‘இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார்! இப்சனும் இருக்கிறார்! இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்!” என்று தோன்றியது. ஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி. என். அண்ணாதுரை’ (கல்கி இதழ் 07-12-47) என எழுத்தாளர் கல்கி இந்த நாடகத்தைப் பார்த்து விட்டுப் புகழ்ந்து இருக்கிறார்.
அந்த நாடகமே பின்னாளில் திரைப்படமாகி இருக்கிறது. இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகத்தில்கூட, ஏவிஎம் தயாரிப்பு, கதை வசனம் சி.என். அண்ணாத்துரை, எம்.ஏ. எனத் தான் போடுகிறார்கள். அந்த அளவுக்கு, அண்ணாதான் இந்த திரைப்படத்துக்கான முகவரி என்ற நிலை இருந்து இருக்கிறது. கே. ஆர். ராமசாமிக்காக அண்ணா எழுதிய நாடகம் சினிமாவானபோது, படத்தின் பாடல்களை அவரே பாடி, நடித்திருப்பது சிறப்பு.
திரைப்படம் தொடங்கும் போது, ஏவிஎம் ப்ரோடொக்சன்ஸார் அளிக்கும் ஓர் இரவு எனத் தலைப்பைப் போட்டவுடன், கதை வசனம் சி.என். அண்ணாத்துரை, எம்.ஏ. எனப் போடுகிறார்கள். பின் பாடலாசிரியர்களின் பெயர்களைப் போடுகிறார்கள். ஒளவை டி.கே. சண்முகம், கே.பி. காமாட்சி சுந்தரம், கு.மா. பாலசுப்ரமணியம் மூவரும் பாடல் எழுதியிருக்கிறார்கள். பாடல்களை எம்.எஸ். ராஜேஸ்வரி, கே.ஆர். ராமசாமி, வி.ஜே. வர்மா, டி.எஸ். பகவதி, எம்.எல். வசந்தகுமாரி ஆகியோர் பாடியுள்ளனர். இவர்களில் வி.ஜே. வர்மா விஜயா வாஹினி ஸ்டுடியோ பின்னணி இசைக்கலைஞர்களில் ஒருவர்; பார்வையில்லாத மாற்றுத்திறனாளி. ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு மாற்றுத்திறனாளி இசையுலகில் கலக்கி இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது.
புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் இயற்றிய ‘துன்பம் நேர்கையில்’ எனவும் சேர்த்தே போடுகிறார்கள். எம்.எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா பாடிய இந்தப் பாடலுக்கான இசையை மட்டும் எம்.எம். தண்டபாணி தேசிகர் அமைத்தார் என்றும் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறைத் தலைவராக இருந்தார் எனவும் பதிவு செய்கிறார் அவருடன் அங்கு பணியாற்றிய சினிமா வரலாற்றாளரும் கணிதப் பேராசிரியருமான முனைவர் சபாபதி. படத்தில் இசை ஆர். சுதர்சனம் எனப் போடுகிறார்கள்.
இயக்குநர் திரு பா. நீலகண்டன். கே. சங்கர் எடிட்டிங் செய்து இருக்கிறார். இவர் பிற்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக வலம் வந்தவர். பாடல்கள் பாடியவர்கள் வசந்த குமாரி, பகவதி, ராஜேஸ்வரி, வர்மா எனப் போடுகிறார்கள். எம்.எல். வசந்த குமாரி, டி. எஸ். பகவதி, எம்.எஸ். ராஜேஸ்வரி எனப் பிற்காலத்தில் அவர்களின் பெயர் முன்னொட்டுக்களுடன் வந்தன. இத்திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்திலும் ஆண்குரல் வி.ஜே. வர்மாவின் குரலே.
