ஒரு விளையாட்டு விளையாடுவோமா?
டாக்டர்
கலெக்டர்
போலீஸ்
இந்த மூன்று வார்த்தைகளையும் கண்ணை மூடிக்கொண்டு மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். உங்கள் மனக்கண்ணில் தெரிந்த உருவம் என்ன? ஆணா? பெண்ணா?
நம் சமுதாயம் பெண்களுக்கென்றே சில வேலைகளை உருவாக்கி வைத்துள்ளது. ஆசிரியர், நர்ஸ், ரிசப்ஷனிஸ்ட், ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் அந்தப் பட்டியலில் அடங்கும். ஏன் என்று கேட்டால் பெண்களுக்குத்தான் பொறுமை அதிகம். அவர்களால்தான் குழந்தைகளையும் நோயாளிகளையும் சரியாகக் கவனித்துக் கொள்ள முடியும் என்று ஒரு கதை சொல்வார்கள். எந்த அறிவியல் ஆய்வுகளின் முடிவின்படி பெண்களே பொறுமைசாலிகள் என்று சமூகம் விதித்து வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. காலம் காலமாக ஒரு விஷயத்தை, குடும்பமும், சமுதாயமும் சொல்லிச் சொல்லி கட்டமைத்திருக்கும் பிம்பம்தான் இது.
இந்தப் பிம்பத்தை உடைத்தெறிந்து ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த துறைகளிலும் முதல் முறையாகச் சாதித்த பெண்கள் உண்மையிலேயே வரலாற்றில் தூக்கிச் சுமக்கப்பட வேண்டியவர்கள். தமிழகத்தின் முதல் டாக்டரான முத்துலட்சுமியில் இருந்து விண்வெளிக்குச் சென்ற கல்பனா வரை. இப்படிப் பெண்கள் உடைக்க வேண்டிய பர்னிச்சர்கள் இன்னமும் நிறையவே உள்ளன.
எல்லா வீடுகளிலும் சமைப்பது பெண்களாக இருந்தாலும் எல்லா ஹோட்டல்களிலும் தலைமை செஃப் பெண் அல்ல. ஏன் இந்த முரண்பாடு? பெண்களுக்கு இயற்கையிலேயே நன்றாகச் சமைக்க வரும் என்கிற கூற்றெல்லாம் பொய்யா கோபால்? அதிலும் நளபாகம், பீமபாகம் என்று அதில் கூட ஆண் ஐகான்கள்தான் இருக்கிறார்கள். திரௌபதிகூடச் சமைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள், ஆனால் பாருங்கள், திரௌபதி பாகம் வரவில்லை, பீமபாகம்தான் வந்திருக்கிறது. புராணக் காலத்தில் இருந்து பெண்கள் சமைத்துக்கொண்டே இருந்தாலும் ஒரு பெண்கூட சமையல் ஐகான் ஆக மாற முடியவில்லை.
1935 லேயே தமிழ் சினிமாவில் டைரக்ஷனில் கால் பதித்தவர் டி. பி. ராஜலக்ஷ்மி. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் இன்னமும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் இந்திய அளவிலேயே பெண் சினிமா டைரக்டர்கள் இருக்கிறார்கள்.
சி. எப். எ. நிறுவனம் 2023இல் நடத்திய ஆய்வின்படி, ஐடி துறையில் பணிபுரியும் பெண்கள் 30 சதவீதத்தினர் மட்டுமே. இன்னும் பாதி இடத்தைக்கூடப் பிடிக்கவில்லை. அதற்குள்ளாகவே, ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் குடும்பத்தைச் சரியாக கவனிப்பதில்லை, வீட்டில் சமைப்பது இல்லை என்று சரமாரியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைத்து தனித்து முத்திரையிடப்படுகின்றனர்.
ஊதியம் பெறாத குடும்பப் பொருளாதார வேலைகள், குறைந்த ஊதியம் தரும் துறைகள் இவை அனைத்தும் பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆச்சரியப்படுவதற்கு அவசியமே இல்லாத வகையில், ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பில் ஐம்பது சதவீதத்துக்கும் மேல் பெண்களே. கேரளா, மிசோரம் போன்ற மாநிலங்களில் எண்பது சதவீதத்துக்கும் அதிகமான பெண் ஆசிரியர்கள் உள்ளனர்.
நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த துறைகள் எப்போதும் ஆண் சார்ந்த துறைகளாகவே பார்க்கப்படுகின்றன. சீப் பைனான்சியல் ஆபிசர், பைனான்ஸ் டைரக்டர், பைனான்ஸ் மேனேஜர் இது போன்ற பதவிகளை வகிக்கும் பெண்கள் ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவு. வெறும் 15.9% தான்.
நம் நாட்டில் படிப்பும், திறமையும் மிக்கப் பெண்களின் எண்ணிக்கைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிகளின் எண்ணிக்கைக்கும் இடையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி? இந்த இடைவெளிக்குக் காரணம் ஆக்குபேஷனல் சார்ட்டிங். இன்னின்ன துறைகள் ஆண்களுக்கானவை என்று எழுதப்படாத விதிகள் நம் அனைவரின் அறிவுக்குள்ளேயும் அடங்கி உள்ளது. நம்மால் முடியும் என்று நம் மனம் நம்பும் வேலையைத்தான் நம்மால் செய்ய முடியும். இது பெண்களுக்கான துறை அல்ல என்று பொதுப் புத்தியில் ஆழப் பதியவைத்த பிறகு அதை உடைத்து வெளியேறுவது சாதனையில் சேர்ந்துவிடுகிறது. இயல்பாகப் பெண்களால் செய்யக்கூடிய, செய்யவேண்டிய விஷயங்களையெல்லாம் இது உனக்கானதல்ல என்று சொல்லி, எட்டாத தூரத்தில் வைத்துவிட்டு பிறகு எட்டி பிடிக்கும் பெண்களைப் பார்த்து, ’சிங்கப்பெண்ணே’ என்று பாட வேண்டியது. அவர்களை இயல்பான சமமான வாய்ப்புகளுடன் மனிதப் பெண்களாகவே வாழவிடுங்கள்.
இன்னமும்கூட பெண் சீனியர் மேனேஜர்களுக்குக் கீழ் பணபுரிய விரும்பாத ஆண் மேனேஜர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ஆண் மேனேஜர்கள் தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை ஏதோ குடும்பத்தின் பணத்தேவைக்காக மட்டுமே வேலைக்கு வந்தவர்களாகப் பாவிப்பார்கள். சமூகப்படிநிலைகளில் கீழ் நிலையில் வைக்கப்பட வேண்டியவர்கள் பெண்கள் என்கிற நச்சுக் கருத்துகளுடன் உலவும் நபர்களைக் கொண்ட நாடு இது. பெண் என்பவள் எப்போதும் ஓர் ஆணின் பராமரிப்பிலேயே இருக்கப்பட வேண்டியவர் என்கிற எண்ணம் உள்ளுக்குள் மேலோங்கி இருப்பதால், பெண்களால் தனித்து சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர்களால் நம்ப முடிவதில்லை. குடும்பமாக இருந்தாலும், பணியிடங்களில் வெளிப்படும் ஆணாதிக்க மனநிலை கொண்ட சூழலானாலும், படிப்பு, திறமை, வேலை செய்யும் திறன் இவை எல்லாப் பாலினத்தவர்களுக்கும் உரித்தானது என்கிற புரிதல் இல்லாதவர்களைப் புறந்தள்ளிவிட்டு முன்னேறிச் செல்வதே புத்திசாலித்தனம்.
பணியிடங்களில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாததற்குக் காரணம், உயர்மட்டத்தில் அதிகாரம் படைத்த பெண் தலைவர்கள் இல்லாததே. ஆரம்ப கட்ட நிலை பதவிகளில் இருக்கும் பெண்களை ஆதரித்து, ஊக்கப்படுத்தி தலைமை பதவிக்கு முன்னேற்றிச் செல்லும் வழிகாட்டிகளைப் பெண்களுக்கு ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல் அதற்கான திறன் பயிற்சிகள் அளிப்பது ஆகியவற்றை நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை. அதைவிட முக்கியமாக அதற்கான குடும்பச் சூழ்நிலை அமைவதும் அவசியமாகிறது.
