ஆளை உருக்கி அடிக்கிற வெயிலுக்கு எங்கு தப்பிக்கலாம் என யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்த பெயர் மேகமலை. ஊட்டியும் கொடைக்கானலும் அதிகப் பளுவில் மூச்சுத் திணறித் தத்தளித்துக் கொண்டிருக்க, அதற்கு இணையான மேகமலை எந்தவித ஆரவாரமுமின்றி தனித்திருப்பதால், மலைப்பிரதேசம் என முடிவாகிவிட்டால், எப்போதும் என் தேர்வு பக்கத்திலிருக்கும் மேகமலைதான்.

நகரத்தின் இரைச்சலிலிருந்து விலகி, இயற்கையின் அழகையும் அமைதியையும் ஆழமாய் அனுபவிக்க மிகச்சரியான இடம். சின்னமனூர் நகரிலிருந்து 34 கிலோமீட்டர் மலைப்பாதைத் தொலைவில் அமைந்துள்ளது மேகமலை மலைத்தொடர்.

சின்னமனூரைக் கடந்தவுடன் மலையடிவாரமான தென்பழஞ்சியில் வனத்துறையின் சோதனைச்சாவடியில் வண்டியை நிறுத்தியபோது கண்ணில்பட்ட ‘வழிவிடு முருகன் கோயில்’ குடைவரைக்கோயில் போன்ற தோற்றம் தரவே, ஆர்வம் தாங்காமல் (ஓட்டுநர் சோதனைச்சாவடி அதிகாரிகளிடம் ஆவணங்களைக் காட்டிக்கொண்டிருந்த இடைவெளியில்) குதித்தோடி அருகில் சென்றால், பாறை தனியாகவும் அதையொட்டி கோயில் தனியாகவும் இருக்க, ஏமாற்றத்துடன் வண்டிக்குத் திரும்பினோம்.

மாலை ஆறு மணிக்குள் திரும்பி வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையுடன், எத்தனை பேர் மலைக்குச் செல்கிறோம் என்ற எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டே, நம்மை மேலே செல்ல அனுமதிக்கிறார்கள். ‘மாலை நேரம் வன விலங்குகளின் நேரம்’ என்பதால் ஆறு மணிக்குமேல் மலையிறக்கத்திற்கு அனுமதியில்லை. அப்படியே நேரமாகிவிட்டால், மலையில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஆறு மணிக்குப்பிறகே கீழே இறங்கவேண்டும். கெடுபிடியான செக்போஸ்ட். சிறு நெகிழிப்பைகூட அவர்களிடமிருந்து தப்பி மேலே சென்றுவிடமுடியாது. ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கையிலிருந்தால், 200 ரூபாய் அபராதம் என்ற அறிவிப்புப் பலகையால் மலை இன்னும் நெகிழிக்கு இரையாகாமல் தப்பித்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லும் குழியுமாக மிக மோசமாக இருந்த சாலை கிட்டத்தட்ட நான்கு வருடத் தொடர் பணிகளுக்குப் பின்னர் இப்போது புதுப்பொலிவு கண்டிருக்கிறது… (எத்தனை நாளைக்கோ!) கீழிருந்து மேலே மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள். ஒவ்வொரு வளைவுக்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. குறிஞ்சிப்பூ வளைவில் தொடங்கி வெட்சிப்பூ, வஞ்சிப்பூ, மகிழம்பூ, மல்லிகை, செண்பகம், முல்லை, பாதிரி, அந்திமந்தாரை, சண்பகம், கோங்கம், குருக்கத்தி, வாடி, மருதம், கஞ்சாங்குல்லை, செங்கழுநீர், நீலோற்பவம், தில்லை என அழகியலாய் தொடர்கின்றன அபாயகரமான வளைவுகள்.

இரண்டு வளைவுகள் கடக்கும் முன்னரே குளிர்காற்று நம் உடலையும் மனதையும் ஒருசேர குளிர்விக்கிறது. குளிருடன் சேர்த்து இலக்கியப்பெயர்களையும் இரசித்துக்கொண்டே பயணிப்பது உற்சாகமாக இருந்தது. சாலையின் இருபுறமும் நம் முன்னோர்களின் வழக்கமான அட்டகாசங்கள், பயத்துடன் புன்னகையையும் சேர்த்து கொண்டுவருகின்றன. ஆங்காங்கே காட்டில் பறித்த பலாப்பழங்களிலிருந்து சுளை எடுத்துத்தரும் அக்காக்கள். சுளையின் இனிப்பு நாவிலிருந்து மாறாமல் இருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில், மலைச்சிகரங்களின் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு என்று மேகமலையைச் சொல்லலாம். சில்லென்ற காற்று, முத்தமிடும் சாரல்… எந்த நேரமும் மூடுபனி தவழ்ந்தோடும் பசுமையான மலைத்தொடர்கள், அழகிய, சாய்ந்த நிலப்பரப்பில் கண்ணுக்கு எட்டிய, எட்டாத தூரம் வரை தேயிலை, தேயிலை, தேயிலை… என தேயிலைத் தோட்டங்கள்!

எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் காப்பியும் மிளகும்கூட பயிரிடப்படுகின்றன என்றாலும், தேயிலைதான் இந்த மலைகளின் ஹீரோ. இதில் பணிபுரிவதற்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள்; தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட வசதிகள். அவ்வளவுதான் மொத்த மலைத்தொடரும். பொதுப் போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லை, காலையும் மாலையும் வரும் ஒரு அரசுப் பேருந்தைத்தவிர. இன்னும் வர்த்தகமயமாக்கப்படாததால், மனிதக் கூட்ட நெரிசலால் அவதிப்படாத அமைதியான மலைப்பகுதி.

மலை ஏறியதும் முதலில் வரும் மேகமலை என்ற மலைகிராமத்தை அடுத்துள்ளது ஹைவேவிஸ் என்னும் சற்றே பெரிய ஊர். ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள் மேகமலை, மணலாறு, அப்பர் (மேல்) மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு. ஆனால் பேச்சுவழக்கில் மொத்த மலைத்தொடரும் மேகமலை என்றே அழைக்கப்படுகிறது. மலை முகடுகளில் மேகம் தவழ்வதனால் மேகமலை, மணற்பாங்கான ஆறு இருந்த இடம் மணலாறு, உயரத்தில் இருப்பது அப்பர் மணலாறு, மேகங்கள் வெண்ணிற ஆடை போர்த்தியது போல மூடிக்கொண்டிருக்கும் எஸ்டேட் வெண்ணியார், முருகன் வள்ளி தெய்வானையோடு மகாராஜா கோலத்தில் இருந்ததனால் மகாராஜா மெட்டு, கண்ணகி மதுரையை எரித்து விட்டு வரும்போது, சண்முகா நதி என்ற இடத்தில் முருகன் குழந்தையாக மாறி கோபத்தைக் குறைக்க, அந்த நதியில் மூழ்கி எழுந்துவரும் கண்ணகி இங்கு மகாராசியாக காட்சியளித்ததனால் மகராசா மெட்டு என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காரணப்பெயர் சொல்கிறார்கள். மேகமலைக்கு பச்சைக்கூமாச்சி மலை என்ற பெயரும் உண்டு.

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 4882 மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி ஹைவேவிஸ். ஒருகாலத்தில் பத்தாயிரம் மக்கள்தொகை இருந்த இப்பகுதியில், தற்போது மூன்றாயிரத்திற்குள்தான் இருக்கிறோம் என்கிறார்கள் உள்ளூர் தொழிலாளர்கள். மேகமலையின் வரலாறு பிரிட்டிஷ் காலனித்துவ காலத்துடன் பிணைந்துள்ளது. தங்களுக்கேற்ற குளிர் பிரதேசங்களைத் தேடியலைந்த ஆங்கிலேயர்கள் கண்களில் பட்டது மேகமலை. அடர்ந்த வனக்காடுகளின் வளத்தையும் குளிர்ந்த காலநிலையையும் பார்த்த ஆங்கிலேயர்கள், வழக்கம்போல இங்கும் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளவும் தங்களுக்குத் தேவையான தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கவும் விரும்பினர். ஆனால், வனாந்தரத்தை எப்படி பயிர் செய்வதற்கேற்ற நிலமாக மாற்றுவது? இருக்கவே இருக்கிறார்கள் ஆங்கில எஜமானர்களின் சந்தோஷத்திற்காக தங்கள் உழைப்பை அர்ப்பணிக்கக் காத்து நிற்கும் இந்தியப் பிரஜைகள்!

ஒரு கடுமையான பஞ்ச காலத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பகுதிகளில் உணவுக்கே கஷ்டப்பட்ட மக்கள், (உணவுக்காக மட்டுமே) விரும்பியும் விரும்பாமலும் இங்கு வேலைக்கு வந்திருக்கின்றனர். அடர்ந்த காடுகளை அழித்து சீர் செய்து, பாறைகளை உருட்டி, சமப்படுத்தி, அட்டைப்பூச்சிகளுக்கு தங்கள் குருதியைக் கொடுத்து, யானை, புலி, சிறுத்தை அச்சுறுத்தல்களுக்கு இடையே தேயிலை பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாக பலர் தங்கள் உழைப்பையும் சிலர் தங்கள் உயிரையும் கொடுத்து தேயிலைத் தோட்டத்தினை உருவாக்கினர். மேகமலையில் மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு தேயிலைத் தோட்டத்திற்குப் பின்னாலும் இதுபோன்ற பல துயரக்கதைகள் இருக்கின்றன. ஆனால் தங்கள் சொந்த நிலத்தை, உறவுகளை விட்டுவந்த இவர்களுக்கான உணவு, குடியிருப்பு, போக்குவரத்து அனைத்தையும் ஆங்கிலேய அதிகாரிகள் செய்து கொடுத்தனர் என்பதை மறுக்க முடியாது. ஓரிடத்தில் கூடாரம் அமைத்து அதைச்சுற்றியுள்ள இடங்களைச் சுத்தப்படுத்தி, தேயிலைச்செடி நட்டு விட்டு, அடுத்த இடம் நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இத்தனை பசுமை போர்த்திய மலைத் தொடர்களை உருவாக்க அந்த மக்களுக்கு எத்தனை காலம் பிடித்திருக்கும்? எத்தனை உழைப்பைக் கொட்டியிருக்க வேண்டும்? நினைக்கவே மலைப்பாக இருந்தது.

