மனம் என்பது உருவமில்லாதது. எண்ணங்கள், உணர்வுகள், நினைப்பது, விரும்புவது, வெறுப்பது இவையெல்லாம் மனதின் செயல்களாக உருவகிக்கப்படுபவை. மனதின் செயல்பாடுகள் உடலைப் பாதிக்கும். நாம் வளர, வளர நம் சிந்தனைகள் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், தோல் ஆகியவற்றைக் கொண்டு மனம் என்கிற ஒன்று தன்னைத் தானே கட்டமைத்துக் கொள்கிறது.

மனநலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அது வெளிப்படையாக மற்றவர்களுக்குத் தெரிகிறது. மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை மன ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை. சிந்திக்கும் திறனில் மாறுபாடுகள் ஏற்படும். 

உளவியல் ரீதியாகவும், உணர்வுகள் ரீதியாகவும் அன்றாட நடவடிக்கைகளில் எதாவது கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்படும் மாறுபாட்டால் மனநிலையில் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாட்டை நாம் அறிந்து கொள்ளலாம்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மத நம்பிக்கையின் அடிப்படையிலும்,  மூடப் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் பேய் பிடித்தவர்களாகக் கருதி,  கட்டி வைத்துத் துன்புறுத்துவதும், ஒதுக்கி வைப்பதுமான நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. மூடநம்பிக்கை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பேய் பிடித்தவர்களாகக் கருதி பேய் விரட்டுதல், சாமியாடுதல், வேப்பிலை அடித்தல், குறி கேட்டல் என்று பலவித துன்பத்திற்கு ஆளாக்கி வந்தார்கள். மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்று முட்டாள்தனமான நம்பிக்கையில் நிறையப் பெண்கள் பலிகடா ஆக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது.

ஒருவர் தன்னுடைய கஷ்ட, நஷ்டங்களை, சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள குடும்பம், நண்பர்கள், சமூகம் என்று பலதும் வேண்டும். தனிமையில் உழன்று கொண்டிருப்பவர்கள் எளிதாக மனநல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மனநலத்தை  நன்றாகப் பேண வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1992ஆம் ஆண்டு முதல் உலக மனநல நாள் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பச்சை ரிப்பன் மனநலத்துக்கான சர்வதேச அடையாளம். உலக சுகாதார நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் மனநலம் குறித்த கொள்கையை அறிவிப்பது உண்டு. ’அனைவருக்கும் மனநலம் மற்றும் நல்வாழ்வை உலகளாவிய முன்னுரிமையாக ஆக்குங்கள்’ என்பது இந்த 2024ஆம் ஆண்டின் தலைப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

தெருக்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் யார்? தனது குடும்பத்தில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்ல விரும்பாதவர்கள்,  பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டு விடுகின்றனர். போக்கிடம் இன்றித் திரியும் அவர்களின் வாழ்வு அவலமாக மாறிவிடுகிறது. இதில் பெண்களின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. மனநிலை பிறழ்ந்த பெண்களைக்கூடப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கி விடும் கயவர்களும் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மனநிலை பிறழ்ந்தவர்களைச் சங்கிலியால் கட்டி வைத்திருந்ததால் கடந்த 2001ஆம் வருடம் ஏர்வாடியில் உள்ள மனநலக் காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது தப்பிக்க முடியாமல் இருபத்தெட்டு பேர் கருகி இறந்தனர். அதன் பின்னர் மனநோயாளிகளைக் கருணையோடு அணுக அறிவுறுத்தப்பட்டது. ராமேஸ்வரம், ஏர்வாடி பகுதிகளில் குறிப்பிட்ட மாதங்களில் மனநலப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது. அங்கு வரும் வெளிமாநிலத்தோர் தங்களுடன் வரும் மனநிலை சரியில்லாத நபர்களை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். மனச்சிதைவு (Schizophrenia), இருமனக் குழப்பம் (bipolar) போன்ற தீவிர மனநிலை பாதிப்பிற்குள்ளானவர்கள், மன அழுத்தம், மனச் சோர்வு, மனப்பதற்றம், கவலை, அச்சக்கோளாறு போன்ற பொதுவாகக் காணப்படும் மன நோய்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் மது, புகையிலை, போதைப் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்வதன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல வகை மனநோயாளிகள் உள்ளனர்.

மருத்துவம் பயிலும் மாணவர்களும் ஒரு கட்டத்தில் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்திருக்கிறது. போதுமான ஓய்வு மறுக்கப்படும் நிலைதான் இவர்கள் மனநலச் சிக்கலுக்கு அடிப்படை காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் கடந்த ஐந்து வருடங்களில் 119 மருத்துவ மாணவர்கள் மனநலப் பிரச்சினைகளில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவத் துறையில், கல்வியில், மாணவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களால் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் நமது நாட்டில் 20 பேர்களில் ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்று கண்டறிந்துள்ளனர். ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மனநல மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் 4 லட்சம் மக்களுக்கு ஒரு மனநல மருத்துவர்தான் இருக்கிறார்.

