பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தான் குரு. பாடல் ஒலிக்க விட்டிருந்தார்கள் பேருந்தில்.

“புருஷன் பொஞ்சாதி

பொருத்தம்தான் வேணும்

பொருத்தம் இல்லாட்டி

வருத்தம்தான் தோணும்

அமைஞ்சா அது போல

கல்யாணம் பண்ணு இல்ல

நீ வாழு தனி ஆளா நின்னு

மொதலில் யோசிக்கணும்

பிறகு நேசிக்கணும் மனசு

ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு

ஒனக்கு தகுந்தபடி குணத்தில்

சிறந்தபடி இருந்தா ஊர் அறிய

மாலை கட்டிப் போடு

சொத்து வீடு வாசல்

இருந்தாலும் ஹே சொந்தம்

பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்

அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா

கல்யாணம்தான் கசக்கும்.”

கூடவே சேர்ந்து முணுமுணுத்து கொண்டே வந்தான் குரு. குருவின் அத்தை தொலைபேசியில் இரண்டு நாட்கள் முன் அழைத்திருந்தார். குருவை ஊருக்கு வரச் சொல்லியிருந்தார். அதன் நிமித்தமாகப் புறப்பட்டு, பேருந்தில் அவன் அத்தை ஊர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.

கிராமமும் நகரமும் அல்லாத சின்ன ஊர். சின்ன வயதில் அவன் விடுமுறை நாட்களைக் கழித்த ஊர். பேருந்தில் இறங்கிக் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். எல்லோரும் அவனைப் பார்த்து வைத்துக் கொண்டார்கள்.

ஒரு நடுத்தர வயது மனிதர், ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். முன்பே பார்த்திருக்கிறான், ஆனால் அவர் பெயர், எந்த வகையில் உறவு என்றெல்லாம் தெரியாது. காதில் கூர்தீட்டித் தீர்ந்து போன சின்ன பென்சிலும் வாயில் பீடியுமாக அவனை வழிமறித்து, “என்ன தம்பி, யார் வீட்டுக்கு?” என்று கேட்டார்.

விவரம் சொன்னான் குரு.

“ஓ, மாரக்கா மருமகனா? உங்க அப்பா சண்முகம்தான? சாட தெரியும் போதே நினைச்சேன். அப்பா சௌக்கியமா?” என்று ஆரம்பித்தவர் பல கேள்விகளுக்குப் பின்தான் அவனைப் போக விட்டார். சிறிது தூரம் போயிருப்பான்.

“தம்பி!”

“சொல்லுங்க.”

“என் பொண்ணு உனக்குதான்.”

ஒரு கணம் திகைத்து நின்றான். பின் சுதாரித்து சிரித்து வைத்துவிட்டு திரும்பி நடக்கலானான்.

அத்தை வீடு வந்தது. அத்தையும் மாமாவும் வீட்டில் இருந்தார்கள். மாமா கட்டிலில் அமர்ந்து ஒரு நோட்டு புத்தகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தார். அத்தை தரைமட்ட தொட்டியில் இருந்து சலதாரை தண்ணீரை எடுத்து எடுத்து பக்கத்து காலி நிலத்தில் ஊற்றிக் கொண்டிருந்தார். குருவைப் பார்த்ததும், “வா குரு, நல்லருக்கியா?” என்று கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திராமல், “வான்னு கூப்டாதான் அத்தை வீடு இருக்குற வழி தெரியுது!” என்றார்.

“இல்ல அத்தை, காலேஜ் லீவு இல்ல. கடைசி வருசம் இல்ல. அதான்” என்று சமாளித்தான். மாமா, “வா குரு, சௌக்கியமா?” என்றார். தலையாட்டி வைத்தான் குரு. அவனுக்குத் தண்ணீரும் பலகாரமும் கொடுத்த அத்தை கொஞ்ச நேரம் மற்ற விஷயங்கள் எல்லாம் அளவளாவிவிட்டு, ” அம்மா ஏதும் சொல்லுச்சா?” என்றார்.

“இல்லையே அத்தை, என்ன விஷயம்?”

“உன் அம்மாவுக்கு எங்க மேல கோபம்.” இது மாமா.

“எதுக்கு கோபம் மாமா?”

“அதுவா, செல்வனுக்கும் கௌரிக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்னு முடிவு பண்ணி இருந்தோம்.”

‘இதென்ன புதுக்கதை’ என்று நிமிர்த்து அமர்ந்தான் குரு. குருவின் தங்கை கௌரி. இரண்டாம் வருடம் கல்லூரிப் படிப்பில் இருக்கிறாள். அவனைவிட இரண்டு வயது இளையவள்.

மொத்தம் மூன்று பிள்ளைகள் அத்தைக்கு. முதலில் ஒரு பெண், பிறகு இரண்டு மகன்கள். செல்வன் அத்தையின் இரண்டாவது மகன்.

“யார் முடிவு பண்ணி இருந்தீங்க?”

“நானும் மாமாவும் அப்பா, அம்மாவும்தான்” என்றார் அத்தை.

“எனக்குத் தெரியாது அத்தை. யாரும் சொல்லல. சரி, இப்போ அதுக்கு என்ன?”

“ஆனா, செல்வனுக்குக் காயத்திரிய கட்டிக்கணும்னு ஆசையாம்.”

காயத்திரி அத்தைக்குப் பக்கத்து வீடு. காயத்திரியும் செல்வனும் சிறு வயதில் இருந்தே நட்பாகப் பழகியவர்கள். செல்வனுக்குக் காதல் அரும்பி தன் காதலை முதலில் சொல்லியிருக்கிறான். ஒரு சில வருடங்கள் கழித்து காயத்திரி சம்மதம் சொல்ல, தற்போது வீட்டிலும் சொல்லியிருக்கிறான் செல்வன்.