உணவுப் பஞ்சத்தில் தவித்தவர்களுக்கு, வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதற்கான அடிப்படை வசதிகள் கிடைத்தாலும் அந்தத் தொழிலாளர்களின் மனதில் குறையொன்று இருந்தது. சொந்தபந்தங்களை விட்டு, நடுக்காட்டில் இருக்கும் அவர்களை நோய்நொடியிலிருந்து பாதுகாக்கக் கடவுளைத் தவிர யாருமில்லை என அவர்கள் நம்பியதால் ஒரு கோயில் கட்டிக்கொடுக்க வேண்டுகோள் வைத்தனர். மேகமலையில் ஒரு கோயிலும் மணலாறு பகுதியில் ஒரு கோயிலும் ஆங்கிலேயரால் கட்டிக்கொடுக்கப்பட்டன.

மலைத்தொடர் முழுவதும் தேயிலை பயிரிடக்கூடிய மொத்த நிலமான 10,500 ஏக்கரை ஏழு பிரிவுகளாகப் (Division) பிரித்துள்ளனர். ஒவ்வொரு டிவிஷனிலும் மேனேஜர், சூப்பிரடென்டு, ஃபீல்டு ஆபிசர், சூப்பர்வைசர், தொழிலாளர் (லேபர்) என்று மேலிருந்து கீழாக படிநிலை செல்கிறது. மொத்த நிலமும் அரசுக்குச் சொந்தமானது. ஆங்கில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தேயிலைத் தோட்டங்களை, யூனிலீவர் குழுமம், ப்ரூக்பாண்ட் (இந்துஸ்தான் லீவர்), தற்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த உட்ப்ரையர்(Woodbriar Group) குழுமம் என தனியார் நிறுவனங்கள் பல்வேறு காலகட்டங்களில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். 

தேயிலைத் தோட்டங்களையொட்டி புகைப்படம் எடுத்தவாறே, குளிர்காற்றை நுரையீரலில் நிரப்பி நடக்கின்றோம். பெண்கள் தலைநிமிராமல் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து கூடைகளில் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். காலைப்பணி முடித்து திரும்பிக்கொண்டிருந்த ஆண் தொழிலாளர் ஒருவரிடம் பேச்சுக்கொடுக்கிறேன். முகம் காட்ட மறுத்து, பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

“எங்க தாத்தா காலத்துல, பத்தாயிரம் மக்கள் வசித்து வந்த இடம் இது. இப்ப ஒரு 2,500 இல்லாட்டி 3,000 பேர்தான் இருப்போம். நாங்க தங்கிக்கொள்ள லைன் வீடு கொடுத்திருக்காங்க, ஒரு லைனில் ஏழு வீடு இருக்கும். இப்ப இங்க இருக்கறவங்க நாலாவது தலைமுறை. ஊரைச்சுற்றி நான்கு திசைகளிலும் இரண்டரை கிலோமீட்டர் முதல் நான்கு கிலோமீட்டர் வரைக்கும் தினமும் வேலைக்குப் போவோம். எட்டு மணி நேர வேலை, ஒரு நாள் சம்பளம் 320 ரூபா. இங்க இருக்கிற யாருக்கும் சொந்த இடம் கிடையாது. ரிட்டயர்ட்டு ஆயிட்டோம்னா, வீட்டை காலி செஞ்சிட்டு மலையிலிருந்து கீழே போயிடணும், மலையில தங்கமுடியாது”. ஆமாம், உழைப்பை உறிஞ்சியபின் சக்கைகளுக்கென்ன வேலை?

தேயிலைச் செடிகள் குறித்து விபரம் கேட்கிறேன், “ரோஸ் செடி போலத்தான் தேயிலைக்கு குச்சி வைத்து வளர்ப்போம். அஞ்சு வருஷத்துக்கு ஒருதடவை, தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்துக்கு கவாத்து செஞ்சிவிடணும், ஒரு முறை கவாத்து செய்தால், அடுத்த அஞ்சு வருடத்திற்கு மேலே செழித்து வளரும் இலைகளை மட்டும் கொழுந்துகளாக எடுக்கணும். எந்த வருசத்துல இங்க தோட்டம்போட ஆரம்பிச்சாங்கன்னு தெரியல… ஆனால், நூறு, நூத்தி இருபது வருசத்து செடியெல்லாம்கூட இங்க இருக்கு. பாருங்க, இதெல்லாம் எழுபது, எம்பது வருசத்துச்செடி” என கூறிக்கொண்டே, ஒரு செடியின் நுனிப்பகுதியை ஒடித்துக்காட்டுகிறார். 

