There’s a pride that’s coming back that has allowed Osages to free themselves of that dark chapter without forgetting it, but just incorporate it as a way we go forward.” — Chief Jim Gray 

“தங்களை இருளில் அழுத்திய அத்தியாயத்தை மறக்காமல், அதிலிருந்து மீண்டு தங்களை விடுவித்துக்கொண்டு, அதை முன்னோக்கிச் செல்லும் பாதையாகக் கட்டமைத்துக் கொண்டுள்ள ஒசேஜ் மக்களால், மீண்டும் நமக்குப் பெருமிதம் தோன்றுகிறது.” – ஒசேஜ் இனத்தலைவர் ஜிம் க்ரே 

ஒசேஜ் பூர்வகுடிகளை ஓடிக் களைத்தவர்கள் என்பதா? ஒடுக்க ஒடுக்க வீரம் புடைக்க உயரங்களைத் தொட்டவர்கள் என்பதா என்கிற குழப்பம் வருகிறது. இம்மக்கள் பிற பூர்வகுடிகளைப் போலவே அனைத்து துயரங்களையும் துரத்தல்களையும் சந்தித்தனர். ஆனால்,1800களின் கடைசிப் பகுதியில் எண்ணெய் வளத்தால் உலகத்தின் சிறந்த செல்வந்தர்கள் ஆனார்கள். 1930ற்குள் கற்பனைக்கெட்டாத அளவிற்கு படுகுழியில் தள்ளப்பட்டனர். அக்கொடூரமான காலக்கட்டத்தை மனிதகுல வரலாறு ‘பயங்கர ஆட்சிக் காலம்’ (Reign of Terror) என்று குறிப்பிடுகிறது. 

ஒசேஜ் பழங்குடிகள் மாதங்களையும் காலநிலை மாற்றங்களையும் நிலவின் நகர்வினை வைத்தே அறிந்து வந்தனர். இயற்கையில் நடக்கும் பருவநிலை மாற்றங்கள், விலங்குகளின் நடமாட்டம், தாவரங்களின் வளர்ச்சி போன்றவற்றை வைத்தே மாதங்களுக்குப் பெயரிடப்பட்டன. அவர்களின் நிலப்பரப்பில் ஏப்ரல் மாதத்தில் லட்சக்கணக்கான காட்டுப்பூக்கள் குன்றுகளில் எல்லாம் பூத்துக் குலுங்கும். மே மாதத்தில் பெரிய தாவரங்கள் செழித்து வளரத்தொடங்கும். அத்தாவரங்கள் சின்னஞ்சிறிய பூக்களுக்குக் கிடைக்கும் சூரிய ஒளியையும் நீரையும் உறிஞ்சிவிடும். இதனால் சிறிய பூக்களின் காம்புகள் முறிந்து, அதன் இதழ்கள் உதிர்ந்து நிலத்தடியில் புதைந்துபோய்விடும். இந்த மாதத்தைத்தான் ஒசேஜ் மக்கள், ‘பூக்களைக் கொல்லும் நிலவு’ (Flower-killing moon) என்று அழைப்பார்கள்.

இயற்கையில் வலிமையான தாவரங்கள் சின்னஞ்சிறு பூக்களை அழித்தது போலவே அமெரிக்காவின் அதிகார வர்க்கத்தின் பேராசை இந்த ஒசேஜ் மக்களின் அழிவைத் திட்டமிட்டு நடத்தியது.

ஒசேஜ் பூர்வகுடிகள் கிழக்கில் அப்பலேச்சியன் (Appalachian mountain) மலையிலிருந்து மேற்கில் ராக்கி (Rocky mountains) மலைத்தொடர்வரையில் உள்ள மிக விரிந்த நிலப்பரப்பில் பரவியிருந்ததாக கூறப்படுகிறது. ஆன்மீகம், வேட்டை, வீரமென அனைத்திலும் சிறந்து விளங்கினர். பிற பழங்குடி இனத்தாரோடு நல்ல வணிகத் தொடர்புகளும் கொண்டிருந்தனர். எனினும் ஓரிரு வேற்றினங்களுடன் கடும்பகையும் இருந்தது. ஒசேஜ் இனக்குடிகள் நிலப்பரப்பிற்கு மூன்று திசைகளிலும் மிசௌரி, மிஸ்ஸிஸிப்பி, ஆர்கான்ஸா போன்ற மாபெரும் ஆறுகள் அரணாக நின்றன. மேற்கு எல்லையில் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை கணக்கற்ற காட்டெருமைக் கூட்டங்கள் பரந்த புல்வெளியில் மேய்ந்துகொண்டிருக்கும். 

