சமீபத்தில் பாசுமதி அரிசி விளம்பரம் ஒன்றைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். மாமனார் ஈஸிசேரில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார், “லன்ச்க்கு தேங்காய் சாதம் ஓகேவா?” என்று மருமகள் கேட்க, “பாசுமதி அரிசியில தேங்காய் சாதம், உன் செலக்சன்” என்று நக்கலாக மகனிடம் சொல்வார். பாசுமதி அரிசியில் மருமகள் செய்யப்போகும் தேங்காய் சாதத்தை கண்ணால் காண்பதற்கு முன்பே விமர்சிக்கிறார். அதுவும் அவர் விமர்சிப்பது அந்தத் தேங்காய் சாதத்தை அல்ல. அதைச் சமைக்கப் போகும் பெண்ணையும், இப்படிப்பட்ட பெண்ணை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்த மகனையும். இல்லை எனக்குப் புரியவில்லை. ஒரு தேங்காய் சாதம் சமைக்கும் திறமையை வைத்து வாழ்க்கை முழுவதும் உடன் வரும் துணையைத் தீர்மானிக்க முடியுமா? இன்னமும் சமையல் திறனை மட்டும் வைத்துதான் பெண்கள் குடும்பங்களில் மதிக்கப்படுகிறார்களா?
அந்த மாமனார் எழுந்து போய் ஒரு காப்பியாவது போடுவாரா அல்லது தி க்ரேட் இண்டியன் கிச்சனில் வரும் மாமனார் போல ப்ரெஷில் பேஸ்ட்டைக்கூட வைத்துத் தர வேண்டுமா என்று தெரியவில்லை. இதே காட்சியில் அந்த மாமியார் அருகில் தரையில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருக்கிறார். மகன் லேப்டாப்பில் வேலை செய்கிறார், மருமகள் கிச்சனில் பிஸியாக இருக்கிறார். அந்தக் கால ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்த படம் டைரக்டரின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணமா என்று தெரியவில்லை.
அப்பா, மகன் இருவரையும் இருக்கைகளில் அமரவைத்து காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் அந்த வயதானப் பெண்மணியைக் கீழே அமர வைக்கக் காரணம் என்ன? பெண்களை இருக்கையில் அமர வைக்கக்கூட ஏன் உங்களுக்கு மனம் வரவில்லை? அந்த மாமனார் காய்கறி நறுக்கிக் கொண்டிருப்பதைப் போல் உங்களால் ஒரு காட்சி வைக்க முடியாதா? அதைத் தடுப்பது எது?
இப்படிப்பட்ட விளம்பரங்களில் பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்களா? பெரும்பாலும் இல்லை. இந்த விளம்பரங்கள் மீண்டும் மீண்டும் ஜெண்டர் ஸ்டிரீயோடைப் என்பதைத்தான் மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. ஒரு நல்ல மனைவியாக, நல்ல தாயாக, நல்ல மருமகளாக எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பெண்களுக்கு மறைமுகப் பாடம் எடுக்கின்றன.
பெண்கள் எப்போதும் பிறரைச் சார்ந்து வாழ்பவர்களாகவும், கீழ்ப்படிந்தவர்களாகவும், அறிவுத்திறனிலும் சமூகப்படிநிலையிலும் குறைந்தவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் பெண்களுக்காகச் சமூகத்தால் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள்தாம். இந்தப் பிம்பங்களை உடைத்து, பாலினச் சமத்துவம் பெற்ற நாகரீகமான சமுதாயத்தை நோக்கிப் பயணம் செய்ய ஒரு சில அடிகளே எடுத்து வைக்கத் தொடங்கி இருக்கிறோம்.
குடும்பம் சார்ந்த வேலைகளில் பாலினச் சமத்துவம், பெண்களைக் குடும்பப் பராமரிப்பு வேலைகளுடன் மட்டுமே தொடர்புபடுத்துதல் பற்றி எவ்வளவு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டாலும், இந்த விளம்பரங்களில் சமைப்பது, துணி துவைப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது இவை எப்போதும் பெண்களுடனேயே தொடர்புபடுத்தப்படுகின்றன. பெண்களே கரையேறிவிட்டாலும் இந்த விளம்பரங்கள் அவர்களை விட்டுவிடத் தயாராக இல்லை.
