அது ஒரு ரம்மியமான மாலைப்பொழுது. சூரியன் மெதுவாக மறையத் தொடங்கியது. பொதுவாக முழு நிலவன்று பளிங்கு கற்கள் ஜொலிக்கும் தாஜ்மஹால் பார்க்க ரம்மியமாய் இருக்கும். ஆனால் பேரழகிற்கு நேரமும் காலமும் ஏது? வெண்நிற பளிங்கு கற்கள் மாலைச் சூரியனின் ஒளியில் ரத்தமும் உயிரும் கொண்டு உருப்பெற்று என் முன்னே தோன்றின. என் அருகில் எவரும் இல்லை. இந்த பேரண்டத்திலே யாருமே இல்லை. நான். நான் மட்டுமே இங்கு இருக்கிறேன். என் இருப்பை மறந்தேன். என்ன தவம் செய்தேன் இப்பேரழகை என் வாழ்வில் சந்திக்க…
ஒருவேளை கண் சிமிட்டும் நேரம் என் பார்வையில் இருந்து விலகி விடுமோ என்று பயந்து கண்களைக் கூட சிமிட்டாமல், அதன் அழகை கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு பறவையாய் மாறி சிறகுகள் கொண்டு சுற்றிப் பறந்து கொண்டிருந்தேன். மின்மினிப் பூச்சியாய் மாறி அதற்கு ஒளி கொடுக்க முயன்றேன். காற்றாய் மாறி அதன் மேல் தவழ்ந்து சென்றேன். மேகக் கூட்டமாய் மாறி அதன் மேல் மழை பொழியக் காத்திருந்தேன். ஒரு சிறு புல்லாய் மாறி அதன் அருகில் ஒட்டிக் கொண்டிருந்தேன். யமுனையாய் மாறி அதன் மேல் நீர் தெளித்தேன்.
திடீரென்று என் முகத்தில் சில்லென்று தண்ணீர் தெறித்தது. மெதுவாக கண்களை திறந்து பார்த்தேன். என்னை சுற்றிலும் என் மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். “என்ன ஆச்சு மேம் ? மயக்கம் வந்திருச்சா?”, என்று அவர்கள் கேட்டவுடன் தான் என் சுய நினைவுக்கு வந்தேன். அப்படி என்றால் நான் எங்கே இருக்கிறேன்? நான் ஆக்ராவிற்கே வரவில்லையா? யோசனையுடன் சுற்றிலும் பார்த்த எனக்கு அப்போது தான் புரிந்தது வெயில் தாங்காமல் பெஞ்சில் அமர்ந்தவள் மயங்கிப் போயிருக்கிறேன். அப்படியென்றால் நான் கண்டது எல்லாம் கனவா? தலை விண்ணென்று வலித்தது.
இருபத்தியாறு வருடங்கள் வாழ்வில் கடந்தாயிற்று. எனக்கென்று குறிக்கோள் என்று பெரிதாக எதையும் உருவாக்கி கொண்டதில்லை. “நீர் வழிப் படூஊம் புனை போல் ஆருயிர்”, என்ற புறநானூற்றுப் பாடல் போல வாழ்வை அதன் போக்கில் போக விட்டவள் நான். ஆனால் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை என்றுமே தவற விட்டதில்லை. எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக அதற்கான முயற்சியை செய்தே பழக்கப்பட்டவள். இன்று இப்படி ஒரு முக்கியமான தருணத்தில், இப்படி ஒரு புழுவைப் போல சுருண்டு கிடப்பதை நினைத்து அவமானமாய் இருந்தது. இது நான் இல்லை.
