தட்டுத்தடுமாறி ஒருவழியாகப் பதினோராம் வகுப்பில் தேர்ச்சிபெற்றாள் கோலவிழி. விடுமுறை முடிந்து பள்ளி திறக்க அதிக நாள்கள் இருந்தன. கைப்பேசியை விட்டால் வேறு கதியில்லை என்பதுபோல் கிடந்தாள். அதுவோ கொஞ்சம் கொஞ்சமாகத் தன் திறனை இழந்துகொண்டே வந்தது. தொடுதிரை சரியாக வேலை செய்யவில்லை.
சற்று அசந்தால் போதும், அஞ்சலியின் பிள்ளைகள் அந்தk கைபேசியை எடுத்து உபயோகப்படுத்த ஆரம்பித்துவிடுவர். இவள் கெஞ்சிக் கேட்டாலும் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். உள்ளதும் போய்விடும் என்கிற அச்சத்தில் அதைப் பிடுங்கி வைத்துக்கொள்வாள். இதனாலேயே அடிக்கடி அவர்களுடன் முட்டிக்கொண்டது.
இவளால்தான் பிள்ளைகள் கெட்டுப்போகிறார்கள் என்பதுபோல அஞ்சலியின் அதிருப்திக்கும் ஆளாக நேர்ந்தது. அவர்களுக்குத் தெரியாமல் அதை ஒளித்து வைக்கலாம் என்றால், இவளாலும் உபயோகப்படுத்த முடியாமல் போனது. அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானாள்.
‘சீக்கிரமே ஒரு புது மொபைல் போன் வாங்கணும். இந்த போன ரெடி பண்ணி பசங்களுக்கே கொடுத்துடலாம். ஆனா பணத்துக்கு என்ன செய்ய?’
இதற்கும் ஒரு தீர்வு தானாக அவளைத் தேடி வந்தது!
“அம்மு, நம்ம வீட்டுக்காரம்மா ஆஸ்பத்திரியில இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கு. வா ஒரு எட்டு போய் விசாரிச்சிட்டு வருவோம்” என அவளை அழைத்தாள் அஞ்சலி.
“போக்கா நான் வரல, அங்க வந்தா நீங்க வளவளன்னு பேசிட்டு இருப்பிங்க. எனக்கு போர் அடிக்கும்” எனத் தவிர்க்கப் பார்த்தாள்.
“இங்க ஒக்காந்து போன நோண்டிட்டு இருக்கணும், அதான? எனக்குத் தனியா போய் விசாரிக்க ஒரு மாதிரி இருக்கு மரியாதையா வாடி” என அதட்டி அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் அஞ்சலி.
“வாங்கக்கா, வா அம்மு” என அவர்களை வரவேற்றாள் மஞ்சு, அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் சரசுவின் மகள்.
“அம்மா எப்படி இருக்காங்க, மஞ்சு?” என விசாரித்தாள் அஞ்சலி.
“ஆங்… இப்ப பரவால்லக்கா, வாங்க” என அவர்களை அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
“வா அஞ்சலி” என்றபடி எழுந்து அமர்ந்தார் சரசு.
கையிலிருந்த போனுடன் ஓரமாகப் போய் அமர்ந்துவிட்டாள் கோலவிழி.
வாங்கி வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு, “மஞ்சும்மா, எப்படி இருக்கீங்க? வலியெல்லாம் பரவாயில்லையா” என நலம் விசாரித்தாள்.
“பரவாயில்லடா, ஆனா நார்மல் ஆக கொஞ்ச நாள் ஆகும் போலிருக்கு” என்றார்.
“அதுக்குள்ள எழுந்து ஓடணுமா உங்களுக்கு?” எனச் சிரித்தாள் அஞ்சலி.
“என்ன செய்ய, பொம்பள ஜென்மமா பொறந்துட்டோமே, ஓடித்தான ஆகணும்” என சலிப்புற்றார்.
“என்ன மஞ்சு அம்மா இப்படி பேசறாங்க” என வினவினாள்.
“அக்கா, புள்ளை பத்தாவது போயிட்டான் இல்ல, லீவு இல்ல. இன்னும் ஒரு வாரம் இல்ல பத்து நாள்தான் என்னால இங்க இருக்க முடியும். அப்பாவுக்குத் தொழிலைப் பாக்கவே நேரம் சரியா இருக்கு. இந்த நெலமயில, அடுத்த வாரம் சித்தப்பா பாட்டியை கொண்டுவந்து இங்க தள்ளிட்டுப் போயிடுவாரு. அதான் பொலம்பிட்டே இருக்காங்க” என்றாள் மஞ்சு.
