அருங்காட்சியகத்தின் அடுத்தடுத்த காட்சிகளைக் கடந்து செல்லும்போது, நாம் வெறும் பழைய பொருள்களைப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்கிற உணர்வு மெதுவாக ஏற்படுகிறது. ஒரு நாட்டின் வரலாறு அதன் அரசர்களாலும் போர்களாலும் மட்டுமல்ல; கடலோரத்தில் வந்து நின்ற கப்பல்களாலும், அவற்றிலிருந்து கரை இறங்கிய மனிதர்களாலும், அவர்கள் கொண்டுவந்த பொருள்களாலும் வணிகத்தாலும் சமயங்களாலும் தொழில்களாலும் உருவாகியுள்ளது என்பதை இந்த அருங்காட்சியகம் அழகாக எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின் வரலாற்றில் துறைமுகங்கள் வகித்த பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இங்குள்ள ஓவியங்கள், சிலைகள், கப்பல் மாதிரிகள், பழைய கருவிகள் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நம் கண்முன் விரிக்கின்றன.

சங்கமித்தையும் புனித போதி மரக்கிளையும்

இந்த வரலாற்றுப் பயணம் பல நூற்றாண்டுகளைத்தாண்டி, கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே தொடங்குகிறது. பேரரசர் அசோகரின் மகளும் பௌத்த பெண் துறவியுமான சங்கமித்தை (Sanghamitta), புனிதமான ஜய ஸ்ரீ மகா போதி (Jaya Sri Maha Bodhi) மரத்தின் கிளையுடன் இலங்கைக்கு வந்த நிகழ்வு இங்குள்ள காட்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. பௌத்த பெண் துறவிகளுக்குரிய எளிய உடையை உடல் முழுவதும் போர்த்திய நிலையில் சங்கமித்தையின் சிலை மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. அவரது இடது கையில் திருவோடு (Alms Bowl) காணப்படுகிறது. முகத்தில் அமைதியும் உடல் நிலையில் துறவறத்தின் எளிமையும் வெளிப்படுகின்றன.

சிலைக்குப் பின்னால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திட்டத்தின் (Hambantota Port Development Project) வரைபடமும், இலங்கையின் பழங்கால வரலாற்றைக் காட்டும் வரைபடமும் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு அருகில் உள்ள பெரிய சுவரோவியம் இந்த வரலாற்று நிகழ்வை இன்னும் உயிரோட்டமாக்குகிறது.

கடலில் மிதந்து வரும் பெரிய பாய்மரக்கப்பலின் நடுப்பகுதியில், சிறிய மேடை போன்ற அமைப்பின்மீது தங்கக்குடத்தில் புனித போதி மரக்கிளை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே அரச குடை பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புனித வரவை எதிர்கொள்ள இலங்கையின் அரசன் தேவாநாம்பிய திஸ்ஸ (Devanampiya Tissa) கரையில் காத்திருக்கிறார். தலையில் அரசமகுடம் அணிந்த மன்னன், இரு கைகளையும் கூப்பியபடி பக்திப்பெருக்குடன் நிற்கிறார். அவரைச் சுற்றிலும் அன்றைய அரசவையைச் சேர்ந்த பெண்களும் அமைச்சர்களும் கைகளைக்கூப்பி நிற்கின்றனர். பாரம்பரியத் தலைப்பாகையணிந்த வீரர்கள் சங்குகளை முழங்குகின்றனர். தாரை, தப்பட்டைகள் ஒலிக்கின்றன. கடலிலிருந்து கரையை நோக்கி வரும் அந்தப் புனித வரவு, ஒரு சாதாரண அரச நிகழ்வாக அல்லாமல், ஒரு மாபெரும் திருவிழாவாகவே காட்டப்பட்டுள்ளது.