“இங்க சைனா தேயிலை, அஸ்ஸாம் தேயிலைன்னு 14 வகையான தேயிலைச்செடி இருக்கு, இது சைனாத் தேயிலை, இலையைப் பாருங்க, ரொம்பச் சின்னதா இருக்கும். நடுவுல இருக்கிற குட்டி அரும்புக்கு பெயர் ஒயிட் டீ, அதனோட பக்கவாட்டில ரெண்டு இலைக இருக்கா? அதனால இதுக்குப்பேரு மூவிலைத் தேயிலை. இதை மிசினில் சுருட்டி கொடுத்தால் க்ரீன் டீ. வெட்டிப் பொடியாக்கிக் கொடுத்தால் டஸ்ட் டீ. கீழிருக்கும் காம்புகளை அரைத்து ஃபைபர் வேஸ்ட்னு சொல்லி, திருப்பூருக்கு ஆடைகளுக்கு சாயமேத்த அனுப்பறாங்க. இங்க உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், இங்கிருந்து கொச்சின் ஹார்பர், அங்கிருந்து பாகிஸ்தான் அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் போகுதுனு சொல்லிக்கறாங்க. உள்ளூர் விற்பனைக்காக கோயம்புத்தூருக்கும் போகுது” கடகடவென சொல்லி முடிக்கிறார்.

காலனி ஆதிக்கக் காலத்தில் மணலாறு என்ற இடம்தான் ஏழு ஊர்களுக்குமான நிர்வாக மையமாக இருந்திருக்கிறது. அங்கு தனித்திருக்கும் சற்றே பெரிய மூன்று வீடுகள் கவனத்தை ஈர்க்க அது குறித்து விசாரிக்கிறேன். ஏழு ஊர்களிலும் இருந்த ஜெனரல் மேனேஜர்களுக்கான பொழுது போக்கு க்ளப் அது. சனிக்கிழமை மாலை ஏழு ஊர்களின் (ஆங்கிலேய) மேனேஜர்களும் குடும்பத்தோடு இங்கு வந்து சந்தித்துக்கொள்வார்கள். பார், ஜிம், டென்னிஸ்கோர்ட் எல்லாம் உண்டு. அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகளுக்கு ஒன்றும் தொழிலாளர்களுக்கு ஒன்றுமாக பொழுதுபோக்குக்கென இதுபோன்ற தனி இடம் அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள். கேட்கக் கேட்க ஏதோ பீரியட் படம் பார்ப்பதுபோல காட்சிகள் கற்பனையில் விரிகின்றன. தற்போது ஆளறவமற்று பூட்டிக்கிடக்கும் வீடுகள், பழங்கதைகளை அசை போட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில், வேலைக்குச்செல்லும் பெண்களின் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையான குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக குழந்தைகள் காப்பகம் ஒன்றும் செயல்பட்டு வந்திருக்கிறது. அதன்பிறகு தொடக்கப்பள்ளியிலும் மதியச் சாப்பாடு கொடுக்கப்பட்டதால், பத்து வயது வரை பெற்றோர்களுக்குப் பாரமில்லாமல் கம்பெனியே குழந்தைகளை வளர்த்துக் கொடுத்துவிடும்.

அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தனி வீடுகள், இந்துக் கோயில், ஆர்.சி. சர்ச், சி.எஸ்.ஐ சர்ச், சமுதாயக்கூடம், மாட்டுத் தொழுவம், கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டி, முடி திருத்தும் நிலையம், சிறுமருத்துவமனை என அனைத்து வசதிகளும் உள்ளன. ஹைவேவிஸில் உள்ள பெரிய மருத்துவமனை 70 படுக்கைகள் கொண்டது. இங்கிருந்த மேனேஜர் மற்றும் லண்டனிலிருந்து தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிட வரும் அதிகாரிகள் என ஆங்கிலேயர்களுக்காகக் கட்டிய பங்களாக்கள் இன்றும் இப்பகுதியில் உள்ளன. தற்போது அந்த பங்களாக்கள் வாடகைக்கு விடப்படுகிறதாம். ஒரு நாளைக்கு இருபதாயிரம் ரூபாய் செலுத்தி கோயம்புத்தூரிலுள்ள அலுவலகத்தில் பதிவு செய்தால், 24 மணி நேரத்துக்கு உதவியாட்கள் மற்றும் மூன்று வேளை விருந்து சாப்பாட்டுடன் ‘ஒருநாள் முதலாளியாக’ நாம் வலம் வரலாம்.

இத்தனை பெரிய தோட்டத்தை எப்படி மேற்பார்வையிடுகிறார்கள் என்ற என் சந்தேகத்திற்கு விடையாக அமைந்தது தேயிலைச் செடிகளுக்கு நடுவே ஆங்காங்கே நின்ற அறிவிப்புப் பலகைகள். சிவப்பு எழுத்தில் எழுதப்பட்டுள்ள விபரங்களின் மூலம் அந்த நிலம் குறித்தும் தேயிலைச் செடியின் வளர்ச்சி குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. நிறுவனத்தின் பெயர், ஃபீல்டின் எண்ணிக்கை(39 வது ஃபீல்டு), அதில் எத்தனை ஹெக்டேர் நிலம்(6.00), எந்த வருடத்தில் பயிரிடப்பட்ட செடி(1951), கவாத்து பண்ணியதிலிருந்து இது எத்தனையாவது வருடம்(IV), இந்த நிலம் குறித்த குறிப்புகள் மஸ்டரில் எந்த ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