நாட்டியம்
லலிதா – பத்மினி
குமாரி கமலா
லட்சுமி காந்தம்
நடிகர்கள்
டி.கே. ஷண்முகம் – கருணாகரத்தேவர்
டி.எஸ். பாலையா – ஜெகவீரன்
கே.ஆர். ராமசாமி – ரத்னம்
ஏ. நாகேஸ்வரராவ் – சேகர்
டி.எஸ். துரைராஜ் – கம்பவுண்டர்
கே. ராமசாமி அகராதி
எஸ்.வி. வெங்கடராமன் – குடியானவன்
என்.எஸ். நாராயணபிள்ளை – கணக்கர்
துரைசாமி – தாத்தா
மற்றும் சில நடிகர்கள் பெயர் போடுகிறார்கள்.
நடிகைகள்
லலிதா – சுசிலா
சரோஜா – சொர்ணம்
முத்து லெட்சுமி – பவானி
அங்கமுத்து – வேலைக்காரி
மற்றும் கல்யாணி, சவுந்தரவள்ளி, லஷ்மி, சாரதா, பேபி சுகுமாரி, பேபி ரத்னப்ரபா
டைரக்ஷன் ப. நீலகண்டன்
மேற்பார்வை மெய்யப்பன்
என எழுத்து போட்டவுடன், ஒரு கிராமத்தைக் காட்டுகிறார்கள். மலைப்பாங்கான கிராமத்துக்குள் கார் ஒன்று வருகிறது. காருக்கு முன்னே, இவருக்கு வழிவிடாமல் மாட்டுவண்டியில் இளம்பெண் ஒருவர், பாடிக்கொண்டே செல்கிறார். மாட்டுவண்டியில் அம்பாரமாக வைக்கோல் இருப்பதால் அவரால், பின்னால் வரும் காரைப் பார்க்க முடியவில்லை. பாதையும் மிகவும் குறுகியது.
இடம் கிடைத்ததும், காரில் வந்தவர், திட்டுகிறார். “மோட்டாரில வர்றவங்களப் பாத்து பயந்தது எல்லாம் அந்த காலம். இப்போது எங்க மாடுகள்கூட பயப்படாது” என அந்தப்பெண் பேசிக்கொண்டு இருக்கும் போதே, துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு “வணக்கம் ஜமீன்தாரையா”, என வணக்கம் வைத்தவாறு அப்பெண்ணின் தாத்தா வருகிறார். இவ்வாறு அறிமுகமாகும் துடுக்கான இளம் பெண் சொர்ணமும் (சரோஜா), ஜமீன்தார் கருணாகரனும் (டி.கே. சண்முகம்) காதலிக்கத் தொடங்குகிறார்கள்.
சொர்ணத்தின் தாத்தா ‘இது சரிவராது’ எனச் சொன்னாலும், கருணாகரன் சொர்ணத்தை மணப்பதாக முடிவு செய்கிறார். இந்த காலகட்டத்தில், ‘கருணாநிதி அண்ட் கோ பிரபல பங்கு வியாபார நிறுவனம் மூடப்பட்டது’ எனச் சுதேசமித்திரன் செய்தித் தாளில் தலைப்புச் செய்தி வருகிறது. அதாவது கருணாகரனின் நிறுவனம் மூடப்படுகிறது.
சொர்ணத்தைத் திருமணம் செய்வதில் அவர் உறுதியாக இருந்தாலும், சிக்கல் அவருக்கு வேறு வடிவில் வருகிறது. கலப்புத் திருமணம் செய்து கொண்டால், சாதித் தலைவராக இருக்க முடியாது. அப்படி முடியாத நிலையில் தேவஸ்தானமும், கோவிலும் அவரது கட்டுப்பாட்டை விட்டுப் போய்விடும். இவர் ஜமீன்தார்தான் என்றாலும், சொத்து கோவிலுக்கு உரிமையானது. இவரால் எதையும் விற்க முடியாது. கடனை அடைக்கவே வழியில்லை. இதில் தேவஸ்தானமும் போய்விட்டால், இன்னமும் கூடுதல் சிக்கல். ஏனென்றால், கோவில் நகைகளை இவர் யாருக்கும் தெரியாமல் அடகு வைத்துள்ளார். ஊர் மற்றும் கோவில் பணத்தை வேறு இவர் தனது நிறுவனத்துக்காகப் பயன்படுத்தி இருக்கிறார்.
