நம் கண் முன்னால் நடக்கும் பல நூறு சம்பவங்களில் ஒரு சம்பவம் கண்டிப்பாக எழுத வைத்து விடுகிறது. மாக்சிம் கார்க்கி குறிப்பிடுவது போல், கருத்துகளும் காட்சிகளும் நிரம்பி வழிவதால், எழுதாமல் இருக்க முடியவில்லை என்னால்.
ஒரு பேருந்துப் பயணம் என்பது கவிஞர்களும் படைப்பாளர்களும் ரசனை வாய்ந்த செயலாக இருக்கும் என்றே நம்மை நம்ப வைக்கிறார்கள். அவர்கள் சொன்னது சரியானது என்பதற்கு நம் முன்னே ஏராளமான படங்களும் நாவல்களும் கவிதைகளும் பரவலாக இருக்கிறது. உண்மையில் உழைக்கும் பெண்களுக்கும் அல்லது வறுமையில் சுழலும் பெண்களுக்கும் பேருந்துப் பயணம் என்பது அவர்களின் தேடலுக்கு உதவும் ஆயுதமாகவும், அவர்களின் சுதந்திரத்துக்குக் கிடைத்த பொக்கிஷமாகவும்தான் பார்க்கிறார்கள். பயணத்தை ரசனை வாய்ந்தது என்று உழைக்கும் பெண்கள் யாரும் சொன்னதில்லை.
வரலாற்றில் என்றுமே பெண்களின் ஆயுதமும் சுதந்திரமும் ரசனை மிகுந்ததாகவே ஆண்களின் பார்வையில் இருக்கிறது. அதனால்தான் பெண்களின் ஜன்னலோர பயணத்தைப் பற்றி ரொமான்டிக்காகப் பேசும் பொருளாக அனைவரையும் மாற்றி இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, 2021, மே 7 அன்று தமிழக முதல்வர் சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்ற அரசாணையை வெளியிட்டார். இன்றைய பொருளாதாரச் சூழலில் பெண்கள் உயர்கல்வி படிப்பதற்காகவும், வேலை நிமித்தமாகவும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனாலேயே போக்குவரத்துப் பயணம் என்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
வருமானத்திற்காகவும் துறை ரீதியாகத் தங்களை மேம்படுத்துவதற்காகவும் தற்போதைய காலங்களில் தமிழகத்தில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட அதிகமாக இருக்கிறது. மாநிலப் பொருளாதாரத்தில் பெண்களின் வருமானத்தைக் கணக்கில் கொண்டு மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத்தை தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது.
குக்கிராமங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் வருவாய் மாதம் 12,000 ரூபாய்க்குக் குறைவாக இருக்கிறது. இந்த இலவசப் பேருந்து பயணத்தால் மாதம் 888 ரூபாய் பெண்களின் வருமானத்தில் மிச்சமாக இருக்கிறது என்று அரசின் அறிக்கை வெளியிட்டுடுள்ளது.
இப்படியாகப் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் பற்றிப் பேசும் நிலையில், ஒரு பெண் பேருந்து ஓட்டுநர் போக்குவரத்து துறைக்கு வந்திருக்கிறார் என்று கோவை மாவட்டம் நம்மிடம் சொல்கிறது.
கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா என்பவர் பணியில் சேர்ந்திருக்கும் செய்தியைப் பார்த்தேன். அந்தச் செய்தி உடனடியாக சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு, சிங்கப்பெண்ணே என்றெல்லாம் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். உண்மையில் நம் ஊரில் இப்படிக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது, பெண்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தது சரியான இடத்தில் தகுதியானவர்களைக் கொண்டு சேர்க்கிறது என்கிற மனத்திருப்தி வரத்தான் செய்கிறது.
ஆனால், அந்த மனதிருப்தி ஒரு நொடிகூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதே சமூகத்தின் எச்சமாகச் சில சம்பவங்கள் நம் கண் முன்னால் நிற்கின்றன. 3.5.2023 அன்று தென்காசியில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் நஷ்டத்தில் இயங்குவதால், பல கிராமங்களுக்குப் பேருந்துகள் நிறுத்தப்படப் போவதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார்.
