டே கேர் என்பது பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகும்போது, வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நபர்கள் இல்லாதபோது, குழந்தைகளை டே கேரில் விடுவார்கள்.

நான் இரண்டு வயதிலேயே டே கேரில் விடப்பட்டேன். டே கேர் வாழ்க்கை எனக்கு எப்பொழுதும் பிடித்தது கிடையாது. நான்கு வயதில் இருந்து நடந்த சில சம்பவங்கள் எனக்கு நினைவில் இருக்கின்றன.

டே கேரில் உள்ள பொறுப்பாளரை எனக்கு  எப்பொழுதும் பிடித்தது கிடையாது. மதிய நேரம் எல்லோரையும் தூங்கச் சொல்வார்கள். அங்கு இருக்கும் பொறுப்பாளர், தூங்கவில்லை என்றால் மரக்குச்சியால் அடிப்பார். எனக்குத் தூக்கமே வராது. எப்பொழுதும் அதற்காக அடி வாங்கிக் கொண்டுதான் இருப்பேன். என்னுடைய நண்பர்களுடன் நான் பேசிக்கொண்டு இருந்தாலும், அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் அவர் என்னைத்தான் அடிப்பார்.

நான் இருந்த டே கேர் PrimeRose Play School என்று பெயரிடப்பட்டு இருக்கும். பொறுப்பாளர் பெரும்பாலான நாட்கள் வெளியே விளையாட விட மாட்டார். உள்ளே இருக்கும் அறையில் உட்கார வைத்து, நண்பர்களுடன் பேசாமல் அமைதியாக இருக்கச் சொல்வார். அப்படி அமைதியாக மெதுவாகப் பேசினால்கூட மரக்குச்சியால் அடிப்பார்.

ஒருநாள் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பிருந்தாவிடம் (அம்மா) கூறினேன். பிருந்தா, யார் இதை எல்லாம் செய்கிறார்களோ அவரிடமே (பொறுப்பாளரிடமே) சென்று கூறினார். பொறுப்பாளர் வந்து யார் உன்னை அடிக்கிறார் என்று என்னிடம் கேட்டார். நான், ‘நீங்கள்தான்’ என்று சொன்னேன். சிறிது நேரம் கழித்து அங்கு வேலை செய்யும் நபர்கள் ஒவ்வொருவராக வந்து என்னிடம் ‘யார் உன்னை அடிக்கிறது’ என்று கேட்டார்கள். நான் ‘குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பாளர்தான்’ என்று சொன்னபோது எல்லோரும் ஆச்சரியத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.

நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து, ஆறாம் வகுப்பில் இருக்கும்போது, நானே பொறுப்பாளரிடம் போய், ‘நீங்கள் என் சின்ன வயதில் இருந்தே என்னைக் காரணம் இல்லாமல் அடித்துக் கேலி செய்தது உண்டு. இப்படிப் பத்து ஆண்டுகளாக என்னிடம் நடந்துகொண்டதை நான் விரும்பவில்லை’ என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் எந்த விளக்கமும் தரவில்லை. பதிலும் கூறவில்லை.

எனக்கு அங்கே எல்லா வயதில் இருந்தும் தோழர்கள் இருந்தார்கள். அங்கு ஒரு தோழி என்னுடைய வயதுதான். ஆனால், அவள் இரண்டு முறை கே.ஜி வகுப்பு படித்ததால் ஒரு வகுப்பு பின்னாடி இருப்பாள்.

நான் எதைக் கொண்டு வந்தாலும் அவளிடமும் மற்ற நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்வேன். சிலநாட்கள் பகிரத் தோன்றாது. ஆனால், என்னுடைய தோழிக்கு எப்போதும் பகிர்ந்துகொள்வது பிடிக்காது. மீறி என்றாவது, கேட்பரி எக்ளெர்ஸ் சாக்லேட் ஒரு இன்ச் இருக்கும்.  அதைவிட மெலிசாக வெட்டிக் கொடுப்பார். சின்ன வயதில் அது எனக்குப் புரியவில்லை; நான் வளர்ந்தபோது புரிந்தது. அவள் எப்பொழுதும் அங்கு இருக்கும் நிறுவன முதல்வரை, ‘கஞ்சம்’ என்று சொல்வாள். அப்பொழுது இந்த நிகழ்வு எனக்கு நினைவுக்கு வந்தது. அவள் எல்லாவற்றையும் எல்லாரையும் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். அது மற்றவர்களைப் பற்றித் தவறான பிம்பத்தைக் கொடுத்தது. எல்லாவற்றையும் எதிர்மறையாகக் கூறுகிறாள் என்று புரிந்தது.