இன்னொரு ரெடி மிக்ஸ் விளம்பரத்தில், காலை உணவுக்காகக் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆளுக்கோர் உணவு வகையைக் கேட்கின்றனர். உடனடியாக அந்த அம்மா ரெடி மிக்ஸ் பயன்படுத்தி அத்தனை உணவு வகைகளையும் தயார் செய்து விடுவார். ஐந்தாறு கைகளோடு அதிசயம் நிகழ்த்துபவராக அந்தப் பெண் சித்தரிக்கப்படுகிறார்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு வேளை உணவுக்கே நான்கைந்து வகைகளைச் சாப்பிட விரும்பினாலும் முகம் சுளிக்காமல், சோர்வடையாமல் உடனடியாகச் சமைத்துத் தருபவரே அம்மா. இதுதான் அந்த விளம்பரம் சொல்ல வரும் செய்தி.
தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்களைப் பற்றிய இத்தகைய சித்தரிப்பு, சுவையாகவும், வகை வகையாகவும் சமைப்பதன் மூலம் தங்கள் குழந்தைகளுக்குச் சரியான தாயாகவும், கணவனுக்குச் சிறந்த மனைவியாகவும் இருக்க முடியும் என்கிற ஓர் உளவியல் அழுத்தத்தைப் பெண்களுக்கு அளிக்கிறது.
ரெடி மிக்ஸ் என்பது சமையலுக்குச் செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்காகவும் மிக எளிதான முறையில் சமைப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நோக்கத்தை முதன்மைப்படுத்தாமல், இந்த ரெடி மிக்ஸ் இருந்தால் நீங்கள் அதிக உணவு வகைகளைத் தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்யலாம் என்று இன்னும் கொஞ்சம் அதிகமான சுமையைப் பெண்களின் மேல் ஏற்றி வைக்கிறது. சமைப்பதை எவ்வளவு எளிமைபடுத்தினாலும் அது ஆண்களின் வேலை இல்லை, அப்படித்தான் இந்த விளம்பரங்கள் சொல்ல வருகின்றனவா? பெரும்பாலான ரெடி மிக்ஸ் வகைகள் வெந்நீர் ஊற்றினால் போதும் தயாராகிவிடும். அந்த வெந்நீரைக் கூட ஆண்கள் வைப்பதாகக் காட்சிப்படுத்த முடியாத அளவுக்குத் தடுப்பது எது?
ரவாகேசரி விளம்பரம் ஒன்று வருகிறது, வெந்நீரில் சேர்த்துக் கிளறினால் போதும், ஆறே நிமிடங்களில் தயாராகிவிடும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த விளம்பரத்தில்கூடத் தற்போது மார்க்கெட்டில் இல்லாத ஒரு பெண் நடிகர் வந்துதான் கேசரி கிளற வேண்டியதாயிருக்கிறது.
கல்வி கற்று, தொழில் வல்லுநர்களாகப் பணிபுரியும் பெண்களையும் விளம்பரங்கள் விட்டு வைப்பதில்லை. வேலை தொடர்பான அழுத்தத்துடன் வீட்டுக்கு வரும் பெண்களுக்குக் குடும்பத்தில் இருந்து ஆதரவோ உதவியோ மிகச் சிறிய அளவிலேயே கிடைக்கிறது, சிலருக்கு அதுவும் இல்லாமல் போகிறது. இந்தத் தொலைக்காட்சி விளம்பரங்கள் பர்ஃபெக்ட் அம்மா, பர்ஃபெக்ட் மருமகள், பர்ஃபெக்ட் மனைவி என்று சித்தரித்து அந்தப் பெண்ணின் மேலான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்துகின்றன.
காலம்காலமாகச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பெண்ணடிமைக் கருத்துகளை வலிந்து திணிக்கும் செய்திகளின் இலக்காக பெண்களை இந்த விளம்பரங்கள் பயன்படுத்துகின்றன.
ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்துகளில் கூட்டாக மாற்றம் வராமல், இந்த ஸ்டீரியோடைப்களை நாம் தடுக்க முடியாது. எதிர்ப்புக் குரல் எல்லா வீட்டு வரவேற்பறையிலிருந்தும் ஒலிக்க வேண்டும்.
பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் தொடர் அழுத்தங்களின் காரணமாகவும் செயல்பாடுகளின் தாக்கத்தினாலும் சில மாறுபட்ட விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கழுவும் மீன் குழம்பு சமைத்த பாத்திரம், ஃபுட் பால் விளையாடிவிட்டு வரும் மகளின் டிஷர்ட்டை துவைக்கும் அப்பா, தன் பிள்ளைகளின் ஸ்கூல் ப்ராஜெக்ட் செய்வதற்கு உதவி செய்யும் அப்பா என்று காட்சிகள் சிறிதளவு மாறி இருக்கின்றன.
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையைப் பார்த்து, “சமைக்கத் தெரியாதுன்னா, அப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க?” என்று பெண் கேட்க “ஆர்டர் பண்ணுவேன்” என்று கூலாகச் சொல்லும் மாப்பிள்ளையை விளம்பரத்திலாவது கண்ணால் காண நாம் எத்தனை தலைமுறைகள் காத்திருந்தோம். “சரி, ஒரு டீயாவது போடத் தெரியுமா?” என்று மீண்டும் கேட்க, கிச்சன் எங்கே இருக்கிறது என்று கேட்டு டீ போட்டுக் கொடுக்கிறார் மாப்பிள்ளை. கையில் காபித் தட்டுடன், ஆடத் தெரியுமா? பாடத் தெரியுமா? என்று பறந்து வந்த அத்தனை கேள்விகளுக்கும் இத்தனை காலமாக நின்று நிதானித்து பதிலளித்த பெண்களைச் சற்றே ஆசுவாசப்படுத்துகின்றன இத்தகைய விளம்பரங்கள்.
விளம்பரங்களில் பெண்களை முற்போக்காகப் பிரதிநிதித்துவப்படுத்துவது இப்பொழுதுதான் ஆரம்ப நிலையில் இருக்கிறது. அதிகாலையில் எழுந்து, தலையில் ஈரத் துண்டுடன், வாசலில் கோலமிட்டு முடித்து, கணவனுக்கு ஃபில்டர் காபி கொடுக்கும் பெண்கள் என்கிற நிலையிலிருந்து, மனைவியைச் சுகமாக எழுப்ப நறுமணம் மிக்க காபி தயாரிக்கும் கணவன் என்கிற காலத்திற்கு நகர்ந்து வந்திருக்கிறது.
சமகாலப் பெண்களைப் பற்றிய யதார்த்தமான விஷயங்களை இந்த விளம்பரங்கள் காட்சிபடுத்தும்போது நிச்சயம் அது பெண்களால் வரவேற்கப்படும். யார் வீட்டு வரவேற்பறைக்குள்ளும் அழைக்காமல் செல்லும் அதிகாரம் படைத்த இந்த விளம்பரங்கள் பாலினச் சமத்துவத்தைக் கையில் எடுக்கும்போது மக்களை இன்னும் நெருக்கமாகச் சென்றடையும்.
விளம்பரங்கள், வெளியீடுகள், எழுத்துகள், ஓவியங்கள், உருவங்கள் அல்லது எதிலும் பெண்களை அநாகரீகமாகச் சித்தரிக்கக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் ’Indecent Representation of Women (Prohibition) Act, 1986’. காலத்திக்கேற்ப இந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டியதும் அவசியமாகிறது. பாலினச் சமத்துவத்தை இந்த விளம்பரங்களில் கொண்டு வருவதற்காகவும் , ஜென்டர் ஸ்டிரீயோடைப் என்பதை நிறுத்துவதற்காகவும் சட்டத் திருத்தம் கொண்டுவருவதே இதற்கான ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.
(தொடரும்)
References:
- https://www.ascionline.in/wp-content/uploads/2024/05/Annual-Complaints-Report-2023-24.pdf
- https://asiapacific.unwomen.org/en/stories/press-release/2023/07/new-campaign-calls-out-gender-stereotypes-in-indian-advertising
தரங்கிணி
எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.