மேனேஜர் பார்வையிட வரும்போது குறிப்பிட்ட ஃபீல்டில் என்ன பிரச்சினை என்பதை எளிதாக தெரிந்துகொள்ளவும், பதிவு செய்யவும் குறைகளை தீர்க்கவும் வசதியாக இருக்கும். அன்றன்றய தினத்தில் யார் யாருக்கு என்ன வேலை என பிரித்துக்கொடுக்கும் இடம்தான் மஸ்டர் (Muster). அங்கும் நிறைய தொழிலாளர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. புத்தாண்டில் இவர்கள் பணியைத் துவக்கும் விதம் சிறப்பானது. புத்தாண்டு அன்று ஒவ்வொரு ஃபீல்டுக்கும் மேனேஜர் செல்வார். ஃபீல்டிலிருக்கும் ஏதோவொரு வெற்றிடத்தில் தொழிலாளர்கள் சேர்ந்து பொங்கல் வைத்து இறைவனுக்குப் படைத்தவுடன், மேனேஜர் அவர் கையால் முதல் தேயிலையைப் பறித்து தொழிலாளர் கையில் கொடுத்து, “என்றும் இந்த எஸ்டேட் வளமாக இருக்க வேண்டும்” என வாழ்த்துவார். ஆங்கிலேயர் காலத்திலிருந்து இந்த நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறதாம்.

ஆசிரியர் திரு. ராஜன்

இரவங்கலாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய நண்பர் ராஜனுடன் உரையாடியபோது மேலும் பல தகவல்கள் கிடைத்தன. ஹைவேவிஸ் பகுதியில் ஒரு மேல்நிலைப்பள்ளியும், மேல் மணலாறு, இரங்கலாறு பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளும், மணலாறு, வெண்ணியாறு பகுதிகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இருப்பது இங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இருக்கிறது. மேகமலை மலைகிராமத்தில் இருக்கும் பள்ளி, தேனி ஒன்றியத்தோடு அல்லாமல் மயிலாடும்பாறை ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வருகிறது என்பது ஆச்சரியமான செய்தி. இடைநிற்றல் பெரிதாக இல்லை. பெண் குழந்தைகளையும் எப்படியாவது கல்லூரிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

பேச்சு கல்வித்துறையிலிருந்து மக்களின் வாழ்வியல் நோக்கி மாறுகிறது. “டீச்சர், இங்கிருக்கும் மக்களில் 75 சதவீதம் மக்கள் தலித் சமூக மக்கள். இங்கு ஆண்களின் பணி அதிகாலையிலேயே தொடங்கிவிடும். செடிகளுக்கு மருந்துவைத்தல் போன்ற வேலைக்கு ஆண்கள் முதலில் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுச் செல்வார்கள். வேலை முடித்து முதலில் வந்து விடும் ஆண்கள், அலுத்துக் களைத்துப் பின்னால் வரும் பெண்கள் குளிப்பதற்கு தண்ணீர் காயவைத்துக் காத்திருப்பார்கள். அதுமட்டுமல்ல, இங்கிருக்கும் நூறு சதவீத ஆண்களுக்கும் சமையல் தெரியும். பெண்களுக்கு ஈடாக அவர்கள் சமைக்கவும் செய்வார்கள். ‘ஆஹா… ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்று தோழர் தமிழ்செல்வன் சொன்னது நனவாகி, கேட்கவே காதுகளில் தேன் வந்து பாய்ந்தது!

மேலும் தொடர்கிறார், “அதுமட்டுமல்ல டீச்சர், இந்த மலைப்பகுதியில் ஒரு வித்தியாசமான வேலைமுறையைப் பார்க்க முடியும். பொதுவாக நிலப்பகுதிகளில் ஆண்களின் பணியே உடல் உழைப்பு மிகுந்ததாக இருக்கும். ஆனால் இங்கு மலைப்பகுதியிலோ ஆண்கள் செடிகளுக்கு மருந்தை மேலிருந்து கீழே அடித்துக்கொண்டு வருவார்கள். பளு குறைந்து கொண்டேவரும். பெண்கள் கொழுந்துகளைப் பறித்துக்கொண்டு மேலே செல்லச்செல்ல, பளு கூடிக்கொண்டே போகும். அதனால் ஆண்களைவிட பெண்களின் வேலை கடினமானது.

‘மூங்கில் தண்டுபோல மிருதுவான தோள்கள்’, ‘தாமரை மலர்போன்ற மென்மையான பாதங்கள்’, ‘ஒடிந்துவிடும் மெல்லிய வெண்டை விரல்கள்’ போன்ற சங்கக்கவிதைகளுக்கும் ‘பெண்கள் பலவீனமானவர்கள்’ என்ற கட்டுக்கதைகளுக்கும் இங்கு இடமில்லை. தேயிலைக் கொழுந்துகளை ஒடித்து, ஒடித்து வலுவேறிய, கடினமாகிப்போன விரல்கள், தேயிலை சுமந்து, சுமந்து உரமேறிய தோள்கள், சறுக்கும் மலைகளில் சுமையுடன் நடந்து, நடந்து உறுதியான கால்கள் என உடற்பலமானவர்கள் இந்த மலைப்பெண்கள்” என்கிறார் கவித்துவமாக.

