இன்று மட்டுமல்ல, பல  தலைமுறைகளாக அழகு குறித்த தவறான புரிதலால் ஏற்படும் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

அழகு என்பது தோலின் நிறத்தை வைத்தும், உடல் எடையை வைத்தும் நிர்ணயிக்கப்படுவது போலவும், வெளுத்தத் தோலும் மிடுக்கான உடலமைப்பும் இருந்தால்தான், மனிதர்கள் இவ்வுலகில் வாழத் தகுதியுள்ளவர்கள் போலவும் தேவையற்ற மாய பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறது இந்தச்  சமூகம்.

சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அழகு என்கிற பெயரில் சித்தரிக்கப்படும் தேவையற்ற காட்சிகளும் விளம்பரங்களும் இன்றைய இளைய தலைமுறைகளின் எண்ணங்களை மிகவும் பாதித்து, தேவையற்ற  மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.

அதிலும் குறிப்பாகப் பெண் பிள்ளை என்றால் போதும் சொல்லவே தேவையில்லை. ஒரு பெண் கருத்தரித்தது தெரிந்ததும், அவள் குழந்தையை எந்தவிதச் சிரமமுமின்றி பெற்றெடுக்க வேண்டும் என்பதைவிட, கருவில் இருக்கும் குழந்தை மிகவும் பொலிவுடன் எலுமிச்சை நிறத்தில் பிறக்க வேண்டும் என்பதில்தான் அனைவரின்  கவனமும் இருக்கும். அப்பெண்ணின் வீட்டாரும் சுற்றத்தாரும் அறிவுரை என்கிற பெயரில் ஆயிரம் குறிப்புகள் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், கர்ப்பிணி பெண்ணின் மனநிலையையும் உடல்நிலையையும் குறித்துச் சிந்திக்காமல், அவளுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், குழந்தையின் தோல் வெளுக்க வேண்டும் என்பதற்காக, அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடு என அப்பெண்ணை ஒரு வழி செய்துவிடுவார்கள்.

இன்று கரு உருவாவதே பெரிய வரமாக இருக்கும்பட்சத்தில், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கண்டதை உண்டு, தேவையில்லாமல் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

வெளுப்பாகப் பிறந்த பிள்ளைகள் மட்டும் எதையுமே படிக்காமல், வீட்டில் படுத்துக் கொண்டே இருந்தால் போதும், அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இல்லம் தேடி வருமென இந்தப் பிரபஞ்சத்தில் உருவான எந்தவொரு ஜீவராசிக்கும் எந்தவிதச் சிறப்புச் சலுகைகளும் கிடையாது. யாராக இருந்தாலும் சரி, எந்த நிறத்தில், உயரத்தில் பிறந்தாலும் சரி உழைத்தால்தான் சோறு. இதை நன்றாக நியாபகத்தில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

இன்று நாம் வாழும் உலகத்தின் சூழலை நாம் அனைவரும் நன்கு அறிவோம். விதவிதமாக விஸ்வரூபம் எடுக்கும் புதுப்புது வைரஸ்களும், கலப்படமான பொருள்களும் என மாசு நிறைந்த சூழலுக்கு மத்தியில் வாழும் நாம், எந்தவிதக்  குறையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதே பெரும் சவாலாக இருக்கும்பட்சத்தில், தேவையில்லாமல் நிறத்தைக் குறித்துக் கவலைப்படுவதும், உடலமைப்பைக் குறித்து வருத்தப்படுவதும் பகுத்தறிவற்ற செயலாகும்.

நம் குழந்தைகளை விதவிதமாக அலங்காரப்படுத்தி அழகு பார்க்கலாம். அதற்காக அந்த அலங்காரம்தான் நம் குழந்தைகளுக்கான அடையாளத்தைத் தருகிறது என்கிற தவறான எண்ணத்தை அவர்களிடம் விதைப்பது பெரும் தவறான செயல்.

குழந்தைகளின் புறத்தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அழகுபடுத்த முயற்சி செய்வதை விடுத்து, அவர்களின் அகத்தோற்றத்தை எவ்வாறு நல்ல எண்ணங்களால் அழகாக்கலாம் என்பதைக் குறித்துச் சிந்தியுங்கள் தோழர்களே!

இன்றைய குழந்தைகளிடம் அழகு குறித்த புரிதலையும், வியாபார நோக்கத்தில் அழகு குறித்த தவறான வதந்திகளை உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சமூகத்தையும்  குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

இதெல்லாம் பெரிய விஷயமா என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், மனநிலை வல்லுநர் ஒருவரிடம் மருத்துவ சிகிச்சைக்கு வந்த குழந்தையைப் பற்றி கூறிய தகவல் உண்மையில் என்னைத் திடுக்கிடச் செய்தது. பள்ளிக் குழந்தை ஒன்று, தன்னுடன் படிக்கும் சக மாணவன் அக்குழந்தையின் உடலையும் நிறத்தையும் குறித்துக் கேலி செய்ததால் நடந்த விபரீதத்தையும், பள்ளிக்குச் செல்ல மறுத்து மனஅழுத்ததிற்கு உள்ளாகியிருந்த தகவலை, நிகழ்ச்சி ஒன்றில் கேட்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

பள்ளியில் படிக்கும்போது குழந்தைகளுக் கிடையே பிரச்னைகள் வருவது சகஜம்தான். ஆனால், இவற்றிற்கெல்லாம் பிரச்னை வருகிறது எனும்போது குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டியது பெற்றோராகிய நம் பொறுப்பல்லவா!

நிறம், உடலமைப்பைக் கொண்டு சாதித்தவர்கள் பெயர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிடலாம். ஆனால், தன் விடாமுயற்சியால், தன்னம்பிக்கையால், தன் உழைப்பால், தன் திறமையால், தன் அறிவினால், சாதித்து வென்றவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது என்பதை உதாரணத்துடன் கூறுங்கள்.

அப்துல்கலாம், காமராஜர், மகாத்மா காந்தி, அம்பேத்கர் எனப்  பலர், காலங்கள் கடந்து சென்றாலும் இன்றும் நம் உள்ளங்களில் வீற்றிருக்கிறார்களே, இதற்கெல்லாம் காரணம் அவர்கள் அழகினால் சாதித்ததாலா? இல்லை, இல்லவே இல்லை. பிறருக்காக வாழ வேண்டும், மக்களுக்கு முடிந்தவரை நன்மை செய்ய வேண்டும் என்கிற உயரிய குணத்தினாலே அவர்கள் மறைந்த பின்னும், இன்றும் நம் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறார்கள்.

பருவம் மாற மாற உருவமும் மாறும்.

நிலையில்லாத இந்த உடலுக்காகவும், உருவத்திற்காகவும் எதற்கு  தேவையற்ற தேடல்களும் மன வேதனையும்.

உண்மையில் அழகு என்பது புறத்தோற்றத்தைப் பொறுத்தது அல்ல. அது உயரிய எண்ணங்களால் நிறைந்திருக்கும் அகத்தைப் பொறுத்தது.

இந்தத் தெளிவு பிறக்கும் நாள்களில்

இங்கு எல்லாம் மாறும்.

புறத்தோற்றத்தை அழகாக்கும் செயல்களைத் தேடி அலைவதை விடுத்து, அகத்தை அழகாக வைத்து சாதித்த மனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களையும், எண்ணங்களைத் தெளிவுபடுத்தும் நல்ல புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துங்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

 இராஜதிலகம் பாலாஜி. ஹங்கேரியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.