உச்சி வெயில் மண்டையில் உறைத்தது. தலையிலிருந்து வியர்வை ஊற்று ஒன்று உற்பத்தியாகி பின்னங் கழுத்தில் சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து வழிந்தது. அவன் தலையில் சுற்றிக் கட்டியிருந்த சாயம் போன ஈரிழைத் துண்டை அவிழ்த்து உதறி தலையையும், கழுத்தையும் துடைத்தான். மீண்டும் துண்டைத் தலையில் சுற்றிக் கொண்டு கீழே குனிந்து சாணம் நிரம்பிய கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு பின்புறம் போய் உரக் குழியில் கொட்டி விட்டு வந்தான்.
வீட்டுக்குள்ளிருந்து வந்த விசாலாட்சி கையில் வைத்திருந்த பெரிய செம்பில் இருந்து இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கரைத்த மோரை டம்ளரில் ஊற்றி, சாய்வு நாற்காலியில் அமர்ந்து வேப்பங்காற்றின் குளுமைக்குக் கண்ணயர்ந்து விட்ட தங்கசாமியை,”ஏனுங்க… இந்த மோரைக் குடிங்க.” என்றவாறே எழுப்பினாள். எழுந்து இரண்டு டம்ளர் மோரை சப்புக் கொட்டிக் குடித்தவர், மேல் துண்டால் வாயைத் துடைத்துக் கொண்டே,”லேய்… வேகாத வெய்யிலு பாரு. செம்பட்டைக்கும் மோரு குடு. பாவம்.” என்றார். விசாலாட்சி உள்ளே போனாள்.
“டே… செம்பட்டேய்…” கூவினார். நிமிர்ந்து பார்த்தவனை வரச் சொல்லி கைகாட்டினார்.
அதற்குள் விசாலாட்சி மீண்டும் மோருடன் தோன்றினாள். செம்பட்டை கையில் சாணி ஒட்டியிருந்ததால் கை கழுவத் தேடினான்.
“சீக்கிரம் வாடா… உள்ற எனக்கு வேலையிருக்குது,” விசாலாட்சி கடுகடுத்தாள். வேறுவழியின்றி வேட்டியில் துடைத்து விட்டு இரண்டு கைகளையும் குவித்து வாயருகில் வைத்துக் குனிந்தான் அவன்.
விசாலாட்சி மிகவும் கவனமாக செம்பைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மோரைக் குவிந்த உள்ளங்கையில் ஊற்றினாள். அவன் மடக் மடக்கென்று குடித்தான். குடிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் கையில் வழிய வழிய ஊற்றிய மோர் அவனது முழங்கையில் சொட்டுச் சொட்டாக வழிந்தது. மோரின் ருசி கொஞ்சம்கூடத் தெரியவில்லை அவனுக்கு. சாணி வாடை அடித்தது. தன் நிலைமையை நொந்து கொண்டு மீண்டும் மாட்டுத் தொழுவத்துக்குச் சென்றான்.
அவன் பெயர் சாமியப்பன். பத்து வயதில் இருந்து இங்கு வேலை செய்கிறான். வந்த புதிதில் அவனது பெயரைக் கேட்டதும் தங்கசாமி முகத்தைச் சுளித்தார். “ஏண்டா டேய்… உன்னை நான் சாமி சாமிங்கணுமா? பேரப் பாரு. வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம். ம்… உனக்கு என்ன பேர் வெக்கலாம்?” என்று யோசித்தவர், எண்ணெய் காணாமல் செம்பட்டை நிறம் பாய்ந்திருந்த முடியைப் பார்த்தார். அப்போதே பெயர் பிறந்து விட்டது. சாமியப்பன் செம்பட்டையானான். இப்போது முப்பது வயதை எட்டிப் பிடித்து விட்டான்.
பண்ணையத்து வீட்டில் பெருசிலிருந்து சிறுசு வரை அவன் செம்பட்டைதான். தங்கசாமியின் மகன் ரத்தினசாமி அவனை விட ஏழெட்டு வயது பெரியவன். சாமியப்பனை புழுவைப் பார்ப்பது போல்தான் பார்ப்பான். மகள் செல்வி அப்போது கைக்குழந்தை. அவளுக்கும் அவன் “டேய் செம்பட்டை” தான்.
