மருதநாடு இளவரசி 1950ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கதை மற்றும் உரையாடலைக் கலைஞர் எழுத, ஏ.காசிலிங்கம் இயக்கி இருக்கிறார். தயாரிப்பு மானில (மாநில அல்ல) மன்னர் மன்னன் கோ. கோவிந்தன் எனப் போடுகிறார்கள். இவர் குறித்து எந்தக் குறிப்புமே இணையத்தில் இல்லை. C N லட்சுமணதாஸ், K P காமாட்சி சுந்தரம் இருவரும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

M G ராமச்சந்தர் & V N ஜானகி என இருவர் பெயரையும் இணைத்தே போடுகிறார்கள்.

இருவரும் பிற்காலத்தில் கணவன் மனைவியாக இணைந்தார்கள் என்பது வரலாறு.

புளி மூட்டை ராமசாமி

எம்.ஜி.சக்கரபாணி

பாட்லிங்க் C S D சிங் (battling)

P S வீரப்பா

N S.நாராயண பிள்ளை

T M ராமசாமி பிள்ளை

கொட்டாபுளி ஜெயராமன்

விஷ்ணு ராமசாமி

S M. திருப்பதி

C K .சரஸ்வதி

C K நாகரத்தினம்

K மீனாட்சி

நடனம்

லலிதா-பத்மினி

எடுத்தவுடனேயே லலிதா-பத்மினி இருவரின் நடனத்தைத்தான் காட்டுகிறார்கள். இருவரும் சி.கே.சரஸ்வதி முன்னால் ஆடிக்கொண்டு இருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில், லலிதா-பத்மினி இருவரும் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பாடல் முடிந்ததும் மன்னன் வருகிறார். சி.கே.சரஸ்வதி, மன்னரின் மனைவி. அரசனுக்கு இரண்டு மனைவிகள், அவர்களில் ஒருவர்தான் சித்ரா (சி.கே.சரஸ்வதி). அரசிகள் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கிறார்கள். இரண்டாவது மனைவியின் அண்ணன் துர்ஜெயன், தனது தங்கையின் மகனுக்கு வாரிசுரிமை வரவேண்டும் எனத் திட்டமிடுகிறார். அதனால், மூத்த மனைவி, இளைய மனைவிக்கு விஷம் கொடுத்தார் என்று குற்றம் சாட்டுகிறார். மன்னர் மூத்த மனைவியைத் திட்டிவிட்டு சென்று விடுகிறார். அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால், மூத்த அரசியைக் கொல்லத் திட்டமிடுகிறார். இதை அறிந்த அமைச்சர், அவரைப் பாதுக்காப்பாகச் சுரங்க வழி மூலம் அனுப்பி வைக்கிறார்.

இதை அறிந்த துர்ஜெயன், அமைச்சரைக் கொன்றுவிட்டு, அரசியும் அவரும் ஓடிவிட்டதாகக் கதை கட்டுகிறான். காட்டில் கார்மேகம் காப்பாற்றுகிறார். அரசிக்கு காண்டீபன் என்கிற மகன் பிறக்கிறான். இந்த நேரத்தில், ‘அரசிக்கு யார் உதவினாலும் அவர்களுக்கு மரண தண்டனை’ என அரசர் அறிவிக்கிறார். இதனால், அரசி, மகனைக் கார்மேகத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார். போகும் போது, தனது பதக்கத்தை மகனுக்கு அணிவித்து விட்டுச் செல்கிறார். வெளியேறிய அரசி, ஆண்கள் நுழைய முடியாத காளி கோயிலில் வாழத் தொடங்குகிறார்.

அரண்மனையில் இரண்டாம் அரசியின் பேறுகால காலம். இந்திரனும் சந்திரனும் பிறப்பான்; பிறந்துள்ளான் எனச் சோதிடர், சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிறந்த குழந்தை, இறந்தே பிறக்கிறது. மன்னருக்குத் தெரியாமல், குழந்தையை மாற்றுகிறான் துர்ஜெயன்.

இவ்வாறு இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இளவரசன், ஒருநாள் காட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயலும் போது, காண்டீபன் சென்று காப்பாற்றுகிறான். அப்பெண் வேறு யாருமல்ல; இறந்த குழந்தையை மாற்றி வைத்த காளிங்கராயனின் மகள். அதாவது ருத்ரனின் தங்கை. மகளைத் தூக்கி வருவதற்குப் பதிலாக அடியாட்கள், அப்பாவைத் தூக்கி வந்துவிடுகிறார்கள். துர்ஜெயன், அவரைச் சமாளித்து அனுப்புகிறார்.

அப்போது அடித்ததில் இளவரசன் இறந்துவிட்டான் எனத் தவறுதலாக நினைத்துக் கொண்டு, நாட்டை விட்டுத் தன் நண்பன் அழகுவுடன் மருத நாட்டிற்குச் செல்கிறார். காளிங்கராயனின் மகள், இன்னமும் தனக்கு இடையூறு வந்துவிடக் கூடாது என, காளி கோயிலில் போய் தங்குகிறார்.