1600-களுக்குப் பின்னர் ஐரோப்பியர்களின் வருகை இவர்களின் வாழ்க்கையை மாற்றத்தொடங்கியது. அமெரிக்காவிலுள்ள லூசியானா என்ற பிரமாண்ட நிலப்பரப்பு பிரான்ஸின் (France) கைவசம் இருந்தது. அப்பகுதி இன்றைய லூசியானா மாகாணத்தை மட்டும் கொண்டதல்ல. இன்றைய லூசியானா, அர்கான்ஸா, ஒக்லஹோமா, மிஸோரி, ஐயோவா, சவுத் டகோட்டா, நார்த் டகோட்டா, நெப்ராஸ்கா, கான்சாஸ், மொன்ட்டானா முதலிய மாகாணங்களையும் உள்ளடக்கியது. அத்துடன் டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ, கொலராடோ, மினசோட்டா போன்ற மாகாணங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. சுருக்கமாகக் கூறினால், அமெரிக்காவின் மத்தியப் பகுதியின் மிகப்பெரும்பான்மையான நிலப்பரப்பு இது. பல அரசியல் காய்நகர்வுகளுக்குப்பிறகு, அமெரிக்கா அப்பகுதியை பிரான்ஸிடமிருந்து விலைகொடுத்து வாங்கியது. அமெரிக்க வரலாற்றில் லூசியானாவை வாங்கிய நிகழ்வு (Louisiana Purchase, 1803) என்பது அளவிடுவதற்கரிய வரலாற்று மாற்றமாகும். அதன் விளைவாக, அமெரிக்காவின் நிலப்பரப்பும் வலிமையும் ஒருங்கே பெருகத்தொடங்கின எனலாம். 

அமெரிக்க அரசாங்கத்தின் கவனம் முழுவதும் கிடைத்த நிலத்தில் ஆதாயம் பெறவேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது. அம்மண்ணில் முன்பு வாழ்ந்து வந்தவர்களைப்பற்றி அது கருத்தில் கொள்ளவில்லை. அப்பூர்வகுடிகளை அரசாங்க ஒதுக்கீட்டு நிலப்பரப்பில் அடைத்துவிடலாம் என்பது எளிதான தீர்வாகியது. இவ்வாறு ஒசேஜ் மக்கள் அறுபது ஆண்டு காலத்தில், மூன்று பெரும் இடப்பெயர்வுகளை சந்தித்தனர். பின்னர் இன்றைய ஒக்லஹோமா (Oklahoma) பகுதிக்கு நகர்த்தப்பட்டார்கள். 

இக்கட்டாய இடப்பெயர்வுகள் கடினமான சவால்களைத் தந்தன. அவற்றிலிருந்து மீள ஆண்டுகள் பலவாயின. அவர்களின் முந்தைய இடங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெற (1870-களின் தொடக்கத்தில்) போராடவேண்டியிருந்தது. அரசாங்க உணவு வழங்கல் தட்டுப்பாட்டினால் ஒசேஜ் மக்கள்தொகையில் 50 விழுக்காட்டினர் உயிரிழந்தனர். 

ஐரோப்பியர்களால் பழங்குடியினருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்புகளை ஒசேஜ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். உடன்படிக்கைகள் மூலம் தங்கள் கையைவிட்டு நழுவிய நிலங்களின் அனுபவப்பாடமும் பெற்றிருந்தனர். அவர்களின் இனத்தலைவர்களும் மதிநுட்பத்துடன் வழிகாட்டத்தொடங்கினர். அதனால் அவர்கள் ஒக்லஹோமா பகுதிக்கு நகர்த்தப்பட்ட பின்னர், 1.47 மில்லியன் ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கிக்கொண்டனர். அந்நிலப்பகுதி பூர்வகுடி சமுதாய நிலமாக பராமரிக்கப்பட்டது. 