எனக்குள் இருக்கும் சக்தி என்னை இவ்வாறு செய்ய விடாது. எழ வேண்டும். உற்சாகம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மணித்துளியையும் ரசிக்க வேண்டும். மனம் தானே உடம்பு. மனம் சொல்வதைத்தானே உடம்பு கேட்கிறது. இந்த நாளை என் வாழ்வில் போற்றி பாதுகாக்க வேண்டிய நாளாக நான் மாற்றுவேன். எனக்கு வேறு ஒன்றும் தேவை இல்லை. எனக்குள்ளே சொல்லிக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தேன். பையிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து ஒரு வாய் குடித்தேன். கண்களை கூசும் ஒளியில் தாஜ்மஹாலின் வடிவத்தை பார்த்தேன். கோடி யுகங்கள் மாறலாம். உன் பெருமை குறையாது. உன் மடியில் என் தலை பதித்து உறங்குவேன். பெஞ்ச்சை விட்டு எழுந்தேன். என் நடையில் வேகம் தெரிந்தது.
என் கைப்பைக்குள் இருந்த கேமராவை வெளியில் எடுத்தேன். இங்கிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு நொடியும் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. நுழைவுவாயிலில் இருந்து பார்க்கும் போது தாஜ்மஹாலின் கட்டிடக்கலை மிகவும் அற்புதமாக தெரியும். பிரதான சமாதி அமைந்திருந்த கட்டிடம், அதை சுற்றியுள்ள நான்கு சார்மினார்கள் அனைத்தும் சீராக ஒரு ஒழுங்குடன் கட்டப்பட்டிருக்கும். எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் அதன் நான்கு சார்மினார்களும் தெரியும். தாஜ்மஹாலைச் சுற்றிலும் பெரிய பூங்கா உள்ளது. நடைபாதைகளும் நடுவில் ஒரு பெரிய குளமும், தோட்ட்ங்களுமாக பார்ப்பதற்கே ஒரு நந்தவனம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. அந்த இடத்தில் ஒரு சிமெண்ட் பெஞ்ச் ஒன்று உள்ளது. அது டயானா பெஞ்சு என்று அறிமுகம் செய்தார் எங்கள் கைடு. “இதில் இங்கிலாந்து இளவரசி அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்” என்று தகவல் சொன்னார். பிறகு சொல்லவா வேண்டும் எல்லோரும் அதன் மேல் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர் இன்னும் நிறைய தகவல்களை சொல்லிக்கொண்டே இருந்தார். என் கவனம் அதில் இருந்தாலும் என் கண்கள் தாஜ்மஹாலை விட்டு அகலவே இல்லை.
நடைபாதையில் நடந்துகொண்டே தாஜ்மகாலை நெருங்கிக் கொண்டு இருந்தோம். அனல் காற்று முகத்தில் அடித்தது. முகம் எல்லாம் வியர்வை வழிந்து ஒழுகியது. எச்சிலை விழுங்கிக் கொண்டு சக்தி எல்லாம் திரட்டி வேகமாக நடக்க முயன்றேன். இது இப்படி நடந்திருக்க வேண்டியதில்லை என்று எனக்கு தோன்றியது. மதியம் சாப்பிட்டு விட்டு இங்கு வந்திருக்கலாம். ஏனென்றால் இதற்குப் பிறகு எங்களுக்கு சுற்றிப்பார்க்க ஏதும் இல்லை. ஆனாலும் இந்த மாதிரி கைடுகளின் பிடியில் இருக்கும்போது அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். என்னுடன் வந்த மற்றவர்களுக்கும் இதேபோல் தான் இருக்கும். எல்லோரும் சோர்வாகி இருப்பார்கள்…நான் என்னை பற்றி மட்டுமே யோசிக்காமல், அவர்களையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. வழியில் சில மாணவர்களை நிறுத்தி எல்லாம் சரியா என்று கேட்டேன். சோர்வாகவே இருந்தாலும் அவர்கள் ஏதும் என்னிடம் காட்டிக் கொள்ளவில்லை. என்னைப் போலவே எல்லாரும் ஆர்வமாக இருந்தது எனக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது.
