இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல இன்ஸ்டன்ட் எழுத்து.

இங்கே எழுத்தாளராக விரும்பும் ஒவ்வொருவரின் கனவும் அச்சுப் புத்தகத்தில் எப்படியாவது தங்கள் பெயரைப் பார்த்துவிட வேண்டுமென்பதுதான். எனக்கும்கூட அதேதான்.

ஆனால், அச்சுப் புத்தகமாக வருவதற்கு நாம் ஏதாவது உருப்படியாக எழுதி இருக்க வேண்டுமே?

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் டைரி ஒன்றில் நூறு பக்க அளவுக்குச் சின்னதாக நாவல் ஒன்று எழுதினேன். என்னுடன் பயின்ற தோழிகள் அதனைப் படித்துவிட்டு நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள்.

ஆனால், சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த நாவலை நானே வாசித்தபோது அதுவே படுகிரிஞ்சாகத் தெரிந்தது. எங்கேயும் லாஜிக்கும் இல்லை. ஒரு மண்ணும் இல்லை. புத்தகமாக வருவதற்குக் கொஞ்சம்கூடத் தகுதியே இல்லாத கதை என்று ஓரங்கட்டிவிட்டேன்.

கதையை மட்டும்தான். எழுதுவதை அல்ல. யாரோ என் மூளைக்குள் புகுந்து நான் பெரிய எழுத்தாளராக வருவேன் என்று நம்ப வைத்திருப்பார்கள் போல. கல்லூரி முடித்து வீட்டில் வெட்டியாக இருந்த நேரத்தில் மீண்டும் எதையாவது எழுத வேண்டுமென்று கை பரபரத்தது. ஆனால், என்ன எழுதுவது?

இருபது வயது. வாழ்க்கையில் பெரிதாக ஏற்ற இறக்கங்கள் எதையும் பார்த்ததும் இல்லை. பார்ன் வித் சில்வர்                    ஸ்பூனும் இல்லை. ஒரு எவர் சில்வர் ஸ்பூன் அளவுக்குக்கூடப் பெரிதாக அனுபவமும் இல்லை. எனக்கு அப்போதிருந்த ஒரே உருப்படியான தகுதி புத்தகங்களை வாசித்தல் மட்டுமே.

ஆனால், ஆரம்பத்தில் செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என்கிற எண்ணத்தில் ஒரு நல்ல கதைக்கருவிற்காகக்                   காத்திருந்தேன். அப்போதுதான் எங்கள் பாட்டி குடும்பத்தில் ரொம்ப வருடங்கள் முன்பு நிகழ்ந்த ஆணவக் கொலை பற்றிக் கேள்விப்பட்டேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன். இதுதான் என் கதையின் மூலம். கதையின் நாயகிக்கு என் பாட்டி பெயரை வைத்து எழுத ஆரம்பித்தேன். ஆரம்பித்தேன் அவ்வளவுதான். அதன் பிறகு வேலை, திருமணம், குழந்தை என்று எட்டு வருடங்கள் ஓடிவிட்டன. அந்தக் கதையை நான் எழுதி முடிக்கவே இல்லை. 

ஆனால், அந்த எட்டு வருடங்களில் எனக்குள் கோமாவில் கிடந்த ரைட்டர் மூளை அவ்வப்போது விழித்துக் கொண்டு என்னை எழுதச் சொல்லி நச்சரிக்கும். சரி என்று எழுத ஆரம்பிப்பேன். இரண்டு, மூன்று அத்தியாயம் எழுதுவேன். வீட்டு வேலை, குடும்பச் சூழ்நிலை, குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது என்று ஏதாவது ஒரு தடங்கல் வரும். மீண்டும் எழுதுவதற்கு முழுக்குப் போட்டுவிடுவேன். ரிப்பீட்டு!

இது போலப் பல முறை நான் கோட்டை அழித்து அழித்துப் போட்டிருக்கிறேன். இந்த நிலையில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று ஜியோ இணைய சேவையை இலவசமாக வழங்கியது. அடுத்து என் தங்கை எழுத்து மற்றும் வாசிப்பிற்கான ஒரு செயலியை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பெயர்தான் வாட்பேட் (Wattpad).

