மெடூசா, ஆராக்னே, அகலிகை, காரைக்கால் அம்மையார் எனப் பல பெண்களின் கதைகளை நாம் வாசித்துவிட்டோம். ஒவ்வொரு கதையிலும் சொல்லப்பட்ட கதைக்கும், சொல்லப்படாத கதைக்கும் உள்ள இடைவெளி நிறைய இருக்கிறது. அப்படித்தான் இவளுடைய கதையையும் பலரின் வாய்மொழியாகக் கேட்டிருக்கிறோம். இப்போது அவளே அவளுடைய கதையைச் சொல்லட்டும். இடைவெளியில் அவளுடைய கதையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா என்று பார்க்கலாம்.
கோதாவரி அன்று மிகவும் அழகாகக் காட்சியளித்தாள். வசந்தம் திரும்பியதன் அடையாளங்கள் அவளின் மேனியெங்கும் பரவியிருந்தன. உதிர்ந்திருந்த நீலக்குவளை இதழ்களை முட்டி முட்டி விளையாடினாள். காற்றின் ஈரத்தோடு அவளின் வாசனையை அள்ளித் தெளித்திருந்தாள்.
நான் அன்று என் ஊரைவிட்டு வெகு தொலைவு வந்திருந்தேன். கடல் கடந்து வந்திருந்தேன். கொஞ்சம் அயர்வாக இருக்க, கோதாவரியின் கரையில் இளைப்பாறிட அமர்ந்தேன். ஆனால், அவளோ என்னை அள்ளி அணைத்துக்கொண்டாள். என்னுள் சுவாசமாக நுழைந்து நுழைந்து என்னை நிரப்பினாள். அவளின் நீண்ட அலைகளோடு விளையாடினேன். மூழ்கி மூச்சடக்கினேன். இப்போது அவள் கரையில் அமர்ந்து சலிக்காமல் அவளை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
இவளைப் போல் நானும் அழகிதான். நீண்ட கரிய கூந்தல் எனக்கு. அடர்ந்த வில்போன்ற புருவங்கள், கொஞ்சம் தட்டையான மூக்கு, தடித்த உதடுகள், கொழுகொழு கன்னம் கொண்ட தமிழணங்கு நான். இதுவரை என்னை யாரும் பெரிதாக ரசித்ததில்லை. ஆனால் இன்றோ கோதாவரி என்னை முழுவதுமாக ரசிக்கிறாள். நாணல் கொண்டு என்னை நாணச் செய்கிறாள்.
கரையில் எழுந்து நடக்கத் தொடங்கினேன். அவளின் வாசனையோடு இன்னுமொரு வாசனை காற்றை நிறைத்தது. உலர்ந்த இலைகள் மிதிபடும் சத்தம் கேட்டது. யாரோ சில மனிதர்களின் நடமாட்டத்தை என்னால் உணர முடிந்தது. மெல்ல சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தேன். பஞ்சவடியில் யாரோ ஓர் ஆண் இருப்பது தெரிந்தது. உள்ளுக்குள் இருந்து ஓர் ஆவல் ஊற்றெடுத்தது. அவன் முகத்தைக் காண முன்னகர்ந்து சென்றேன். ஆனால், இலைகளும் மரங்களும் அவனை முழுமையாக மறைத்திருந்தன. அவனுடைய இடது கை மற்றும் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்தது. தோளில் வில்லேந்தி இருந்தான். யானையின் துதிக்கை போன்ற வலிமையான கரங்கள். அந்தக் கரத்திற்கு சொந்தக்காரனை நிச்சயம் கண்டுவிட வேண்டும் என்ற எண்ணம் வலுத்திட, இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினேன்.
அவன் வில்லின் நாணை இழுத்துக்கொண்டிருந்தான். நாண் இறுகியபோது, அவன் தோளும் முதுகும் இறுகின. தொலைவிலிருந்தே அந்த வலிமை எனக்குத் தெரிந்தது.