பின்னணியில் அடர்ந்த தென்னை மரங்களுடன் விரிந்திருக்கும் கடற்கரை, பண்டைய ஜம்புகோல பட்டினம் (Jambukolapatana) அல்லது சம்புகோளத் துறைமுகத்தின் நினைவைக் கொண்டு வருகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை, ஓவியர் தனது தூரிகையால் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார். நாம் ஓவியத்தைப் பார்க்கவில்லை; அந்தக் காலத்திற்குள் சென்று நின்றுகொண்டிருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.

பாஹியான் – கடலைக் கடந்து வந்த சீனத் துறவி

காலம் நகர்கிறது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பௌத்த பிக்கு பாஹியான் (Faxian) இலங்கைக்கு வந்த நிகழ்வும் இங்கு நினைவுகூரப்படுகிறது.

இப்னு பதூதாவின் வருகை

பின்னர் வரலாறு நடுக்காலத்திற்குள் நுழைகிறது.

பிரசித்திபெற்ற அரபு நாட்டுப் பயணியும் வரலாற்றுப் பதிவாளருமான இப்னு பதூதா (Ibn Battuta) கி.பி. 1344ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த நிகழ்வும் இங்குள்ள காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. அவர் கொழும்புத் துறைமுகத்தை அன்றைய கொலெம்தோட்டா (Colombo) என்ற பெயரில் அடைந்ததாகக் காட்சி எடுத்துரைக்கிறது.

இப்னு பதூதாவின் உருவம் அவரது காலத்து அரபு உடை அலங்காரத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. தலையில் பெரிய துணிக்கற்றையால் செய்யப்பட்ட தலைப்பாகை, நீண்ட மேலங்கி, இடுப்பைச் சுற்றி இறுக்கமாகக் கட்டப்பட்ட துணி, அகலமான கால்சட்டை என அவரது தோற்றம் அக்கால அரபு உலகின் உடை மரபை நமக்குக் காட்டுகிறது.

அவரது வருகையைச் சொல்லும் ஓவியத்தில் அரேபிய வணிகர்கள் தங்களுக்குரிய உடைகளில் நிற்கின்றனர். பின்னால் மாட்டு வண்டிகளும் குதிரைகளும் சரக்குகளை ஏற்றிச்செல்லத் தயாராக நிற்கின்றன. துறைமுகத் தொழிலாளர்கள் தங்களது தோள்களில் பெரிய மூட்டைகளைச் சுமந்து செல்கின்றனர். கடலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மரக்கலங்கள் வரிசையாக நிற்கின்றன.

சீனப் பாய்மரக் கப்பல்கள்

இந்தக் கடல்சார் வரலாற்றில் சீனக் கப்பல்களுக்கும் தனித்துவமான இடம் உள்ளது. இங்குள்ள கப்பல் மாதிரியில் சீனப் பாய்மரக் கப்பல்களின் அமைப்பு நுட்பமாகக் காட்டப்பட்டுள்ளது. அடுக்கடுக்காக அமைந்த பாய்மரங்கள், செவ்வக வடிவிலான பாய்மரத் துணிகள், அவற்றுக்கு நடுவே கிடைமட்டமாக அமைக்கப்பட்ட மூங்கில் அல்லது மரத்தடிகள் ஆகியவை கப்பலின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன.

காலனித்துவக் காலத்தின் தொடக்கம்

அருங்காட்சியகத்தின் காட்சிகள் காலனித்துவக் காலத்திற்குள் நகரும்போது, கொழும்புத் துறைமுகத்தின் முகமும் மாறத் தொடங்குகிறது.

ஒருகாலத்தில் வணிகத்திற்கும் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கும் திறந்திருந்த துறைமுகம், பின்னர் பலத்த பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட கோட்டையாக மாறியது. போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர் (Dutch), பின்னர் பிரித்தானியர் ஆகியோரின் வருகையால் துறைமுகத்தின் வரலாறு முற்றிலும் புதிய பாதையில் செல்கிறது.

