இந்த உலகில் கவலை இல்லாத மனிதர்கள் இருவர்.
1. ஒருவர் இந்த உலகிற்கு இன்னும் வரவே இல்லை.
2. மற்றொருவர் இந்த உலகை விட்டுச் சென்றவர். இவர்கள் இருவருக்கும் எந்தவிதமான கவலையும் இல்லை.
உலகில் உள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான கவலை, சோகம், துக்கம், இன்பம், துன்பம் எல்லாம் இருப்பது இயற்கையே.
நம் மனம் இன்பமாகவோ துன்பமாகவோ இருப்பதற்காகக் கடவுள் ஒரு முக்கியமான பரிசை நம்மிடம் கொடுத்துள்ளார். இந்தப் பரிசை வைத்து நாம் இன்பமாக வேண்டுமாலும் இருக்கலாம் அல்லது துன்பமாகவும் இருக்கலாம். அது என்ன? அதுதான் நம் மனம். இந்த மனதை வைத்து நாம் எதையாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இயற்கையாக இந்த மனம் நம்மிடம் உள்ள கெட்ட விஷயங்களை மட்டுமே அசைபோடும் பண்புடையது. அதிகம் எதிர்மறையான எண்ணங்களை நினைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் நினைத்தால், அதே மனதைப் பண்படுத்தி நல்ல விஷயத்தை எண்ணவும், நேர்மறை எண்ணத்தைக் கொண்டு வரவும் முடியும்.
நம் மனதைக் கையாள நாம் தெரிந்து கொண்டால், எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம். மனதின் எண்ணங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வரும் என்பதை உணர்த்தும் சில ஆய்வுகளைக் காண்போம்.
ராணுவத்தில் பணிபுரியும் ஒரு நபரின் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றது. பரிசோதித்த மருத்துவர் உங்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஓய்வு நிச்சயம் தேவைப்படுவதால், பணியை விடுத்து வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுங்கள் என்று கூறி விட்டார். அதிகபட்சமாக நீங்கள் இன்னும் ஓர் ஆண்டு இருப்பதே அதிசயம். ஆகையால் அதற்குள் உங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்து மகிழ்வாக நாள்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்.
ஆனால் 2 ஆண்டுகள் கழித்தும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து வேறு ஒரு மருத்துவரிடம் சென்றார். அந்த மருத்துவரும் இவரை முழுமையாகப் பரிசோதித்து பார்த்தார். இவருடைய ரிப்போர்ட்டைப் பார்த்து அதிர்ச்சியானார். மருத்துவர். உங்கள் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. நீங்கள் இதுவரை உயிரோடு இருப்பதையே என்னால் நம்ப முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்காக ஒரு சில மருந்துகளை நான் எழுதித் தருகிறேன் தவறாமல் அதனை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துகிறார். அந்த மருந்து மாத்திரைகளையும் வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டு சென்றார்.
4 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னும் அந்த நபர் உயிரோடுதான் இருக்கிறார் எந்தத் தொந்தரவும் இல்லாமல். மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து மற்றுமொரு மருத்துவரை அணுகினார். அந்த மருத்துவரும் இவருடைய ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு, உங்கள் உடல்நிலை மோசமான நிலையில்தான் உள்ளது.
ஆனால் நீங்கள் இவ்வளவு திடகார்த்தமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று வினவ, அதற்கு அந்த மனிதர், ’அட டாக்டர் எல்லாரும் எனக்கு உடம்பு சரியில்ல, உடம்பு சரியில்லைன்னு சொல்றாங்க. ஆனா என் உடம்ப பத்தி எனக்குத்தானே டாக்டர் தெரியும். என் உடம்புக்கு ஒண்ணுமே இல்ல டாக்டர். என் உடம்பு நல்லா இருக்கு. நான் இன்னும் பாருங்க பத்து வருஷம் நல்லா இருப்பேன்’ என்றார் .
அவர் சொன்ன பிறகுதான் அந்த டாக்டர் எண்ணுகிறார் இவர் உடலில்தான் கோளாறு. மனம் மிகவும் வலிமையுடனும் தைரியத்துடனும் இருப்பதனால் இவரால் இவ்வளவு வருடங்கள் உயிருடன் இருக்க முடிகிறது என்று. அந்த மருத்துவர் இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் இந்த மனம் சார்ந்த ஓர் ஆய்வினை மேற்கொள்கிறார். அந்த ஆய்வின் முடிவில் உடல் எவ்வளவு மோசமான நிலைமையில் இருந்தாலும் மன வலிமை இருந்தால் நம் உடல் பிரச்னைகளையும் தாண்டி சந்தோஷமாக வாழ முடியும் என்று ஆய்வினை முடித்தார்.