அவனைக் காணாத இந்த வினாடியும், அவன் முகம் காணாத நானும் முன்னகர்ந்து செல்ல என் இதயத்துடிப்பு அதிகமானது. மனதிற்குள் புதிதாய் பல எண்ணங்கள் கோதாவரி போல் கரையுடைத்து திரண்டு வந்தன.
சில வினாடிகள்… சில அடிகள்… இதோ திரும்பிவிட்டான்.
அவன் முகம் கண்ட நொடி கால்கள் நகர மறுத்தன. இதுவரை இவ்வளவு அழகாக ஒருவனை நான் பார்த்ததே இல்லை. என்ன ஒரு தெய்வீகமான முகம்! மரவுரி உடை அணிந்திருந்தான். அவன் முகத்தில் துறவின் அடையாளம் ஏதுமில்லை. திண்ணிய தோளும் கூரிய பார்வையும் அவனைப் பெரும் ராஜ்ஜியத்தின் தலைவனாகவே சித்தரித்தது.
இவ்வளவு ஒளிரும் முகம் கொண்டிருக்கிறான். அவன் முகம் எதையோ நினைவுபடுத்துகிறதே. ஆம்… அந்த முழுநிலவு நினைவுக்கு வருகிறது. இல்லை… இல்லை… முழுநிலவில் களங்கங்கள் இருக்கும். இவனின் முகத்தில் களங்கமில்லை. கலக்கமும் இல்லை. அந்த ஏழ்பரியோன் கண்டு மலரும் செந்தாமரை போல் இருக்கிறான்.
அவன்மேல் காதல் கொண்டுவிட்டேன். கொஞ்சம் காமமும் ஊற்றெடுத்தது என்று சொல்வதில் வெட்கமென்ன? அவன் என்னவன் என்று முடிவு செய்துவிட்ட பின்னர், அவன்பால் காமம் தோன்றுவதில் பிழையென்ன? அவனின் திண்ணிய தோளில் முத்தம் பதிக்கவும், என் காதலை அகழவும் தயாராகிவிட்டேன்.
எப்போதும் எனக்குத் தயக்கங்கள் இருந்ததில்லை. என் விருப்பங்களும் விருப்பமின்மைகளும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் நொடியில் எதிர்முனை பாய்ந்துவிடும். இப்போதும் அவனைப் பிடித்திருக்கிறது என்று அவனிடம் கூற முடிவு செய்தேன். அவனின் அருகில் செல்லத் தயாரானேன்.
ஏனோ கால்களில் சிறு தயக்கம். திரும்பி என் உருவத்தை கோதாவரியில் பார்த்தேன். என்னைவிட அவன் மிக அழகாக இருந்தான். உலகம் வரையறுத்த அழகுக்கோலில் அவன் ஒரு முனையிலும், நான் ஒரு முனையிலும் இருந்தோம். அதை ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. ஆனால், என்னைப் பற்றி நான் ஒருபோதும் கீழ்மையாக நினைத்ததில்லை.
நாற்பது அடிகள் எடுத்து வைத்து அவன் அருகில் செல்வதற்குள், நான்காயிரம் எண்ணங்கள் தோன்றிவிட்டன. ஆனாலும் என் விழிகளின் இலக்கிலிருந்து அவன் மறையவேயில்லை. அதுவரை அவன் ஒரு மரத்தை வெட்டி தோளில் தூக்குவதில் கவனமாக இருந்தான். இப்போது என்னைப் பார்த்துவிட்டான். என்னைப் பார்த்தவன், அவன் வேலையைத் தொடர முனைய, மீண்டும் ஒருமுறை பார்த்தான். இம்முறை என்னைவிட்டு அவன் பார்வை அகலவில்லை. அவனுடைய பார்வையில் ஏதோ ஓர் ஆச்சரியம் இருந்தது. அது என்னைப் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்.
அது என்ன என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன்.
அவன் அருகில் சென்றதும், “உன் வரவு நல்வரவாகுக! அழகியவளே, நீ இங்கு வந்தது எங்களுக்கு ஒரு நற்பேறு அல்லவா? நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்? உன் பெயர் என்ன? உனக்கு என்ன வேண்டும்?” என்று வரிசையாக வினாக்கணைகளைத் தொடுத்தான்.
