18 & 19th May 2024

இமயமலை சந்தன்கனி – Group 04, மே 6 – 16’ 2024 மலையேற்றம்

Kullu District of Himachal Pradesh, altitude of 3,650 metres. 

நாங்கள் ட்ரெக்கிங் செய்த சந்தன்கனி கணவாய் Kullu & Parveti valle நடுவில் இருக்கிறது.

நான் பத்து வயதில் இருந்து மலையேற்றம் செய்கிறேன்.

Youth Hostel Association of India (YHAI) வழியாக இதுவரை மூன்று முறையும் சாவித்திரிபாய் புலே பெண்கள் பயணக்குழு வழியாக மூன்று முறையும் மலையேற்றம் செய்துள்ளேன்.

இமயமலை ட்ரக்கிங் செல்ல வேண்டும் என்று சிறு வயதிலிருந்து விருப்பம். எனவே, அதற்கு முன்பாக நிறைய இடங்களுக்கு ட்ரெக்கிங் செய்து அனுபவங்களை விரிவடையச் செய்தேன். பிருந்தா  (அம்மா) இல்லாமல், நான் – கீதா தோழர், நிலா மற்றவர்களுடன் சென்ற முதல் மலையேற்றம் இது. 

இமயமலைக்குச் செல்ல முதலில் 16 வயதை அடைந்தால் போகலாம் என இருந்தது. ஆனால் லாக்டவுனுக்குப் பிறகு அதை 18 ஆக மாற்றி விட்டார்கள். இமயமலை செல்வதற்கு உடலையும் மனதையும் ஒருசேரத் தயார்ப்படுத்தி இருக்க வேண்டும். ஒன்பது வயதில் கராத்தேயில் (இஷ்ன்ர்யு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட்டும், பதின்மூன்று வயதில்  ‘டேக்வொன்டோ’வில் ப்ளாக் பெல்ட்டும் பெற்றுள்ளேன். கல்லூரியில் முதல் வருடம் யோகா வகுப்பிற்குச் சென்றேன்.

இந்த ட்ரெக்கிங் செல்வதற்கு ஓரிரு மாதங்கள் முன்பாக, ட்ரெக்கிங் பற்றிய பயணத் தகவல்கள், தினமும் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்கிறோம் என்பதைப் பகிர்ந்துகொள்வதற்காக, கீதா தோழர் எங்களுக்கென ஒரு வாட்சப் குரூப்பை உருவாக்கினார். நான் கல்லூரியில் தேர்வு முடிந்ததும் விடுமுறையில் ECO பார்க்கில் தினமும் 3 கிமீ நடப்பேன்; 1.5 கிமீ மெல்லோட்டம் செய்வேன்.

நான் 13 வயதாக இருக்கும்போது ஒரு நாள் மட்டும் நடக்கும் விபாசனா வகுப்பில் இரண்டு முறை பங்கேற்றேன். 16 வயதில் போதி சென்றோ மெடிடேஷன் சென்டருக்குச் சென்றது அதைவிட நன்றாக இருந்தது. தியானம் செய்யும்போது மூச்சைக் கவனிக்கச் சொல்வார்கள். சில நேரம் கவனம் சிதறும். அதையும் அப்படியே கவனிக்கச் சொல்வார்கள். அங்கு இருந்த ஆசிரியர் Ralf ஜெர்மனியைச் சேர்ந்தவர். அவர், அங்கு இருந்தவர்கள் நான் எப்படிச் சிறிதளவுகூட அசையாமல் வஜ்ராசனாவில் மெடிடேட் செய்ய முடிகிறது என்று வியந்து கேட்டார்கள். எனக்குச் சிறிய வயதில் இருந்தே கராத்தே வகுப்பில் அப்படி உட்கார்ந்து பழக்கம் உண்டு.

ஏழு வயதில் பனியில் ரோலர்ஸ்கேட்டிங் செய்ய விரும்பினேன். ஆனால் சென்னையில் அது இயலாத காரியம். அதனால் வெறும் ரோலர்ஸ்கேட் வகுப்பில் சேர்ந்தேன்.

இமயமலைக்குச் சென்று ட்ரக்கிங் செய்து பனியைப் பார்த்தாயிற்று. இமயமலை என்பது ப்ரிட்ஜைத் திறந்தால் ஃப்ரீசரில் இருக்கும் ice cronicles போன்றது, அதைவிடப் பல மடங்கு.