இதனால் சொர்ணத்தைக் கைவிட்டு விட்டு, பவானி என்ற பெண்ணை அவர் மணக்கிறார். திருமணம் 20-1-33 அன்று நடைபெறுவதாகக் காட்டுகிறார்கள்.
சென்னைக்கு வரும் சொர்ணம் அங்கு ஒரு கடையில் கருணாகரனை அவரின் மனைவியுடன் பார்க்கிறார். அவர் வரும்போது அன்றைய ரயில் மற்றும் டிராம் வண்டிகளில் பயணிப்பதைக் காட்டுகிறார்கள். ‘Drink delicious ovaltine for health’ என்ற விளம்பரத்துடன் வரும் AMRITA என்ற பெயருடைய ட்ரம்ப் அந்த கால கட்டத்தை நமக்குச் சொல்கிறது.
1923 ஜூன் 22 இல் இருந்து நாள்காட்டி மாறுவதைக் காட்டுகிறார்கள். 1951 வரை தேதிகள் மாறுகின்றன. 1923 ஜூன் 22 இல் அவர் சொர்ணத்தைச் சந்தித்ததாக எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது, கருணாகரனின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் (அங்கமுத்து) பெயர் சொர்ணம். அந்த பெயரைக் கேட்டதும், தான் காதலித்த பெண் நினைவிற்கு வர, கருணாகரன், கொஞ்சம் பணத்தை வீட்டு வேலையாள் ஒருவர் மூலம் கொடுத்து அனுப்புகிறார். அதே நேரம் சொர்ணம் அநாதை விடுதி ஒன்றிலிருந்து வெளியே வருகிறார். வேலையாள் சொர்ணத்தைக் கிராமத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை எனச் சொல்லி வருகிறார். நகரம் வந்த சொர்ணமோ பல இடங்களிலும் வேலை செய்கிறார் எல்லா இடங்களிலுமே அவரது உடலே குறிவைக்கப்படுகிறது. தற்கொலை வரை முயலுகிறார். தற்கொலை செய்து கொள்ளத் தண்டவாளத்தில் தலை வைக்கிறார்.
இன்னொருபுறம் கருணாகரனுக்கு சுசீலா என ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அது வளர்கிறது. படிப்படியாக வளர்ந்து வாலிபப் பருவத்தில் சுசீலாவைக் (லலிதா) காட்டுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சுசீலாவின் அம்மா ஏற்கனவே இறந்து இருக்கிறார்கள்.
பாவாடை சட்டையில் வரும் சுசீலா, பின்னாளில் பல ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் நடித்து, மலையாள திரைப்பட உலகில் கொடிகட்டிப் பரந்த நடிகை சுகுமாரி. பார்க்க மிகவும் அழகாக, நளினமாக இருக்கிறார்கள்.
சுசீலா, மருத்துவர் சேகரைக் (நாகேஸ்வரராவ்) காதலிக்கிறார். சுசீலா வீட்டில் அவரது அப்பா கருணாகரன், மனைவியின் அண்ணனிடம் பயந்து நடுங்குகிறார். அவர் சொல்லுவதற்கெல்லாம் தலை ஆட்டுகிறார். ஒரு காலகட்டத்தில் சுசீலாவின் மாமா, இவர்களின் காதலை நிராகரித்து, தன்னைத் தான் சுசீலா மணந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி அவரின் அப்பாவிடம் சம்மதமும் வாங்கி விடுகிறார்.