“நான் மூவுலகையும் ஆளும் ராவணனின் தங்கை. என் பெயர் காமவல்லி. உங்களை என் கணவனாக வேண்டி வந்துள்ளேன்” என்று என்னை நானே அறிமுகம் செய்துகொண்டேன்.
ஆனால் அவன் முகத்தில் சிறு அதிர்ச்சி. அவன் இதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது.
“நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன? உங்களுடைய வீரமும் உருவமும் காண்கையில், அரசனைப் போல் இருக்கிறது. ஆனால், தவசியைப் போல் மரவுரி தரித்து காட்டில் வாழ்வதற்குக் காரணமென்ன?” என்றேன்.
நினைவுலகுக்குத் திரும்பியவன், “நான் ராமன். தசரதனின் மகன். காட்டிற்குச் சென்று பன்னிரண்டு ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது என் அன்னை கைகேயியின் வேண்டுகோள். அதன் பொருட்டு இந்த வனவாசம். அமைதியின் வடிவமான என் மனைவி சீதாவும், என் தம்பி லட்சுமணனும் உடனிருக்கிறார்கள்” என்று பதிலளித்தான்.
அவனின் வாய்மொழியாகக் கேட்ட சொற்கள் என்னுள் இன்னும் காதலைக் கூட்டின. என்னுடைய விருப்பத்துக்கு அவன் பதில் கூறாமல் புறக்கணிக்கிறான் என்பது விளங்கியது.
“நான் தங்களை விரும்புகிறேன்” என்று கூறினேன்.
“நான் அரச குலத்தைச் சேர்ந்தவன். நீயோ அரக்கக் குலத்தைச் சேர்ந்தவள். இருவரும் மணந்துகொள்வது நெறியாகாது” என்று மறுத்தான்.
மனம் ஒன்றான பின்னர் அரக்கக் குலமும் அரச குலமும் ஒரு பொருட்டா? யாரோ வகுத்த குலங்களும் நெறிகளும் ஏன் என் காதலுக்கு எதிரியாக நிற்கின்றன என்று என் மனதில் ஆயிரம் கேள்விகள் வலம்வந்தன. அவன் என்னை மறுக்கவில்லை என்று ஒரு கணம் நினைத்தேன்.
ஆனால் அடுத்த கணமே பஞ்சவடியில் இருந்து வெளியே வந்த பெண்ணைக் காட்டி, “அவள் இருக்கிறாள்; என்னால் உன்னை ஏற்க முடியாது. ஆனால், என் தம்பி இருக்கிறான்” என்று சொன்னபோது, அவன் சொற்களில் இருந்த இளவறலை
நான் என்னவென்று படித்தேனோ?
என்னால் அவனுடைய மறுப்பை ஏற்க முடியவில்லை. சீதையின் மேல் பொறாமை எழுந்தது. என்னுள் என்றுமே இருந்திராத தாழ்வு மனப்பான்மை தூண்டப்பட்டது.
லட்சுமணனிடம் சென்றேன்.
“பெரும் போரில் உனக்குத் துணையாக இருப்பேன். வானளவு வலிமை உடையவள் நான். உனக்குத் தேவையானவற்றை
எல்லாம் என்னால் தர முடியும். நீ விரும்புவது எதுவாயினும் செய்து தருவேன். என்னைப் போன்றவளை நீ ஏன் ஏற்கக் கூடாது?” என்றேன்.
ஆனால் அவனோ என்னைக் கேலி செய்தான். அதன்பிறகு நடந்த எதுவும் என் வசம் இல்லை. என் மூக்கை அறுத்து என்னை அவமானப்படுத்தினார்கள்.
என்னை மறுத்தது பிழையில்லை. ஆனால் கடைசிவரை அதில் கண்ணியம் இருந்திருக்க வேண்டும். இந்த உலகம் முழுக்க என் மூக்கறுப்பு நியாயம் என்று நிறுவிவிட்டார்கள். அது எப்படி நியாயமாகும்?