அவன் மாங்கு மாங்கென்று வேலை செய்வான். காலையில் ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்து விடுவான். அடைமழை, கடும்பனி, கொடுங்கோடை எதுவாக இருந்தாலும் அவன் வேலைக்கு விடுமுறை கிடையாது. வந்ததும் மாட்டுக் கொட்டகையில் குவிந்து கிடக்கும் சாணியை அள்ளி உரக் குழியில் கொட்டுவான். மூத்திர நாற்றம் போகத் தண்ணீர் ஊற்றித் தரையை சீமாரால் கழுவித் தள்ளுவான். பால் கறந்து சொசைட்டியில் இருந்து வரும் ஆளுக்கு அளந்து ஊற்றி தங்கசாமியைக் குறித்துக் கொள்ளச் சொல்லுவான். வாரம் ஒருமுறை இரவெல்லாம் மூத்திரம் பெய்து உழன்று கிடக்கும் மாடுகளைச் சுடுநீர் வைத்து வைக்கோல் பிரியைச் சுருட்டித் தேய்த்துக் குளிப்பாட்டுவான்.
காலையில் பெரும்பாலும் பழையதுதான் கிடைக்கும். விசாலாட்சி துளியூண்டு தயிரும், தாராளமாகத் தண்ணீரும் விட்டுப் பழைய சோறை குண்டானில் கரைத்து பெரிய கொட்டாங்கச்சியில் தூக்கி ஊற்றுவாள். அப்போது அவள் முகம் இறுகிக் கிடக்கும். தொட்டுக் கொள்ள எப்போதாவது ரெண்டு சின்ன வெங்காயத்தை உரித்து வீசுவாள். கடித்துக் கொண்டு குடிக்க வேண்டும். உள்ளிருந்து இட்லி, தோசை மணமும், தேங்காய் சட்னியை தாளிக்கும் ஓசையும் காதில் விழும். ஊறும் எச்சிலை விழுங்கிக் கொண்டு நகர்வான்.
வீட்டை ஒட்டியே கிடக்கும் வயல்காட்டில் பருவத்துக்கேற்ப பயிர் பண்ணுவார்கள். ஆடிப்பட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி போன்ற காய்கறிப் பயிர்களை விதைப்பார்கள். சித்திரை, வைகாசியில் கத்தரி, தக்காளி, அவரை, வெண்டை, வெங்காயம், எள் போன்றவற்றை பயிர் செய்வார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாழை நடுவார்கள். அதன்படி வாழை பயிரிட்டிருந்தது. வாழை மரங்களுக்கு இடையே முள்ளங்கி, கீரை, பூசணி போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டிருந்தார் தங்கசாமி.
அங்கே புகுந்தானென்றால் அப்பச்சப்பத்தில் வெளியே வர மாட்டான் அவன். உரம் இட, நீர் பாய்ச்ச, களை எடுக்க என்று வேலை இருந்து கொண்டே இருக்கும். வேலை அதிகரிக்கும் சமயங்களில் கூலிக்கு ஆட்களை அழைத்து வருவார் தங்கசாமி. அவர்களை கண்ணும் கருத்துமாக வேலை வாங்கும் பொறுப்பு அவனிடம்தான் விடப்படும். மதியம் பசி வயிற்றைக் கிள்ளும்போதுதான் பின் வாசலுக்கு வருவான்.
மதியச் சோறு ஆறிப் போயிருக்கும். பெயருக்கு ஒரு சாம்பார். கூட ரசம் எப்போதாவதுதான் கிடைக்கும். வழக்கமான தண்ணீர்த் தயிர். ஆனாலும் பெரும்பாலான நாட்களில் காலையில் சாப்பிட்ட அதே பழைய சோறு தான் மதியத்துக்கும் கிடைக்கும். மந்தாரை இலையில் மொத்தமாகக் கொட்டிக் கவிழ்த்து சோறு, குழம்பு, ரசம் எல்லாவற்றையும் ஒரேமுட்டாக ஊற்றி விட்டுச் சென்று விடுவாள் விசாலாட்சி. ” உள்ளாற வேல கெடக்கு செம்பட்டை. நின்னு நிதானமா உனக்கு பரிமாறிட்டு இருக்க முடியாது.”
சமையலறையில் இருந்து மீன் குழம்பு, கறி வறுவல் வாசனைகள் கம்மென்று எழும். மாட்டுக் கொட்டகையில் வந்து அமர்ந்து கொண்டு, சாணி வாடையில் அந்தச் சோற்றைத் தின்னும் போது கண்களில் நீர் முட்டும். “ஒருவா சுடுசோத்தைக் கண்ணுல காட்டக் கூடாதா இந்த ஆத்தா? எவ்வளவு வேலை பாக்குறேன்?” ஆற்றாமையிலும், இயலாமையிலும் மனசு பொங்கிப் பொங்கிக் குமுறும்.