பெண்களின் மனநலப் பாதிப்புகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. மாதவிடாய் தொடங்கியது முதல் மெனோபாஸ் வரையிலான காலக்கட்டத்தில் ஹார்மோன்களாலும், ஆணாதிக்கக் குடும்ப அமைப்புகளாலும், பாதுகாப்பற்ற சமூகக் கட்டமைப்பாலும் பெண்களுக்கு அதிக அளவிலான மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் அது குறித்துப் பொதுச் சமூகம் பெரிய அளவில் அலட்டிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. குழந்தைப் பருவத்தில் ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டு, பாலினப் பேதத்தில் ஆரம்பிக்கிறது இந்தப் பிரச்னை. பதின் பருவத்தில் மாதவிடாய் ஆரம்பம், பாலியல் உணர்வுகளைக் கையாளுதல் குறித்த சந்தேகங்கள், எதிர்பாலினத்தவரோடு ஈர்ப்பு, தன்பாலினத்தவரோடு ஈர்ப்பு என்று பல அழுத்தங்கள் ஏற்படுகின்றன. வேலைச் சூழல், குடும்பச் சூழல், திருமண உறவுகளில் சிக்கல், கர்ப்ப காலம், மெனோபாஸ், மூட் ஸ்விங், உடல் நிலைப் பிரச்னைகள் போன்றவற்றால் மனப் பதற்றம், மனச் சோர்வு போன்றவை பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகின்றன. பெண்களின் பிரச்னைகள் அதிகம் பேசப்படுவது இல்லை. இவற்றையெல்லாம் தாண்டி வர வேண்டும் என்று மட்டுமே வற்புறுத்தப்படுகிறார்கள். சமூகமும் குடும்பமும் இணைந்துதான் பெண்களின் மனநலம் குறித்துச் சிந்திக்க வேண்டும். மேலும் எந்த இடத்திலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடம்தான் ஒப்படைக்கப்படுகிறது. அந்தப் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றும் பொருட்டு தங்கள் மனநிலைச் சமன்பாட்டை இழந்தவர்கள் அநேகம். 

மனநிலை பாதிக்கப்படுபவர்களை நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம். வழக்கமான பேச்சு, வழமையான செயல்பாடுகளில் இருந்து அவர்கள் தொடர்ந்து மாறுபட்டு நடந்து கொள்ளும் போது, அவர்களைச் சுற்றி இருக்கும் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்கள் இவற்றைக் கவனிக்கும் பட்சத்தில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விடலாம். மனம் சரியில்லை என்று யாராவது சொல்லும்போது உதாசீனப்படுத்தாமல், ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்களுடன் கட்டாயம் பேச வேண்டும். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்கள் நிலையைத் தெரிவிக்கும்போது, நாம் அறிவுரை என்கிற பெயரில் அவர்களது மன அழுத்தத்தை இன்னும் அதிகரிக்காமல், கூடியவரை அவர்களுடன் இணக்கமாகப் பேசி, நேர்மறை எண்ணங்களை அவர்கள் மனதில் விதைக்க முயற்சிக்க வேண்டும். அவர்களைக் கேலி செய்யாமல், கூடுமானவரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டாலே அவர்களது பிரச்னை பாதி தீர்ந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. மனநலப் பிரச்னைகள் பொதுவாகத் தற்கொலைக்குத் தூண்டுகிறது. அந்த நிமிடங்களைக் கடக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். 

நாம் எல்லாருமே சமயங்களில் மனநிலை பாதிப்புகளுக்கு உள்ளாகிறோம். ஆனால் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வெளிப்படையாகத் தெரிவதில்லை. கட்டுப்பாட்டை மீறிய பாதிப்புகளே மனநோய்க்கு வழிவகுக்கின்றன. அரசு மனநோயாளிகளைக் கருணை மனநிலையில், கனிவுடன் அணுக வேண்டும். அவர்களுக்குத் தேவையான காப்பகங்கள், மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் போன்றவற்றை உடனடியாக அதிகரிக்க வேண்டும். நாமும் நம் பங்குக்கு மனநிலை பாதிப்புக்கு ஆளானவர்களைக் கருணையோடு அணுகிப் பழகுவோம். நம் எல்லோரையும் போல அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அழகாக வாழ நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். நம் அன்பும், தொடர்ச்சியான மருத்துவக் கவனிப்பும் அவர்களை எளிதில் இந்தப் பாதிப்புகளில் இருந்து மீட்டெடுக்க வழிவகுக்கும்.

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.