ஒரு வழியாக தாஜ்மஹாலின் அடித்தளத்திற்கு வந்து சேர்ந்தோம். அதன் பிரம்மாண்டத்தின் முன் நான் ஒரு சிறு புழு போல தென்பட்டேன். வெறும் காலோடு சலவைக்கல்லில் நிறைய நேரம் நிற்க முடியாது என்று காலில் கட்டிக்கொள்ள துணி போன்ற ஒரு பையை கொடுத்தார்கள். அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டு வெறும் காலில் என் முதல் அடியை எடுத்து ஒரு படியில் வைத்தேன். திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஒரு பாடல் பாடும்போது அண்ட சராசரங்களும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போகும். அதைப்போல் அந்த நொடியை அப்படியே நிறுத்தி வைக்க ஆசையாய் இருந்தது. எதார்த்தத்தில் அது எல்லாம் சாத்தியம் இல்லை. அந்த நொடியை கடந்து வந்து முன்புற மேடையில் நின்றேன். அங்கிருந்து திரும்பி நின்று நான் வந்த பாதையை ஒரு முறை பார்த்தேன். அங்கு தெரிந்தது நுழைவுவாயில் மட்டும் அல்ல; என் இருபத்தியாறு வருட கனவும் நான் கடந்து வந்த பாதைகளும்…
மும்தாஜின் சுவாசக்காற்றை அறியாத இந்த காதல் சின்னம் பல மும்தாஜ்களின் மூச்சுக்காற்றை தினமும் சுவாசித்து தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. காதலின் சின்னமாய் யமுனை நதிக்கரையில் மனதின் தூய உணர்வாய் நிற்கிறது. காதல் மனைவியின் ஆசைக்காக மானுடன் எழுப்பிய பூலோக சொர்க்கம், காதல் ஒருவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதற்கு சாட்சியாய் எழுந்து நிற்கிறது.
மெதுவாய் நடந்து வந்து அங்கே பிரம்மாண்டமாய் இருந்த வளைவான பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தோம். வெகு நேரமாய் நிழலை தேடிய எங்களுக்கு இறுதியில் கிடத்தது தன் காதல் மனைவிக்காய் பார் போற்றும் மன்னன் எழுப்பிய காதல் காவியம். உள்ளே நுழைந்ததும் சுற்றிலும் என் கண்களை ஒரு முறை சுழல விட்டேன். அப்பப்பா !!! அதன் அழகில் நான் மீண்டும் மயங்காமல் இருப்பதை நினைத்து சந்தோசப்பட்டேன்.
மற்ற கட்டிடங்களுக்கும் தாஜ்மகாலுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. மற்றவை எல்லாம் கட்டிடத்திற்குள் ஏதாவது ஒரு சிறப்பை கொண்டிருக்கும் . ஆனால் தாஜ்மகாலைப் பொறுத்தவரை கட்டிடத்திற்குள் மும்தாஜ் மற்றும் ஷாஜகானின் சமாதி மட்டுமே இருக்கும். ஆனால் இதன் சிறப்பு அதில் புதைந்திருக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் தான். முகலாயர்களின் கட்டிடக்கலையில் மனித உருவங்கள் , மிருகங்கள் மற்றும் பறவைகள் என்று எந்த உருவமும் இருக்காது. இஸ்லாமியர்களின் வீடுகளிலோ உடைகளிலோ வேலைப்பாடுகள் அதிகம் இருந்தாலும் அதில் உருவங்களை உபயோகப்படுத்த மாட்டார்கள். இஸ்லாமிய மரபுப்படி எந்த உயிரினங்களின் உருவங்களையும் அழகுபடுத்துவதற்காக உபயோகிப்பது தடை செய்யப்பட்டது. அதனால் அவர்கள் அழகுபடுத்த செடி கொடிகள் மற்றும் செதுக்கு ஓவியங்களை(carved drawing) தாஜ்மஹாலில் பயன்படுத்தி இருந்தார்கள். தாஜ்மஹாலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டிலுமே ஒவ்வொரு கல்லிலும் அந்த அற்புதமான வடிவமைப்புகளை பார்த்தேன்.
