அன்று காணும் பொங்கல். வங்கியில் பொங்கலுக்கு இரண்டு நாள் மட்டுமே விடுமுறை என்பதால், அன்று விடுப்பெடுத்திருந்தேன். மதியம் இரண்டு மணியிருக்கும்.

நாங்கள் செயற்கை சிறுநீரகத்துக்குப் பதிந்து வைத்திருந்த மருத்துவமனையிலிருந்து போன் வந்தது. “உங்களுக்குப் பொருத்தமான சிறுநீரகம் கிடைத்திருக்கிறது. நான்கு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வரவேண்டும்,” என்றார்கள்.

இரண்டு ஆண்டுகளாகச் சிறுநீரகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் எதிர்பாராத நாளில் திடீரென்று போன் வரவே, ‘நான்கு மணி நேரத்துக்குள் எல்லாவற்றையும் தயார் செய்து எடுத்துக் கொண்டு புதுவையிலிருந்து சென்னைக்குப் போக வேண்டுமே’ என்பதை நினைத்து எனக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. சிறுநீரகம் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி ஒரு பக்கம்; அவர்கள் சொன்ன நேரத்துக்குள் போகாவிட்டால், அது கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சம் ஒரு பக்கம்.

‘அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும்; ஏறக்குறைய ஏழரை லட்சம் செலவாகும்’ என்பதை மருத்துவமனையில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் உடனே பணமெடுக்க வசதியாக வங்கியில் என் சேமிப்புக் கணக்கில் பத்து லட்சம் போட்டு வைத்திருந்தேன். என் உறவினரை அனுப்பி அந்தப் பணத்தை எடுத்துவரச் சொன்னேன்.

இருவரும் வேலை செய்த வங்கி மேலாளர்களுக்கு போன் செய்து விபரம் தெரிவித்து விடுப்புக் கேட்டோம். பரபரப்பாக அங்கே ஓடி, இங்கே ஓடி மருத்துவமனையில் தங்க தேவையான உடைகள், பிளாக்ஸ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு, சென்னைக்கு கார் ஏற்பாடு செய்து கிளம்புவதற்குள் பிற்பகல் நான்கு மணியாகிவிட்டது. 

பெருங்களத்தூர் வரை பிரச்னையில்லாமல் கார் வேகமாக வந்தது. அன்று காணும் பொங்கல் என்பதால் வழியெங்கும் கடற்கரைக்குப் போகும் கூட்டம் காரணமாக, டிராபிக் ஜாம் ஏற்பட்டு கார் இன்ச் இன்சாக நகரத் தொடங்கியது. எங்களுக்குப் பதற்றம் தாங்கவில்லை. 01/02/2011இல் பதிவு செய்த எங்களுக்கு 16/01/2013இல் சிறுநீரகம் கிடைத்திருக்கிறது.  ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் காத்திருந்து கிடைக்கும் இந்தச் செயற்கைச் சிறுநீரகம் மருத்துவமனைக்கு நேரத்துக்குப் போகாமல் கையை விட்டுப் போய்விடுமோ என்கிற பதற்றம் காரணமாக காரில் நிம்மதியாக அமர முடியாமல் நிலைகொள்ளாது தவித்தோம். முடிவில் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு எட்டரை மணியாகிவிட்டது. ஆனால் நாங்கள் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை.

மரணமடைந்த சிறுநீரகக் கொடையாளர் பற்றிய மருத்துவ விவரங்களைத் தெரிவித்து, “சிறுநீரகம் பெற உங்களுக்குச் சம்மதமா?” என்று மருத்துவமனையில் கேட்டனர். இறந்தவருக்கு 42 வயது என்றும், அவருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை (Hypertension) இருந்ததென்றும்  ஆனால் சிறுநீரகம் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இறந்தவர் பெயர், முகவரி பற்றிய மற்ற விவரங்களை மருத்துவமனை நமக்குத் தெரிவிக்காமல் ரகசியத்தைப் பாதுகாக்கும். அது போல் கொடையாளர் குடும்பத்துக்கும் அதைப் பெறுபவர் விபரங்களைத் தெரிவிக்கமாட்டார்கள்.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் நான் சொன்னது போல, உடலில் உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சிறுநீரகத்தின் நுண்ணிய ரத்தக் குழாய்கள் (Nephrons) சேதமடைந்து அதன் வடிகட்டும் திறன் பாதிக்கப்படும். எனவே நாங்கள் சில நிமிடங்கள் யோசித்தோம்

