கடந்த சில நாட்களாகப் பள்ளிக் குழந்தைகள் குறிப்பாக அரசுப் பள்ளிக் குழந்தைகள் வன்முறையில் ஈடுபடுவதாகச் செய்திகள் பரவுகின்றன.
இரு வாரங்கள் முன்பு பேருந்து ஒன்றில் பெண் குழந்தைகள் பீர் குடிப்பது போன்ற காணொலி பரவியது. இரு தினங்கள் முன்பு மதுரை பேருந்து நிலையத்தில் மாணவிகள் முடியைப் பிடித்து அடித்துக்கொள்ளும் காணொலியும் பகிரப்படுகிறது.
விவாதம் செய்யும் ஊடகங்கள், பெண் குழந்தைகளே ஒழுக்கமில்லை என்று பொதுமைப்படுத்துகின்றன. குறிப்பாக அரசுப் பள்ளிக் குழந்தைகள் எனக் குற்றம் சுமத்துகின்றனர் பொது மக்கள். இவற்றின் பின் மறைந்திக்கும் செய்திகள் என்ன ?
கல்வி ஆண்டு முடியும் தருவாயில் புதிய மாணவர் சேர்க்கை வரக்கூடிய இந்தச் சூழலில் இது போன்ற செய்திகள் தீயாகப் பரவுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் ?
லட்சுமி டீச்சர் தனது அனுபவத்திலிருந்து பேசுகிறார்.
மாணவர்களின் இப்படியான எல்லை மீறும் குறும்புத் தனங்களை நாம் ரசிக்க முடியாது. சரி என்றும் கூற முடியாது. ஆனால், கண்டித்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. காலம் காலமாகக் குழந்தைகளில் குறும்புகள் செய்யும் பிரிவினர் இருக்கத்தான் செய்கின்றனர் . இன்று அதீத வளர்ச்சி பெற்று பெரிய பிரச்னையாகத் தெரிகிறது. கரோனா காலத் தாக்கமும் இணையவழிக் கல்வியும் ஒரு காரணமாகக் கொள்ளலாமே தவிர, அது மட்டுமே காரணம் இல்லை.
40 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ள நமது மாநிலத்தில் மிகச் சிறிய எண்ணிக்கையில் பத்துக்கும் குறைவாக வந்துள்ள இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு மொத்தமாக அரசுப் பள்ளிகளே சரியல்ல என்ற கருத்தைப் பரவலாக்குவதும், 2 வீடியோக்களில் பெண் குழந்தைகளின் செயல்களை வைத்து பெண் பிள்ளைகளின் ஒழுக்கத்தை விமர்சிப்பதும் எந்த விதத்தில் சரி?
முதல் தலைமுறைக் குழந்தைகளாக, பள்ளிக்குள் வரும் இவர்கள் தங்கள் பள்ளிக் கல்வியைச் சரியாக முடித்து உயர் கல்விக்கு அவர்களைத் தயார் செய்வது உட்பட அனைத்தும் ஆசிரியர்களின் கடமையாகிறது. ஆனால், இவர்களுக்கு நாம் அந்தப் புரிதலைத் தந்துள்ளோமா என்பதைச் சமூகமும் ஆசிரியர்களும் சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேல்நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளையே குற்றவாளியாகச் சித்தரிக்கின்றன காணொலிகள் . எனில் கடந்த பத்து ஆண்டுகளாக, பள்ளிகளில் அவர்களுக்கு நாம் கற்றுத் தந்தது என்ன என்ற கேள்வியை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளலாம்.
தனியார் பள்ளிகளைப் போன்றே ரிசல்ட் , மதிப்பெண்களை நோக்கி அரசுப் பள்ளிகள் எப்போது சூடு போட்டுக்கொள்ள ஆரம்பித்தனவோ அப்போதே மாணவ / மாணவிகளுடனான நல்லுறவையும் அணுக்கமான வழிகாட்டுதலையும் அறுத்துக் கொண்டு படி படி என்ற ஒற்றைப் பார்வைக்குள் ஆசிரியர்கள் தங்களைச் சுருக்கிக்கொண்டனர். இவர்களில் விதிவிலக்குகளும் இருக்கின்றனர்.
விளைவு மாதவிடாய் குறித்த தனது சந்தேகங்களுக்கும் வளரிளம் பருவ பிரச்னைகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், தனது உடல் மன எழுச்சி சமநிலையின்மையின் விளைவுகளுக்கும் சரியான முறையில் வழிகாட்ட பள்ளிகளிலும் ஆளில்லாமல் வீடுகளிலும் ஆளில்லாமல் துவண்டு ஏதோ ஒரு புள்ளியில் மாணவிகள் வழிதவறிச் சென்றுவிடுகிறார்கள். இது தான் காரணமா என்றால், இது மட்டுமே காரணம் இல்லை எனலாம்.
மது குடிப்பது ஒழுக்கங்கெட்ட செயல் என்றால் பெண் குழந்தைகள் மட்டும் அல்ல, ஆண் குழந்தைகள் குடிப்பதும் தவறே. இவர்கள் சூழலில் மது குடிப்பது என்பது தவறாகவே பார்க்கப்படுவதில்லை. எல்லாச் சிற்றூர்களிலும்கூட டாஸ்மாக் கடைகள் மலிந்து கிடக்கின்றன.