“கரெக்ட்தான், பிடிச்சிருந்தா கட்டிக்கட்டும். ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. சம்பாதிக்கிறாங்க. பிடிச்சிருக்குனா கல்யாணம் பண்ணிக்கட்டும்.”

“இல்ல, நாங்க பேசி வச்சிருந்தோம். செல்வனுக்கும், கெளரிக்கும் கல்யாணம் பண்ணிடலாம்ன்னு. “

“அவங்க ரெண்டு பேர் கிட்டயும் சம்மதம் கேட்டீங்களா?”

“நாங்க சொன்னா பேச்சு மாற மாட்டாங்கன்னு நினைச்சோம்” என்றார் மாமா.

“அவங்கள கேட்காமல் நீங்க முடிவு பண்ணினது உங்க தப்பு அத்தை. நீங்க யார் அவங்க யார்கூட வாழணும்னு முடிவு செய்ய?”

அத்தை பேசவில்லை. மாமாவும்தான்.

“இதுல அவங்க தப்பு எதும் இல்ல. முழுக்க உங்க தப்பு. எதுக்கு அவங்க ரெண்டு பேரையும் கேட்காம முடிவு பண்ணீங்க?”

“சொந்தம் விட்டுப் போகக் கூடாது இல்லையா? வேற வீட்ல பொண்ணு கட்டுனா, தம்பி வீட்டுக்கு நான் எப்படிப் போய் வர முடியும்? தம்பி பொண்ண என் பையனுக்குக் கட்டினா நான் காலம் முழுக்க என் தம்பி வீட்டுக்கு உரிமையா போய் வரலாம்ல?”

“அது எப்பவும் உங்க தம்பி வீடுதான். நீங்க எப்பவும் உரிமையா வந்து போகலாம். இதுக்காகப் பிடிக்காத பொண்ண செல்வனுக்குக் கட்டி வைப்பீங்களா? அவனுக்கு காயத்ரியதான பிடிச்சிருக்கு.”

“சொந்தம் விட்டு போகுதே?”

“ஏன் சொந்தம் விட்டுப் போகுதுன்னு நினைக்கறீங்க? புதுசா ஒரு சொந்தம் வருதுன்னு சந்தோசப்படுங்க.”

“ஆனா, உன் அம்மா வருத்தப்படுறாங்க.”

குருவுக்கு சற்று எரிச்சலாக வந்தது. இப்படிக் கிறுக்குத்தனம் செய்து விட்டு வருத்தமாம். கண்டிப்பாக கௌரிக்கு இதனால் எந்த மனக் கஷ்டமும் இருக்காது என்று குருவுக்குத் தெரியும். அவளுக்கு முன்னமே இவர்கள் பேசி வைத்திருந்தது தெரியும் என்று அத்தை சொன்னார். கௌரிக்கும் செல்வனுக்கும் பெரிய பழக்கம் எல்லாம் இல்லை. அதுவும் நல்லதுதான். இவர்கள் பேசி வைத்ததை நம்பிக் கொண்டு இருவரில் யாரோ ஒருவர் ஒருதலையாக இன்னொருவரின் மேல் ஆசை வைத்திருந்தாலும் கஷ்டம்தான். நல்லவேளை அப்படியாக எதுவும் நடக்கவில்லை.

“வருத்தப்பட்டா படட்டும். இப்போ உங்க நாலு பேரு விருப்பத்துக்காக அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா பின்னாடி அவங்களும் கஷ்டப்படுவாங்க, நீங்களும் நிம்மதியா இருக்க முடியாது.”

“அப்போ செல்வனுக்கு காயத்திரிய கட்டி வைக்கிறதுதான் சரின்னு சொல்றியா?” இது மாமா.

“ஆமாம்” என்று அழுத்தமாகச் சொன்னான் குரு.

சாப்பிட்டுவிட்டு ஊருக்குப் புறப்பட்டான் குரு. தெரு தாண்டியிருப்பான், காதில் பென்சில் வைத்த அந்த நபர் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி அவனைப் பார்த்து கையசைத்து, “மாப்ள” என்று சிரித்தார். எதும் சொல்லாமல் கடந்து வந்தான்.

அத்தையின் முதல் மகள் குருவைவிட 10 வயது மூத்தவர். ஒரு வேளை குருவைவிட இளையவராக இருந்திருந்தால் எப்படி கௌரிக்கும் செல்வனுக்கும் அவர்களைக் கேட்காமலேயே திருமணம் செய்வதாக அவர்களுக்குள் பேசி வைத்துக் கொண்டார்களோ அதே போலத் தன்னையும் சுத்தலில் விட்டிருப்பார்கள். ‘தப்பித்தோம்’ என்று நினைத்துக் கொண்டான் குரு.

பேருந்து நிறுத்தத்தில் நின்ற சிறிது நேரம் கழித்து பேருந்து வந்தது. ஜன்னலோரம் அமர்ந்து கொண்டான். பேருந்து கிளம்பும் நேரம் “மாப்ள” என்று ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருந்து ஒரு குரல். பென்சில் ஆசாமிதான். இங்கும் வந்துவிட்டார். கண்டுகொள்ளவில்லை குரு.

பேருந்து புறப்பட, கண்டக்டர் பாடல் ஒலிக்க விட்டார்.

“அறியாத மனசு – புரியாத வயசு, ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…”

கண்டக்டரிடம் குரு, ” அண்ணா, வேற பாட்டு மாத்துறீங்களா?”

(தொடரும்)

படைப்பாளர்

ராம் குமார்

மருத்துவர். ஒரு ஆண் பிள்ளைக்கு அப்பா. மனைவி பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்.