இது குறித்து சேகர் சுசீலாவின் அப்பாவிடம் கேட்க, அவர் நடந்த உண்மைகளைச் சொல்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன், ஒருநாள், கருணாகரன், சொர்ணத்தைச் சந்திக்க நேருகிறது. அப்போதும் சொர்ணா, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார். அவர் மறுக்க, அருகிலிருந்த ஏழை ஒருவர், கருணாகரனை அடிக்கிறார். காய்ச்சல் வேறு இருந்ததால், கருணாகரன், சொர்ணத்தின் குடிசையில் தங்குகிறார். அப்போது சொர்ணத்துடன் இருந்த ஏழை மனிதரான ஜமீன் தோட்டக்காரர், “என் முதலாளியை மயக்குவதற்காக ஜெகவீரன், நடிகை ஒருவரை அழைத்து வந்து இருக்கிறார்”, என்கிறார். அப்பெண்ணைப் பார்த்துவிட்ட சொர்ணமோ, “அவர் நடிகை அல்ல; கருணாகரனின் மனைவி” என்கிறார். இதைக் கேட்ட கருணாகரன் விரைந்து சென்று பார்க்கிறார்.
உண்மையில், தனது அண்ணன் ஜெகவீரனுடன் அவரது மனைவி பவானிதான் வந்து இருக்கிறார். கோபத்தில் கருணாகரன் தன் மனைவியைக் கொன்று விடுகிறார். தான் பெற்ற கடனுக்காக, தான் தான் தங்கை பவானியைக் காட்டி சமாளிக்கலாம் என அழைத்து வந்ததாக ஜெகவீரன் சொல்கிறார். கருணாகரன் தன் தங்கை பவானியை கொலை செய்ததைப் படம் பிடித்து வைத்துக் கொண்ட ஜெகவீரன், அவரை மிரட்டிப் பணிய வைத்துக் கொண்டு இருக்கிறார். இது தான் அவர் ஜெகவீரனுக்குப் பயப்படுவதற்கான கதை.
சுசீலாவைத் தேடி மாமா ஜெகவீரன் வருகிறார் என்றதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்யலாம் என எண்ணுகிறார். அந்த நேரத்தில் திருடன் ஒருவன் வருகிறான். அவனிடம் கெஞ்சித் தனக்குக் காதலனாக நடிக்கும்படி சுசீலா சொல்கிறார். அப்போது அங்கு வந்த சேகர், சந்தேகத்தில் சுசீலாவைத் திட்டி விட்டுத் திருடனின் பின்னால் செல்கிறார்.
திருடன், தன் வீட்டிற்குப் போய்த் தன் தாயிடம் நடந்தவற்றைச் சொல்கிறான். அம்மா அப்போது தான் சுசீலா உன் தங்கை தான் என்கிறார். இதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சேகருக்கு, அவர்தான் சொர்ணம் என்பது தெரிகிறது. திருடனாக வந்த ரத்னம், சேகர் இருவரும் இணைந்து போட்டோ மற்றும் அதன் நெகட்டிவை எடுத்து அழிக்கிறார்கள். சுசீலாவைக் கொல்ல வந்த ஜெகவீரனிடமிருந்து அவரைக் காப்பாற்றும் கருணாகரன், குண்டடிபட்டு இறக்கிறார். ஒரு மகளுடன் சுசீலா சேகர் தம்பதிகள் இருப்பதாகக் கதை நிறைவடைகிறது.