உள்ளூருக்குள் பெண்களுக்கான பேருந்துக் கட்டணச் செலவு இல்லாமல் இருக்கட்டும் என்பதே நம் முதல்வரின் லட்சியமாக அதை நிறைவேற்றி இருக்கிறார் என்றால், இம்மாதிரியான நஷ்டக்கணக்கை எடுத்துக் கூறி பின்வாங்குவது முறையானதாக இல்லை என்பதே வருத்தத்துக்குரிய விஷயம்.
இவை எல்லாம் கடந்து ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு விஷயத்தைப் பெண்களுக்காகச் செய்யும் போது, அந்த விஷயம் பெண்களுக்கு இலகுவானதாக வந்தடைகிறதா என்று கேட்டால், இல்லை என்ற பதிலே நம் முன்னால் வந்து நிற்கிறது.
கிராம, நகர பாரபட்சமில்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் இலவசப் பேருந்துப் பயணம் இலகுவாக கிடைக்கிறதா என்றால்? இல்லை என்றே நிதர்சனம் பேசுகிறது. கண் முன்னாடி பல சண்டைகளை ஓட்டுநருக்கும் பெண்களுக்குமிடையே நிகழ்த்திக் காட்டுகிறது. சில இடங்களில் ஆங்காங்கே எப்படி எல்லாம் அந்த இலவசத்தை வீணடிக்க முடியுமோ, அப்படி எல்லாம் சில டிரைவர், கண்டக்டர் தெளிவாகச் செய்கிறார்கள்.
சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுப்பதில்லை என்பது போல், பல விதமான பேச்சுகளுக்கு உள்ளாகித்தான் அந்தப் பயணம் அமைகிறது என்பதுதான் துயரமாக இருக்கிறது. இம்மாதிரி சம்பவங்களைப் பார்க்கும்போது, இலக்கியத்தில் பெண்களைப் பற்றி நம் முன்னோர்கள் சொன்ன விதம் உடனே கண் முன்னாடி வந்து நிற்கிறது. உண்மையில் அத்தனை உலக இலக்கியமும் பெண்களை தேவதை போலவும் அதீத ஆற்றல் உள்ள நபராகவும்தான் காண்பித்து இருக்கின்றன. ஆனால், நிஜவாழ்விலோ பெண்களை ஒரு பேருந்துப் பயணத்துக்குக் காத்திருக்க வைப்பதாக இருக்கட்டும், அலைய வைப்பதாக இருக்கட்டும் என்றே நம் சமூகம் தெளிவாகச் செய்கிறது.
உலகத்தின் மிக முக்கியப் படைப்புகளில் நான் பார்ப்பது ட்ராய் நகர முற்றுகையும் மகாபாரதமும்தான், நம் பெண்களின் வலிமையை இலக்கிய ரீதியாக நினைவூட்டுகிறது.
ட்ராய் நகர முற்றுகை கதையில் நாயகன், மாவீரன் அகில்லிஸ், மகாபாரத துரியோதனனும் ஒரே மாதிரியான குணாம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை வெல்லவே முடியாத ஒரு நபராக அவர்களின் தாய் வரம் பெற்று உருவாக்கி இருப்பார்கள். அகில்லிஸ், துரியோதனன் ஆகிய இருவரின் வெல்ல முடியாத வீரத்திற்குக் காரணமாக அவர்கள் அன்னையர் இருப்பதும், இருவரின் மரணத்திற்கு ஒரே வகையான காரணம் இருப்பதும் ஒரு விநோதமான ஒற்றுமையாக அந்தப் படைப்பு அமைந்திருக்கும்.
இந்த மாதிரி படைப்புகளில்தாம் மனித மனத்தின் சுயத்தன்மையும் கலாச்சாரத் தன்மையும் உலகம் முழுவதும் பிரதிபலிக்கிறது.
