*இந்தச் சொல் பயன்பாட்டில் ஆசிரியருக்கோ, பதிப்பாளருக்கோ எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால், அய்யா வைகுண்டரின் காலம், அப்போதைய அச்சொல்லின் பயன்பாடு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘அகிலத்திரட்டில் காணப்படுகின்ற ‘சாணார்*’ என்கிற வார்த்தை சாதியை குறிக்காது. அவ்வார்த்தை சந்நியாசி என்ற பொருளையே தரும்”, என்று ஆ. கிருஷ்ணமணி தனது நூலில் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது.1*
ஆனால் சாணார்* என்ற வார்த்தை தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு கூட்டத்து மக்களின் சாதியைத்தான் குறிக்கும் என்பதை நிரூபிக்க பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. என்றாலும் சனாதனத்தின் ஊடுருவல் எத்தகைய பொய்யையும் உண்மை என்று நிரூபித்துக் காட்டியிருப்பதை வரலாற்றின் சுவடுகளில் காண்கிறோம். அது போன்று சாணார்* என்ற வார்த்தையின் பொருளை எதிர்காலத்தில் சனாதனம் திரித்துவிடாதிருக்க, கிடைத்திருக்கும் ஆதாரத்தை பதிவுசெய்துவிடுவோம்.
தோணா தென்ற சரக்கெடுத்து கருஞ்சூரா சூரையில் வைத்தெடுப்ப
சாணான் கண்ட பொருள் போலே சித்திதான் என்று கும்மியடி.
என்ற மதுரை வாலை சித்தரின் பாடலை உதாரணமாகக் காட்டுகிறார் அரிசுந்தரமணி. இப்பாடலில் வரும் சாணான் என்ற வார்த்தை சந்நியாசியைக் குறிக்கும் என்பதும், அது போலவே அகிலத்திரட்டு அம்மானையில் வரும் சாணான் என்ற சொல் சந்நியாசி என்ற அர்த்தத்தைக் குறிக்கும் என்பதும் அரிசுந்தரமணியின் வாதம்.
மேலே சொன்ன வாலை சித்தரின் பாடலின் உண்மையான பொருளை ஆராய்வோம்;
தோணா தென்ற சரக்கெடுத்து கருஞ்சூரா சூரையில் வைத்தெடுப்ப
சாணான் கண்ட பொருள் போலே சித்திதான் என்று கும்மியடி. என்ற பாடலில் வருகின்ற தோணா என்ற வார்த்தைக்கு சதுப்புநிலம் என்று பொருள்.2*
‘சதுப்புநிலத்தில் வருகின்ற சரக்கான பனையிலிருந்து எடுக்கப்படுகின்ற பதநீர் என்ற சரக்கினை, கருமையான கரிகளைக் கொண்ட சூரையடுப்பில் வைத்து காய்ச்சும்போது சாணார்கள்* கண்ட பொருளான கருப்புக்கட்டி என்ற இனிப்பைப் போல சித்தியும் கடும் உழைப்பிற்குப் பிறகு கிடைப்பதாகும்’ என்பதே மேற்சொன்ன வாலைசித்தரின் பாடலுக்குப் பொருள். ஆக மேற்சொன்ன வாலை சித்தரின் பாடலில் வருகின்ற சாணார்* என்ற சொல்லும் சாதியைத்தான் குறிக்கிறது.
தரவுகள்
- அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, உரை ஆசிரியர்: ஆ. அரிசுந்தர மணி, அய்யா வைகுண்டர் நற்பணி மன்றம், அம்பலப்பதி. மூன்றாம் பதிப்பு 2016. பக்கம் எண் 109,
- தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் பகுப்பாய்வு, டாக்டர்.கு. பகவதி, முதல் பதிப்பு, மே மாதம், 1991, பக்கம் எண்: 132.
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.




