சானியா மிர்சா. இந்தியாவின் பெயரை சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் அழுத்தமாகப் பதிவு செய்த விளையாட்டு வீரர். மார்ட்டினா ஹிங்கிஸ், மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் என உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுடன் ஜோடி சேர்ந்து விளையாடி உலகப்புகழ் பெற்றவர். தொடர்ச்சியாக 80 வாரங்கள் இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்.
இரட்டையர் பட்டங்களை வாங்கிக் குவித்தாலும், எந்த முன்னணி வீரரைக் குறித்தும் ‘அடேங்கப்பா’ என்ற மலைப்பை இருத்திக் கொண்டதில்லை. “இரட்டையராக விளையாடும்போது இருவருமே சரிசமமான பார்ட்னர்கள் மட்டுமே”, என துணிவுடன் பேட்டி கொடுத்திருக்கிறார். மார்ட்டினா ஹிங்கிசுடன் இவர் ஜோடி சேர்ந்து விளையாடியபோது, தரவரிசைப் பட்டியலில் ஹிங்கிஸ் நம்பர் ஒன்று, இவரோ ஐம்பது சொச்சம்! ஆனாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல், சரிசமமாக புரிதலுடன் இணைந்து விளையாடிய ‘சாண்டினா’ ஜோடி, ஐந்து கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை ஐந்து மாதங்களில் கைப்பற்றியது.
சானியாவின் சிறப்பு, அவரது விடாமுயற்சி எனச் சொல்லலாம். ஆறு வயதில் டென்னிஸ் மட்டையுடன் களமிறங்கிய சானியா, மகேஷ் பூபதியின் தந்தை சி.கே. பூபதியிடம் பணம் செலுத்தி பயிற்சி எடுக்க முடியாத சூழலில் நின்றவர். சாதாரண விளையாட்டு இதழியலாளரான அவரது தந்தையின் முயற்சியால், 12 வயது முதல் அடிடாஸ் உள்ளிட்ட விளையாட்டுப் பொருள் விற்பனை பெருநிறுவனங்கள் அவருக்கு உதவ முன்வரவே, தொடர்ந்து விளையாடினார்.
விமர்சனங்களுக்கு இடையே சிக்கலான வாழ்க்கை வாழ்ந்துவரும் பெண் சானியா. ‘குட்டைப் பாவாடை அணிந்து விளையாடியதால்’ 2005 ஆண்டு இஸ்லாமிய முல்லா ஒருவர் இவருக்கு எதிராக ‘ஃபத்வா’ ஒன்றை அறிவித்தார். ‘நான் என்ன அணியவேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன்’, எனச் சொல்லி அதை ஒதுக்கித்தள்ளினார் சானியா. சிறு வயது முதல் காதலித்து, நிச்சயமும் செய்யப்பட்ட நிலையில், ‘திருமணத்துக்குப் பின் டென்னிஸ் விளையாடக் கூடாது’ என காதலர் சோரப் மிர்சாவின் குடும்பம் சொல்ல, நடக்கவிருந்த தன் திருமணத்தை நிறுத்தினார் சானியா. அன்றைய காலகட்டத்தில் மிகவும் துணிச்சலான முடிவாக இது பார்க்கப்பட்டது.
அதைவிடத் துணிச்சலான முடிவு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயப் மாலிக்கைத் திருமணம் செய்ய எடுத்தது எனச் சொல்லலாம். இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் திருமணமும், அதன்பின் தொடர்ந்த ‘பாகிஸ்தானி மருமகள்’ என்ற விமர்சனங்களும் சானியாவின் துணிச்சலை அசைத்துப் பார்த்தது எனலாம். இதை எல்லாம் தாண்டித்தான் இன்று தன் மகனுடன் ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பயணித்து விளையாடி வருகிறார். தொடர் உடல்நல பாதிப்பை சுட்டிக்காட்டி, 2022ம் ஆண்டு தன் இறுதி சீசன் எனவும், டென்னிஸ் விளையாடுவதிலிருந்து விலகுவதாகவும் சானியா அறிவித்துள்ளார். 37 வயதில் இம்முடிவை அவர் அறிவித்துள்ளார்.
பெரும்பாலும் ஸ்போர்ட்ஸ் நட்சத்திரங்கள் தங்கள் ஓய்வுக்குப் பின் அகாடமிகள் தொடங்கி இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி தருவதுண்டு. இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இன்று வெற்றிகரமான கோச்கள், பவுலிங் அகாடமி நிறுவனர்கள். ஆனால் பெண் விளையாட்டு வீரர்கள்? பி. டி. உஷா,ஷைனி வில்சன் என ஒன்றிருவர் தவிர மற்றவர்கள் ஓய்வுக்குப் பின் காணாமல் போயுள்ளனர். சானியாவுக்கு ஒரு சி.கே.பூபதி போல, குறிப்பிடும்படியான பெண் கோச்கள் இங்கு அதிகளவில் உருவாகவில்லை. விளையாட்டு பெரும்பாலும் இந்தியாவில் ஆண்-மையமாகவே இருக்கிறது. அதன் அதிகாரப் பொறுப்புகளிலும் ஆண்களே கோலோச்சுகிறார்கள்.
வேறொரு பரிமாணத்தில், வேறொரு வழியில் எங்களுடன் தொடர்ந்து பயணியுங்கள், சானியா. Happy retirement from active tennis!
மேலும் வாசிக்க: https://indianexpress.com/article/sports/tennis/sania-mirza-announces-her-retirement-7731617/