வீடு  விசாலமானதாகதான்  இருக்கிறது,  ஆனால்   மூச்சு  முட்டுகிறது  என்கிறார்   கவிதா. இவர் மதுரையில்  சுவடுகள் எனும்  அறக்கட்டளையை நிறுவி  ஏராளமான,  சமூகப் பணிகளைத்  தொடர்ச்சியாகச்  செய்துவருகிறார். கவிதா  சாதாரண   நடுத்தரக்   குடும்பத்தில்  பிறந்தவர். இவருக்கு  இரு சகோதரிகள்.  அப்பா  குடும்பத்திலிருந்து  தனித்துச்        சென்ற  பிறகு குடும்பத்தின்  பொருளாதாரச்  சூழல்  மோசமாகியுள்ளது. இச்சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு  கவிதா  வேலைக்குச் செல்ல வேண்டிய  நிர்பந்தம்.  பன்னிரண்டாவது  முடித்த பிறகே  வேலைக்குச் செல்லும்   கவிதாவிற்கு வாழ்க்கையின்  இறுதி லட்சியம் திருமணமே.  திருமணத்திற்கான நகையைச்  சேமிப்பதும் தன்னுடைய  உடன்பிறந்தோரின் நலனில்  கவனம்   செலுத்துவதும் தான்  கவிதாவிற்கு  பிரதான  தேவையாக  மாறிப்  போனது.

 எதைத் தன்  வாழ்நாளின்   இறுதி  லட்சியம்  என்று          கவிதா  கருதினாரோ  அதுவும்  கைகூடியது.  தனக்கு விருப்பமான  நபரையே  மணமுடித்தார்.  தன்னைப் புரிந்துகொண்ட, தன்னுடைய  உடன்பிறந்தவர்களின்  எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்கும்  துணையே கவிதாவிற்கு  கிடைத்தது  கவிதாவின்  வாழ்க்கையை  அர்த்தமுள்ளதாக்கியுள்ளது. 

கவிதாவுக்கு வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது ஜல்லிக்கட்டுப்  போராட்டம்  தீவிரமாக  இருந்த  காலக்கட்டம். கவிதா  தன்னைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டு  தன் செயல்பாட்டைத் தொடங்கினார். 

 ஜல்லிக்கட்டு  போராட்டம்  வெற்றிப் பெற்றதும்  கொண்டாட்டத்தின்   விளைவில்   தைப்புரட்சி   இயக்கம் கவிதாவின் நண்பர்  பாக்கியராஜ்  மற்றும் மில்டன் முயற்சியால் உருவானது.  ஜல்லிக்கட்டு  போராட்டத்தில் துடிப்புடன்  கலந்துகொண்ட பெரும்பாலான  மாணவர்கள்,  தைப்புரட்சி   என்னும்   பெயரில்  இயக்கமாக  ஒருங்கிணைந்தனர்.  தைப்புரட்சி இயக்கத்தில் தன்னையும்  ஓர்  அங்கமாக இணைத்துக்  கொண்டார் கவிதா. இவ்வியக்கமானது  சமூகத்தில் நிகழும் அநீதிக்கு  எதிரான  ஆர்ப்பாட்டங்களை  முன்னெடுத்துள்ளது.

மீத்தேனுக்கு  எதிரான  போராட்டத்தை  மதுரை  தல்லாகுளத்தில்   தைப்புரட்சி இயக்கம் நடத்தியது. இப்போராட்டத்தில்  கவிதாவும்  அவரது இணையர்  முனிஷு ம்  கலந்துகொண்டனர்.   காவல் துறை  முனிஷைக்  கைது  செய்தது.   

தைப்புரட்சி  இயக்கத்தின்  சார்பாக  ஞாயிறு  தோறும்   ‘கிணத்தைக்  காணும்’ என்கிற  தலைப்பில்  அரசியல் வகுப்பை  கவிதாவும்  சக தோழர்களும்  இணைந்து நடத்தி வருகின்றனர்.  என்னது  வடிவேல்  படத்தில்  வருவது  போல்   கிணத்ததைக்  காணோமா?   இளைஞர்கள்  மத்தியில்  செயல்படுவதற்கு இவ்வாறான  தலைப்புகளும்  சுவாரசியமான    திட்டங்களும்  தேவைப்படுகின்றன.  தைப்புரட்சி  இயக்கத்துடன்   இணைந்து  கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவுவதற்காக மதுரையில்  உண்டியல் வசூலில்  கவிதா  ஈடுபட்டுள்ளார்.  இயக்கத்தில்  சேர்ந்த  குறுகிய  காலத்திலேயே  தலைமை பொறுப்பும்  கவிதாவிற்குக்  கிடைத்தது.  ஏழு  தமிழர்  விடுதலை, நீட்  தேர்வுக்கு  எதிரான போராட்டம்,  எட்டுவழிச்  சாலைக்கு  எதிரான  போராட்டம்  எனக்  கவிதாவின்  போராட்டக்களம்  விரிவடைகிறது. 

இயக்க  செயல்பாடுகள்  தீவிரமாகிக் கொண்டிருந்த  போது   தவிர்க்க  முடியாத  சூழ்நிலையால்  இயக்கத்திலிருந்து  வெளியேறி,  சுவடுகள் அறக்கட்டளையைத் தொடங்கினார். மாணவர்களிடம்  உரையாடுவதற்குப் பள்ளிக்  கல்லூரிகளிலிருந்து  அழைப்பு   வருகிறது. இதனால்  மாணவர்கள்  மத்தியில்   முற்போக்கான கருத்துகளைப்  பேசுவதற்கான  வாய்ப்புகள் உள்ளன. 

சுவடுகள்  அறக்கட்டளையின்  சார்பாக  அரசுப்  பள்ளிகளில்   உள்ள  கழிவறை  பராமரிப்புப்  பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர்  சு. வெங்கடேசன்  கொரானா  காலத்தில் அன்னவாசல்  திட்டத்தைச் செயல்படுத்தினார்.  இதன்  மூலம்  சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  இந்தத்  திட்டத்தில் சுவடுகளும்  இணைந்து  பணியாற்றியது. கொரனாவுக்குப்  பின்  தவிர்க்க  முடியாத  காரணத்தால் அன்னவாசல் திட்டம்  தொடர முடியவில்லை. இதுவரை  உணவளித்து  பழகிய  கைகளால்   அப்பணியை   நிறுத்த  முடியவில்லை. கவிதா,   ’தனியொருவனுக்கு   உணவில்லை’  என்கிற   திட்டத்தின்   கீழ்   தொடர்ந்து  ஐம்பது  முதல்  நூறு   பேருக்கு உணவு  வழங்கப்பட்டுள்ளது.  தற்போது   சுவடுகள் மூலம்  முதியோர் இல்லமும்  தொடங்கப்பட்டது. முதியோருக்குப்  பாதுகாப்பான   சுற்றுச்சூழலையும்,  கணவனால்   புறக்கணிக்கப்பட்ட பெண்  ஒருவருக்கும்  அடைக்கலமாகவும்   முதியோர்  இல்லம் உள்ளது. 

சுவடுகள் அறக்கட்டளை  கவிதாவிற்கு  மட்டுமல்லாமல் மற்ற  பெண்களுக்கும்  பாதுகாப்பாகச் செயல்படுவதற்கான  களமாக  உள்ளது. 

   படைப்பாளர்:

கு.சௌமியா, பத்திரிகையாளர்