இரு வரலாற்றுப் புனைவுகளும் ஆண்களால் எழுதப்பட்டவை. அதில் உள்ள தாய் கதாப்பாத்திரம் தன்னால் உருவான ஆண் குழந்தையை வெல்ல முடியாத அளவுக்கு உருவாக்கி இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பேருந்துப் பயணத்தின் மூலம் ஆண்களைவிட பெண்கள் முன்னேறிவிடக் கூடாது என்பதை நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமான செயல்பாடுகளில் காண்பிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் பெண்களைத் தாயாகக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். ஆனால், இங்கு அரசு கொடுத்த இலவசப் பேருந்தில் பயணம் செய்ய வயது முதிர்ந்த பெண்கள் ஏறினார்கள் என்றால், சீக்கிரம் பஸ்ஸில் ஏறவில்லை என்றும், இன்னும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவதும் வாடிக்கையாகத் தொடர்கிறது. பெண்களோ பயணத்திற்காக அலைமோதுகிறார்கள். இந்த இடத்தில்தான், மனித மனத்தின் சுயமும் கலாச்சாரத் தன்மையும் முற்றிலும் சிதிலாக உடைந்து நிற்கிறது.
பேருந்திற்காகப் பெண்கள் கூட்டமாக நிற்கும் போது, இலவசப் பேருந்து வருகிறது என்றால், ஒன்று அவர்கள் நிற்கும் இடத்திற்கு முன்பாகவே நிறுத்தி விடுவது, மற்றொன்று அவர்கள் நிற்கும் இடத்தைத் தாண்டி நிறுத்தி விடுவது என்று சில மாவட்டங்களில் நடக்கிறது. இவை எல்லாமே பெண்களை அங்கும் இங்கும் ஓட வைப்பதாகவே இருக்கிறது. இப்படி ஓட வைப்பதில் என்ன ஆனந்தம் அந்தப் பேருந்து ஓட்டுநருக்குக் கிடைக்கும் என்று இப்போது வரை தெரியவில்லை.
கொரோனா காலக்கட்டத்திற்குப் பின், இப்போது வரை ஆண்களைவிடப் பெண்களின் வருமானத்தின் பங்கு வீட்டில் அதிகமாகவே இருக்கிறது. அதன் தாக்கமா என்றே தெரியவில்லை. பெண்களின் முன்னேற்றத்தின் மீதும், தனித்துவமாக இயங்கும் பெண்களின் சுதந்திரத்தின் மீதும் ஒரு சில ஆண்களுக்கு ஏதோ ஒரு வகையில் கோபம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் உறவு ரீதியாக எந்தப் பெண்கள் மீதும் ஆண்களுக்குக் கோபம் இல்லை. ஆனால், பெண் இனத்தின் மீதுதான் கோபம் இருக்கிறதாகத் தோன்றுகிறது. அதன் வீரியம்தான் பெண்களின் இலவசப் பயணத்தில் ஏற்படும் வாக்குவாதங்களில் கொட்டித் தீர்க்கிறார்கள்.
இதற்காகச் சில பெண்கள் போக்குவரத்துத்துறையில் அந்த ஓட்டுநர் மீதும், நடத்துநர் மீதும் புகார் கொடுக்கிறார்கள். அதற்கு அரசிடம் இருந்து அரசு ஊழியர்களாகிய இவர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சி கொடுக்க அனுப்பப்படுகிறார்கள். ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய சில பெண்கள் மட்டுமே புகார் எழுதித் தருகிறார்கள்.
இது போன்ற சம்பவங்கள் அனைத்துமே பெண்களைத் தரக்குறைவாக நடத்த வேண்டும் என்பதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. பெண்களுக்கு வழங்கப்படும் சலுகையும் அதனால் ஏற்படும் முன்னேற்றமும்தான் ஒரு சில ஆண்களுக்குப் பிரச்னையாக இருக்கிறது.
படைப்பாளர்
காயத்ரி மஹதி
காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.