கருணாகரன் கொலை செய்ததைப் புகைப்படம் எடுத்த ஜெகவீரன்தான் தவறானவர் போலச் சித்தரிக்கப் படுகிறாரே தவிர, கருணாகரன் செய்த கொலை குறித்து யாரும், குறிப்பாக மகள்கூட, தனது அம்மாவின் கொலை குறித்து, கருத்து தெரிவிப்பதாக இல்லை. அதாவது நடத்தையில் தவறு இருக்க வேண்டியது இல்லை; அப்படிக் கணவன் நினைத்தால்கூட கொலை செய்யலாம் என்ற மாதிரிதான் எண்ணத் தோன்றியது. குறைந்த பட்சம் இறுதியில் கருணாகரன் இறந்தது போலவாவது காட்டினார்களே எனத் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
‘எங்க நாடு இது எங்க நாடு
எங்கும் புகழ் பொங்கும் நாடு
வளம் பொங்கும் நாடு
வந்த எல்லாருக்கும் எடம் கொடுக்கும் ஏமாந்த நாடு
குடிசை இல்லாம தரித்திரமானாலும்
தலைவிதின்னு நம்பிகிட்டு சாமிய கும்பிடும் நாடு
சங்கம் வைத்து மொழி வளர்த்த தமிழ்நாடு – இப்போ
தாய் மொழியைக் கதம்பம் பண்ணும் சண்டாள நாடு
சொந்த நாட்டு மனுஷங்களைத் தூக்கிப் பேசாது
சொரண்ட வந்த ஆளுக்கெல்லாம் சொகுசு மால போடும் நாடு
உலகுக்கெல்லாம் தருமம் சொல்லி உயர்ந்த நன்நாடு இப்போ
உயர்வு தாழ்வு பேசிப்பேசி ஒற்றுமையில்லா நாடு’
எனப் பாடிக்கொண்டு சொர்ணமாக வரும் நடிகை சரோஜா, அவ்வளவு கம்பீரமான நடிப்பைக் கொடுக்கிறார். அந்த மாட்டுவண்டியை ஓட்டி வரும்போது, மிகவும் கைதேர்ந்த வண்டி ஓட்டி போன்று, நின்று கொண்டே வருகிறார். அவர் சர்க்கஸ் செய்வதற்கான பயிற்சி எடுத்திருந்தவர் என்பதால், அவரால், அவ்வளவு இலகுவாக நிற்க முடிந்து இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் போகப்போக சோகக்கடலில் மூழ்க வைத்து, அவரது திறமை முழுவதையும் மூழ்கடித்தது போன்று தோன்றியது.
டி.கே. சண்முகம் கருணாகரனாக இளைஞராகவும் வயதானவராகவும் வருகிறார். இவர், நாடக உலகில் கொடிகட்டிப் பரந்த டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவர். அவ்வையார் நாடகத்தில் அவ்வையாராக நடித்ததால் ‘அவ்வை சண்முகம்’ என அழைக்கப்பட்டவர். அவ்வை சண்முகி என்ற திரைப்படத்தில், அவ்வை சண்முகம் அவர்களின் பெயர் கொண்ட சாலையைப் பார்த்துத்தான் கமல், தன் பெயர் அவ்வை சண்முகி என்பதாகப் காட்சிப்படுத்தியிருப்பார்கள். கமல், அவ்வை சண்முகி என்ற பெயரை நாடகக் கலைஞர் அவ்வை டி.கே. சண்முகத்துக்கு மரியாதை செய்யும்விதமாக வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
டி.எஸ். பாலையா ஜெகவீரன் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வழக்கமான நடிப்புதான் என்றாலும், ‘Beautiful Rose Flower உன் Face’ என சுசீலாவை (லலிதா) நினைத்து, காரில் பயணம் செய்தவாறு பாடுவது அவ்வளவு அட்டகாசம்.
சுசீலாவாக வரும் லலிதா, நடிப்பு, ஆட்டம் எனத் திரைப்படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். சிறு குழந்தை சிறுமி (சுகுமாரி) எனத் தொடங்கி, லலிதா ஆடும் இந்த ஆட்டம் அவ்வளவு அழகு. பாட்டும் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. எம்.எஸ். ராஜேஸ்வரி அம்மா பாடியிருக்கிறார்கள். பிற்காலத்தில் பெரும்பாலும் குழந்தைகளுக்கான பாடல்கள் பாடிய அவரின் தொடக்கக் கால பாடலாக இது இருக்க வேண்டும். குரலில் என்ன ஒரு இனிமை.