அத்தோடு தேயிலைச்செடி குறித்து சொன்ன செய்தி புதியதாக இருந்தது. தேயிலையை ‘செடி’ என்று நாம் சொன்னாலும் உண்மையில் அது குறுமர வகையைச் சேர்ந்த புதர்ச்செடி என நமக்குத் தெரியும். ஆனால், அதன்போக்கில் இயல்பாக வளர விட்டால், பத்து முதல் பதினைந்து அடி வரையிலான சிறிய மரமாகக்கூட வளருமாம். தேயிலை தோட்டங்களில் இலைகளை எளிதாகப் பறிப்பதற்காக அடிக்கடி கவாத்து செய்து மூன்று முதல் நான்கு அடி செடியாக அதன் வளர்ச்சியைக் குறுக்கி வைத்துக்கொள்கின்றனர்.

குறைந்து வரும் மக்கள்தொகை குறித்து பேசுகிறோம். “இந்த ஜெயிலில் இருக்க யார் விரும்புவார்கள் டீச்சர்?” எனக் கேட்கிறார். “என்னது மேகமலை சிறைச்சாலையா?” திடுக்கிட்டுக் கேட்கிறேன். “மறைந்திருக்கும் சொர்க்கம், தேனி மாவட்டத்தின் சுவிட்சர்லாந்து. காஷ்மீர்… ஊட்டி… என்றெல்லாம் கேட்டிருந்த செவிகளில் நாராசரமாய் ஒலித்தது ஜெயில் என்ற வார்த்தை. “இது என்னோட வார்த்தைகள் இல்லை, இங்கே தங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மலைவாழ்மக்களின் எண்ணம். என்றோ ஒருநாள் இயற்கையை அனுபவிக்க வரும் உங்களுக்கு வேண்டுமானால் மேகமலை சொர்க்கமாகத் தெரியலாம்.

இங்கிருக்கும் மக்களுக்கு, மிகக் கொடுமையான வாழ்க்கை அவர்கள் தங்கியிருக்கும் குவார்ட்டர்ஸ் வாழ்க்கை. ஆதி காலத்தில் கட்டிய பழமையான, இன்றுவரை புதுப்பிக்கப்படாத, மிக மோசமான கட்டிடங்கள். விடிந்ததும் பணிக்குச்சென்று மாலை வீடு திரும்பியதும் விலங்குகளுக்குப் பயந்து வீடு என்ற பெயரில் இருக்கும் நான்கு சுவர்களுக்குள் தங்களை அடைத்துக்கொள்ளும் தனிமைச்சிறை போன்ற வாழ்க்கை அவர்களுடையது. அருகிலிருப்போரிடம்கூட பேசுவதற்கு வாய்ப்பில்லாத சூழல். வருடத்தின் 365 நாட்களும் இதே சக்கர வாழ்க்கை, உங்களாலும் என்னாலும் வாழ முடியுமா?” என்ற அவரின் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

எஸ்டேட்டில் உள்ள ஆண்களுக்கு, கீழிருக்கும் சுற்றுவட்டாரத்தில் எவரும் பெண் கொடுப்பதில்லை. இந்த நிலப்பரப்பில் பிறந்து வளரும் பிள்ளைகளை எப்படியோ படிக்கவைத்து கல்லூரிக்கும் அனுப்பி விடுகிறார்கள். இந்த ‘ஜெயிலிலிருந்து’ தப்பிப்பதற்காகவே ஆண்களும் பெண்களும் நன்றாகப் படித்து ஏதோ ஒரு வேலை தேடி தரையூருக்குச் சென்று விடுகிறார்கள். பெண்கள் வெளியூரில் மணமுடித்து இந்தச் சிறை வாழ்க்கையிலிருந்து தப்பிக்கிறார்கள். கேட்கக் கேட்க மேகமலை மீதிருக்கும் மோகம் சற்றுக் குறைவது போல இருந்தது.

மணலாறு, வெண்ணியாறு, ஹைவேவிஸ் மேலணை, ஹைவேவிஸ் கீழ் அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என ஆறு அணைகள் இப்பகுதியில் உள்ளன. இந்தப்பகுதி மூன்று துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. தண்ணீர் இருக்கும் இடம் வரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாடு, தேயிலைச்செடி இருக்கும் உயரம் வரை எஸ்டேட் கட்டுப்பாடு, அதற்கு மேலே மரங்கள் இருக்கும் இடம் வரை வனத்துறை கட்டுப்பாடு போன்ற செய்திகள் வியப்பளிக்கின்றன.