“அடப்பாவமே, இந்த நெலமையில கூடவா இப்படிச் செய்வாங்க.”
“செய்யறாங்களே, என்னத்த சொல்ல? அது சரிக்கா, பாட்டியைக் கவனிச்சிக்க யாராவது ஆள் இருந்தா சொல்லுங்களேன். நைட்டுகூட இருந்து கவனிக்கணும். காலைல குளிக்க வெச்சு, துணி மாத்தி, தல சீவி, சாப்பாடு கொடுத்து மருந்து, மாத்திரை பார்த்துக் கொடுத்துட்டுக் கிளம்பிடலாம். பகல்ல பிரச்ன இல்ல, கடை ஆளே பார்த்துப்பாங்க. தெரிஞ்சவங்களா இருந்தா நிம்மதியா இருக்கலாம்.”
“கண்டிப்பா சொல்றேன். எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?”
“ஒரு பத்தாயிரம் வரைக்கும் கொடுக்கலாம்னு இருக்கேன்”
இப்படி மஞ்சு சொன்னதும், சடாரெனத் தலையைத் தூக்கிப் பார்த்தாள் கோலவிழி.
உள்ளுக்குள்ளே ஆனந்தம் பொங்கியது.
“அக்காக்கா, பிளீஸ்க்கா… அந்த வேலைய எனக்கு வாங்கிக் குடுக்கா என வீட்டுக்கு வந்ததும் அஞ்சலியைப் பிடித்துக் கொண்டாள்.
“ஏய், உனக்கு எதுக்குடி இந்தத் தேவையில்லாத வேல. யாராவது சம்சாரிக்கு வாங்கிக் கொடுத்தா புள்ள குட்டிங்கள படிக்க வெக்க ஒதவும்” என மறுத்தாள்.
“அக்காக்கா, அப்படிச் சொல்லாதக்கா. நான் கொஞ்சம் பணம் சம்பாதிச்சா உன் பாரம் கொறையும்.”
“நீ எந்தப் பாரத்தையும் கொறைக்க வேணாம். இந்த வருஷம் நல்லபடியா முடிச்சு காலேஜுல சேருற வழியப் பாரு. பொம்பள புள்ளைங்களுக்கு கவருமென்ட்டு மாசம் ஆயிரம் ரூபா கொடுக்குதாம். ஃபிரீ பஸ்ஸு வேற. இன்னும் என்ன வேணும்?”
“அதெல்லாம் நான் படிப்பேன். இப்போதைக்கு ஒரு மூணு மாசத்துக்குத்தான.”
எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கோலவிழி அவளை விடவே இல்லை.
“நோயாளிய பார்த்துக்கறதெல்லாம் கஷ்டம்டீ” என்று இறங்கி வந்தாள்.
“எனக்குப் பழக்கப்பட்ட வேலதானக்கா” என அவள் உருக்கமாகச் சொல்லவும் பாவமாகிப் போனது. அஞ்சலிக்கு மட்டுமில்லை, ராஜாவுக்கும் இதில் உடன்பாடில்லைதான், என்றாலும் அவளுக்காக ஒப்புக்கொண்டனர்.
யாரோ ஒருவரைவிட கோலவிழிக்கு இந்த வேலையைக் கொடுப்பதில் அவ்வளவு மகிழ்ச்சிதான் மஞ்சுவுக்கு. இதனால் அவளின் படிப்புக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றே எல்லோரும் நம்பினர்.
இதற்கிடையில் அஞ்சலியும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். அந்தப் பாட்டி அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகு, கோலவிழி வேலையில் சேர்ந்தாள். காலை உறங்கி விழித்த உடன் பாட்டிக்குப் பல்துலக்குவதில் தொடங்கி அனைத்துக்கும் உதவுவாள். இயற்கை உபாதையைக் கழிக்க, தண்ணீர்ப் பருக என இரவில் இரண்டு மூன்று முறை அவர் அவளை உதவிக்கு அழைப்பார். மற்றபடி அவளுக்கு வேறு பொறுப்புகள் இல்லை. இரவிலும் அதிகாலையிலும் படிக்க நேரமும் கிடைத்தது.
முதல் மாதச் சம்பளம் வாங்கியபின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.
சம்பளத்தை வாங்கி வந்து அஞ்சலியிடம்தான் கொடுத்தாள்.
