“நீ ரொம்ப மனவருத்தத்துல இருக்க. கலங்காத. நான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்” என்று சாமியாடி அவள் அம்மாவின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டுத் திரும்பவும் அவளும் அவள் சித்தப்பாவும் ஒரு நொடி ஒருவரை இன்னொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சாமியாடி கிளம்பிய பின், “ஒரே ஊர்ல இருந்தா நடக்குறதெல்லாம் பாத்துக்கிட்டுதான இருப்பாரு? இத சாமி வந்துதான் சொல்லணுமாக்கும்? தெருவுல யார் வேணும்னாலும் சொல்லுவாங்களே” என்று நையாண்டி செய்வார்.
“இந்தப் பையனுக்கு நல்ல புத்திய நீதான் குடுக்கணும் ஆத்தா” என்று ஆச்சி அவர் தலையில திருநீறைப் பூசிவிட்டார்.
நியூஸ் 11 சேனலின் மூத்த பத்திரிகையாளரான அவள் சித்தப்பா செந்தில்ராஜ், திருநீறை அழித்தார்.
அவள் சித்தப்பாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு வேதவாக்கு. அப்பா தொழில் தொழில் என்று எப்போதும் கடையிலே இருப்பதால் அவரிடம் அதிகம் அமர்ந்து பேசவும் அவள் மனிதில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளவும் அவளுக்கு நேரம் வாய்த்ததில்லை.
ஆனால் அதைக் குறித்து அவள் குறைவாக நினைத்ததும் இல்லை. அவருக்குத் தெரிந்த விதத்தில் அவர் அன்பைப் பொழிவார். இதுவரை அவள் எடுத்த எந்த முடிவுக்கும் அம்மா தடையாக இருந்தாலும் இறுதியில் அப்பா அவளுக்குச் சாதகமாகவே நடந்து கொள்வார்.
சித்தியை அவர் கல்லூரி நாட்களில் காதலித்த கதைகளை எல்லாம் அவர் சொல்லும் அழகில் சொக்கி உட்கார்ந்து எல்லாரும் கதை கேட்பார்கள். அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒருவித அன்னியோன்யம் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவளுக்கு வித்தியாசமாக இருக்கும்.
ஊரில் ஆதித்தனார் கல்லூரியில் பெறியியல் படிக்கப் போனவளை வலுக்கட்டாயமாக அப்பாவிடம் சொல்லி கோவை கல்லூரியில் சேர்த்துவிட்டது சித்தப்பாதான். அவர் சொல்லுக்கு வீட்டில் செல்வாக்கு அதிகம்.
ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவளுக்கு ஒரு விதத்தில் வெளி உலகைக் காட்டியவர் சித்தப்பாதான். ஆனால் அதை அவர் கைபிடித்து கூட்டிச் சென்று காட்டவில்லை. அவள் மீது நம்பிக்கை வைத்து அவர் திசைகாட்ட, அந்தத் திசையில் நடக்கும் தைரியத்தை அவர் பக்கபலமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அவள் சென்றாள்.
அந்தத் தைரியத்தில் தான் , தான் விரும்பும் வரை திருமணத்துக்கு யாரும் கட்டாயப்படுத்துக் கூடாது என்று சொல்லி, இரண்டு வருட ஆஸ்திரேலியா பிராஜக்ட்க்குத் தன் கம்பெனி அவளை தேர்ந்தெடுத்தபோது எந்தவிதக் குழப்பமும் இன்றி சரி சொன்னாள்.
அதுவரை அவளை வழிநடத்திய சித்தப்பாவின் ஆதரவும் அப்பாவின் அன்பும் எப்போதும் அவளுக்குத் துணை இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் கோயில் கொடை சமயம் பார்த்து அவள் வெளிநாடு செல்வதைக் குறித்து வீட்டில் பிரஸ்தாபிக்க நினைத்தாள்.
“நல்ல மாலையா வடக்க இருந்து வரும்பா. வைகாசில முடிஞ்சிரும்ப்பா” என்று அவர் கழுத்திலிருந்த ஒரு ரோஜா மாலையைக் கழட்டி அவள் கையில் தந்துவிட்டு, தலை நிறைய திருநீறு அள்ளி நெற்றியில் பூசிவிட்டார்.