இங்குள்ள ஓவியங்களும் நாவாய்களின் (Ships) மாதிரிகளும் அந்த மாற்றத்தை ஒரு வரலாற்றுக் கண்ணாடியைப்போல நமக்குக் காட்டுகின்றன.

போர்த்துக்கீசியரின் வருகை – 1505

கி.பி. 1505ஆம் ஆண்டு கோவாவிலிருந்து வந்த போர்த்துக்கீசியர்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரையிறங்கிய நிகழ்வு அடுத்ததாக உள்ளது. ஒரு போர்த்துக்கீசிய அதிகாரியின் சிலை நம்மை முதலில் கவர்கிறது. தலையில் பெரிய இறகு பொருத்தப்பட்ட வளைந்த தொப்பி, கழுத்தைச் சுற்றி மடிப்புக்காலர், உடலைத் தழுவிய வேலைப்பாடுகள்கொண்ட மேலங்கி, வலது கையில் நீண்ட கைத்தடி என அந்த அதிகாரியின் தோற்றம் அமைந்துள்ளது. இடது கை அங்கியின் மீது வைக்கப்பட்டுள்ளது. இடுப்பில் உறையுடன் கூடிய கூர்வாள் தொங்குகிறது.

அருகில் போர்த்துக்கீசியர்களின் கப்பல் மாதிரியும் வைக்கப்பட்டுள்ளது. அதன் பாய்மரங்களில் காணப்படும் சிலுவை அடையாளம், அவர்களின் சமய அடையாளத்தையும் கடல் பயண வரலாற்றையும் ஒரே நேரத்தில் நினைவூட்டுகிறது.

போர்த்துக்கீசியர்களுடனும் கத்தோலிக்க மதகுருக்களுடனும் தொடர்புடைய அதிகாரப்பூர்வ இலச்சினைகளும் இங்குக் காணப்படுகின்றன. பின்னணியில் உள்ள ஓவியத்தில் சாம்பல் நிற நீண்ட பிரான்சிஸ்கன் (Franciscan) அங்கி அணிந்து, மார்பில் சிலுவையுடன் நிற்கும் கத்தோலிக்க மதகுருவையும், அவருக்கு அருகில் போர்த்துக்கீசிய அதிகாரியையும் காணலாம். கடலில் அவர்களின் பெரிய நாவாய்கள் நங்கூரமிட்டு நிற்கின்றன. சிறிய படகுகள் கரையை நோக்கி வருகின்றன. அவற்றில் போர்த்துக்கீசிய வீரர்கள் ஆயுதங்களையும் மரப்பெட்டிகளையும் ஏற்றிக்கொண்டு துறைமுகக் கரையில் இறங்குகின்றனர். ஒரு புதிய ஆட்சியின் வருகை எவ்வாறு நிகழ்ந்தது என்பதை ஒரு சிலையும், ஒரு ஓவியமும், ஒரு கப்பல் மாதிரியும் சேர்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன.

அருகிலுள்ள போர்த்துக்கீசியப் படைவீரனின் சிலையும் கவனத்தை ஈர்க்கிறது. வளைந்த தொப்பியுடன் நிற்கும் அந்த வீரனின் கையில் ஈட்டி மற்றும் கோடாரி போன்ற ஆயுதம் உள்ளது.

ஒல்லாந்தர் – 1658

காலம் மீண்டும் நகர்கிறது. கி.பி. 1658ஆம் ஆண்டு ஒல்லாந்தர் (Dutch) போர்த்துக்கீசியர்களிடமிருந்து கோட்டையையும் கொழும்புத் துறைமுகத்தையும் கைப்பற்றிய காலம் அடுத்ததாக வருகிறது.