“எனக்கு எதுக்குடி இந்தப் பணம். உன் பேர்ல பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதுல போட்டுடலாம். படிப்புக்கு யூஸ் ஆகும்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள் அஞ்சலி.
“க்கா… அடுத்த மாசம் அக்கவுண்ட் ஓபன் பண்ணிக்கலாம். இதுல நான் ஒரு போன் வாங்கிக்கவா?” என்று குழைந்தாள்.
“அதுக்கு நிறைய ஆகுமே. இப்ப எதுக்குடி வீண் செலவு?” எனக் கேட்டாள்.
“வீண் செலவுல்லாம் இல்லக்கா. படிக்க உதவியா இருக்கும்” என்று அவள் சொல்லவும், சரி என்று பட்டது.
“ஆனா நீ இதுல யூடியூப் பார்த்துட்டு உக்காந்துட்டு இருப்ப” என பிகு செய்தாள்.
“இல்லல்லக்கா… நான் ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் எடுப்பேன்” என அவள் அடித்துச் சொன்னதும், ராஜாவிடம் சொல்லி, தன் கைக்காசு மூவாயிரம் சேர்த்து அவளுக்கு ஒரு புதிய கைபேசியை வாங்கிக் கொடுத்தாள்.
அதற்கு ஏற்றவாறு அவளிடம் இருந்த அறுத பழைய சிம் கார்ட்டுப் பொருந்தாமல் போக, அதை ஃபைவ் ஜீக்கு மாற்றி வாங்க வேண்டியதாகிப் போனது. அவ்வளவுதான், கைபேசியின் வேகம் அவளுக்குக் கிறுக்குப்பிடிக்க வைத்தது.
படிப்பாவது ஒன்றாவது. விடிய விடிய அந்தப் போனே கதியென்றாகிப் போனது. பகலில் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு, நடனமாடி பதிவு செய்யத் தொடங்கினாள்.
கள் குடித்த குரங்கைத் தேளும் கொட்டியது போல, ஊக்குவிப்பதாக எண்ணி ஆஹா ஓஹோ எனப் பாராட்டி, இவளை இன்னும் அதிகம் ஆட்டமாக ஆட வைத்தாள், அவர்கள் குடியிருக்கும் வீட்டின் முன்பகுதியில் தையல் கடை வைத்திருக்கும் ஆஷா.
பள்ளிக்கு கட் அடிக்கிறாள், வீட்டுப்பாடங்கள் செய்வதில்லை, மதிப்பெண்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, எவ்வளவு சொன்னாலும் இவளுக்கு உரைப்பதில்லை என ராஜாவை அழைத்து தலைமை ஆசிரியர் கோபத்தைக் கொட்டுவார்.
ராஜா நேரடியாக இவளிடம் கோபத்தைக் காண்பிப்பதில்லை. கண்டிக்கும் விதமாக இவளிடம் முகம் கொடுத்துப் பேசவே மாட்டான். ஆனால் அஞ்சலியோ உரிமையுடன் கண்டிப்பாள். நன்றாகத் திட்டித் தீர்ப்பாள். அதுபோன்ற நேரங்களில் ஆறுதல் தேடி ஆஷாவிடம்தான் இவள் வந்து நிற்பாள்.
“சரி விடு, அஞ்சலிக்கு ஒலக அனுபவம் கிடையாது. என்னவோ உன் நல்லதுக்குச் சொல்றதா நெனச்சி சொல்லுது. படிச்சாதான் பெரிய ஆளா வர முடியுமா என்ன? அப்படிலாம் எதுவும் இல்ல. என்னையே எடுத்துக்க, சுத்தமா படிப்பு ஏறல. எட்டாவதோட படிப்ப நிறுத்தி கட்டி கொடுத்துட்டாங்க. அப்பறம்தான் டைலரிங் கத்துக்கிட்டேன். இதோ இப்ப கை நிறைய சம்பாதிக்கறேன். என்ன கொறஞ்சு போச்சு? நீயும் உன் தெறமைய வளர்த்துக்க” என்பாள்.
கொஞ்சம் யோசித்திருந்தால்கூட, இவளுடைய அம்மாவுக்கும் இந்த ஆஷாவுக்கும் கொஞ்சம்கூட வேறுபாடில்லை என்பதை உணர்ந்திருக்க முடியும். ஆனால் கோலவிழியின் ஆசை கொண்ட அலைபாயும் மனம் அவளைச் சிந்திக்க விடவில்லை.