‘இந்தச் சிறுநீரகம் கிடைக்க இரண்டாண்டு ஆகியிருக்கிறது; இதை விட்டுவிட்டால் அடுத்தது எப்போது கிடைக்குமென்று தெரியவில்லை; ஏற்கெனவே ஃபிஸ்டுலா, கிராப்ட் தோல்வியடைந்ததால் ஹீமோ டயலிசிஸ் செய்ய வழியில்லை. கடைசி வாய்ப்பாக பெரிடோனியல் டயலிசிலிஸ் செய்கிறார். அதில் தொற்று ஏற்பட்டுவிட்டால், அதையும் நிறுத்த வேண்டிவரும். எனவே இந்தச் சிறுநீரகத்தை ஏற்றுக் கொள்வதே நல்லது’ என்று நாங்கள் யோசித்து அந்தச் சிறுநீரகத்தைப் பெற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்தோம். சிறுநீரகத்துக்காகக் பதிந்து காத்திருப்போர் பட்டியலில் எங்களுக்கு அடுத்த எண்ணிலிருந்த சிறுநீரக நோயாளியையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் சம்மதம் தெரிவித்தவுடனே அவர்கள் வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்கள்.     

அதன் பிறகு கணவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய பல ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்தப் பரிசோதனை முடிவுகளில் பிரச்னை இல்லையென்பதால் அடுத்த நாள் விடியற்காலை ஐந்தரை மணிக்குக் கணவரை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்கள். இந்த அறுவை சிகிச்சையில் புதிய சிறுநீரகம் வயிற்றின் கீழ்ப்பகுதியில் வலது அல்லது இடதுபுறம் வைக்கப்படுமென்றும், அதன் ரத்தக் குழாய்கள் நோயாளியின் பெரிய ரத்தக் குழாய்களுடன் இணைக்கப்படுமென்றும் அதன் சிறுநீர்க்குழாய் (ureter) சிறுநீர்ப்பையுடன் இணைக்கப்படுமென்றும் சொன்னார்கள். இவரது இரண்டு சிறுநீரகங்கள் நீக்கப்படமாட்டா என்றும் புதிய சிறுநீரகம் மூன்றாவதாகப் பொருத்தப்படுமென்றும் விவரம் தெரிவித்தார்கள்.

அறுவை சிகிச்சை நல்லவிதமாக முடிந்து அவர் வெளியே வந்தபோது நிம்மதியாக இருந்தது. ‘இனிமேல் ஒரு நாளைக்கு மூன்று முறை டயலிசிஸ் செய்யத் தேவையில்லை; அவர் விருப்பப்பட்டதைச் சாப்பிடலாம்; தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்’ என்றெல்லாம் நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நான்கு நாள் தீவிரச்சிகிச்சை வார்டில் அவர் இருந்ததால் தினமும் காலையும் மாலையும் மட்டுமே சில நிமிடம் அவரை நான் சந்திக்க முடிந்தது. அவரது சிறுநீரகம் நன்றாகச் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் கிரியாட்டின் அளவு குறைந்து கொண்டே வருவதாகவும் மருத்துவர் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு உள்ளே இருக்கும் அழுக்கு ரத்தம் வடிய ஒரு பிளாஸ்டிக் பையை வயிற்றுக்கு வெளியே தொங்கவிட்டிருந்தார்கள். அந்த வார்டில் இவருக்குப் பக்கத்திலிருந்த மற்ற நோயாளிகளுக்கு இரண்டு, மூன்று நாட்களில் அந்தப் பையில் சொட்டுச் சொட்டாக வடிந்த ரத்தம் நின்றுபோய் பையை நீக்கிவிட்டார்கள். ஆனால், இவருக்கு மட்டும் நான்கு நாட்களுக்குப் பிறகும், அதில் ரத்தம் வடிவது முழுவதும் நின்றபாடில்லை. அதை நான் சுட்டிக்காட்டிக் கேட்டபோது, “சிலருக்கு இது போல் அழுக்கு ரத்தம் வடிவது நிற்க ஒன்றிரண்டு நாள் அதிகமாகும். அது பிரச்னையில்லை” என்றார்கள்.

அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாம் நாள் அந்த பிளாஸ்டிக் பையுடனேயே இவரை வார்டுக்கு மாற்றினார்கள். அதுவரை மருத்துவமனையின் காத்திருப்போர் பகுதியில் தங்கியிருந்த நான் அவருக்குத் துணையாக அறையில் சென்று தங்கினேன். அன்றிரவு உணவுக்குப் பிறகு அவர்கள் சொன்னபடி இவர் மருத்துவமனை வராந்தாவில் 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்துவிட்டு வந்து படுக்கையில் படுத்தார். அடுத்த நிமிடம் அந்தப் பை முழுவதும் ரத்தம் நிரம்பியது. அதன் அளவு அரை லிட்டர் இருக்கும்.

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.