இந்த உலகத்தில் ஒவ்வொருவர் மனமும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அடுத்தவர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கிக் கிடக்கிறது என்பதுதான் உண்மை. அப்படி ஒரு செயலை அதன் நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி ஒருவர் நிகழ்த்தி விட்டார் என்பதுதான் பாராட்டுப் பெறும் தகுதியாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எத்தனை பேருக்கு அடுத்தவர்களைப் பாராட்ட மனம் வருகிறது?. தன்னால் முடியாத ஒரு செயலை வேறொருவர் செய்து விட்டார் என்றவுடனே நிறையப் பேருக்குச் சட்டென ஒரு பொறாமை எழுகிறது.  ஒருவரிடம் பிடிக்காத குணங்கள் இருந்தால் சட்டென்று அதைக் குறிப்பிடுபவர்கள், அவர்களிடம் பிடித்த குணங்கள் இருந்தால் அதைச் சொல்லிப் பாராட்டத் தயங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 86,400 விநாடிகள் உள்ளன. ஒருவரைப் பாராட்ட குறைந்தது முப்பது விநாடிகளைச் செலவழிக்கலாம். ஆனால் அந்தச் சிறிய பாராட்டு வெகு நாளைக்கு அவர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். 

பாராட்டு என்பது ஒவ்வொருவருக்கும் உந்து சக்தியாக இருந்து, ஊக்கம் கொடுத்து இன்னும் உற்சாகமாகச் செயல் புரியத் தூண்டுகோலாக இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் உரையாற்றியதைக் கேட்டபோது, “ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் உடனே பாராட்டி விட வேண்டும். அப்புறமாகப் பாராட்டலாம் என்று நினைத்தால் அந்தப் பாராட்டு சொல்லப்படாமலேகூடப் போகலாம். ஏனென்றால் அதற்குள் மனம் மாறிவிடும் சாத்தியக்கூறுகள்தாம் அதிகம்” என்றார். அந்தக் கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. அதிலிருந்து யாரையாவது பாராட்ட நினைத்தால் மனதார உண்மையாகப் பாராட்டி விடுவேன். இது நேர்மறைச் சிந்தனைகளை இருபக்கத்தினருக்குமே வளர்க்கிறது. இதனால் நாம் எல்லாராலும் விரும்பப்படுவோம் என்பது கூடுதல் ப்ளஸ். ஆனால், பாராட்டை ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும். சிறிது பிசகினாலும் எள்ளலாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயமிருக்கிறது. வெளிப்படையான பாராட்டுதல் ஒருவருக்குத் தன்னம்பிக்கையை வளர்கிறது. இருவருக்குமே நட்புணர்வை இன்னும் அதிகப்படுத்துகிறது.

நம் இந்தியச் சமூகத்தில் எத்தனை கணவன்மார் தங்கள் மனைவியைப் பாராட்டுகின்றனர்? இன்னும் சமையலறை விரும்பியோ, விரும்பாமலோ பெண்களிடம்தான் இருக்கிறது. நன்றாக இல்லையென்றால் பத்து, பதினைந்து முறை குறையைச் சொல்லியே ஓயும் ஆண்களின் வாய், நன்றாகச் சமைத்திருக்கும் போது தின்பதற்கு மட்டும்தானே திறக்கிறது. தோழி ஒருவர் நன்றாகச் சமைப்பார். அவரது கணவருக்கு நாக்கு நீளம். எந்த ஒரு பண்டமும் மிகச் சுவையாக வேண்டும் அவருக்கு. தோழியின் சமையலில் ஏதாவது சரியில்லை என்றால் அரைமணி நேரம் வகுப்பெடுப்பார். அவள் நன்றாகச் சமைத்த அன்று மடமடவென்று உண்டு‌விட்டு நகர்ந்து விடுவார். அவளாக உணவு எப்படி இருக்கு என்று கேட்டால், “ம்ம்.. சூப்பர்..” என்று சொல்வார். ஆனால் அந்தப் பாராட்டில் உயிர்ப்பின்றி சப்பென்று இருக்கும். 