இப்படியும் சில மனிதர்கள் இருப்பார்கள். நம்மைப் பாதிக்காதவாறு நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அர்த்தம் அவர்களிடம் பழகாமல் இருப்பது அல்ல; யாராக இருந்தாலும் அவர்களிடம் சிறிதாவது ஒரு நல்ல பண்பு இருக்கும்; அதை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

நான் அங்கு சந்தித்த மனிதர்களிலேயே டேகேரின் நிறுவனராகிய தலைமை ஆசிரியர்தான் மிகவும் பாசிட்டிவான மனிதர். டேகேரில்தான் என்னுடைய கேஜி வகுப்புகளையும் படித்தேன். அவர் என்னிடம் நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொள்வார். அவர் சில நேரம் என்னைக் கண்டித்தும் உள்ளார். அது உங்களை இன்னும் உறுதி அடையச் செய்வதாக இருக்கும். காரணமே இல்லாமல் கண்டிக்கிற பொறுப்பாளர்போல் இருக்காது.

அங்கு வேலை செய்யும் நபர்கள், குழந்தைகள் எல்லோரும் தூங்கும்போது சத்தமாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். இடத்தின் உரிமையாளர் வருகிறார் என்று அறிந்தால் அமைதியாக வேலை செய்வதற்குப் போவார்கள். அங்கு சந்தித்த மனிதர்களிலேயே தலைமை ஆசிரியரும் மற்றும் சிலரும் நேர்மறைச் சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.

என் இப்போதைய வாழ்வில் டே கேரின் பங்கு என்னவென்றால், எனக்கு எல்லா வயதிலிருந்தும் நண்பர்கள் இருந்தார்கள். எல்லாருடனும் பழக முடிந்தது. என்னுடைய நண்பர்கள் என்னைவிடப் பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் அது ஒரு தடையாக இருந்ததில்லை. சமமாகத்தான் தோன்றும் எனக்கு.

ஒரு தோழிக்கும் எனக்கும் இடையே ஏழு ஆண்டுகள் வித்தியாசம். என்னைவிட வயதில் சிறியவர் அவர். என்னைப் பெயர் சொல்லிதான் கூப்பிடுவார். அவருடைய அம்மாவுடன் நான் பேசியது உண்டு. அவரது மகள் என்னை ‘ரிட்டி சீ யூ’ என்று சொல்வதைக் கேட்டுவிட்டு, ‘அது எப்படி நீ மரியாதையே இல்லாமல் அப்படிக் கூப்பிடுவே? எது வேண்டுமானாலும் இருக்கட்டும்; அவர் உன்னைவிடப் பெரியவர்; அவரை அக்கா என்றுதான் அழைக்க வேண்டும்’ என்றார். மகிழ்வான செய்தி என்னவென்றால், அதற்குப் பிறகும் தோழி எப்போதும் என்னை ‘ரிட்டி’ என்றுதான் அழைத்தார்.

‘அக்கா, தங்கை, சிஸ்டர், தீதி’ என்று எல்லாம் என்னைக் கூப்பிடுவதிலும் நான் என்னுடன் வயதில் பெரிதாக இருக்கும் நண்பர்களை அப்படிக் கூப்பிடுவதிலும் எனக்கு விருப்பமில்லை. அங்கு இருந்த எல்லோரும் எந்த வயதுடையவர்களாக இருந்தாலும் அவரவர் பெயரில்தான் கூப்பிடுவார்கள்.

நீங்கள் கூறலாம், ‘அக்கா’ என்று ஒருவரைக் கூப்பிட்டால் அவர் ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்வார் என்று. மரியாதை என்பது மனதிலும் ஒருவரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதிலும்தான் இருக்கிறது; அவரவர் அவர் பெயர்களுக்குப் பின்னாடி ‘அக்கா, அண்ணா’ என்று அழைப்பதில் இல்லை; அப்படி உங்களை யாராவது கூப்பிட வேண்டும் என்று நினைத்தால் அது உங்களின் விருப்பம்; அதேபோல அப்படிக் கூப்பிட விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தத் தேவையில்லை.

என்னுடைய டே கேரில் இருக்கும்போது நானும் என் நண்பர்களும் கதை எழுதி, கதாபாத்திரங்களை வடிவமைத்து விளையாடுவோம். நாங்கள் செய்வதைப் பார்த்தால் வேடிக்கையாகத் தோன்றும். ஆனால், அப்படி விளையாடியது கற்பனைத் திறனை விரிவடையச் செய்தது. வழக்கம்போல் எல்லோரும் விளையாடுவதை விட்டுவிட்டுப் புதுமையாகச் செய்தது ஒரு மகிழ்வான செயல். எங்களுக்கு இப்படி விளையாடுவது நன்றாக இருந்தது.

