சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு காலை நேரம். பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம்.
கையில் ஒரு பழைய கோப்புடன் ராகவி நின்றுகொண்டிருந்தாள்.
அந்தக் கோப்புக்குள் இருந்தவை அவளுடைய சான்றிதழ்கள் மட்டுமல்ல… மூன்று ஆண்டுகளாக அவள் மேற்கொண்ட முயற்சிகளின் அடையாளங்களும்கூட.
முதல் நேர்முகத் தேர்வில் நிராகரிக்கப்பட்டாள்.
இரண்டாவது தேர்வில், “உங்களுக்கு அனுபவம் குறைவு” என்கிற பதில் வந்தது. வேலை கிடைத்தால்தானே அனுபவம் வரும் என்று மனதுக்குள் கேள்வி எழுந்தாலும், அதை அப்படியே விழுங்கிக்கொண்டாள்.
மூன்றாவது முயற்சியில், போட்டித்தேர்வு எழுதும்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர வேண்டியதாயிற்று.
அதற்குப் பிறகும் பல முயற்சிகள்…
ஒவ்வொரு நேர்முக தேர்வின் போதும் கிடைத்த அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் அவளை நன்கு மெருகேற்றி இருந்தது. ஒவ்வொரு தோல்வியையும் அவள் ஆராய்ந்து, தனது தவறுகளைத் திருத்திக் கொள்வாள். தோல்வி தானே வெற்றியின் முதல் படி என நினைத்துக்கொள்வாள். ஆனால், பல படிகளைக் கடந்த பின்பும் வெற்றி மட்டும் கிட்டவேயில்லை என்கிற சோர்வு நாளுக்கு நாள் கூடியது.
வீட்டில் எல்லாருக்கும் அதே கவலைதான்.
“எப்போ வேலை கிடைக்கும்?”
அவளுக்குப் பதில் தெரிந்திருந்தால் சொல்லியிருக்க மாட்டாளா? அவர்களின் சலிப்பு அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆரம்பத்தில் அவளது ஒவ்வொரு தோல்வியிலும் தேற்றியவர்கள் அவர்கள்தானே! அவளுக்கு அடுத்து தங்கையும் தம்பியும்கூட வரும் வருடம் படிப்பை முடித்து வேலை தேடத் தயாராகி விடுவார்கள்.
அன்றும் ஒரு நேர்முகத் தேர்வு.
பேருந்தில் ஏறும்போதுகூட அவள் மனதில் அதே கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது.
’இந்தத் தடவையும் தோத்துட்டா?’ அவளுக்குப் பதில் தெரியவில்லை. பதிலை தேடவும் விரும்பவில்லை.
ராகவிக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. முன்பு போல குதூகலத்துடன் வேடிக்கைப் பார்க்கும் மனநிலையில் அவள் இல்லை. வெறுமையாக வேடிக்கை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு வயதான பாட்டி அவளருகில் அமர்ந்தார். வயோதிகத்தின் அடையாளங்கள் முகம் முழுவதும் தெரிந்தன. கையில் ஒரு பெரிய பை.
ஓடிக்கொண்டிருந்த பேருந்து திடீரென பிரேக் போட்டதில், பாட்டியின் பை கீழே விழுந்தது. அதிலிருந்த நூல்கள், ஊசிகள், துணித்துண்டுகள் எல்லாம் சிதறின.
பாட்டி மெதுவாகக் குனிந்து அவற்றை ஒவ்வொன்றாக எடுக்கத் தொடங்கினார்.
ராகவியும் அவருக்கு உதவினாள். சிதறிக் கிடந்த எல்லாவற்றையும் பொறுமையாகப் பொறுக்கி பையில் வைத்தனர்.
“ரொம்ப நன்றி மா!”
“பாட்டி, இந்த வயசுலயும் இன்னும் தைக்கிறீங்களா?”
பாட்டி சிரித்தார்.
“வேற என்னம்மா பண்றது? எனக்குத் தைக்கிறது மட்டும்தானே தெரியும்?”
“சலிப்பா இல்லையா பாட்டி?”