இன்னொரு தோழியின் கணவர் சாப்பிடும் போது சாப்பாட்டில் ஏதேனும் குறையிருந்தால் பலவித சமையல் குறிப்புகளை அள்ளிவிடுவார். புதிதாகக் கேட்பவர்கள் அவர் ஒரு நளபாகச் சக்கரவர்த்தி என்று நினைத்துக் கொள்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் வாயிலே வடை சுடுவதில் வல்லவர். உண்மையில் அவருக்கு வெந்நீர் வைக்கக்கூடத் தெரியாது. இந்த இரண்டு தோழிகளும் என்னிடம் பகிர்ந்து கொண்டது என்னவென்றால், “எல்லா நாளுமே ஒரே மாதிரி சமைக்க முடியலைடி. சமையல் பொருட்கள் தரமானதா இருக்கணும். போடும் அளவு சரியாக இருக்கணும். முக்கியமா சமைக்குற மூட் இருக்கணும். இதுல எதாவது ஒண்ணுகூடக் குறைய இருந்தாலும் சமையல் மாறிடுது. அப்புறம் இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயம் நம்ம சமையலைச் சாப்பிட்டு ஒரு வார்த்தை நல்லா இருக்குனு சொன்னா, இன்னும் புதுசு புதுசா கத்துக்கிட்டு சமைச்சுத் தரத் தோணும். எப்பப் பாரு குறையை மட்டுமே சொல்லிட்டு இருந்தா, நீ பேசுற பேச்சுக்கு உனக்கு இது போதும் போடான்னு தோணுது” என்றனர். குறையைக்கூட, “இன்னும் கொஞ்சம் உப்புப் போட்டிருந்தா நல்லா இருக்கும். காரம் கொஞ்சம் கம்மி பண்ணியிருந்தா இன்னும் செமையா இருக்கும். மசாலா கொஞ்சம் தூக்கலாயிடுச்சு போல. பரவாயில்லை அடுத்த தடவை பார்த்து கம்மி பண்ணு” என்று இதமாகச் சொன்னால் அடுத்தவேளை‌ உணவு வெகு ருசியாக தட்டுக்கு வருமல்லவா?. 

ஆனால் எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது “இவங்களையெல்லாம் பாராட்டக் கூடாதுங்க. நல்லா இருந்தாலும் நல்லாவே இல்லைனு சொல்லணும். அப்போத்தான் அடங்கி இருப்பாளுங்க. இல்லேன்னா தலையில் ஏறி உக்காந்துக்குவாங்க. எப்பவும் என்ன சொல்லுவானோன்னு ஒரு பயத்துலயே வெச்சிருக்கணும்” என்றார். இதுதான் இன்றைய இந்தியச் சமூகத்தின் பெரும்பாலான ஆண்களின் பொதுப் புத்தியாக இருக்கிறது. பாராட்டினால் கொம்பு முளைத்துவிடும் என்று நினைத்துக் கொண்டு யாரையும் பாராட்டவே தயங்கி, தாங்களும் பாராட்டுப் பெறாமலே மடிந்து விடுகின்றனர்.

ஒவ்வொருவரும் அவரவர் இணையரைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. நமக்காக அவர்கள் செலவழிக்கும் நேரத்தைப் புரிந்து கொண்டு நாம் நேர்மையாக அவர்களைப் பாராட்ட வேண்டும். சில சமயங்களில் பாராட்டாவிட்டாலும் அவமரியாதை செய்யக் கூடாது. அது அவர்களது சுய மதிப்பைக் குலைத்து விடும்.  உங்கள் இணையரைக் கடைசியாக எப்போது பாராட்டினீர்கள்‌‌ என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

பாராட்டு என்பது மனிதர்களுக்கிடையே மாத்திரம் நிகழ்வது. மற்ற ஐந்தறிவு ஜீவன்கள் ஒன்றை இன்னொன்று பாராட்டிக் கொள்வதில்லை. பாராட்டப்படும் ஒவ்வொரு நொடியும் மனிதனின் ஆற்றலும் திறமையும் பல மடங்கு பெருகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாராட்டுவதற்கு நாம் விசேஷமாக எந்தச் செலவையும் செய்யப் போவதில்லை. ஒரு கைகுலுக்கல், ஒரு தலை தடவல், சிறிய புன்னகையால் அங்கீகரித்தல், முதுகில் தட்டிக் கொடுத்தல், வார்த்தைகளால் பாராட்டுவது என்று பாராட்டு பல பரிமாணங்கள் கொண்டது. குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் அதிகமாக உற்சாகமாகப் படித்து பாராட்டுப் பெற முனைவார்கள். குழந்தைகள் ஒரு விஷயத்தில் தோற்கும் போதுகூட அதிலிருக்கும் நேர்மறையான, சிறு விஷயமாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டும். அப்போதுதான் எதிர்மறையான எண்ணங்கள் எழாமல், வாழ்க்கையைத் துணிவாக எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்கு வளர்கிறது. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் ஆற்றல் மிக்கவர்களாகவும், அறிவுத்திறன் உடையவர்களாகவும், புத்திசாலித்தனம் மிகுந்தவர்களாகவும் வளர்கிறார்கள். குறை கூறியே வளர்க்கப்படும் குழந்தைகள் குற்ற உணர்வுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும்தான் வளர்கின்றனர். குழந்தைகளைப் பாராட்டுவது அவர்களுக்குத் தூண்டுகோலாக அமையும். யாராக இருந்தாலும் அவர்களது நிறைகளைச் சபையிலும், குறைகளைத் தனிமையில் அவர்கள் மனம் புண்படாதவாறும் சுட்டிக் காட்ட வேண்டும்.