‘வசந்த முல்லையும் மல்லிகையும் அசைந்தே
ஆடிடுதே அசைந்தே ஆடிடுதே…
இசைந்த காதலர் சேகரனை மனம் நாடுதே என்
மனம் நாடுதே மனம் நாடுதே.
உயர்ந்த வானவில் போலே
உடை ஒய்யாரமாய் அணிவேனே இனி நானே
அழகென்னும் போதையில் தானே
அவர் ஆடிட செய்திடுவேனே
உயர்ந்த வானவில் போலே
உள்ளத்திலே இன்பம் பெறவே நான் பாடுவேன் – 2
அன்பாய் பேசினால் நான் வம்பாய் பேசுவேன் …
என் பால் வா என்றால் எட்டி ஓடுவேன்…’
சுசீலாவின் காதலன் டாக்டர் சேகராக நாகேஸ்வரராவ் வருகிறார். இவர் தெலுங்கு படங்களின் நட்சத்திர நாயகனாக இருந்தவர். இந்த திரைப்படத்தில் மிகவும் இளமையாக துறுதுறு கண்களுடன் மிகவும் அழகாக இருக்கிறார். நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையார் இவர்.
நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, திருடனாக வருகிறார்.
அடுத்துச் சொல்ல வேண்டும் என்றால் குறத்தி நடனம். 1950இல் வெளிவந்த ‘சமாதி’ இந்தித் திரைப்படத்தில் வெளிவந்த ‘Gore gore o baanke chhore’ என்ற பாடலின் மெட்டில் எம்.எல். வசந்தகுமாரி அம்மா பாடி லட்சுமி காந்தம் அவர்கள் ஆடும் குறத்தி நடனம் மிகவும் பிரபலமாக இருந்து இருக்க வேண்டும். பள்ளியில் நடனம் ஆடும் பாடலாக இது இருந்து இருக்கிறது. அடிக்கடி இலங்கை வானொலி மூலம் எங்கள் காதுகளை வருடிய பாடல் இது.
‘ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மையா
நரிக் கொம்பிருக்கு வாங்கலையோ
கோழியாட்டைப் பிடிக்கும் எங்க குள்ளநரி
ஏழை ரத்தம் குடிக்கும் இங்கே உள்ள நரி
பல்லிளிச்சு காட்டி பட்டம் பதவி தேடி
கட்சிப் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும்
வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி
மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நாட்டு நரி
வேலை ரொம்ப வாங்கும் கூலி தர ஏங்கும்
பட்டினியைப் பார்த்தும் புளி ஏப்பம் விடும்
காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க
உங்க நாட்டில் உள்ள நரி ரொம்ப பொல்லாதுங்க
குள்ள நரி கொம்பை கோத்து போடு சாமி
புள்ளை குட்டிக்காச்சும் நல்ல புத்தி வரும்’
‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?
அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க – எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க – நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? – கண்ணே
அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
அருகிலாத போதும் – யாம்
அருகிலாத போதும் – தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? – கண்ணே’
என பாரதிதாசனின் அமுத சொற்களில், இழைந்தோடும் இசை நம்மை மயக்கும்.
‘அரும்புபோல் மீசை வைத்து
அரைக்கை கோட்டு மாட்டி’
என லலிதா, பத்மினி நாகேஸ்வர ராவ், இணைந்து ஆடும் மற்றொரு குறவர்-குறத்தியர் நடனமும் திரைப்படத்தில் உள்ளது. பாட்டுப் புத்தகத்தை இங்கே காணலாம்.
‘கொட்டு முரசே’ என்ற பாரதியாரின் பாடலுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது. இந்தப் பாடல், 1981-82 காலகட்டத்தில் பாரதியாரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஏ.வி.எம். நிறுவனம் வெளியிட்ட ஒலிநாடா மூலம் எனக்கு அறிமுகமானது.
தொடரும்…
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.