மீண்டும் பால் கறக்கும் படலம். சொசைட்டிக்கு அளந்து ஊற்றும் படலம், காட்டுக்குள் வேலைக்குப் போகும் படலங்கள் வரிசை தப்பாமல் நாள் தவறாமல் நடக்கும். இரவு மாடுகளுக்கு தீனி வைத்து தண்ணீர் காட்டி விட்டுத்தான் அவன் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
ஆனால் தப்பித் தவறிக்கூட முன் வாசல் படியில் கால் வைத்து விடக்கூடாது. ஐயாவோ, சின்னய்யாவோ வெளியே கிளம்பினால் அபசகுனமாக எதிரில் வரக்கூடாது. ஒருமுறை சின்னய்யா புறப்படுவது தெரியாமல் வந்துவிட்டான். ரத்தினசாமி பளாரென்று அறைந்துவிட்டு தொட்டியில் இருந்த நீரை எடுத்துக் கைகளைக் கழுவிக் கொண்டு வண்டியை எடுத்தான். அடியைவிட அவனைத் தொட்டதற்குக் கையைக் கழுவியதுதான் மனதுக்குள் சுருக்கென்றது.
செல்வி இன்னொரு படிமேல். அவனைப் பார்த்தாலே முகத்தைச் சுளித்துக் கொள்வாள். அவனை ஏளனமாகவே விளிப்பாள். “டேய் செம்பட்டை… உங்காளுங்க பன்னிக் கறி, மாட்டுக் கறி எல்லாம் எப்புடித்தான் திங்குறீங்களோ? உவ்வேக்… நீ தாண்டிப் போனாலே நாறுது” மூக்கைப் பிடித்துக் கொள்வாள். அவனுக்கு சங்கடமாக இருக்கும்.
கல்யாணமாகி தைலாவை முதன்முதலாக ‘பண்ணையத்து’ வீட்டுக்கு அழைத்து வந்தான். அவள் அவனுக்கு தூரத்து சொந்தம். பத்தாவது வரை படித்திருக்கிறாள்.
அவன் வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் இருக்கும் மாரியம்மன் கோயிலில் வைத்து தைலாவை எளிமையாகத் திருமணம் செய்து கொண்டான். வந்தவர்களுக்கு பக்கத்து கடையிலிருந்து காபி, டிபன் தருவித்தான். அவன் திருமணத்துக்கு பண்ணையத்து வீட்டிலிருந்து யாராவது வருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்தான். யாரும் வராதது பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் உள்ளுக்குள் ஏனோ சற்று நிம்மதியாகவும் இருந்தது. ‘ஐயாவும், அம்மாவும் வந்தாங்கன்னா, இந்தூட்டுல எங்க உக்கார வைக்க? அவுங்க நம்மூட்டுக்குள்ள எல்லாம் வருவாங்களா? நம்ம கூட சமமா உக்காந்து திம்பாங்களா?’ தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டான்.
கல்யாணம் முடிந்து நான்கு நாட்கள் தனக்குப் பதிலாக வேறொருத்தனை பெரிய வீட்டுக்கு பால் கறக்க மட்டும் அனுப்பியிருந்தான். மனைவியைக் கூட்டிக் கொண்டு அங்கே போனதும் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தங்கசாமி, “வாடா… இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?” என்று வரவேற்றார்.
“ஏண்டா… கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே பொழப்பைப் பார்க்க வரத் தோணலையா? இந்தச் செகப்பி பால் கறக்க அந்தப் பாடுபடுத்திட்டா பாத்துக்க. போ… போயி மாட்டுக் கொட்டில் லட்சணத்தைப் பாரு” விசாலாட்சி திண்ணையில் அமர்ந்து கொண்டு முன்னால் வைத்திருந்த முறத்தில் முருங்கைக் கீரையை ஆய்ந்து போட்டுக் கொண்டிருந்தாள்.
தைலா, “குடுங்கம்மா. நான் ஆஞ்சு தாரேன்” என்று கையை நீட்டவும், வெடுக்கென்று முறத்தை நகர்த்தி விட்டு அவளை முறைத்தாள் விசாலாட்சி.
“ஏண்டி… அறிவிருக்கா உனக்கு? பொழங்காத சாதிக்காரி நீயி. கீரையைத் தொட்டீன்னா தீட்டுன்னு தெரியாதா?” இரைந்தாள். தைலா விதிர்விதிர்த்து நின்றாள்.
“போ… போயி வெளிய தோட்ட வேலை எதாச்சும் பாரு. உள்ளாற கீது வந்துறாத”. முகத்தைச் சுளித்தாள் விசாலாட்சி. தைலாவின் கண்களில் நீர் சுரந்தது.
