பொருள் 9
பெண் என்பவள் யார்? அரிஸ்டாட்டிலின் பார்வை தெளிவானது. ஆணைவிட எல்லா விதங்களிலும் தாழ்ந்தவள். அவள் உடல் பலவீனமானது, அறிவுத்திறன் குறைவானது, அறவுணர்வும்கூட குறைவுதான். பெண் என்பவள் ஆணின் சொத்து. அவன் வீட்டில் உள்ள ஒரு பொருள்.
சமுதாயம் அவளிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றுதான். இனத்தை விருத்தி செய்யவேண்டும். ஆண் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆண் உடல் ரீதியாக பலம் மிக்கவன். அறிவாற்றல் மிக்கவன். அறவுணர்வு கொண்டவன். எனவே, பெண்ணைவிட உயர்ந்தவனாகிறான். அதனாலேயே பெண் அவனுக்குக் கட்டுப்பட வேண்டியவளாகிறாள். இதில் எந்தவிதக் குழப்பத்துக்கும் இடமில்லை என்கிறார் அரிஸ்டாட்டில்.
இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பையும் அவர் நிகழ்த்தியுள்ளார். ஆணாக மாற இயலாதவள்தான் பெண்ணாக இருக்கிறாள். ஓர் உயிர் ஆணாக இருக்கும்போது அது முழுமையானதாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு ஆனால், தோல்வியுறும்போது அந்த உயிர் பெண்ணாகச் சுருங்கிவிடுகிறது. அதாவது, வளர்ச்சிக் குறைபாடு கொண்ட உயிரினமே பெண்.
இவர்களில் சிலர் சார்லஸ் டார்வினைத் தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ஆண்கள் வலிமையானவர்கள்; எனவே, அவர்களுடைய அதிகாரம் நிலைத்து நிற்கிறது என்று ‘அறிவியல்பூர்வமாக’ நிறுவவும் முயல்கின்றனர்.
சிக்மண்ட் பிராய்டையும் அவ்வப்போது இவர்கள் துணைக்கு அழைத்துக்கொண்டு, ஒரு பெண்ணின் உடலே அவளுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று வாதிடுகிறார்கள். அதாவது, ஆணின் உடல் அதிகாரத்துக்கு ஏற்றதாகவும் பெண்ணின் உடல் கட்டுப்படுவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது என்று இவர்கள் கருதுகின்றனர். காலம் காலமாக ஆண்களே அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள், அவர்களே இயல்பான, தகுதிவாய்ந்த தலைவர்கள் என்னும் வாதங்களும் முன்வைக்கப்படுகிறது.
இந்த வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல வரலாற்று ஆதாரங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தந்தை வழி சமூக அமைப்பே ஆதியில் தோன்றிய அமைப்பு என்றும் குகை மனிதர்கள் காலம் தொடங்கி ஆணாதிக்கம் நிலவி வருகிறது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்தப் பிரபலமான கோட்பாட்டைப் பல பெண்ணியலாளர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளதோடு அவற்றை முறியடிக்கவும் செய்திருக்கின்றனர். ‘மனித இனத்தின் தொல் சமூக அமைப்பு தந்தை வழிச் சமூக அமைப்பு அல்ல… தாய்வழிச் சமூக அமைப்புதான்’ என்பதை நிறுவ தொன்மம், இலக்கியம், மதம், வரலாறு, மானுடவியல், சமூகவியல், இலக்கியம் என்று விரிவாகப் பல துறைகளில் இருந்து ஆதாரங்களைத் திரட்டித் தருகின்றனர்.
வர்க்க சமுதாயம் உருவான பிறகே பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. ஒரு பூர்ஷ்வா தன் மனைவியை ஓர் உடைமையாகவே கருதுகிறான் என்கிறார் மார்க்ஸ். பொதுவுடைமை சமூகத்தில் அனைத்து உற்பத்திக் கருவிகளும் அனைவருக்கும் பொதுவில் வைக்கப்படும் என்று அறிவித்தபோது, அப்படியானால் பெண்களையும் அனைவருக்கும் பொதுவாக்கிவிடுவீர்களா என்று பதறியவர்கள் பூர்ஷ்வாக்கள். உற்பத்திக் கருவிகள் என்றதும் பெண்களை அவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது? கம்யூனிசத்தின் நோக்கமே பெண்களை உற்பத்திக் கருவிகளாக பார்க்கும் வழக்கத்தை முறியடிப்பதுதான் என்கிறார் மார்க்ஸ்.
தந்தை வழிச் சமூகத்தின் தோற்றத்தை ஆராய்ந்துள்ள கெர்டா லெர்னர் என்னும் அமெரிக்க வரலாற்றாசிரியர், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டங்களில் (பழங்கற்காலம், புதிய கற்காலம்) பெண் தெய்வ வழிபாடே பிரதானமாக இருந்ததை விரிவான ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார். சமூகத்தில் பெண்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதை இவை உணர்த்துகின்றன என்று நிறுவும் லெர்னர், இந்த வழக்கத்தை ஆண்கள் பின்னர் உடைத்தெறிந்து தங்களைப் பிரதானப்படுத்திக் கொண்டனர் என்று வாதிடுகிறார்.