நான், நிலா, கீதா தோழர் ஓர் இடத்தில் சேர்ந்து சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது Trekking Group leader சத்தியம் பாட்டுக் கேட்டுக்கொண்டே போய்க்கொண்டு இருந்தார். அவர் மட்டுமல்ல இன்னும் சில பேர்கூட அப்படிச் சென்றார்கள். நான் கீதா தோழரிடம் கேட்டேன் ‘பாட்டு கேட்டுக்கொண்டே போனால் Mindfullness இல்லாமல் ஆகிவிடும் தானே’ என்று. அதற்கு கீதா தோழர், ‘ஆமாம்; இயற்கை நம்முடன் உரையாடுகிறது அதைக் கூர்ந்து கவனித்தால் அது தன்னுடன் நம்மை இணைய வைக்கும்’ என்றார்.

அப்புறம் எல்லாரும் வேகவேகமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். நிலா, நான், கீதா தோழர் பேசிக்கொண்டே போனோம். அப்பொழுது நாங்கள் ஒரு கோல் செட் பண்ணினோம். ட்ரக்கிங் முடிந்து வீடு சென்ற பிறகு, ‘மாதத்திற்கு 15 கிலோமீட்டர் ஓட வேண்டும்; ஹீமோகுளோபினை 15க்கு உயர்வடைய செய்ய வேண்டும்’என்று. இந்தத் திட்டத்திற்கு 15’ 15’ என்று பெயரிட்டார் கீதா தோழர்.

இது மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இமயமலை ட்ரெக்கிங். மூன்று முதல் எட்டாம் நாள் வரை ட்ரெக்கிங் சென்றோம்; ஒன்பதாவது நாள் செக்அவுட் செய்து ஊருக்குத் திரும்பினோம்.

முதல் நாள் பேஸ் கேம்ப், 15 மைல் என்கிற இடத்தில் ரிப்போர்ட் செய்தோம்; இரண்டாம் நாள் மலையேற்றம், அதன் பாதைகள், மலையேற்றத்தில் ஏற்படும் உடல் சீர்குலைவு பற்றி YHAI யில் இருந்தவர் உரையாற்றினார். பிறகு நாங்கள் ட்ரயல் ட்ரெக்கிங் சென்றோம்.

மூன்றாவது நாள் பிஜிலி மகாதேவ் மந்திர் 3 கிலோமீட்டர் ட்ரெக் போனோம். இந்த மந்திர், 2500 படிகள் ஏறினால் சிறு குன்றின் மேலே அமைந்து இருக்கும். படிகளை ஏறுவது அவ்வளவு கடினமாக இல்லை. எல்லாப் படிகளையும் ஏறி முடித்த பிறகு பெரிய புல்வெளி. அதன் நடுவே மந்திர் அமைந்து இருந்தது. அங்கு நானும் கீதா தோழரும் எடுத்த ஒளிப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நான்காவது நாள் Sola Tankiஇல் இருந்து Moutinag இந்த இடம் நன்றாக இருந்தது. இது 9200 அடி Kullu Valleyயில் இருக்கிறது. இந்த camp site மிகவும் அழகாக, புத்துணர்ச்சியாக இருந்தது. இரவு நேரத்தில் வானத்தில் விண்மீன்கள் தோன்றும். எனக்கு இயல்பாகவே நட்சத்திரங்களை மிகவும் பிடிக்கும். இந்த இடம் ராஜஸ்தான் பாலைவன ட்ரக்கிங்கை நினைவுபடுத்தியது. அங்கும் இரவு நேரத்தில் வானம் முழுக்க விண்மீன்களைக் காணலாம்.

ஐந்தாவது நாள் Montinag to Ubla Thach – இந்த இடத்தில் மேலேயும் கீழேயும் ஏறுவது இறங்குவது பெரிய சாகசம்.  ஒவ்வோர் அடியையும் கவனமாக வைக்க வேண்டும். ஏனென்றால் மிகவும் சறுக்கும். ஆனால் அதுகூடப் பரவாயில்லை சென்றுவிடலாம்; இரவு நேரத்தில் அங்கு இருந்த கழிப்பறைக்குச் செல்வதுதான் அதைவிடக் கடினம். ஃபிலிப் பிலாப்ஸ் போட்டுக் கொண்டு இறங்க முடியவில்லை. ஸ்நேஹல்தான் உதவி செய்தார்.

ஆறாவது நாள் Ubla thach to Dohra Nalaவுக்குச் செல்லும்போது திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்தது. மதிய உணவை அங்கு இருந்த குடிலில் சாப்பிட்டோம். 20 பேருக்கும் மேலே அந்தச் சிறிய இடத்தில் நசுங்கி நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தோம்.  இரவு டென்ட்டில், ஒரு டிகிரி செல்சியஸ் குளிரில் நடுங்கிக்கொண்டு உறங்கினோம்.