ஒரு கல்லூரியில் உளவியல் பேராசிரியர் ஓர் ஆய்வு செய்வதற்காக அந்த வகுப்பில் உள்ள மாணவர்களில் ஆர்வமுள்ள ஒரு மாணவரைத்
தேர்வு செய்தார். அந்த மாணவரை ஆய்விற்காகத் தன் அறைக்கு வரச் சொன்னார். அந்த மாணவனும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அவருடைய அறைக்கு வந்தார். ஆனால் அறையின் முன்னால் அவர் பார்த்த காட்சி பயத்தைக் கிளப்பியது.
அவர் அந்த அறையின் வாயிலை நெருங்கும் பொழுது அங்கு அந்தப் பேராசிரியர் பெரிய தீயை மூட்டி அதில் ஓர் இரும்புக் கம்பியை நன்றாகப் பழுக்கக் காய்ச்சிக் கொண்டு இருந்தார். அவர் பேராசிரியரிடம், ’சார் ஓர் ஆய்விற்காக என்னை வரச் சொன்னீர்களே’ என்று சொல்ல, அவரும் ’ஆமாம் ஆய்விற்குத்தான் நானும் தயாராகிக் கொண்டிருக்கிறேன். உனக்காக அறையில் ஒரு கட்டில் உள்ளது அதில் உன்னுடைய சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் உடம்புடன் குப்புறப் படுத்துக்கொள்’ என்றார்.
அவரும் என்னவோ ஏதோ என்று நினைத்துப் படுத்துக் கொண்டார். பேராசிரியர் அவர் முதுகில் எதையோ வைத்தார். நான் பழுக்காட்சிய அந்த இரும்புக் கம்பியை வைத்து சூடு போட்டு உள்ளேன் வலிக்கிறதா என்று கேட்டார். அவரும் ரொம்ப வலிக்கிறது சார் என்று கூறினான். அந்த இடம் மிகுந்த ரத்தக் காயத்துடன் ஒரு காயமான புண்ணை ஏற்படுத்தியது போன்ற உணர்வு அந்த மாணவருக்கு இருந்தது.
ஆனால் உண்மை என்னவென்றால் அந்தப் பேராசிரியர் பழுக்கக்காய்ச்சிய கம்பியைத் தொடவே இல்லை. அதற்குப் பதிலாகக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த ஓர் ஐஸ் கம்பியைத்தான் வைத்தார். மாணவர் ஏற்கெனவே பழுக்கக்காய்ச்சிய கம்பியைக் கண்ட பயத்தில் ஆசிரியர் கம்பி என்று கூறியதும் அப்படியே நம்பிவிட்டார். அவர் மனதில் கொண்ட எதிர்மறையான எண்ணத்தால்தான் அதிகக் குளிரினால் ஏற்பட்ட வலிகூட ரத்தம் வடியும் புண்ணை ஏற்படுத்தியது போன்ற உணர்வை அவருக்குத் தந்தது.
நேர்மறை மற்றும் எதிர்மறையான சிந்தனைகளால் ஏற்படும் விளைவுகளை மாணவர்களுக்கு விளக்குவதற்காகவும், நம் மனதை நம்மால் கையால் முடியும் என்பதை உணர்த்துவதற்காகவும் அந்த ஆசிரியர் இவ்வாறு செய்தார்.
தொடர்ச்சியாக நம் மனம் நேர்மறை எண்ணங்களை அசைபோடும் போது நம்மை அறியாமலேயே நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு இந்த ஆய்வுகள் சான்று.
படைப்பாளர்கள் :
ஏ. மாலதி
கோவை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் , இணை பேராசிரியராகப் பணி புரிபவர். அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள பதின் பருவ மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு , மென் திறன் மேம்பாடு, கல்வியின் முக்கியத்துவம், சைபர் கிரைம் மற்றும் வாழ்க்கை திறன் மேம்பாடு உள்ளிட்ட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தி வருகிறார். சமூக செயற்பாட்டாளர் சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். சீர்திருத்த சிந்தனைகளை கொண்டவர்.
திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி (தன்னாட்சி) 2023ஆம் நூற்றாண்டு விழா மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்திற்கான, அசாதாரண சேவை மற்றும் மேம்பாட்டிற் க்காகச் ’சிறந்த பெண் ஆசிரியர் விருதை’ச் சமீபத்தில் பெற்றுள்ளார்.
பி. பாலதிவ்யா
பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழிக்கான Chat bot பயிற்சியாளராக உள்ளார். வாசிப்பதில் தீவிர ஆர்வம் உடையவர்.