இப்போதெல்லாம் முன்னாள் பள்ளி நண்பர்கள், முன்னாள் கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், சொந்தங்கள் என்று பலர் விதவிதமான பெயர்களில் புலனக் குழுக்கள் உருவாக்கி உற்சாகமாக நண்பர்களைச் சேர்க்கிறார்கள். கொஞ்ச நாள் காலை, மதியம் மாலை வணக்கம், தத்துவம், போதனை எல்லாம் சொல்லி அப்புறம் ஓய்ந்து போய் அமைதியாகி விடுகிறார்கள். ஆனால் எல்லாப் புலனக் குழுக்களிலும் பொதுவான ஓர் ஒற்றுமை உண்டு. அது தன் குழுவில் இருக்கும் நண்பர்கள் அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது, ஏதாவது புதிதாகச் செய்த செயலைப் பகிரும் போது எல்லாருமே அந்தச் செய்தியைப் பார்த்திருப்பார்கள். ஆனால் ஒன்றிரண்டு பேர் மட்டுமே வாழ்த்துச் சொல்லவோ அல்லது பாராட்டவோ செய்வார்கள். ஆனால் யாராவது முகம் தெரியாதவர்கள் ஒரு விஷயத்தைப் பகிரும்போது இவர்கள் விழுந்தடித்து ஓடி அங்கே பாராட்டுகளைப் பதிவு செய்வார்கள். தன்னுடன் இருப்பவர்களின் மீதான பொறாமைக் குணத்தையே இது தெளிவாகக் காட்டுகிறது. நம்முடன் இருப்பவர்களை நாம் பாராட்டாமல் வேறு யார் பாராட்டுவார்கள். ஆனால் அந்தப் பரந்த எண்ணம் ஏன் எல்லோருக்கும் வர மறுக்கிறது என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது. ஒருவரைப் பாராட்ட முதலில் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், மருத்துவர்கள் தினம் என்றெல்லாம் பல தினங்கள் கொண்டாடப்படுவதன் உள்ளடக்கம் அன்றெல்லாம் அவர்களைப் பாராட்டுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரமும், ஊக்கமும் கொடுப்பதற்குத்தான். ஒரு சிறிய செயல் செய்யும் போது பாராட்டினால், அது மிகப் பெரிய செயல்களுக்கு வழி வகுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. ‘பசங்க’ திரைப்படத்தில் அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தை ஓட்டப்பந்தயம் நடக்கும் போது கைதட்டி ஊக்குவித்து பாராட்டுவார்கள். அவன் முதல் பரிசு பெறுவான். அதைப் பார்த்த இன்னொரு சிறுவன் தன் தந்தையிடம் அழுது கொண்டே, “என்னை ஏன் என்கரேஜ் பண்ணலை.. நானும் ஜெயிச்சிருப்பேன்ல..” என்று கேட்பான். அப்போது அவனது தந்தை செய்வதறியாது நிற்பார். பாராட்டு செய்யும் மேஜிக் அதுதான். நிஜமான பாராட்டு பல புதிய கண்டுபிடிப்புகளுக்குகூட வழிவகுக்கும் என்பது உண்மை.

உண்மையாகப் பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் எல்லாருக்கும் புரிந்துவிடும். நம்பகத்தன்மை மறைந்துவிடும். ஆனால் தயக்கமின்றிப் பாராட்டுதல் இரு சாராருக்கும் மனமகிழ்ச்சி தரும். வெறுமனே பாராட்டாமல் அவர்கள் செயலில் ஒரு சிறு பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் உற்சாகமாகி, நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொள்வார்கள். மட்டுமின்றி அவர்களும் பிறரைப் பாராட்டும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களை வாழ்க்கையில் பன்மடங்கு உயர்த்தும். இணையரைப் பாராட்டும் போது வாழ்க்கை மிக இனிதாக மாறும். அக்கம் பக்கத்தினரைப் பாராட்டினால் இணக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். உறவுகள், நட்புகளைப் பாராட்டும் போது அவை நல்லதாகத் தொடரும். தன்னிடம் பணிபுரிபவர்களைப் பாராட்டும் போது இருதரப்புமே மகிழ்ச்சி அடையும். வேலையும் சிறப்பாக நடக்கும். அதே சமயம் எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களின் அங்கீகாரத்தை  எதிர்பார்த்துக் கொண்டு தேங்கி நிற்கவும் கூடாது. சில சமயங்களில் நமது முதுகில் நாமே தட்டிக்கொண்டு, நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொண்டு செயல் புரியக் கற்றுக்கொள்ள வேண்டும். 

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.