“அலுப்பா இருக்கு. ஆனா சலிச்சுக்க மாட்டேன். உடம்பு ஒத்துழைக்கிற வரைக்கும் ஏதாவது ஒரு வேலை செஞ்சுக்கிட்டே இருக்கணும்.. அதுதான் மனசுக்கும் சந்தோஷம். நமக்குத் தெரிஞ்ச வேலையைச் செய்யும்போது அந்த அலுப்பைக்கூடப் பெருசா நினைக்கத் தோணாது.”
ராகவி அமைதியாக இருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து பாட்டி அவளைக் கவனித்தார்.
“என்னம்மா, ஏதோ யோசனையில இருக்கே? ஏன் இவ்வளவு சோர்வா இருக்க?”
அவள் சிரிக்க முயன்றாள்.
“மூணு வருஷமா வேலை தேடி முயற்சி பண்றேன் பாட்டி. இன்னும் கிடைக்கலை. ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரிச்சுடுறாங்க. இப்போ நம்பிக்கைகூடக் கொஞ்சம் கொஞ்சமா குறையுது.”
சொல்லும்போதே அவளுடைய குரல் தழுதழுத்தது.
பாட்டி ஜன்னலுக்கு வெளியே கையைக் காட்டினார்.
மழைக்குப் பிறகு சாலையோரத்தில் ஒரு சிறிய செடி மண்ணை உடைத்துக்கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தது.
“அதைப் பாரு மா…”
ராகவி அந்தச் செடியைப் பார்த்தாள்.
“அந்த விதை முதல் தடவையிலேயே முளைச்சிருக்குமா?”
ராகவி எதுவும் பேசாமல் தலையசைத்தாள்.
“மண்ணு அதை அழுத்தியிருக்கும்… மழை அடிச்சிருக்கும்… இருட்டுக்குள்ளேயும் இருந்திருக்கும். ஆனாலும் ஒரு நாள் மண்ணை உடைச்சுக்கிட்டு வெளியே வந்திருக்கு.”
பாட்டி ஆதரவாகச் சிரித்தார்.
“அது எத்தனை தடவை மண்ணை முட்டி வெளியே வர முயற்சி செஞ்சிருக்கும்னு நமக்குத் தெரியாது. ஆனா, வளரணும்கிற முயற்சியை அது கைவிடலை… அதுதான் முக்கியம் மா.”
ராகவி அந்தச் செடியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் இதுவரை தன்னுடைய தோல்விகளை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால், ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் மீண்டும் முயற்சி செய்யத் தனக்குள் இன்னும் நம்பிக்கை இருப்பதை மறந்துவிட்டாள்.
பேருந்து நேர்முகத் தேர்வு மையத்தை அடைந்தது.
பாட்டியிடம் விடைபெற்றுவிட்டு இறங்கினாள் ராகவி.
இந்த முறை அவளுடைய நடையில் ஒரு தெளிவு இருந்தது.
தேர்வு அறைக்குள் நுழைந்தாள்.
இந்த முறையும் வெற்றி கிடைக்காமல் போகலாம். ஆனால், அதற்காகத் தன்னுடைய திறமையையும் தன்னம்பிக்கையையும் அவள் இழக்கப் போவதில்லை.
தேவைப்பட்டால் மீண்டும் முயற்சி செய்யலாம். தன்னுடைய திறனை மேம்படுத்திக்கொள்ளலாம். அல்லது வேறு பாதையைத் தேர்ந்தெடுத்து ஏதேனும் தொழில் செய்யவும் முயற்சிக்கலாம். ஆனால், முயற்சியை நிறுத்தப் போவதில்லை.
அந்த மாலை…
வீட்டுக்குத் திரும்பும் வழியில் இதமாக வெயிலடித்த வானத்தைப் பார்த்துக்கொண்டே ராகவி சிரித்தாள்.
அவளுக்கு ஒன்று புரிந்திருந்தது.
வெற்றி என்பது நாம் நினைத்ததை அடைவதில் மட்டுமல்ல… தடைகளைத் தாண்டி, புதிய பாதைகளைத் தேடி முன்னேறத் துணியும் மனதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது.
என்றைக்கு முயற்சியை நிறுத்துகிறோமோ அன்று தான் தோல்வியடைகிறோம்.
வாழ்க்கையே போர்க்களம். வாழ்ந்துதான் பார்க்கணும். போர்க்களம் மாறலாம், போர்கள்தான் மாறுமா?
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.