ஒல்லாந்த ஆளுநரின் சிலை அவர்களது அதிகாரத் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. கழுத்தைச் சுற்றி அழகான மடிப்புக்காலர், உடலை இறுக்கமாகத் தழுவிய தடிமனான வேலைப்பாடுகள் கொண்ட மேலங்கி, மார்பின் குறுக்கே செல்லும் ராணுவத் தோள்பட்டை வார், அகலமான கால்சட்டை ஆகியவற்றுடன் அவர் நிற்கிறார். வாளின் பிடியைத் தொட்டபடி அமைந்துள்ள அவரது கை, அதிகாரத்தையும் ஆயத்த நிலையையும் வெளிப்படுத்துகிறது. அருகிலுள்ள கப்பல் மாதிரியும் அந்தக் காலத்தின் கடற்படை வலிமையை நினைவூட்டுகிறது.

பின்னணியில் உள்ள ஓவியத்தில் நீல நிற அங்கி அணிந்த டச்சு அதிகாரி ஒருவர் கடற்கரையில் தனது வீரர்களுடன் ஆலோசனை நடத்துவது தெரிகிறது. கடலில் அவர்களின் பிரம்மாண்டமான போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. துறைமுகம் இப்போது வணிகப் பாதை மட்டுமல்ல; அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முக்கியமான இடமாகவும் மாறிவிட்டது.

பிரித்தானியர் – 1796

பின்னர் பிரித்தானியர் வருகை.

கி.பி. 1796ஆம் ஆண்டு ஒல்லாந்தரிடமிருந்து கோட்டையையும் கொழும்புத் துறைமுகத்தையும் பிரித்தானியர் கைப்பற்றிய நிகழ்வு அடுத்த கட்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய அதிகாரியின் சிலை அவர்களது ராணுவ ஒழுங்கை வெளிப்படுத்துகிறது. தோள்களில் ராணுவச் சின்னங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொத்தான்கள் கொண்ட கோட், இடுப்பில் இறுக்கமான வார், முழங்கால் வரை நீண்ட பூட்ஸ் ஆகியவை அவரது உடையில் காணப்படுகின்றன. வலது கையில் சுருட்டப்பட்ட வரைபடம் போன்ற ஒன்றை வைத்திருக்கிறார். இடது கை இடுப்பில் தொங்கும் வாளின் பிடியைப் பற்றியுள்ளது.

மற்றொரு ஓவியத்தில் பிரம்மாண்டமான கல்லாலான கோட்டை வாசலுக்கு வெளியே பிரித்தானியப் பீரங்கிப் படைகள் (Artillery) நிலைநிறுத்தப்பட்டுள்ளன. வீரர்கள் கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்குவது போலக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கோட்டைச் சுவரின் மீது ஒரு வீரன் தீப்பந்தத்தை ஏந்தியபடி நிற்கிறான்.

இவ்வாறு மூன்று ஐரோப்பிய ஆட்சிகளின் வருகையும், அவர்களது உடைகளும், ஆயுதங்களும், கப்பல்களும், கோட்டைகளும் இங்கு ஒன்றன்பின் ஒன்றாக நம் கண்முன் வருகின்றன.

துறைமுகத்திற்கு அப்பால் – மக்களின் வாழ்க்கை

ஆனால் இந்த அருங்காட்சியகம் அரசர்களையும் ஆட்சியாளர்களையும் மட்டும் காட்டுவதில்லை.

காலனித்துவ வரலாற்றிலிருந்து அடுத்த கட்டமாக உள்நாட்டு வரலாற்றுச் சிறப்புகள் நம்மை முற்றிலும் வேறொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றன.

அங்கு ஒரு பெரிய மரத்தின் உட்பகுதியைக் குடைந்து செதுக்கித் தயாரிக்கப்பட்ட பழமையான மரத் தோணி (Dugout Canoe) ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தோணியின் மீது வைக்கப்பட்டுள்ள கூடைகளும் பல்வேறு பொருட்களும் அக்காலத்து எளிய மக்களின் உழைப்பை நமக்குக் காட்டுகின்றன.