தங்களுக்கான ஒதுக்கீட்டு நிலங்களை (Reservation) தாங்களாகவே வாங்கிக்கொண்ட ஒரு சில பழங்குடிகளில் இவர்களும் ஒருவராவர். மிக முக்கியமாக, கனிமவள உரிமையை தங்களுடன் தக்கவைத்துக்கொண்டனர். 1906-ஆம் ஆண்டு 2,228 ஒசேஜ் பூர்வகுடி மக்கள் இப்பகுதியில் வாழும் மக்களாக பதிவுசெய்யப்பட்டனர். அவர்கள் ஆளுக்கு 256 ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றனர். ஏனைய பூர்வகுடிகள் பெற்ற அளவைவிட இது நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அம்மக்கள் அதிக வளமற்ற அந்த நிலங்களை மேய்ச்சல் நிலமாக குத்தகைக்குவிட்டு, பெருமளவு வருமானத்தை ஈட்டினர். 1894-ஆம் ஆண்டு அப்பகுதியில் எண்ணெய் வளம் (Oil wealth) கண்டுபிடிக்கப்பட்டது. அச்செய்தி அமெரிக்கா எங்கும் காட்டுத்தீபோல பரவியது. அந்நாட்டில் இருந்த அனைத்து செல்வந்தர்களும், வணிகர்களும் அதை தமதாக்கிக்கொள்ள திட்டங்கள் தீட்டினர். 

எண்ணெய் நிறுவனங்கள் பிரம்மாண்டமான உபகரணங்களுடன் அப்பகுதியில் குவியத்தொடங்கின. முன்பே மேய்ச்சல் நிலக்குத்தகைகளில் பழக்கம் இருந்ததால் சரியான முறையில் எண்ணெய் விற்பனை லாபத்தில் இவர்களுக்கான உரிமத்தொகைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டனர். எண்ணெய் வளம் கொழிக்கத்தொடங்கியது; ஒசேஜ் மக்கள் அமெரிக்காவின் தலைசிறந்த செல்வந்தர்கள் ஆனார்கள். ஒசேஜ் இனத்தலைவர் ஜேம்ஸ் பிக்ஹார்ட் (Chief James Bigheart) பன்மொழிப்புலமையும், ஆழ்ந்த அறிவும் கொண்டவராக இருந்தார். அவரின் வழிகாட்டுதலிலும் அரசாங்க ஒப்பந்தங்களில் ஈடுபட்டனர். கனிமவள உரிமத்தொகையால் ஒசேஜ் மக்களின் பொருளாதாரம் உலகளவில் முதன்மையானது. 1923-ஆம் ஆண்டில் மட்டும் ஒசேஜ் மக்கள் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை உரிமத்தொகையாக பெற்றனர். 

ஒசேஜ் நிலப்பரப்பின் கனிமவளமும் பொருளாதார மேம்பாடும் அமெரிக்க அரசாங்கத்தை ஈர்க்கத்தொடங்கியது. இதன் தொடர்பாக அரசாங்கத்திற்கு அரசியல் அழுத்தங்களும், வணிகர்களின் நெருக்குதல்களும் மென்மேலும் வலுத்தன. இதன் விளைவாக, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிற பூர்வகுடி இனத்தின் நிலங்களைப் கைப்பற்ற அமெரிக்க அரசு பயன்படுத்திய உத்தியை கையாளுவதற்கு நினைத்தது. பழங்குடியினரின் சமூகப் பொதுநிலங்களைச் சிறுசிறு தனிநபர் துண்டுகளாகப் பிரித்து வழங்கும் கொள்கையைக் (General Allotment / Dawes Act) கடைபிடித்து குறிக்கோளை அடைந்தது. இதன் உண்மையான நோக்கம், பழங்குடியினரின் கூட்டுச் சொத்துரிமையை அழித்து, மீதமுள்ள நிலங்களை வெள்ளை வம்சாவளியினருக்குக் குறைந்த விலைக்கு விற்பதுதான். ஆனால், பூர்வகுடி மக்கள் ஐரோப்பிய இன குடியேறிகளுடன் கலந்து வாழ்ந்தால்தான் இணக்கமும் நாகரிகமும் அடைவார்கள், அது அவர்களுக்கு மேம்பாடாக அமையுமெனக் கூறப்பட்டது. 

அதே கொள்கையை 1906-ஆம் ஆண்டு ஒசேஜ் மக்களிடமும் கொண்டுசேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் கனிமவளம் மிக்க நிலப்பரப்பினை வெள்ளையின மக்களுக்கு விற்க ஏதுவாகும் என திட்டமிடப்பட்டது. ஆனால் ஒசேஜ் தலைவர்கள் சாதுரியமானப் பேச்சுவார்த்தையால், வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஏற்பாட்டைப் பெற்றனர். 1906-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி, நிலத்தின் மேற்பரப்பு (Surface estate) தனிநபர்களுக்குப் பிரிக்கப்பட்டாலும், நிலத்திற்குக் கீழே உள்ள எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் (Osage Mineral Estate) தனிநபர்களுக்குச் சொந்தமானதாகாது என்று தீர்மானம் இயற்றப்பட்டது. 