அடுத்த நாளும் பனியில் மலையேற்றம் செய்தோம். கால்களை எப்படிப் பனியில் வைக்க வேண்டும் என்று இந்த கேம்பில் இருந்து புறப்படும் பொழுதே கூறிவிட்டார்கள். நடக்கும்போது, ஒன்று முன் பாதத்தை உறுதியாக அழுத்தி வைக்க வேண்டும் அல்லது குதிகாலை அழுத்தி வைத்து நடக்க வேண்டும். பனி, பார்ப்பதைப் போல் இனிமையாக இருக்காது. சிறிது சறுக்கினாலும் விழுந்து விடுவோம். விழுவதில் ஒன்றும் இல்லை. திரும்பியும் எழுவதில்தான் இருக்கிறது. வழிகாட்டி ‘கரம்’ திடீரென்று எங்கிருந்து வருகிறார் என்பதே தெரியாமல் மின்னல் போல வந்து உதவி செய்வார்.

இந்த இரண்டு நாட்களிலும் பனியில் போய்க் கொண்டு இருக்கும்போது எனக்கு முன்னால் நிறைய பேர் தூரமாக இருந்தார்கள்; எனக்குப் பின்னாலேயும் நிறைய பேர் தொலைவில் இருந்தார்கள். பனியில் நான் மட்டும் நடந்துகொண்டு இருப்பேன். இந்த நாட்களில் ‘கரம்’ கூட வந்தார். அவர் பனியில் வேகமாக நடப்பார். அவருக்குப் பனியில் நடந்து பழக்கம் உண்டு. அவர், முன்னால் இருந்த கால் தடத்தைப் பின்பற்றி தொடர்ந்து போகக் கூறினார்.

இது எனக்கு முதல் முறை. மறுநாள் பனியில் தனியாக நடுவில் நடந்து சென்றபோது முன் பாதத்தை ஓங்கி அழுத்தி வைக்கும்பொழுது, கால் பனி உள்ளே மாட்டிக் கொண்டுவிட்டது. எடுக்க முடியவில்லை. எல்லாரும் முன்னும் பின்னும் தூரத்தில் இருந்தார்கள். அப்பொழுது பிருந்தா கூறியது நினைவுக்கு வந்தது. ‘எது நடந்தாலும் பதட்டப்படக் கூடாது; பொறுமையாக யோசித்துச் செயல்பட வேண்டும்’ என்று. அதைப்போல பொறுமையாகப் பனியில் சிக்கிய காலை, பதட்டம் இல்லாமல் எடுத்து விட்டேன்.

ஏழாவது நாள் Dohra Nala to Naya Tapru – இந்த கேம்புக்குச் செல்ல நாங்கள் எல்லாரும் 5:00 மணிக்கு எழுந்து கிளம்பினோம். பனிச் சறுக்கு செய்தோம். ஒருவர் அல்லது இருவராகப் பனியில் சறுக்கியவாறு செல்லலாம். 

நான் எரிமலையில் இருந்து குழம்பு வருவதைப் போல நான் பனியில் சறுக்கி வேகமாக வந்துகொண்டு இருந்தேன். ஒற்றை ஆளாகப் போனேன். அது பனியில் ஸ்கேட் செய்தது போல் இருந்தது. எல்லாரும் இரண்டு முறை போனார்கள் என்றால் நான் மூன்று முறை போனேன். அது எப்படி என்றால் கைடு எனக்குப் பின்னால் வந்து கொண்டு இருந்தார். கீழே மிகவும் பனி அடர்ந்து இருந்தது. அதில் நடப்பதைவிட சறுக்கிக்கொண்டு சென்றால் எளிமையாக இருக்கும் என்று எண்ணி, அவரிடம் சொல்லிவிட்டு தேவி தோழருடன் சறுக்கிக்கொண்டு போனேன்.

கீதா தோழருடன், ட்ரெக்கிங்கின் கடைசி நாளன்று தேநீர் அருந்தியபடி மேகங்களைப் பார்த்தது நன்றாக இருந்தது. எனக்கு ட்ரெக்கிங்கை கீதா தோழர்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரே போல இருக்க மாட்டார்கள்; வேறுபாடுகள் நிறைந்து இருப்பார்கள்; நான் நிறைய நேரம் வியப்பேன் ‘கீதா தோழர், பல்வேறு வகை குணங்கள் உள்ள எங்களுடைய குழுவை எப்படி சமாளிக்கிறார் என்று; அப்புறம் இவ்வளவு வயதைத் தாண்டியும் எப்படிச் சிறிய பிள்ளை போல் அவ்வளவு குதூகலம், மன பலத்துடன் இருக்கிறார்’ என்று. நானும் இதைப் போலவே எவ்வளவு வயது ஆனாலும் அதே புத்துணர்ச்சி, மகிழ்ச்சியுடன் ட்ரக், டிராவல் செய்ய விரும்புகிறேன்.