அங்கு விலை உயர்ந்த கற்கள் பதித்திருந்ததற்கான அடையாளங்களை கைடு எங்களுக்கு காட்டினார். சாதாரணமாக பார்த்தாலே ஆச்சர்யமூட்டும் இதன் அழகு தங்க, வைர, மாணிக்க கற்களால் எப்படி ஜொலித்திருக்கும் என்று நினைக்கும்போதே உடலெங்கும் சிலிர்த்தது. பல்வேறு படையெடுப்புகள் மற்றும் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் அவை எல்லாம் களவாடப்பட்டிருக்கலாம். மேலே அண்ணார்ந்து பார்த்தேன். என் தலைக்கு மேல் தெரிந்த குவிமாடம் மிகவும் பெரியதாய் இருந்தது. அதற்கு நேர் கீழே மும்தாஜின் கல்லறை இருந்தது. அதற்கு அருகில் கொஞ்சம் உயரம் குறைவாக ஷாஜகானின் கல்லறை இருந்தது. ஆனால் அதில் அவர்களின் உடல் வைக்கப்படவில்லை. கீழ்த்தளத்தில் உண்மையான கல்லறை உள்ளது. அங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. மேலே உள்ள கல்லறையும் ஒரு நான்கடி தடுப்பு கொண்டு மறைத்திருந்தார்கள். எட்டி இருந்து தான் பார்க்க முடிந்தது.
என் கைகள் அந்த தடுப்பை மெல்ல உரசி பார்த்தது. பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் உருவாக்கிய கலை படைப்பு. அதை தொடும்போது ஏனோ அதில் வேலை பார்த்த ஒரு மனிதனின் ஸ்பரிசம் பட்ட உணர்வு. அவர்களின் மூச்சு காற்று இன்னும் இங்கே நிறைந்திருக்குமா? மன்னர்களும் , அமைச்சர்களும், அவர்களின் குடிகளும் இங்கு வந்து இதைக் கண்டு ரசித்திருப்பார்களா? பல ஆயிரம் வருடங்கள் ஆனாலும் மனித குலம் இங்கு வந்து இந்த அதிசயத்தை காண்பார்கள் என்று அவர்கள் நினைத்திருப்பார்களா? காலம் எவ்வளவு விசித்திரமானது. மனிதர்கள் மாறலாம். மனித குலம் அழியலாம். ஆனால் நாம் இந்த உலகிற்கு ஏதாவது விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் மனிதனை வாழ வைக்கிறது.
அங்கிருந்து சிறிது நகர்ந்து அடுத்த அறைக்குச் சென்றோம். சலவைக்கல்லினால் எழுப்பப்பட்ட சுவர்கள் முழுவதும் சிறிது பழுப்பேறி இருந்தது. நகரமயமாக்கலினால் இதன் நிறம் வேகமாக பழுப்பேறி வருகிறது. குறுக்கும் நெடுக்குமாக பறந்து கொண்டிருந்த புறாக்கள் அங்கே பலவித ஒலிகளை அவ்வப்போது எழுப்பிக் கொண்டே இருந்தன. மேல் மாடத்தில் உள்ள குவிமாடம் தங்கத்தில் இருந்தது. பின்னர் அதுவும் வெள்ளியாக மாற்றப்பட்டு, இப்போது வெறும் சலவைக்கல் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. வெள்ளை தாஜ்மஹால் அப்போது தங்கத்தில் எவ்வாறு ஜொலித்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பளிங்கு மாளிகை என்ற பெயர் சரிதான்!
சுற்றிலும் நிறைய உப்பரிகைகளும் மாடங்களும் இருந்தண. அவை எல்லாமே சீராகவும் மிகுந்த வேலைப்பாடுடனும் இருந்தன. சுற்றிலும் பல வாயில்கள் இருந்தன. அதில் ஒரு வாயில் வழியாக நுழைந்து தாஜ்மஹாலின் பின்புறம் வந்தோம். யமுனை ஆறு மெல்ல ஓசையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதிகம் தண்ணீர் இல்லை. நம் நாட்டில் நதிகளின் சுத்தம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. நானோ இந்த ஆற்றின் கரையில் தாஜ்மகால் ஒரு பெரிய ஓடம் போல் மிதந்து கொண்டிருப்பதாக கற்பனை பண்ணிக் கொண்டிருந்தேன்.