“உங்ககிட்ட ஆசி வாங்க கூட்டியாந்தேன். கல்யாணத்துக்கு நீங்க வரலை. ஆசீர்வாதம் பண்ணுங்க”, இருவரும் தரையில் விழுந்து வணங்கினார்கள்.
தங்கசாமியும், விசாலாட்சியும் அமர்ந்தே இருந்தார்கள். “ம்ம்… நல்லா இருங்க. நாலஞ்சு புள்ள குட்டி பெத்து, அதுகளும் நம்ம கிட்டயே பண்ணையத்துக்கு வரோணும்.” தங்கசாமி சிரித்தார். அவர்களுக்கு சிரிப்பு வரவில்லை.
மனைவியைப் பார்த்துக் கண்ணைக் காட்டினார். விசாலாட்சி சலிப்புடன் எழுந்து உள்ளே போய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளையும், அவளது பழைய புடவைகள் இரண்டையும் எடுத்து வந்தாள். திண்ணையில் நின்றவாறே நீட்டினாள். தைலா கையை நீட்ட, மீண்டும் அவளை முறைத்தாள். “ஏண்டி மகாராணி… முந்தியை ஏந்தி வாங்க மாட்டியோ? ராங்கியா இருப்பா போலிருக்கே?” கடைசி வரியை அவனிடம் சொன்னாள். தைலா முந்தானையை விரித்து நீட்ட, வெடுக்கென்று புடவைகளையும், பணத்தையும் தூக்கிப் போட்டாள். தைலா முகம் கறுக்க கும்பிட்டுவிட்டு நகர்ந்தாள்.
“முன் வாசலையெல்லாம் சுத்தமாக் கூட்டு போ” விசாலாட்சி கடுகடுத்தாள். தைலா துடைப்பத்தை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
அதன்பின் கணவனுடன் சேர்ந்து அவளும் அங்கேயே பண்ணையம் பார்க்கத் துவங்கினாள். அவனுக்கு கொடுக்கப்படும் அதே சோறுதான் அவளுக்கும். இரண்டு நாட்கள் பார்த்தவள் மூன்றாம் நாள் விடிகாலையிலேயே எழுந்து மதியத்துக்கு கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போட்டு கருவாட்டுக் குழம்பும், சோறும் ஒரு போசியில் போட்டு எடுத்துக் கொண்டு, இன்னொன்றில் காலையில் குடித்துக் கொள்ள முந்தின நாள் மீந்ததை தாராளமாகத் தயிர் விட்டுக் கரைத்து எடுத்துக் கொண்டு வெஞ்சனமாகக் கொஞ்சம் சுட்ட கருவாட்டையும் தனியே கட்டிக் கொண்டாள்.
“என்ன புள்ள இது? புதுசா சோறு கொண்டுபோற பழக்கம்? பண்ணக்கார ஆத்தா எதும் நினைச்சுக்கப் போகுது” அவன் பயந்தான்.
“மாடு மாதிரி காட்டுலயும், ஊட்டுலயும் வேல செய்யுற, நெதைக்கும் பழையதே தின்னா எப்பிடி? இனிமேட்டுக்கு அங்க சாப்பிட வேணாம். புளிச்ச கஞ்சி எதுக்கு? அவங்க எதும் நெனச்சா நெனைக்கட்டும்.” அவள் வயர் கூடைக்குள் பாத்திரங்களை அடுக்கி எடுத்துக் கொண்டாள்.
அன்று மதியம் வரை இருவரும் சாப்பிட வராததால் விசாலாட்சி காட்டுப் பக்கம் வந்து விசாரித்தாள். இருவரும் சாப்பிட்டு விட்டோம் என்று சொன்னதும் அவள் முகம் மாறியது. எல்லாப் பழையதையும் மாட்டுக்கு ஊற்றி விட்டாள்.
அதன் பின்னர் தைலா அடுத்த மாதமே கருவுற்ற பின்னரும் வேலைக்கு வந்து கொண்டிருந்தாள். விசாலாட்சி அவளிடம் எதுவுமே விசாரிக்கவில்லை. மசக்கையானவளுக்கு வாய்க்கு ருசியாக எதுவும் கிள்ளிக் கூடத் தரவில்லை. “எரந்து திங்கிற நாய்க்கு திமிரப் பாரு. ராணிக்கு பழசு எறங்காதோ? ஆடு கெடந்த கெடையும்… சாறு மணக்குற மணமும்.” கறுவிக் கொண்டாள்.
