ஹாய் தோழமைகளே,

நலம், நலம்தானே ?

ஷைலஜா ஒரு பிரபலமான Motivation Training கம்பெனியின் M.D. அந்த கம்பெனியின் தலைமைப் பயிற்சியாளரும் அவள்தான். அவளது முகம் வராத பத்திரிகைகள் இல்லை. யூடியூபைத் திறந்தால் அவளது வீடியோவை ஒன்றாவது நீங்கள் பார்க்கலாம். மிகவும் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் மகிழ்ச்சியாகவும் போய்க் கொண்டிருந்த அவள் வாழ்வில் ஒரு தனிப்பட்ட சறுக்கல் நேர்ந்தது. அவள் காதல் கணவனுக்கு மற்றொரு பெண்ணுடன் காதல் என்பதும், இவள் நம்பி அவனுடன் வைத்திருந்த joint வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து அவள் கணவன் தன் காதலியின் பெயரில் தனியாக ப்ளாட், முதலீடுகள் செய்திருப்பதும் தெரியவந்த போது அவள் நொறுங்கிப் போனாள். காதலில் ஏமாற்றம் ஒரு புறம், கஷ்டப்பட்டு சம்பாதித்ததை எவளோ ஒருத்தியிடம் தாரை வார்த்தது ஒரு புறம் என அவள் வாழ்க்கை சூன்யமானது போல உணர்ந்தாள். எதுவுமே செய்யத் தோன்றாத நிலையில் இருந்தவளை, முதலில் வங்கிக்கணக்கை இவள் பெயருக்கு மட்டும் மாற்றி, அவள் கணவனை வீட்டை விட்டு வெளியேற வழி செய்தாள் அவளது தோழி ரமா. விவாகரத்து இருவரின் தனிப்பட்ட முடிவு என்பதால் அதை ஷைலாவே தெளிந்தபின் முடிவெடுத்துக் கொள்ளட்டும் என விட்டு விட்டாள்.

ஷைலாவால் எதுவுமே செய்ய முடியாது என்கிற நிலையில் இருந்தாள். அலுவலகத்தை மறந்து மாதமாகிவிட்டது. ஏதோ மற்ற பயிற்சியாளர்கள் இருந்ததால் ஓரளவிற்குச் சமாளிக்க முடிந்தது. நல்லவேளையாக இருவருக்கும் குழந்தைகள் இல்லாததால் சவால்கள் குறைவு.

அவளது தோழி ரமாவும் அவளை வெளியில் அழைத்துச் செல்வது, நீண்ட தூரத்துக்கு காரில் பயணம் என ஏதேதோ செய்து பார்த்துச் சலித்துப்போனாள். இப்படியே விட்டால், ஷைலா தன்னைத்தானே சுருக்கிக் கொண்டு காணாமல் போய் விடுவாள் எனப் பயப்படத் தொடங்கினாள் ரமா.

ஒரு நாள் மிக சோகத்துடன் வந்த ரமா, ஷைலாவைப் பார்த்து அழுதாள். எப்போதும் உற்சாகமாகத் தன்னைத் தேற்ற வருபவள் இன்று இப்படி அழுவதைப் பார்த்துக் கலங்கிய ஷைலா, அவளைக் கட்டி அணைத்து, “என்னடா என்ன ஆச்சு, இப்படி உடைஞ்சு போற அளவுக்கு என்ன ஆச்சு“ என்றவாறே ஒரு கிளாஸ் நீர் கொடுத்து, தேற்றினாள்.  

“என் தங்கை ஹேமாவிற்கு அவள் கணவன் மண விலக்குக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதைக் கடைசி நிமிடம் வரை எதிர்பார்க்காதவள் உடைந்து விட்டாள். என்னால் அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை.“

“அழாதே ரமா, அவளை என்னிடம் கூட்டி வா, அவளுக்குக் கொஞ்சம் கவுன்சிலிங் தேவைப்படும்.“

“நீயே இப்படி இருக்கிறாயே ஷைலு?”

“இதெல்லாம் ஒண்ணுமில்லை, நாளை காலை அவளை அழைத்து வா.“

மறுநாள், பின்னர் தொடர்ச்சியாக ஒரு வாரம் ஹேமாவோடு ஷைலஜா பேசினாள். ஹேமாவும் தெளிந்தாள்.

அடுத்த வார விடுமுறையில் வீட்டுக்கு வந்த ரமா, தோழியைத் தூக்கிச் சுற்றினாள். “என்னடி மாயம் செய்தாய், இப்போதெல்லாம் ஹேமா தெளிவாக இருக்கிறாள், வெளியே தோழிகளோடு போறா, புது டிரெஸ்கூட வாங்கினா, சாப்பாடுகூட ரசிச்சுச் சாப்பிடுறா, எங்க வீட்ல எல்லாரும் ரொம்ப ஹேப்பி.”

விரிந்த புன்னகையோடு ரமாவின் பாராட்டை ஏற்றவள், “எதுவும் புதுசா இல்ல, சுய நேசிப்பு, மீண்டெழுதல், Negative Emotions  எப்படிக் கண்டுபிடிச்சு நம்மளை எப்படித் திசை திருப்பிக்கிறதுன்னுதான் பேசினேன்.”

“ஓ… அப்போ இதெல்லாம் உனக்கு ஏற்கெனவே தெரியும்தானா?“ என்றவாறே அவளைக் கூர்மையாகப் பார்த்தாள் ரமா.

“என்ன பேசுற, இதெல்லாம் தெரியாம எப்படி motivation training company நடத்த முடியும்?” என்றவள் ரமாவின் பார்வையின் பொருளறிந்து அமைதியானாள்.