‘When a person really desires something, all the universe conspires to help that person to realize his dream’ – Paulo coelho

நாம் ஆழ்மனதிலிருந்து நேசிக்கின்ற ஒரு விஷயத்தை அல்லது கனவை அடைவதற்கு இந்தப் பிரபஞ்சமே வழிகாட்டும் என்பது ‘அல்கெமிஸ்ட்’ நாவலின் பிரபலமான வரி. இந்த வரியின் ஆழத்தை உணர்ந்த தருணம் அது.

வாட்பேட் (wattpad) என்பது எழுத்தாளர்கள் வாசகர்களை இணைக்கும் ஒரு செயலி. 2006இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயலியில் தமிழ் உள்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட உலக மொழிகளில் கதைகளை வாசிக்கவும் எழுதவும் முடியும். தற்போதைய கணக்கின்படி ஒன்பது கோடிக்கும் மேற்பட்ட வாசகர்கள், அறுபத்து அறு கோடிக்கும் மேற்பட்ட கதைகள் என அதில் மானாவாரியாகக் குவிந்து கிடக்கின்றன.

அச்செயலியில் பெரும்பாலும் எழுத்தாளர்களே வாசகர்களாகவும் இருப்பார்கள். வாசகர்களே எழுத்தாளர்களாகவும் மாறுவார்கள். மேலும் எழுதுபவர்களுக்குப் பெரிதாக வரையறைகள், விதிமுறைகள் எல்லாம் கிடையாது. எதை வேண்டுமானாலும் எழுதலாம்.

அதுவும் சிலர் தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாமல்             தங்கிலீஷில் தட்டச்சு செய்து தங்கள் கதையை வாட்பேடில் பதிவேற்றம் செய்திருந்தை எல்லாம் ஆரம்பத்தில் பார்த்து எனக்கு அதிர்ச்சிதான். ஆனால், அந்தக் கூட்டத்தினரைப் பொறுத்த வரை அவர்களின் தேவை கதை. அது எப்படி இருந்தாலும் சரி என்று படித்தார்கள்.

அதுநாள் வரை இணைய எழுத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாத நான், அந்தச் செயலியைப்                                   பயன்படுத்தினேன். ‘தமிழ் மோனி’ என்று எனக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டேன். 

அதனைப் பயன்படுத்த சுமாரான இணைய அறிவு இருந்தாலே போதுமானது. கதை பதிவிடும் பகுதியைச் சொடக்கி அதில் தலைப்பு, கதையைப் பற்றிய சில வரிகள், கதைக்கான முகப்பு படம், எழுத்தாளர் பெயர் என அனைத்தையும் பதிவிட்டேன். அதன் பின் கீழே இருக்கும் ப்ளஸ் என்ற குறியீட்டைத் தட்டி எனது நாவலின் முதல் அத்தியாயத்தை செல்பேசியிலேயே தட்டச்சு செய்தேன்.

தட்டச்சு செய்யும் வரிகளை நிமிடத்திற்கு ஒரு முறை அச்செயலி சேமித்து வைத்துக் கொள்ளும். ஆதலால் நாம் தவறுதலாக ஒரு வரியை அழித்து விட்டாலும்கூட மீண்டும் அதனை மீட்டுக் கொண்டு வர முடியும்.

முதல் அத்தியாயத்தை எழுதி முடித்து பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக ஒரு தில்லாலங்கடி வேலை ஒன்றைச் செய்தேன். நான் எழுதியதோ துப்பறியும் நாவல் (investigation thriller). ஆனால். நிறையப் பேரை வாசிக்க வைக்க வேண்டுமென்றால் அது துப்பறியும் நாவலாக மட்டும் இருந்தால் வேலைக்கு ஆகாது. ரொமன்ஸ் ஜெனராக            இருக்க வேண்டும்.