“டேய் செம்பட்டை…” என்று அழைத்தவாறே வந்த செல்வியிடம், “அம்மா… அவுரு உங்களை விடப் பெரியவரு. கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க.” என்றதும் செல்விக்கு ஆத்திரம் பொங்கி விட்டது.
“என்னடி… திமிரா? கொறஞ்ச சாதி நாயிக்கு பழமையைப் பாரு. அவனெ நாங்க அப்புடித்தான் கூப்பிடுவோம். நேத்து வந்தவ நீயென்னடி பன்னாட்டு? பண்ணை ஊட்டு சோத்த தின்ன திமிரா?” மூச்சு வாங்கியது செல்விக்கு. தைலா தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் கொதித்தாள்.
“எது அந்த புளிச்ச கஞ்சியா? நாங்க உங்ககிட்ட வேலைக்குத்தான் வாரோம். அடிமையா இல்லை. எங்களுக்கும் மானம் சூடு சொரணை எல்லாம் இருக்கு.”
சத்தம் கேட்டு வந்த விசாலாட்சி, “அட, அட, அட… ஒண்ணாத சாமி ஒதுங்கி நிக்குதாம்… பொடக்காலி சாமி பொங்கிலியும் பொங்கிலியுங்குதாமா. யே செல்வி… இந்த சாதி கெட்டவகூட உனக்கென்னடி பேச்சு. செரிக்கு சமானமா நின்று பேசுற. போ உள்ற.” அதட்டி விட்டுத் திரும்பினாள்.
“இந்தா பாருடி. இனிமேட்டு இங்க உனக்கு வேலையில்லை. கிளம்பு. வாங்கித் திங்கிற உனக்கெல்லாம் வாயைப் பாரு.”
“நாங்கொண்ணும் சும்மா வாங்கித் திங்கல. வேல பாத்ததுக்குத்தான் கூலி குடுக்கறீங்க. தொட்டா தீட்டுங்குறீங்களே, நீங்க பொழங்குற பொருளுங்க எத்தனை சாதிக்காரங்க கை பட்டு வருதுன்னு தெரியுமா? அவ்வளவு ஏன் நீங்க சுவாசிக்குற காத்துல எங்க மூச்சும்தான் கலந்திருக்குது. சாதி பார்த்தா மூக்கைப் புடிச்சிட்டுத் தான் சாகோணும். காசு, பணம் மட்டும் நாங்க தொட்டா தீட்டில்லையோ?”
தைலா முந்தானையை உதறிச் செருகிக் கொண்டு விருவிருவென்று சாமியப்பனிடம் சென்றாள்.
“வா மாமா போலாம். கை, காலு நல்லாருக்குல்ல. எங்க வேணா போயி பொழச்சிக்கலாம். மனுசனாப் பாக்காத எடத்துல உனக்கென்ன வேலை?” அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
அன்றிரவு அவளுக்கு வலியெடுத்து உள்ளூர் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் ஆனது.
களைப்போடு படுத்திருந்தவளின் தலையைத் தடவி விட்டான் சாமியப்பன்.
“கொழந்தைக்கு பேரு வைக்கலாம்.” தைலா குழந்தையைத் தடவினாள்.
“அதுக்குள்ள என்ன புள்ள அவசரம்? சரி என்ன பேரு வைக்கலாம்? எங்கப்பன் பேரு மாடன், உங்கப்பன் பேரு காளி, நம்ம குலதெய்வம் வீரன். ம்… எந்தப் பேரு வைக்கலாம்?” யோசித்தான்.
அவள் ஒரு பெயரைச் சொன்னாள். அவன் திடுக்கிட்டான்.
“என்னடி இது.. கீழ்சாதில பொறந்துட்டு பேர் வெக்க ஒரு தராதரம் வேணாம்.” என்றவனை இடைமறித்தாள் தைலா.
“இங்க பாரு மாமா. இந்தப் பேரெல்லாம் எதுக்குன்னு தெரியுமா? காலங்காலமா அந்தந்த சாதி என்னன்னு பேரைக் கேட்டாலே தெரிஞ்சுக்கணும்னு பண்ண ஏற்பாடுதான். பேர் வைக்க சாதியெல்லாம் தேவையில்லை. புடிச்ச பேரை வெச்சுக்க யாரைக் கேட்கணும்?” என்றவள் குனிந்து குழந்தையின் காதில் அவன் பெயரைத் தெளிவாக உச்சரித்தாள்.
“சுப்பிரமணிய பாரதி”
குழந்தை மெல்லப் புரண்டது.
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.