மது அவர்களுக்குக் கிடைக்கும் வழிகளையும் அடைக்க வேண்டுமல்லவா? அல்லது இவற்றை வாங்கும் பள்ளி செல்லும் குழந்தைகளைத் தடுக்கவாவது ஆட்கள் இருக்கின்றனரா? இவை மட்டுமல்ல… போதைப் பொருளுக்கு ஆளாகும் குழந்தைகள் எங்கேயிருந்து அவற்றைப் பெறுகின்றனர் என்ற கேள்விகளுக்கும் விடைகளை நாம் சிந்திக்க வேண்டும்.
அதே போல ஒரு கதாநாயக பிம்பத்திற்காக இச்செயலைச் செய்கின்ற குழந்தைகளின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு அந்தச் சிக்கலைத் தீர்க்கும் வழிகளை நோக்கி நகராமல், இருக்கும் எல்லா
வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிர்ந்து குய்யோ முறையோ எனக் கதறும் ஆசிரியர்கள், இழிவுபடுத்தும் பொதுமக்கள் என இவர்கள் தாம் குற்றவாளிகள். பொதுவாக அரசுப் பள்ளிகளை இளக்காரமாகப் பார்க்கும் மேட்டுக்குடி மக்களுக்கு இவை வெல்லப்பாகு போல.
அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை விளிம்பு நிலையில் வாழ்க்கையை நடத்தும் பொதுமக்களின் குழந்தைகள் தாம் பெரும்பான்மை சதவீதம்.
குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டுவந்து சேர்த்து விட்டால் எதற்காகவும் மீண்டும் பள்ளி வாயிலை மிதிக்க அவர்களால் முடியாது. காரணம் கேட்டால் பள்ளிக்கு வருவதென்றால் ஒரு நாள் வேலையையே விட வேண்டி இருக்கும். வருமானம் போகும், வாழ்க்கைப் பிரச்னை என்பர். இவற்றைத் தாண்டி வருபவர்களும் உண்டு .
மிகக் குறைந்த சதவீதமே பள்ளியுடன் தொடர்பில் இருக்கின்றனர். பள்ளிக் கல்வி முறைக்குள் பிரச்னைகள். ஆரம்பத்திலிருந்து ஒரு குழந்தையின் மீது கவனம் செலுத்தி ஒன்-டு -ஒன் டீச்சிங் இருந்தால் பிரச்னைக்குரிய மாணவிகள் / மாணவர்களை அடையாளம் காண்பது எளிது.
ஆசிரியர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படும் குழந்தைகள் எத்தகைய பிரச்னைக்குரியவர்களாக இருந்தாலும் அவர்களைச் சரிப்படுத்திவிட இயலும். பெற்றோர்களை அழைத்துப் பேசுவதும் சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் அன்றாடம் பாடம் நடத்தும் நேரத்தில் உரையாடுவதும், வகுப்புக்குப் போகாத நேரத்தில்கூட மாணவரைத் தனியாக வரவழைத்து மனம் விட்டுப் பேசுவதும் போன்ற முயற்சிகள் எடுத்தால் மாற்றத்தை விரும்பாத மாணவர்களும் இருப்பார்களா என்பதே நமது வினா.
ஏனெனில் கவன ஈர்ப்புக்காகவே மாணவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்தக் கவன ஈர்ப்புக்கான செயல்பாடுகளை மடைமாற்றி நல்ல பாதைகளைக் காட்டுவது ஆசிரியர்களின் பொறுப்பு. அதற்கான வழிகளை எப்படி வேண்டுமானாலும் ஆசிரியர்கள் திட்டமிடலாம். புத்தகங்களை வாசிக்க வைப்பது, மாணவர்களுக்கான திரைப்படங்களைப் பார்க்க வைப்பது, பள்ளிகளுக்கு ஆளுமைகளை வரவழைத்துப் பேச வைப்பது என்று ஆசிரியர்கள் திட்டமிட வேண்டும். அதோடு சிறு வகுப்பு முதலே பல கலைகள் பாட்டு, நடனம், விளையாட்டு, ஓவியம் எனத் திறமைகளை வெளிக்கொணரும் உண்மையான வேலைகளைக் கையில் எடுக்க வேண்டும். பேருக்கு எல்லாம் பண்றோம் என்று சொல்லக் கூடாது. அதுதான் கல்வித் துறையில் நடக்குது.
பள்ளிகள் தங்களை மாற்றங்களுக்கு உட்படுத்த வேண்டும். அங்குள்ள ஆசிரியர்கள், தலைமை உட்பட ஒன்றிணைந்து சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இவை. இது காலத்தின் கட்டாயமும்கூட.
ஆசிரியர்களே 50% மனநல ஆலோசகர்கள் தாம். வகுப்பறைகளை உரையாடல்களால் கட்டமைக்கும் போது பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வுகள் கிடைத்து விடுகின்றன. அங்கும் கையாள முடியாத பிரச்னைக்குரிய மாணவர்களுக்காகவே உளவியல் ஆலோசகர் நியமனம் பள்ளிகளுக்குத் தேவைப்படுகின்றனர்.
பள்ளிகளுடன் பெற்றோர்களை அணுக்கமாக வைத்து மனம் திறந்து அவர்களது குழந்தைகள் குறித்து குற்றப்படுத்தாமல் இயல்பான பிரச்னைகளைப் பகிர்ந்து தீர்வு காண ஆசிரியர்கள் முன்வரவேண்டும். சவாலான பணி தான். ஆகவே தான் ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை நீ அர்ப்பணி என்ற வாக்கியத்திற்கு பலம் அதிகம்.
(மீண்டும் உரையாடுவோம்)
படைப்பாளர்:
சு உமாமகேஸ்வரி
உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்