ஏனெனில் பெண்கள் வாசிப்பில்  ரொமன்ஸ்தான் எல்லா ஜெனர்களுக்கும் தலை. மற்ற எல்லாம் வகைகளும் அதற்குக் கீழ்தான். இது நம் ஊர் பிரியாணி போல. எப்படி, எங்கே, எந்நேரத்தில் விற்றாலும் வியாபாரம் ஆகும் பொருள்.

இங்கே என்று இல்லை. உலக நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த பெண் வாசிப்பிலும் ரொமான்ஸ் வகையறாவிற்கு மட்டும் தனி மதிப்பு உண்டு. அதிலும் வாட்பேட், பிரதிலிபி, அமேசான் கிண்டில் போன்ற செயலிகளில் கோடிகளில் ஈட்டித்தரும் வியாபாரம் இது.

குடும்ப நாவல் உலகமும் இந்த வியாபாரத்தில் அடங்கியவைதான். இந்த ரொமான்ஸ் வகையறா குறித்தே ஒரு முழு அத்தியாயம் எழுத வேண்டும். ஆதலால் இந்த விவாதத்தைப் பின்வரும் அத்தியாயங்களில் நாம் தொடர்வோம்.      

இப்போது என் கதையின் முதல் அத்தியாயத்திற்கு வருவோம். வாட்பேட் செயலி இன்ஸ்டன்ட் நூடல்ஸ் போல இன்ஸ்டன்டாக எனது கதையை வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது. உடனடியாக அவர்களிடமிருந்து கருத்துகளும் வந்தன.

சில நாட்களில் 1K reads என்று காட்டியது. பார்த்ததுமே ஜிவ்வென்று ஓர் உணர்வு மண்டைக்கு ஏறியது. நாளடைவில் இந்த ஆயிரம் (1k) என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றளவுக்கு வாசிப்பவரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது.

அது மட்டுமே அல்ல.  ‘எபிசொட் நல்லா இருக்குபா… அடுத்த எபிசோட் எப்போ                    போடுவீங்க’ போன்ற வாசகர்களின் கருத்துகள் என்னைத்                            தொடர்ச்சியாக எழுத வைத்தன. 

எட்டு வருடங்களாக ஒரே ஒரு நாவலின் இரண்டு மூன்று அத்தியாயங்களைக்கூட எழுத முடியாமல் திணறிக் கொண்டிருந்த நான், நாற்பது நாள்களில் ஒரு முழு  நாவலை எழுதி முடித்தேன். பாட்டி குடும்பத்தில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டேன் இல்லையா? அதனை எனது இரண்டாவது நாவலாக அதே செயலியில் அடுத்த ஒரு மாதத்தில் எழுதி முடித்தேன்.

குறுக்கு வழியில் சென்று கதை எழுதிவிட்டாலும் பதிப்பித்தல் எனும் போது மீண்டும் நாம் சுற்றி வளைத்து ஆரம்பித்த இடத்திற்கே வர வேண்டிய கட்டாயம். பதிப்பகத்தினரை அணுக வேண்டும். எந்தப் பதிப்பகத்தினரை அணுகுவது என்ற போதுதான் பெண் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களை அதிகம் கொண்ட அருணோதயம் பதிப்பகம் நினைவுக்கு வந்தது.

ஆனால், நமக்கெல்லாம் அந்தப் பதிப்பகத்தில் புத்தகம் போட்டுத் தர வாய்ப்பு இல்லை என்று மூளை திட்டவட்டமாகச் சொன்னது. இருந்தும் அவர்களை மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டேன். பலனில்லை.

என்ன செய்வது என்று யோசித்த போதுதான் அதே செயலியில் எழுதிக் கொண்டிருந்த சக பெண் எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய நாவல் புத்தகமாக வெளிவரப் போவதாகவும் அதனைச் செயலியிலிருந்து தூக்கப்                 போவதாகவும் அறிவிப்பு கொடுத்திருந்தார்.

அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். அங்கிருந்துதான் என்னுடைய பாதை யூ டர்ன் போட்டு நேராகக் குடும்ப நாவல் உலகத்திற்குள் பிரவேசித்தது. 

(தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.