காண்டீபனும் அவரது தோழரும், காட்டில், இளவரசியையும் அவரது தோழியையும் சந்திக்கிறார்கள். அவர் இளவரசி என்பது காண்டீபனுக்குத் தெரியாது. இருவரும் காதலிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ருத்ரனுக்காகப் பெண் கேட்டு மருத நாட்டு மன்னரிடம் துர்ஜெயன் வருகிறான். இளவரசி, அவனை அவமதித்து அனுப்புகிறார். இதனால் இளவரசியை, அரண்மைனயிலேயே சிறை வைக்கிறார்கள். அப்போது தான், தான் காதலித்தது ஓர் இளவரசியை எனக் காண்டீபனுக்குத் தெரிகிறது. போய் இளவரசியிடம் பொய் சொன்னதற்காகச் சண்டை போட்டுவிட்டு வருகிறார்.

இளவரசியைத் தன் நாட்டிற்குக் கொண்டு செல்கிறான் ருத்ரன். முதலில் காண்டீபன் மறுத்தாலும், பின் சென்று காப்பாறுகிறார். இருவரும் காளிங்கனின் வீட்டிற்கு அடைக்கலமாக வருகிறார்கள். அப்போது அங்கு வந்த துர்ஜெயன், அறையைப் பூட்டிவிட்டுச் செல்கிறான். சன்னல் கம்பியை வளைத்து இருவரும் தப்பி விடுகிறார்கள். துர்ஜெயன் குழு துரத்திச் செல்கிறது. இளவரசி, காளி கோயிலுக்குள் சென்றுவிடுகிறார். ஆண்கள் உள்ளே போக முடியாது என்ற கட்டுப்பாடு இருப்பதால், இவர்களால் உள்ளே நுழைவு முடியவில்லை. ஆனால், அருகில் ஒரு சுரங்க வழி இருப்பதைத் தற்செயலாகப் பார்க்கிறார்கள். அதன் வழியே உள்ளே செல்கிறார்கள். நாயகனுக்கு மட்டும் அந்த தற்செயல் வழி தெரியாமலா போய்விடும். அவரும் உள்ளே போகிறார்.

அவரது கழுத்தில் கிடந்த பதக்கம் கொண்ட கயிறு அறுந்து விழுந்துவிடுகிறது. அவரது அம்மா கையிலும் அது கிடைக்கிறது. நடந்த சண்டையில், துர் ஜெயன் வீசிய கத்தி, ருத்ரன் மீது பாய்ந்து, ருத்ரன் இறக்கிறான்.

இப்போது, இளவரசரைக் கொன்ற குற்றத்திற்காக காண்டீபன், மன்னரின் விசாரணைக்கு முன் நிற்கிறார். அவரது அம்மா வந்து, உண்மையைச் சொல்கிறார். மன்னர் நம்புவதாக இல்லை. தலையை வெட்டப்போகும் நேரம் காளிங்கராயன், மூலம் அரசருக்கு அனைத்தும் தெரியவருகிறது. துர் ஜெயன் கொல்லப்படுகிறான்

நான் இளவரசனோ, அரசனோ அல்ல உங்களில் ஒருவன் முடியாட்சி முடிவுற்று குடியாட்சி மலரட்டும். புது வாழ்வு பூத்துக் குலுங்கட்டும் எனக் காண்டீபன் பேசுவதுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.

எம்.ஜி.ஆர். சட்டை இல்லாமல் வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக வருகிறார். ஜானகி அம்மாதான் அவருக்குக் கத்தி சண்டையே சொல்லிக் கொடுக்கிறார். அம்மா மிகவும் நன்றாகச் சண்டை போடுகிறார்; வில்லனிடம் அவ்வளவு வீரமாகப் பேசுகிறார்.1940/ 50 கள் காலகட்டத்தில் வெளிவந்துள்ள பெரும்பாலான திரைப்படங்களில் நாயகி பாத்திரங்கள் மிகவும் வலுவானதாகவே உள்ளன. எந்தக் காலகட்டத்தில், எப்படி நாயகி என்றால், மரத்தைச் சுற்றி ஆடுபவர் மட்டும்தான் என்கிற கண்ணோட்டம் வந்தது எனப் புரியவே இல்லை.

புளிமூட்டை ராமசாமி பேசும் மொழி நடை தூத்துக்குடி மொழி நடை. இணையத்தில் பார்த்தால், அவர் தூத்துக்குடியைச் சார்ந்தவர் எனதான் போட்டிருக்கிறார்கள்.

இளவரசியை மீட்கப் போகும் காட்சியை, Spanish Bull Fight போன்று அமைத்து இருந்தது சிறப்பாக இருந்தது.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.