நிலாவுடன் சேர்ந்து இரவு நேரம் பேசிக்கொண்டே நடந்ததை எப்பொழுதும் மறக்க மாட்டேன். இந்த ட்ரெக்கிங் எங்களது தோழமையை இன்னும் வளர்த்தது.

தேவி தோழரைப் பெரியவராகவே உணர முடியாது; நானும் நிலாவும் எங்கள் வயது உடையவராகத்தான் உணர்ந்தோம்.

ஜார்ஜ் மிகவும் கடினமான சூழலில் எல்லாருக்கும் உதவினார். எல்லாரும் போன பிறகு கடைசியாகச் சென்றார். சில நேரம் ஒரு குரூப் லீடர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி டீம் ஸ்பிரிட் உடன் இருந்தார்.

நான் முன்பு சென்ற டிரெக்கில் ஹேனா, ஆல்கா தோழர்களாக அமைந்தார்கள். அதைப்போல இந்த ட்ரெக்கில் ஸ்நேஹெல்.  இது இவருக்கு முதல் மலையேற்றம்.

எனக்கு எப்போதும் பூக்களை, கற்களைச் சேகரிக்கும் பழக்கம் உண்டு. ட்ரெக்கிங் போய்க் கொண்டு இருக்கும்போது நிறைய பூக்களைப் பறித்துக் கொண்டு இருந்தேன். ‘மிலன்’மலைக்குச் சிறிது மேலே நின்று, (நான் அவர் கையைப் பற்றிக்கொண்டு ஏறுவதற்காக) கையை நீட்டினார். நான் என் கையில் இருந்த பூக்களைத்தான் கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டு பூக்களைக் கொடுத்தேன். இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது; அதைப் பார்த்து அருகிலிருந்தவர்களும் சிரித்தார்கள்.

கமலி தோழர், சங்கீதா தோழர், ரேவதி தோழர் ஆகியோருடன் பயணித்தது நன்று. எல்லாரிடமும் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.

நாங்கள் எல்லாரும் மலையேற்றத்தை முடித்துவிட்டுத் திரும்ப பேஸ் கேம்ப் 15 மைல் என்கிற இடத்தை அடையும்வரை கேம்ப்பில் இருந்த YHAIயில் இந்த மலையேற்றத்தை ஏற்பாடு செய்தவர்கள், சந்தன்கனி கணவாயின் வானிலை அறிக்கைகளைக் கேட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனுக்குடன் கடைப்பிடித்துக் கொண்டே இருந்தார்கள்.

இந்த ட்ரெக்கிங் ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் நன்றாக இருந்தது; ஆனால் வீட்டிற்கு வந்த பிறகும் கை, கால்களில் விரல் நுனி வலித்துக் கொண்டே இருக்கிறது.

ட்ரெக்கிங் செல்வதில் நிறைய மனிதர்களைச் சந்திக்கலாம், அவர்களுடன் பழகலாம். சில முரண்களுடன் இணைந்து வாழ்கின்ற பழக்கத்தை ட்ரெக்கிங் கற்றுக் கொடுக்கிறது; வேறு மாநிலங்களில் வாழும் மனிதர்களுடன் சேர்ந்து உரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட முப்பது பேரை ஒரே குடும்பமாக உணர வைத்தது; ட்ரெக்கிங் முடிந்து வீடு வந்ததும் குடும்பத்தினரைப் பிரிந்தது போலவே மனதிற்கு வருத்தமாக இருக்கிறது.

படைப்பாளர்:

 ரித்திகா

ரித்திகா (18.06.2005) வயது 18, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினரான இவர் இதுவரை ட்ரெக்கிங், ட்ராவல் சென்ற இடங்கள் : பல்லாவரம் இரண்டு முறை, வொய்ஹெச்ஏஐ வழியாக – இராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடர் (2015), கோவா (2016), இராஜஸ்தான் பாலைவன ட்ரெக்கிங்(2017); சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ வழியாக – ஜவ்வாது மலை ட்ரெக்கிங் (2017), பரம்பிக்குளம் பயணம்(2016), பாண்டிச்சேரி (2017), கோதாவரி பயணம் (2018) ஆகியவை.

ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். கல்லூரியில் படித்து வருகிறார்..