சுருட்டி வைக்கப்பட்டுள்ள வலை, நாரால் பின்னப்பட்ட பாரம்பரிய மீன்பிடி வலை. மீன்களைச் சேகரித்து வைப்பதற்கும், மீன்பிடி வலைகளைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட பிரம்புக் கூடைகளும் தோணியின் மீது உள்ளன. தோணியின் வலப்புறத்தில் நீண்ட மரத் துடுப்புகளும் கயிறுகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

காவடிப் பெட்டிகளில் மீன்களைச் சுமந்து செல்லும் மனிதர்கள், விற்பனைக்காகக் கூடைகளில் வைக்கப்பட்டுள்ள பெரிய மீன்கள், அவற்றைச் சுற்றி நிற்கும் பல்வேறு மனிதர்கள் என அன்றைய கடலோர வாழ்க்கையின் பல சிறு காட்சிகள் இங்கு நேரடியாக நம் கண்முன் நிறுத்தப்பட்டுள்ளன.

மீனவப் பெண் – கடலோரப் பொருளாதாரத்தின் மறைக்கப்பட்ட முகம்

அவற்றுள் குறிப்பாக ஒரு பெண்ணின் சிலை என் கவனத்தை ஈர்த்தது.

மஞ்சள் நிறப் பூக்கள் அச்சிடப்பட்ட துணியை அணிந்திருக்கும் அந்தப் பெண், தலையில் ஒரு பெரிய மீன் கூடையை வைத்திருக்கிறார். இரு கைகளாலும் அந்தக் கூடையைத் தாங்கியபடி நிற்கிறார்.

அவரது உடை அமைப்பும் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது. கட்டம் போட்ட சாரம், நான்கு பைகளைக் கொண்ட பருத்திச் சட்டை ஆகியவை அக்காலத்து சாதாரண மக்களின் உடைமுறையை நமக்குக் காட்டுகின்றன. வலது கையை முன்னோக்கி நீட்டி ஏதோ ஒரு திசையைக் காட்டும் அவரது தோரணை, அந்தச் சிலைக்கு உயிரோட்டத்தை அளிக்கிறது.

இந்த ஒரு பெண் சிலை, கடல் தொழில் என்பது ஆண்களின் உழைப்பால் மட்டும் இயங்கியதல்ல என்பதை நினைவூட்டுகிறது. கடலில் மீன் பிடிப்பது ஒரு பக்கம் என்றால், கரையில் அவற்றைச் சேகரித்தல், பிரித்தல், விற்பனை செய்தல், பண்டமாற்று செய்தல் போன்ற பணிகளில் பெண்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். கடலோரப் பொருளாதாரத்தின் பின்னால் மறைந்திருந்த பெண்களின் உழைப்பை இந்தச் சிலை அமைதியாகப் பேசுகிறது.

கடற்கரைச் சந்தை

பின்னணியில் வரையப்பட்டுள்ள பெரிய கடற்கரைச் சந்தைக் காட்சி, இந்த அனுபவத்தை இன்னும் தெளிவாக்குகிறது. கடலிலிருந்து மீன்கள் வந்து இறங்கும் ஒரு பரபரப்பான சந்தை நாள். பெண்கள் கடற்கரை மணலில் அமர்ந்து மீன்களைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மீனைக் காட்டுகிறார்; இன்னொருவர் அதற்கான விலையைப் பேசுகிறார். சில இடங்களில் பண்டமாற்று நடைபெறுகிறது. அந்தக் காலத்தில் பணம் மட்டுமே வணிகத்தின் அடிப்படையாக இருக்கவில்லை என்பதையும் இந்தக் காட்சி உணர்த்துகிறது. பொருளுக்கு எதிராகப் பொருளைப் பெறும் பண்டமாற்று முறை (Barter System) அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது.

ஓவியத்தில் மனிதர்கள் அணிந்திருக்கும் உடைகளைக் கூட ஓவியர் மிகுந்த கவனத்துடன் வரைந்துள்ளார். அந்தச் சிறிய உலகத்தின் ஒரு பகுதியாகக் கடற்கரை மணலில் மீன் துண்டுகளுக்காகக் காத்திருக்கும் காகங்களின் கூட்டத்தையும் ஓவியர் மறக்கவில்லை.