புதிதாகத் திருமணம் ஆன பெண்கள் அல்லது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு, ஓர் ஆறு மாதம் வெளிநாட்டில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்து, அது அவர்களின் பதவிக்கு முன்னேற்றம் தரும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் பட்சத்தில் எத்தனை பெண்கள் யெஸ் சொல்வார்கள்?
அவர்களை நோக்கி என்னென்ன கேள்விகள் நீளும்? இப்போதானே கல்யாணம் ஆகி இருக்கிறது, ஒரு வருடத்துக்குள் குடும்பத்துக்கு வாரிசு பெற்றுத் தருவது உன் கடமையல்லவா? அதற்குள் துணைவரைப் பிரிந்து எப்படி வெளிநாடு செல்வாய்? குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள்?
இதில் ஒரே ஒரு கேள்வியாவது இதே சூழ்நிலையில் இருக்கும் ஆண்களை நோக்கி எழுப்பப்படுகிறதா?
இன்னின்ன துறைகள் மட்டுமே பெண்களுக்கானவை என்று சமூகம் ஒரு வட்டம் போடுகிறது, குடும்பப் பொறுப்புகளுக்கே முன்னுரிமை என்று இன்னொரு வட்டம் குடும்பத்தாரால் போடப்படுகிறது. இந்த வட்டங்களைத் தாண்டி, விமர்சனங்களை எதிர் கொண்டுதான் பெண்களால் உயர் பதவிகளில் ஆண்களுடன் போட்டியிட முடிகிறது. அப்படியே ஒரு பதவி உயர்வு பெற்று விட்டாலும், அது அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாங்கப்பட்டது என்று போகிறபோக்கில் ஒரு வன்மத்தைத் தூக்கி வீசுவார்கள்.
இத்தனை தடைகளையும் கடந்து உயர் நிர்வாகப் பதவி வகிக்கும் பெண்கள் வெறும் 18.3 சதவீதம் மட்டுமே. பெரும்பாலான நிறுவனங்களில் இவர்கள் தனியொரு பெண்ணாகத்தான் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்கின்றனர்.
மேம்பட்ட சமுதாயம் என்கிற இலக்கை அடைய உயர்மட்ட பதவிகளில் பெண்களின் பங்கேற்பு மிகவும் அவசியம். இந்த நிலையை அடையும் பெண்கள் தங்கள் அனுபவத்தையும், கடந்து வந்த பாதையையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது ஆரம்ப கட்ட நிலை பதவிகளில் இருக்கும் பெண்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும்.
சிறிய விளையாட்டோடு ஆரம்பித்த கட்டுரையை ஒரு புதிருடன் முடிக்கலாமா?
ஓர் அழகான காலை. பதினோராம் வகுப்பு படிக்கும் மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வதற்காக அப்பாவும் மகனும் அவசர அவசரமாக வீட்டைவிட்டுக் கிளம்புகின்றனர். காலை நேரத்தில் ரொம்பவும் பிஸியான ரோடு. எதிர்பாராதவிதமாக ஒரு லாரியை ஓவர் டேக் செய்யும்போது விபத்தில் சிக்குகின்றனர். அப்பா அதே இடத்தில் இறந்துவிடுகிறார். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மகனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். எமர்ஜென்சி பிரிவில் இருந்து அவசரமாக ஆபரேஷன் தியேட்டருக்கு மாற்றுகின்றனர். ஆபரேஷன் தியேட்டரில் அந்தப் பையனைப் பார்த்த உடனே டாக்டர் சொல்கிறார், “என்னால இந்த ஆபரேஷன் பண்ண முடியாது, ஏன்னா இவன் என் பையன்.”
அந்த டாக்டர் ஏன் அப்படிச் சொன்னார்?
விடை கண்டுபிடிக்கத் தெரியாதவர்கள் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகளை மீண்டும் படிக்கவும்.
(தொடரும்)
தரங்கிணி
எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.
Very true! The author’s words resonate with my feelings!
Thank you, Vennila. It’s always rewarding to know that my writing has connected with someone on a personal level.