முதன்முதலில் ஆட்கள் வந்து காட்டைத் தெறித்துக் (அழித்து) குடியேறிய இடத்தை பழைய காடு என்று அழைக்கிறார்கள். அங்கெல்லாம் செல்வதற்கு நமக்கு இப்போது அனுமதி இல்லை. அந்த பழைய காட்டிற்குள், நீர் குடிக்க வரும் யானைகளுக்காகவே ‘அல்லி டேங்க்’ என்ற பெயரில் ஒரு குளம் உருவாக்கப்பட்டுள்ளது. பகலிலேயே யானைகள் இங்கு வந்து நீர் அருந்தவும், விளையாடவும் செய்யுமாம். காட்டிற்குள் சுதந்திரமாகத் திரிந்த யானைகள் இப்போது மக்கள் நடமாடும் பகுதிகளிலும் வந்து போய்க் கொண்டிருப்பதன் காரணம் நியாயமானதாக இருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக தங்களது ஒரே வலசைப்பாதையில் வந்து, சென்று கொண்டிருந்த யானைகள், சாலை வசதிகள் செய்யப்பட்டவுடன், தங்கள் பாதையில் குழம்பிப்போய் பல இடங்களிலும் நடமாடுகிறது என்கிறார்கள். வட்டப்பாறை, சன்னாசி மட்டை, போதைப் புல்மேடு போன்ற இடங்கள் யானைகள் வலசை செல்லும் பாதைகள். வட்டப்பாறை பகுதியில் தினமும் காலையும் மாலையும் யானைக்கூட்டத்தைப் பார்க்கலாம். சபரிமலை சீசன் ஆரம்பித்து விட்டால் கேரள வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகளும் மேகமலைக்குப் படையெடுத்து விடுகின்றன. விறகு தேடிப் போனவரை யானை அடித்துக் கொன்ற இடத்தைக் காட்டி பயமுறுத்துகிறார் அருகிலிருந்த சக பயணி ஒருவர்.

யானைகள் மட்டுமல்ல, தற்போது சிறுத்தைகள்கூட பகலில் சர்வசாதாரணமாக நடமாடுகின்றன. இங்குள்ள மலைகளில் கடுவாப்புலிளும், சிறுத்தைகளும் அதிகம். ஒருமுறை சென்சஸ் கேமராவில் 7 கிலோ மீட்டர் பரப்பளவில் 53 புலிகள் காணப்பட்டதாம். “பள்ளி முடிந்து பேருந்திற்காகக் காத்திருந்த நேரத்தில், 15 அடி தூரத்தில் இரண்டு கருஞ்சிறுத்தைகள் சாவகாசமாக நடந்து சென்றதைப் பார்த்திருக்கிறேன் டீச்சர்” என்று ஆசிரியர் ராஜன் கூறியதைக் கேட்டபோது, ‘இனிமேல் மேகமலையில் புகைப்படம் எடுக்கக்கூட தேயிலைத் தோட்டத்திற்குள் செல்லக்கூடாது’ என்ற பிரசவ வைராக்கியம் அவசரமாக மனதில் தோன்றியது.

இதுவரை சிறுத்தைகள் இங்குள்ள மனிதர்களை ஒன்றும் செய்ததில்லை, அதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது, “மனிதர்களின் இரத்தத்தை இன்றுவரை இங்கிருக்கும் சிறுத்தைகள் சுவைத்ததில்லை, அதனால் இங்கு மனிதர்கள் இலகுவாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள், என்றைக்கு சிறுத்தைகள் மனிதர்களை ருசி பார்க்கத் தொடங்குகிறதோ அன்றோடு மக்களின் மலை வாழ்க்கை முடிந்து விடும்” சத்தியமான உண்மை!

வாகனத்தில் செல்லும் போது பல மரங்களில் மரத்தின் பட்டை உறிந்து காணப்பட்டது. காரணம் விசாரித்த போது, “யானை மிகுந்த கோபத்தில் இருக்கும்போது இதுபோன்று மரப்பட்டைகளைக் குத்தி கிழிக்கும் குணம் கொண்டது. யானையைப் பார்த்ததும் பதட்டப்படக்கூடாது, ஏனெனில் யானையும் நம்மைப் பார்த்து அதிர்ச்சியாகியே நிற்கும்; யானை, காதையும் வாலையும் ஆட்டிக்கோண்டிருந்தால், அது சாதாரணமாக மேய்ந்து கொண்டிருக்கிறது, அதனால் நமக்கு ஆபத்தில்லை; அசையாமல் நின்று கொண்டிருந்தால் நம்மை கவனிக்கிறது என்று பொருள்; காதை விரைத்து, உடம்பைக் குறுக்கினால் நம்மை விரட்டத்தயாராகி விட்டது என்று பொருள்” என டிப்ஸ் கொடுக்கிறார் பேருந்து நிறுத்தக் குடிலையே மினி டீக்கடையாக மாற்றியிருக்கும் அண்ணா ஒருவர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக மேகமலை புலிகள் காப்பகம், தமிழ்நாடு அரசால் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இது, இந்தியாவின் 51வது புலிகள் காப்பகம், தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகம். இதன் மொத்தப்பரப்பளவு 1.01 இலட்சம் ஹெக்டேர். இதில் 64,1856.21 ஹெக்டேர் பரப்பளவு புலிகள் வாழும் பகுதி. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, செந்நாய், காட்டுமாடு, யானை, புள்ளிமான், சருகுமான், சோலைமந்தி இருவாச்சி போன்ற விலங்குகள் உள்ளன. தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு 250 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கின்றன. வலசைப்பறவைகளும் மேகமலைக்கு வருகின்றன. அரியவகைத் தாவரங்களும் வனத்திற்குள் உள்ளன. இத்தனை உயிர்களுக்குச் சொந்தமான ஒன்றை, நமது சுயநலத்தால் நாம் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து அவைகளைத் தொந்தரவு செய்கிறோமோ என்ற குற்ற உணர்வு மேலிட்டது. ஆனால் அதனாலெல்லாம் மேகமலைக்கு வராமல் இருக்க முடியாது என மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