தாஜ்மஹாலை என் பெண் தோழியாக கற்பனை செய்து கொண்டேன். அடித்தளம் இன்றி கட்டப்பட்டிருந்தாலும் பூகம்பமே வந்தாலும் தாங்கும் சக்தியோடு கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறாயே. எவ்வளவு சக்தி உனக்கு. பெண்கள் எல்லாரும் உன் போல் இருக்க வேண்டும். பிரம்மிப்பாய், கம்பீரமாய், அழகாய், ஒற்றை ஆளாய் , உலகமே வியப்பாய் பார்க்கும் விதமாய் இன்னும் எத்தனை சொன்னாலும் தகும். நீ ஒரு அதிசயமாய் இருப்பதில் எந்த அதிசயமும் இல்லை. இந்த ஓடத்தில் ஒரு ஓடக்காரியாய் நானும் உன்னுடன் பயணிக்கிறேன். கையில் துடுப்பு இல்லை. ஆனால் பரவாயில்லை என் கையை துடுப்பாக்கி உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். என்னுடன் பயணிப்பாயா? நானும் இவளும் இன்னும் என்னென்ன கதைகள் பேசிக் கொண்டிருந்தோம் என்று தெரியவில்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. மாலை நெருங்கிக் கொண்டிருந்தது.
என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் அங்கிருந்து விலகி சுற்றிலும் உள்ள சிறிய மண்டபங்களை பார்க்கக் கிளம்பினார்கள். அந்த கட்டிடங்கள் எல்லாம் செங்கற்களால் கட்டப்பட்டவை. அங்கே ஷாஜகானின் பிற மனைவிகளின் கல்லறைகளும் அவர்களின் பணிப்பெண்களின் கல்லறைகளும் இருந்தது. அனைத்து பிரம்மாண்ட கட்டிடங்களையும் பார்த்து முடித்த பிறகு ஹோவென்று இருந்தது. அவ்வளவுதானா??? என் வாழ்வின் முக்கியமான நொடிகளை கடந்து வந்து விட்டேனா? என் மாணவர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு வெளிவாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
மாலை நெருங்க நெருங்க அதன் அழகு வேறு மாதிரி தோன்றியது. ஒவ்வொரு இரண்டடிக்கும் ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தேன். என்னைப்போலவே என் மாணவர்களின் கண்களிலும் மிகுந்த நிறைவு தெரிந்தது. என்னைப்போல் இவர்களுக்கும் தாஜ்மஹாலைப் பற்றி நிறைய ஆசைகள் இருந்திருக்கலாம். எல்லாம் நிறைவேறிய கணத்தில் அனைவருக்கும் ஒரு அமைதி குடிகொண்டது. தாஜ்மஹாலில் இருந்த ஒவ்வொரு நொடியும் மனக்கண்ணில் ஓடவிட்டுக்கொண்டே வெளிவாசலை அடைந்திருந்தேன். அங்கிருந்த ஒரு சுவரை தாண்டி சென்றால் தாஜ்மஹால் கண்ணிலிருந்து மறைந்து விடும். அந்த சுவரின் பின்னால் நின்று தாஜ்மஹாலை திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் அதே மிடுக்கோடு ஒளிர்ந்தது தாஜ்மஹால் !!!
நீ கட்டிடம் இல்லை, அதிசயம் இல்லை, நீ ஒரு வரலாறு. மனிதன் என்றுமே அடைய முடியாத எல்லை நீ. மனிதகுலத்தின் சாட்சி நீ. மனிதத்தின் அடையாளம் நீ. புகழ் குறையாத பளிங்கு மாளிகை நீ. தாஜ்மஹாலைப் பற்றி அறிய ஒரு விக்கிபீடியா பதிவு போதும். என் பயணக்கதை தேவையில்லை. ஆனால் என் கண்களின் வழியாக தாஜ்மஹாலின் அழகை ரசித்ததை என்றாவது ஒரு நாள் என் வாழ்வில் பதிவு செய்வேன் என்று சொல்லிக் கொண்டேன். என் கைப்பையில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து கடைசி சொட்டு தீரும் வரை நீரைப் பருகினேன். மனம்…
நிறைந்தது.
கட்டுரையின் முந்தைய பகுதிகள் இங்கே:
கட்டுரையாளர்
சாந்தி சண்முகம்
கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.