எங்களைத் துன்பப்படுத்திய பொறுப்பாளரை ஒரு கதாபாத்திரமாக வைத்து ‘கோல்டன் லேடி’ என்று கதை எழுதி, அதை வேடிக்கையாக ஆக்கிவிட்டோம். இது நிகழ்வுகள் எதையும் மாற்றவில்லைதான்; ஆனால் அந்த நிகழ்வுகள் என்னைப் பாதிக்காதவாறு செய்தது.

டே கேரிலிருந்த தலைமை ஆசிரியர் ஓர் ஆங்கிலோ இந்தியன். அவர்தான் டேபிள் கிளாத் விரித்துதான் உணவு உண்ண வேண்டும்; கரண்டியில் உணவு சாப்பிட்டால்கூடக் கையை நன்றாகக் கழுவ வேண்டும்; அங்கு ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிகளில் உரையாடக் கூடாது; அதை மீறாமல் இருப்பது நமக்கு நல்லது’ என்று எங்களைப் பழக்கினார்.

எனது டேக் கேரில்தான் ப்ரீ கேஜி, யுகேஜி வரையிலான வகுப்புகளும் இருந்தன. அங்குதான் படித்தேன்.

அங்கு இருந்த இடம் பார்ப்பதற்குச் சிறியதாக இருந்தாலும் அங்கு நீங்கள் இருக்கும்போது பெரியதாக இருக்கும். நிறைய சாளரங்கள் இருக்கும். சில மரங்கள், நிறைய செடிகள், நிறைய தேனீக்கள், கொசுக்கள் டே கேர் உள்ளேயும் வெளியேயும் இருக்கும். வெளியே மீன்கள் நிரம்பிய தொட்டிகள் இருக்கும். Park, Trampline, Tuition, ExtraCurricular activities எல்லாம் உண்டு.

இரண்டு வயதில் அங்கு இருந்த ‘ஐயா’ தலைமை ஆசிரியருடைய கணவர், பிள்ளைகள் எல்லாருக்கும் ஓட்டப் பந்தயம் வைப்பார். தலைமையாசிரியரும் அவரும், குழந்தைகளை எப்போதும் விளையாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களுடைய வீட்டைப் பார்க்க வேண்டும்; ஒரு பெரிய கண்ணாடிக் கதவு சமையலறைக்கும் பால்கனிக்கும் இடையில் இருக்கும்; தலைமையாசிரியர் மிகவும் கலாரசனை உடையவராக இருப்பார். நான் ப்ரீ கேஜி படித்துக் கொண்டு இருந்த வகுப்பறை, ஆங்கில எழுத்துகளாலும் டூடுல் ஆர்ட்களாலும் நிரம்பி இருக்கும். எனக்கு என்னுடைய யுகேஜி வகுப்பையும் அது நடத்தப்பட்ட இடமும் பிடிக்கும். வகுப்பு நடக்கும் இடத்திற்கு வலது பக்கம் ஒரு மாடி போகும். அதுதான் யுகேஜி வகுப்பறை. அதற்கு உள்ளேயும் நுழைந்தால் ஒரு கதவு இருக்கும். அங்கு இருந்து மொத்தமாக மலை உச்சியில் நின்று உலகத்தைப் பார்ப்பது போல் பிரிம்ரோஸ் கிண்டர் கார்டன் முழுவதையும் பார்க்கலாம்.

பின் குறிப்பு:

நான் இங்கு எழுதியிருப்பது சில நினைவுகள் மட்டும்தாம். இன்னும் நிறைய இருக்கின்றன. ஆனால், அவற்றை எழுதுவதற்கு விருப்பமில்லை.

படைப்பாளர்:

 ரித்திகா

ரித்திகா (18.06.2005) வயது 18, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினரான இவர் இதுவரை ட்ரெக்கிங், ட்ராவல் சென்ற இடங்கள் : பல்லாவரம் இரண்டு முறை, வொய்ஹெச்ஏஐ வழியாக – இராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடர் (2015), கோவா (2016), இராஜஸ்தான் பாலைவன ட்ரெக்கிங்(2017); சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ வழியாக – ஜவ்வாது மலை ட்ரெக்கிங் (2017), பரம்பிக்குளம் பயணம்(2016), பாண்டிச்சேரி (2017), கோதாவரி பயணம் (2018) ஆகியவை.

ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். கல்லூரியில் படித்து வருகிறார்..