அவர் சொன்னதை நினைத்து மனதுக்குள் சிரிப்பு வந்தது. ஆனால் அவள் குடும்பத்தினரின் நம்பிக்கையைக் கிண்டல் செய்தவிதமாக இருக்கக் கூடாது என்று சிரிக்காமல் அமைதியாக இருந்தாள். ஆனால் அவள் ஆச்சி,
“இதத்தான் ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடியும் சொன்னே. அது இன்னும்தான் நடக்குது” என்று ஒரே போடாகப் போடவும், அவள் சித்தப்பா அருகில் நின்ற அப்பாகூடச் சிரிப்பை அடக்க முடியாமல் வேறு பக்கமாகத் திரும்புவது தெரிந்தது.
சாரதா அக்கா வழக்கமாக அன்பும் கருணையும் நிறைந்த அவர் உக்கிரமாக ஆடி குறி சொல்வதைக் கோயிலில் பார்த்திருக்கிறாள். அது சரியாகவும் இருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆண் சாமியாடி, ‘பெண்கள் சாமியாடக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ளவும் கூடாது’ என்றெல்லாம் ஊர்க் கூட்டத்தில் பேசியதாக அவள் தம்பி சொல்லிக் கேட்டிருக்கிறாள். ஆனால் அதை விழாக்குழு ஏற்றுக் கொள்ளவில்லை போல.
காலையில் அவளைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுப் போன அதே சாரதா அக்கா இவர் இல்லை என்று நினைத்த போதே அவள் கண்கள் சொருகின. மயங்கி விழப் போகிறாரோ என்று நினைத்ததற்கு மாறாக மெல்ல அவள் காதோரமாக வேறு யாருக்கும் கேட்காத வண்ணம் கிசுகிசுப்பான ஆனால் தீர்க்கமான குரலில் ஏதோ சொன்னார். அதைக் கேட்ட அவள் சர்வமும் ஒரு நொடியில் உறைந்தது.
திருநீறு எடுத்து அவள் இரு கைகளிலும் தடவினார் சாரதா. அருகில் அவள் சித்தப்பா வந்து, “அபிம்மா, அப்படி என்ன சீக்கிரட்டாம்?”
என்று சிரிப்புடன் கேட்கவும், தன்னிலை வந்தவளாக அவரைப் பார்த்து புன்னகை புரிந்தாள். அவள் பதிலுக்காக அவளைச் சுற்றி அவள் குடும்பமே ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. ஒரு நிமிடம் உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைத்தவள் பின் வேண்டாம், அவர்களை வீணாக பயம் காட்ட வேண்டாம் என்று நினைத்து, “எல்லாம் வழக்கமா சொல்றதுதான். அவரு சத்தமா சொன்னத, இவங்க காதுக்குள்ள சொன்னாங்க அவ்வளவுதான். என்ன பக்கத்துல வந்ததும் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்”
என்று கிண்டலாக அவள் வடிவேலு வாய்ஸ் மாடுலேஷனில் சொல்லவும் அவள் தம்பி தங்கைகள், அண்ணன்கள், அக்காக்கள் அவர்கள் குழந்தைகள் என அனைவரும் சிரித்து விட்டார்கள்.
இப்படியாக நேரம் போனது தெரியாமல் சில மணிநேரம் ஹாலில் கதையடித்துக் கழிந்தது. சற்று நேரம் ஓய்வெடுத்த பின் மாலையில் திருச்செந்தூர் கடற்கரைக்குச் சென்று வரலாம் என்று முடிவு செய்துவிட்டு கலைந்து சென்றார்கள்.
அபிநயாவிடம் பேசிய சாரதா அக்கா, வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் விசும்பலுடன், “எம் பிள்ள எம் பிள்ள” என்று நெஞ்சில் வேகமாக அறைந்து கொண்டே கோயில் நோக்கி ஓடியதை அவளோ அவள் குடும்பத்தினரோ யாரும் பார்க்கவில்லை.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.