ஒசேஜ் சமுதாயத்திற்குரிய கனிமவள வருமானம் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் பங்கீடு (Headrights) செய்யப்படவேண்டுமெனச் சட்டம் வகுக்கப்பட்டது. அதனால் ஒசேஜ் மக்களின் கனிம வளங்கள் பாதுகாக்கப்பட்டன. ஆனாலும் மிதமிஞ்சிய பொருளாதார வளத்தை பூர்வகுடிகளுக்கு விட்டுத்தர மனமில்லாது அமெரிக்க அரசாங்கம் மாற்று ஏற்பாடு ஒன்றினைச் செய்தது.

செல்வந்தர்களான ஒசேஜ் மக்களுக்கு நிதி நிர்வாகத் திறமை இருக்காது எனவும்; சமூக விரோதிகளிடமிருந்து அவர்களின் சொத்துகளை பாதுகாப்பதாகவும் காரணங்களைக் கூறி வெள்ளையினப் பாதுகாவலர்களை நியமிக்க முடிவுசெய்தது. அந்த ‘பாதுகாவலர் முறை’ (Guardianship System) தான் பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தாக மாறியது. 

ஒக்லஹோமாவின் உள்ளூர் மாவட்ட நீதிமன்றங்கள்தான் (County Probate Courts) இப்பாதுகாவலர்களை (Guardians) நேரடியாக நியமித்தன. இங்குதான் மிகப்பெரிய ஊழலுக்கான வழி திறந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் ஒக்லஹோமா பகுதியில் இருந்த சட்ட ஒழுங்கு விதிமுறைகள் சீர்கெட்டிருந்தது. காவல்துறை கட்டுப்பாடற்று பாரபட்சமாக செயல்பட்டு வந்தது; வெள்ளையர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் சாதகமாக இருந்தது. சட்டத்துறையும் செயலற்றிருந்தது. உள்ளூர் நீதிபதிகள், வெள்ளையின வணிகர்கள், வழக்கறிஞர்கள், வங்கியாளர்கள் போன்றவர்கள் செல்வாக்கின்பேரில் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால் உள்ளூர் நீதிமன்றங்களும் அதிகாரிகளும் ஒசேஜ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதற்குக் காரணமாக இருந்தனர். 

அதன் உச்சக்கட்டம் 1920-களில் முழுவீச்சில் தொடங்கியது. அதன் மூளையாகச் செயல்பட்டது பணத்தாசையால் புழுத்துப்போன வஞ்சகர் கூட்டம். அதிலொருவன் வில்லியம் கே. ஹேல். தன்னுடைய சகோதரியின் மகன் எர்னஸ்ட் பர்கார்ட் என்பவனைக் கைப்பாவையாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல ஒசேஜ் இனக் குடிமக்களைச் சுட்டும், நயவஞ்சகமாக விஷம்கொடுத்தும், குண்டுவைத்து தகர்த்தும் கொன்றுகுவித்துள்ளான். எர்னஸ்ட் பர்கார்ட், மாலி என்ற ஒசேஜ் பூர்வகுடிப் பெண்ணை திருமணம் செய்ததே இந்த தொடர்க்கொலைகளின் முதல் புள்ளியாகும். மாலியின் மூன்று சகோதரிகள், தாயார், சகோதரியின் கணவர் என வஞ்சகத்தால் வரிசையாகக் கொல்லப்பட்டனர். அக்கொலைகள் எளிதாக மூடிமறைக்கப்பட்டன.

வில்லியம் ஹேல் காவல்துறையில் துணை ஷெரிஃப் பதவியை வகித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் செல்வாக்கும் பணபலமும் அவனுக்குத் துணைநின்றன. இவர்களைத்தவிர ஒசேஜ் மக்களின் கிராமங்களில் வரிசையாக உயிரிழப்புகள் தொடர்ந்தன. இக்கொலைகளுக்குப் பூர்வகுடிகளின் சார்பாக நேரிடையாக அமெரிக்கத் தலைநகருக்குச் சென்று நீதிவிசாரணைக்காக பேசுவதற்குச் சென்ற பார்னி மெக்பிரைடு (Barney McBride) என்கிற எண்ணெய் வணிகரும் வெட்டிக்கொல்லப்பட்டார். ஒசேஜ் மக்களுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் இரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுக்கொல்லப்பட்டார். 