ஒரு பெரிய வரலாற்று நிகழ்வை வரைவதற்கும், கடற்கரையில் மீன் துண்டுக்காகக் காத்திருக்கும் காகங்களை வரைவதற்கும் ஒரே அளவிலான கவனம் செலுத்தியிருப்பது, அந்த ஓவியத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.

ஒரு பழைய கடற்கரை ஊர்

மற்றொரு ஓவியம் நம்மை ஒரு பழைய கடற்கரை ஊருக்குள் அழைத்துச் செல்கிறது. கடற்கரையை ஒட்டி அடர்ந்த தென்னை மரங்கள். அவற்றுக்கு நடுவே வரிசையாகக் கட்டப்பட்டுள்ள கூரை வேய்ந்த குடில்கள். கடலிலிருந்து திரும்பிய மாலுமிகளும் மீனவர்களும் தங்களது பாய்மரத் தோணிகளைக் கரையேற்றுகின்றனர். சிலர் வலைகளைப் பழுதுபார்க்கின்றனர். சிலர் மீன்பிடிப் பொருட்களைச் சேகரிக்கின்றனர்.

தொழில்நுட்ப நினைவுகள்

அடுத்த பகுதியில் காட்சிகள் இன்னும் பழைய தொழில்நுட்ப உலகிற்குள் அழைத்துச் செல்கின்றன. சற்றுச் சேதமடைந்த தோற்றத்துடன் காணப்படும் பழங்கால கடிகாரப் பதிவேடு (Antique Gledhill-Brook Time Recorder / Punch Clock) ஒன்று அங்கே இருக்கிறது. தொழிலாளர்கள் பணிக்கு வந்த நேரத்தையும், பணியை முடித்துச் சென்ற நேரத்தையும் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட புகழ்பெற்ற பஞ்ச் கிளாக் (Punch Clock) அது. இன்றைய மின்னணு வருகைப் பதிவுக் கருவிகளுக்கு முன்பு தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் கணக்கிட இத்தகைய கருவிகள் பயன்படுத்தப்பட்டன என்பதை நினைத்துப் பார்க்கும்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் புரிகிறது.

அதன் அருகில் பழங்கால மேடைத் தராசு, கண்ணாடிக் குடுவைகள், பிஸ்டன் பம்புகள் (Vintage Manual / Piston Pumps), இரும்புக் கயிறுகள், கம்பிவலைக் கூடைகள், ஆழ்கடல் மூழ்காளர்களின் உடைகள், கப்பலின் பல்வேறு பாகங்கள், பழைய விளக்குகள் என எண்ணிலடங்கா பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு காலத்தின் தொழில் முறையைப் பற்றி ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

நாம் இன்று இயல்பாகக் கருதும் ஒரு நட்டு, ஒரு போல்ட், ஒரு கயிறு, ஒரு விளக்கு போன்ற பொருள்களுக்குக்கூட ஒரு காலத்தில் குறிப்பிட்ட தொழில்நுட்பப் பயன்பாடு இருந்திருக்கிறது.

இந்த அருங்காட்சியகப் பகுதியை முழுவதுமாகச் சுற்றிப் பார்த்த பிறகு ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. ஒரு துறைமுகத்தின் வரலாறு என்பது கப்பல்களின் வரலாறு மட்டும் அல்ல. ஆட்சிகள் மாறின. தொழில்நுட்பங்கள் மாறின. ஆனால் கடல் மட்டும் தொடர்ந்து அங்கேயே இருந்தது. அதனால்தான் ஒரு துறைமுகத்தைப் பார்ப்பது என்பது ஒரு இடத்தைப் பார்ப்பது அல்ல; ஒரு நாட்டின் பல நூற்றாண்டு கால நினைவுகளைக் கடந்து நடப்பது போன்ற அனுபவம்.

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.