விரோத அரசாங்கம் வந்தா எவ்ளோ விலைவாசி உயரும் சொல்லு?” என்றார் அப்பா.
“அப்போ ரூபாய் குடுக்கறவங்களைக் கணக்கில் எடுக்காம மக்கள் பக்கம் நிற்கும் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது நம் நாடு முன்னேறும் இல்லப்பா. ஒரு மாசத்துலயே அவங்க தேர்தலுக்குக் கொடுத்த காசைவிட அதிகமா செலவு பண்ணிடறோமே இது எல்லாருக்கும் எளிதாகப் புரியக்கூடியதுதான். நான் என் நண்பர்களோட இதைப் பத்திப் பேசப் போறேன்” என்றாள் ஆவலோடு தென்றல்.
“ரொம்ப சரியாப் புரிஞ்சுக்கிட்ட கண்ணு, இது எல்லாருக்கும் புரிஞ்சிட்டா எவ்ளோ நல்லா இருக்கும். நல்ல ஆட்சியாளர்கள் பார்த்து ஓட்டுப் போட்டு, தேர்ந்தெடுத்தா நம் வீட்லயும் காசை எவ்வளவோ மிச்சம் பண்ணி, குடும்பப் பொருளாதாரமும் முன்னேற்றமடையும்னு ஒரே பாயிண்ட் புரிஞ்சா போதும். நாமும் பரவலா இதைப் பரப்பணும் கண்ணு” என்றார் அப்பா.
“ரொம்ப சரியாச் சொன்னிங்கப்பா. ”
“பொதுவாகவே நம் சமூகத்தில் அரசியலுக்கு வர்றது குறைவு. அரசியல் உரையாடல் ஆண்களுக்கே குறைவா இருக்கும்பட்சத்தில் பெண்கள் வீட்டு வேலை, வீட்டுக்குள்ளயே முடக்கப்படுதல், பெண்களுக்கு அரசியல் பேச்செல்லாம் எதுக்கு? குடும்பப் பெண் அரசியல் பேசுவாளா? அரசியலுக்குக் குடும்ப பெண் வருவாளா எனப் பல கருத்துகள் பொது சமூகத்தின் மண்டைக்குள் கொட்டிக் கிடக்குது. அரசியலுக்கு ஒரு பெண் வந்தா அவள் எதுக்கும் தயார்ன்னு அர்த்தமாகப் பொது சமூகத்தால் புரிந்துகொள்ளப்படுது. பெண்களுக்கு வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு, குழந்தை வளர்ப்புன்னு பல குடும்பப் பொறுப்புகள் பெண்களிடம் மட்டுமே திணிக்கப்படுவதால் , அதனையும் விட்டு வரமுடிவதில்லை பெண்களால். இதையெல்லாம் தாண்டி தன் குடும்பத்தில் அரசியல் தலைவர்களா இருக்கற வாரிசுகளும் அரிதா எளிய குடும்பப் பின்னனியில் இருந்தும் வர்றாங்க. அவங்க பெரும்பாலும் குடும்ப அமைப்புக்குள்ள போகாதவங்களா இருந்துதான் பொது வாழ்க்கைக்கு வரமுடியுது. இது நம் சமூகம் முன்னேறாமல் இருக்க, பெரும் சம்மட்டி அடி. சமூகத்துல பாதி எண்ணிக்கைல இருக்கற பெண்கள் அரசியல்ல பாதி எண்ணிக்கைல பிரதிநிதித்துவம் இருக்கணும். ஆனா, இந்தியாவில் சுமார் 14 % பெண்கள் தாம் நாடாளுமன்ற உறுப்பினர்களா இருக்காங்க. நாடாளுமன்றத்துல பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் தரணும்ங்கிற மசோதா இன்னும் நிலுவைலதான் இருக்கு. நம் தமிழ்நாட்டுல உள்ளாட்சில 50 % பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கு. அப்படி இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் தனித்து இயங்க முடியல. அவங்க கணவர், உறவினர்கள்தாம் உண்மையான அதிகாரத்தை வைச்சிருக்காங்க. இது உண்மையான பிரதிநிதித்துவமா ஏற்க முடியாது.”
“அப்போ பெண்கள் அரசியலுக்கு வரணும், அவங்களும் அரசியல் அறிவு பெறணும்னா என்ன பண்ணணும்ப்பா? அரசியல் கட்சிகளுக்கு வந்து பங்களிச்சாதான் அரசியல்ல இருக்கோம்ன்னு அர்த்தமா? உரிமைகள் மறுக்கப்படும் போதும் நாட்டு நடப்பு சார்ந்து குறைந்தபட்ச அறிவாவது இருக்கணுமில்ல?” என்றாள் தென்றல்.
“அதுக்கு நம் பண்பாட்டுல மாற்றம் வரணும், சீரிய செயல்திட்டம் இருக்கணும் கண்ணு” என்று உரையாடல் முடியும் நேரத்தில் தென்றல் கேள்விக்கணைகள் தொடுக்க அடுத்தகட்ட உரையாடல் தொடங்கியது.
(தொடரும்)
படைப்பாளர்:
சாந்த சீலா
சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.
Arumai
அருமை சகோதரி வாழ்த்துக்கள்