திறமை என்பது, ஏற்கெனவே வைரல் ஆகி பலரும் அரைத்த மாவையே அரைப்பதில்லை. புதிதாகக் கண்டுபிடிப்பது, அடுத்தடுத்த நிலைக்கு மேம்படுவது என்பதை யார் இவளிடம் சொல்வது.
வாழ்க்கையில் உயர, ஒரு யூடியூப் சேனல் தொடங்குவது என முடிவு செய்தாள் கோலவிழி.
‘என்ன பெயர் வைக்கலாம்’ என ஆஷாவுடன் சேர்ந்து யோசித்தபோது கிடைத்த பெயர்தான் ‘அமுதாஸ்’.
எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோலவிழி எனும் பெயர் அவளுக்கு உயர்வானதாகவே தோன்றவில்லை. அம்மு என்று வைக்கலாம் என்றாலும் அதுவும் திருப்தி இல்லை.
“உன்ன உன் வீட்டுல வேற எப்படிக் கூப்பிடுவாங்க?” என்று கேட்டாள் ஆஷா.
“எங்கம்மா என்ன வெஷம்னுதான் கூப்பிடும்” என்றாள்.
“எதே வெஷமா, வெவகாரமா இல்ல இருக்கு” என்று கூடவே அவளைக் கொஞ்சம் கிண்டலும் செய்தாள். இருந்தாலும் விஷத்துக்கு மாற்றாக அவள் கண்டுபிடித்த பெயர்தான் அமுதம், அது அமுதாஸ் என்று ஆனது. சேனல் ஆரம்பித்து, அன்றைய தினத்தில் பலரும் ஆடி ட்ரெண்டுக்காக இருக்கும் பாடல்களுக்கு நடனம் ஆடி அதைப் பதிவேற்றம் செய்தாள்.
ஆனால் வியூசும் ஏறவில்லை சப்ஸ்கிரைபரும் ஏறவில்லை. அதற்கும் ஆஷா இவளுக்கு உதவி செய்தாள். அவளுடைய வாடிக்கையாளர்களைக் கொண்டு கோலவிழியின் சேனலைப் பின்தொடரச் செய்தாள்.
அதுவும்கூட நூறைத் தாண்டவில்லை. அந்தக் கல்வியாண்டின் இறுதியில் இவள் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் இயற்பியலிலும் தோல்வி அடைந்த சமயம் அவள் வைத்திருந்தது வெறும் இருநூற்று நாற்பது சப்ஸ்கிரைபர்ஸ் மட்டுமே.
இவள் தோல்வியுற்றதில் உண்மையில் அஞ்சலிக்கும் ராஜாவுக்கும் மட்டுமே வருத்தம். இவள் இம்மி அளவும் கவலை கொள்ளவில்லை. மாறாக, அவளின் கவலையெல்லாம், எப்படி ஆயிரம் சப்ஸ்கிரைபர்களைப் பெறுவது? எப்படி நான்காயிரம் பார்வை நேரத்தை வரவழைப்பது? எவ்வாறு சேனலை மானிட்டைஸ் செய்வது என்பதில்தான் இருந்தது.
அப்படி இப்படி ஒன்றரை வருடத்தை ஓட்டினாள். பின்தொடர்வோர் எண்ணிக்கை ஐந்நூற்றைக் கடந்தது. மற்றபடி பெரிதாக லைக், கமெண்ட் எதுவும் இல்லை. பார்க்கும் நேரமும் கூடவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இங்கே வந்து இவளுக்கு வருமானம் கொடுக்கும் மஞ்சுவின் பாட்டியும் இறந்து போனார். மனம் சோர்வுற்றது. ஏதாவது வழி கிடைக்காதா என யோசித்து ஒரு முகநூல் கணக்கைத் தொடங்கி அதில் இவளின் யூடியூப் காணொளிச் சுட்டிகளைப் பகிரத் தொடங்கினாள். அப்பொழுது இவளைப் போன்ற யூடியூபர்களுக்காகவே நிறையக் குழுக்கள் இருப்பதை அறிந்து அதிலெல்லாம் உறுப்பினர் ஆனாள்.
‘சப் ஃபார் சப்’ என்று இருப்பதைப் பார்த்துக் குறுகிய காலத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களைப் பெரும் ஆசையில் இன்பாக்சில் குணா என்பவனை அணுகினாள். அவன்தான் இவளுக்கு ரஞ்சனாவை அறிமுகப்படுத்தினான்.
‘பட்டிங் ஸ்டார்ஸ்’ எனும் வாட்ஸப் குழுவில் ரஞ்சனா இவளை இணைத்தாள்.
(தொடரும்)
படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.