என் எண்ணத்தைப் பிரதிபலிப்பதைப் போலவே வருத்தப்படுகிறார் அருகிலிருந்த தொழிலாளர் ஒருவர். “காலை நாங்கள் வேலைக்குப் போகும்போது, தேயிலைத் தோட்டத்தின் நடுவே கடுவாய்ப்புலி வெயிலில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும். எங்கள் வீட்டுக் குழந்தைகள்கூட யானைகளின் அருகில் பயமின்றி நிற்கும். அப்படி மக்களோடு மக்களாக புழங்கிக் கொண்டிருந்த விலங்குகளுக்கும் எங்களுக்கும் ஒரு பந்தம் இருந்தது. இன்று சுற்றுலாப்பயணிகள் விலங்குகளின் அமைதியான வாழ்வில் குறுக்கிடுவதால், மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்குமிடையில் பெரிய இடைவெளி வந்துவிட்டது. விலங்குகளுக்குச் சொந்தமான இரவு நேரத்தில், மனிதர்கள் ஜீப்பை எடுத்துக்கொண்டு விலங்குகளைத் தேடி வனத்திற்குள் சென்று தொந்தரவு செய்கிறார்கள். அதனால் கோபப்படும் விலங்குகள் மனிதர்களுக்கு எதிரிகளாக மாறுகின்றன” என்றபோது அமைதியாக இருப்பதைத்தவிர வேறு சொற்கள் என்னிடமில்லை.

ஆசைதீர சுற்றிப்பார்த்து விட்டு, வேண்டிய மட்டும் சுத்தமான ஆக்சிஜனை நிரப்பிக்கொண்டு கீழிறங்கலாம் என்று கிளம்பியபோது வெண்ணியாறு தேயிலைத் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்கலாம் என்று தோன்றவே, வண்டியை நிறுத்தினோம். தேயிலை தயாரிப்பு குறித்து அறிந்து கொள்ள 118 ரூபாய் கட்டணத்தில் தொழிற்சாலைக்குள் அனுமதிக்கிறார்கள் (18 ரூபாய் GST யாம்!). பறித்து வரப்படும் தேயிலைக் கொழுந்துகளை தரம் பிரிப்பதிலிருந்து, தேயிலை பதப்படுத்தப்பட்டு, தூளாக மாற்றப்பட்டு, பாக்கெட்டுகளில் அடைக்கும் வரை அரை மணி நேரத்தில் தேயிலை உலகில் வலம் வந்துவிடலாம். சுற்றிக்காட்டுவதற்காக உடன்வந்த தொழிற்சாலை உதவியாளர் சந்திர மோகன் ஒரு ஆசிரியருக்குரிய ஆர்வத்துடன் ஒவ்வொரு இயந்திரமாக காட்டி செயல்முறைகள் (Process) குறித்த செய்திகளை விளக்கியதுடன் “புரிந்ததா… புரிந்ததா?” எனக் கேட்டுக்கொண்டே எங்களை வழிநடத்தினார்.

CTC மெத்தட், Truff, weathering purpose என அவர்கூறிய தேயிலை பதப்படுத்துவதற்கான சொற்கள் எல்லாம் புதியதாக இருந்தாலும் புரிந்தது போலவே தலையாட்டிக் கொண்டோம். 80 சதவீத இலைகள் மெல்லிய இலைகளாக இருந்தால் மட்டுமே தேயிலைத்தூள் நன்றாக இருக்குமாம். இலையிலிருக்கும் ஈரப்பதத்தை உருவி 15 மணி நேரம் வாடவிட்டு, நீர் சேர்த்து பிரித்து, கசப்பை நீக்கி, அரைத்து, என ஒரு தேயிலை நம் வீட்டுத் தேநீர்க் குவளைக்கு வருவதற்குத்தான் எத்தனை இன்னல்களை சந்தித்து வருகிறது?

கான்கிரீட் காடுகளாக மாறாத காரணத்தினால் இயற்கையை இன்னும் மிச்சம் வைத்திருக்கிறது மேகமலை. “ஏங்ங்ங்கககககக…” என யாரவது ஆரம்பிக்குமுன், விலங்குகளுக்குத் தொந்தரவு தராமல் மேகமலையின் மடியில் இளைப்பாறிவிட்டு வரலாம்.

தொடரும்…

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.