ஒரு பெண்ணால் மட்டும்தான் புதிய உயிரைப் படைக்க முடியும் என்று நம்பிய பழங்காலச் சமுதாயங்கள் அவளை கடவுளாக வழிபட்டு அடியொற்றி வாழ்ந்து வந்தன. ஆதி சமுதாயத்தைச் சேர்ந்த பெண் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. ஒரே ஓர் உதாரணம்… பொது யுகத்துக்கு 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட விலென்டார்ஃப் பெண் கடவுள் (Venus of Willendorf) சிலை. வேளாண் சமூகத்தில் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு அதிக மரியாதை வழங்கப்பட்டது.
பிற்காலத்தில் பெண்ணே ஓர் உற்பத்திப் பொருளாகப் பார்க்கப்படுவதற்கும் இது இட்டுச் சென்றது. ஒரு பெண் தனியாக ஓர் உயிரை உற்பத்தி செய்துவிடுவதில்லை, எனக்கும் அதில் பங்கிருக்கிறது என்பதை ஆண் உணர்ந்தபோது பெண் பற்றிய அவனுடைய பார்வை தலைகீழாக மாறியது.
குழுக்களிடையே சண்டைகள் மூண்டபோது பிற உடைமைகள் போல பெண்களும் ஆண்களால் கைப்பற்றப்பட்டனர் என்று குறிப்பிடுகிறார் கெர்டா லெர்னர். முதன் முதலில் இந்த உலகில் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். வீட்டு வேலைகள் செய்வதற்கும் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்த ஏற்பாடு ஆண்களுக்கு மிகவும் லாபகரமானதாக இருந்ததால் அது அவ்வாறே தொடரப்பட்டது.
முடியாட்சி மலர்ந்தபோது ஆணாதிக்கம் கெட்டிப்பட்டது. அரசிகளுக்கும் சீமாட்டிகளுக்கும் அதிகாரம் இருந்தது உண்மை. ஆனால், அவர்களும்கூட அரசர்களின், சீமான்களின் உடைமைகளாகவே இருந்தனர். ஓர் ஆண் சட்டப்படியே தன் மனைவியை (அல்லது மனைவிகளை) ஆண்டுகொள்ளலாம் என்றும் அவசியப்பட்டால் தண்டித்துக் கொள்ளலாம் என்றும் சட்டங்கள் புனையப்பட்டன.
தவறிழைக்கும் பெண்ணுக்கு ஆண் மரண தண்டனை விதிப்பது இயல்பானதாக பார்க்கப்பட்டது. நல்ல பெண், கெட்ட பெண்; ஒழுக்கமான பெண், ஒழுக்கக் கேடான பெண் போன்ற பிரிவினைகள் உருவாக்கப்பட்டன. சமூகத்தில் நிலவிய மதிப்பீடுகளைக் கொண்டு கடவுள்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டார்கள். பெண் கடவுள்களுக்குப் பதிலாக ஆண் கடவுள்கள் பெருகத் தொடங்கின. பெண் அல்ல… ஆணே படைப்புக் கடவுளாக மாறிப்போனான். இதன் நீட்சியாக, ஆண் உயர்வானவன், பெண் தாழ்ந்தவள் என்னும் கருத்தும் வலுவாக்கப்பட்டது.
யூதர்களின் கடவுளான யாவே ஆபிரகாம், நோவா, மோசஸ், கெயின், ஆபெல் போன்ற ஆண்களிடம் மட்டுமே நேரடியாக உரையாடினார். பெண்களிடம் நேருக்கு நேர் அவர் உரையாடியதே இல்லை.
கிரேக்கக் கடவுளான ஜீயஸ் ஒரு பெண்ணின் உதவியை நாடாமல் தானாகவே அத்தீனாவை உருவாக்கினான். ஒரு பெண்ணைவிட நான் உயர்ந்தவன், என்னாலும் உயிர்களைப் படைக்க முடியும் என்பதை ஜீயஸ் நிரூபித்தான். தன்னுடன் ஒத்துப்போகாத பெண்ணை மட்டுமல்ல… கடவுளையும்கூட ஆண்கள் வீழ்த்தினார்கள். அதற்கோர் உதாரணத்தையும் அளிக்கிறார் லெர்னர். ‘அழகிய மெடூசா தலை நிறைய பாம்புடன் ஓர் அரக்கியாக உருமாற்றப்பட்டாள்.’
மெடூசா ஓர் இயல்பான பெண். அவளைப் பார்ப்பவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள் என்பது நிச்சயம் ஆண்களின் கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். மெடூசாவின் துணிச்சலைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்தான் அவளை ஆயிரம் பாம்புகள் நெளியும் அரக்கியாக உருமாற்றியிருக்க வேண்டும்.
பொசைடனை மயக்கியது மெடூசாவின் அழகு அல்லவா? எனவே, அதைக் குறிவைத்து அழிக்கிறாள் அத்தீனா. மெடூசாவின் அழகிய தங்க நிற தலைமுடி ஒவ்வொன்றும் விஷப் பாம்பாக மாறுகிறது. அமைதியான, அழகிய அவள் விழிகள் ரத்தச் சிவப்பாக மாறிவிடுகின்றன. அவளுடைய வெண்மேனி அருவெறுப்பூட்டும் பச்சை நிறத்தைப் பெற்றுவிடுகிறது.
அழகைத் தவிர ஒரு பெண்ணிடம் இருந்து வேறொன்றையும் எதிர்பார்க்கவில்லை சமூகம். தன் அழகை இழப்பது தவிர வேறொரு துயரம் பெண்ணுக்கு நிகழ்ந்துவிடப்போவதில்லை. அவளுடைய மேலான கவலையாக இதுவே இருக்க வேண்டும்.
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.