“அடுத்தவங்களுக்கு ஒரு சவால் வரும்போது நீ அவங்களுக்குச் சொல்ற விஷயத்தை உன்னால உன் விஷயத்தில் செய்ய முடியலை. ஏன்?”

“அப்படி இல்லடா, நம்மோட வாழ்க்கைன்னு வரும் போது அதில் இருக்கும் உணர்வுகள் நம்மள ரொம்ப காயப்படுத்தும். அந்தக் காயத்தோட நடு நிலைமைல இருந்து யோசிக்கிறது கஷ்டம்.”

“ம், இப்போ ஹேமாவுக்குச் சொன்னது அத்தனையும் நீ உனக்கு நீயே சொல்லிக்கப் போற, யாரு இல்லாட்டியும் உன் வாழ்க்கையை நீ நல்லா வாழப் போற. அதைவிட முக்கியமாக நீ வேண்டாம்னு போய்ட்டு, உன் பணம் மட்டும் வேணும்னு யோசிச்ச உன் மாஜி புருஷன், போய் தொலைஞ்சது எவ்வளவு நல்லதுன்னு புரிஞ்சிகிட்டு உன் வாழ்க்கையை மட்டும் பார்க்கப் போற. இதெல்லாம் பண்ணுவேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணு.”

ஒரு நிமிடம் யோசித்த ஷைலா, “இதெல்லாம் எவ்வளவு வேகமாக நடக்கும்னு தெரியல, ஆனா நான் ரொம்ப சின்சியரா முயற்சி பண்றேன்“ என்றாள்.

ஷைலா அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு பெரிய இடர் வரும் போது மீண்டெழுதல் எப்படி என்பதைத் தான் எத்தனை முறை மற்றவர்களிடம் பேசி இருக்கிறோம், தனக்கெனும் போது அதைப் பற்றி நினைக்காமல் போன தன் முட்டாள்தனத்தைப் பற்றி யோசித்தாள். அவளின் தீவிர யோசனையில் புரிந்தது ஒன்றுதான், அவளின் இந்த நிலைமைக்குக் காரணம். சுய நேசிப்பு குறைவுதான். தன்னைவிட அதிகமாகத் தன் கணவனை நேசித்ததுதான் என்பது புரிந்தது. சுய நேசிப்பு இருந்திருந்தால் இத்தனை நாள் மனதை, உடலை வருத்தி இருக்க மாட்டாள். இதிலிருந்து மீள வழி அல்லவா தேடி இருப்பாள்.

சரி போனது போகட்டும் இப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது ?

முதலில் தினமும் காலையில் கண்ணாடியைப் பார்த்து, “ஷைலா, I love you a lot, எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும், எப்பவும் நான் உனக்காக நிற்பேன்” என ஆத்மார்த்தமாகக் கூற ஆரம்பித்தாள். பின் எப்போதெல்லாம் கண்ணாடி பார்க்க நேரிடுகிறதோ அப்போதெல்லாம் ஒரு ரசனை மிகுந்த பார்வையால் தன்னைத்தானே பார்ப்பாள்.

சில நாட்களுக்கு பிறகு விட்டுப்போன ஜிம் பயிற்ச்சியைத் தொடரலாம் எனத் தோன்றியது. அதையும் ஆரம்பித்தாள்.

பின் மீண்டெழுதலின் ஒரு பகுதியான பிடித்த விஷயங்களைச் செய்தலைச் செய்து பார்க்கலாம் எனத் தோன்றியது. வீட்டில் இருந்த சிறிய பால்கனியிலும், வீட்டில் உள்ள மற்ற இடங்களிலும் முடிந்த சிறு சிறு செடிகளை வைத்தாள். தினமும் அதன் அழகை ரசிப்பதும் நீரூற்றுவதும் என சந்தோஷமாகச் சில நிமிடங்கள் தினமும் செலவானது. மெதுவாக உற்சாகமான ஷைலாவாக மாற ஆரம்பித்தாள். தனக்குப் பிடித்ததைச் செய்து ரசித்து சாப்பிடுவது, பிடித்த திரைப்படத்திற்குப் போவது, திடீரென்று தோன்றினால், உணவகத்திற்குப் போய் வேண்டியதைச் சாப்பிடுவது எனத் தனக்காக எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்தாள். அது கொடுக்கும் மகிழ்ச்சியையும் உணர ஆரம்பித்தாள். எங்கேயோ ஒலித்த ஒரு பாடல் மனதிற்கும் உடலுக்கும் ஒத்தடம் போலிருந்தது.

“உன்னை நீ ரசித்தால் முழுதாக வசித்தால் இதம்தான் இந்தத் தனிமையே

துயரில் சிரித்தால் இடரை எரித்தால் கணமும் ஒரு முழுமையே

சோகத்தால் எதுதான் மாறிடும் கண்ணீர் விட்டால் செடியாகப் பூத்திடும் என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்

தினம் நீ தேடும் வாழ்க்கை எங்கோ உன்னைத் தேடுமே அது உனக்கான காலம் வந்தால் உன்னைச் சேருமே…“

இப்படியாகக் கழிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அலுவலகம் சென்றாள். அனைவருக்கும் இனிய அதிர்ச்சி. தன்னை முழுமையாக நேசித்ததன் மூலம் உணர்வுகளைச் சமப்படுத்தி, வாழ்க்கையை வெற்றி கொண்ட ஷைலாவை நாமும் வாழ்த்துவோம்.

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.