1920 முதல் 1933 வரையிலான பயங்கர ஆட்சிக்காலத்தில் அதிகாரப்பூர்வ கணக்கின்படி, குறைந்தபட்சம் அறுபதுக்கும் மேற்பட்ட ஒசேஜ் செல்வந்தர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டோ மர்மமான முறையிலோ இறந்துள்ளனர். முறையான விசாரணைகள் இல்லாமல் மறைக்கப்பட்ட, விபத்துகளாக ஜோடிக்கப்பட்ட பிற மரணங்களையும் சேர்த்துப்பார்த்தால், உண்மையான பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கலாமென வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். மத்தியப் புலனாய்வு ஒரு வில்லியம் ஹேலை வெளிச்சத்திற்குக்கொண்டுவந்தது, இன்னும் இருளில் புதைந்த உண்மைகள் எவ்வளவோ? 

அக்காலக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலோர் ஒசேஜ் நிலங்களின் எண்ணெய் உரிமைப் பங்குகளை (Headrights) நேரடியாகப் பெற்றிருந்தவர்களாகவோ, அதற்கு வாரிசுதாரர்களாகவோ இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் அதிகாரிகளும் குற்றவாளிகளும் சட்டத்தின் ஓட்டைகளின் வழியாக அவர்களின் சொத்துகளைச் சூறையாடவும், அதன் தொடர்ச்சியாகப் படுகொலைகள் அரங்கேறவும் அரசு மறைமுகமாக வழிவகுத்தது. அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை (F.B.I) இக்கொலை வழக்குகளின் விசாரணையில் ஈடுபட்ட பின்னர்தான் அவை ஒரு முடிவிற்கு வந்தன. இத்தொடர் கொலைகளைப் பற்றி டேவிட் க்ரென் என்ற எழுத்தாளர் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ (Killers of the Flower Moon) என்கிற பெயரில் எழுதிய வரலாற்றுப் புலனாய்வு நூல் அமெரிக்க மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஒசேஜ் மொழித் துறை வாயிலாக இன்றைக்கும் முன்னோர்களின் பாரம்பரிய அறிவும் மொழியும் எதிர்காலச் சந்ததியினருக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இயற்கை வழிபாட்டு முறைகளும் நவீன காலத்திலும் துல்லியமாகப் பாதுகாக்கப்படுகின்றன. கடந்தகாலக் கொடூரங்களை எதிர்கொண்டபோதிலும், ஒசேஜ் சமூகம் தனது சுய அடையாளத்தையும் பழங்குடி மரபையும் வெற்றிகரமாக மீட்டுள்ளது. 

2010-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி ஒசேஜ் மக்களின் ஆண்டுப் பொருளாதாரப் பங்களிப்பு 222 மில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. சூதாட்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் ஒசேஜ் மில்லியன் எல்ம் (‘Osage Million Dollar Elm’) என்கிற நிறுவனம், ஊழியர்களின் பட்டப் படிப்புகளுக்கு முழு நிதியுதவி அளித்து ஊக்குவிக்கிறது. கடந்த காலத் துயரங்களைத் தாண்டி, ஒசேஜ் சமூகம் தற்காலத்தில் வலுவான அடையாளத்துடனும் எதிர்கால நம்பிக்கையுடனும் மிளிர்கிறது. 

பெட்டிச் செய்தி 

பாதுகாவலர்கள் ஒசேஜ் மக்களுக்கு ஆண்டுக்கு $4,000 மட்டுமே செலவுத் தொகையாகத் தந்துவிட்டு, மீதமுள்ள பெருந்தொகை எங்கு சென்றது என்பதற்குக் கணக்குக் காட்டத்தேவையில்லை. 1922-1925 காலகட்டத்தில் ஹெட்ரைட்ஸ் மூலம் ஆண்டுக்கு $11,000 முதல் $12,000 வரை வருமானம் கிடைத்த நிலையில், பாதுகாவலர்களும் வழக்கறிஞர்களும் சட்டப்பூர்வமாகக் கட்டணங்கள் மற்றும் ஒரே நேரத்தில் பலருக்குப் பாதுகாவலராக இருந்து லட்சக்கணக்கில் கொள்ளையடித்தனர்.

படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்) 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.