என் விருப்பத்தை நேரடியாகக் கூறினேன். பட்டென்று முகத்திற்கு நேரே ஒரு பதிலை எதிர்பார்த்தேன். என்னை அரக்கியென்றதும் நானும் சீதையை அரக்கியென்றேன். ஒரு பெண் தன் விருப்பத்தை வெளியிடுவதால், அவளை இந்த உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லித் தூற்றலாமா?
என்னை நியாயவாதியாக நிறுவ இந்தக் கதையைச் சொல்லவில்லை. நான் செய்ததில் பெரும் பிழை இருக்கிறது. என் பிழையைப் பொறுக்காத மக்கள், எனக்கு நடந்த பிழையை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?
என் காதலை மறுப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் என் உடலை அவமானப்படுத்துவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருந்தது?
நான் விரும்பியவன் என்னை விரும்பவில்லை. அது அவனுடைய உரிமை. ஆனால் நான் விரும்பியதற்காக என்னை அரக்கியாக்கியது யாருடைய உரிமை?
இப்படிப் பலவாறு வினாக்கள் அவள் மனதிலும் வலம் வந்திருக்குமே.
சூர்ப்பணகை நல்லவளா கெட்டவளா என்று ஆராய்வதற்காக இந்தக் கதையைச் சொல்லவில்லை. ஆனால், அவள் செய்த தவறுக்கும் அவளுக்கு நிகழ்ந்த வன்முறைக்கும் வேறுபாடு இருக்கிறது. ராமன் பிடிக்கவில்லை என்று கூறியதும் லஷ்மணை அணுகியவள் என்று அவளின் ஒழுக்கத்தை விமர்சிக்கிறது உலகம். ஆனால், உன்னைப் பிடிக்கவில்லை என்று கூறி அவளை அனுப்பாமல், லஷ்மணை அணுகுமாறு ஏன் ராமன் கூற வேண்டும்? லஷ்மணன் இவ்வாறு செய்யக்கூடும் என்று தெரிந்தே ராமன் செய்த செயலா இது?
சூர்ப்பணகையின் கதையை நாம் பல நூற்றாண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவள் அரக்கி. அவள் காமவெறி கொண்டவள். அவள் சீதையைத் தாக்க வந்தவள். அவளுடைய மூக்கு அறுக்கப்பட்டது. இவ்வளவு மட்டுமே அவளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அந்தக் கதையில் ஒருமுறையாவது அவளுடைய மனதைத் தேடிப் பார்த்திருக்கிறோமா?
ராமனின் மறுப்பு அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? லட்சுமணனின் கேலி அவளை எவ்வாறு காயப்படுத்தியிருக்கும்? தன் உடலின் ஒரு பகுதி வெட்டப்பட்டு, அவமானத்தோடு திரும்பிய அந்தப் பெண்ணின் மனநிலையைப் பற்றி யாராவது கேட்டிருக்கிறார்களா?
கதைகள் பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களின் குரலில் எழுதப்படுகின்றன. தோற்றவர்கள் வில்லன்களாகவும், கேள்வி கேட்டவர்கள் குற்றவாளிகளாகவும், எல்லையை மீறியவர்கள் அரக்கர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அதுவும் குற்றவாளியாகப் பெண்ணை நிறுத்திவிட்டால், அவளை அவலட்சணம் பொருந்தியவளாக ஏன் சித்தரிக்க வேண்டும்?
விருப்பத்தை வெளிப்படுத்திய பெண்களை ஏன் காம வெறி உள்ளவர்களாகச் சித்தரிக்க வேண்டும்? சூர்ப்பணகையின் கதாபாத்திரத்தை எதிர்மறையாக முடிவு செய்த பின்னரே, அவளின் அழகு பற்றிய வர்ணனைகள் கதையில் வருகிறது என்று தோன்றுகிறது.
(தொடரும்)
படைப்பாளர்:
மீனாட்சி அடைக்கப்பன்





