கடந்த முறை இந்தியா வந்து விட்டு அமெரிக்கா திரும்பும் போது ஹாங்காங்கில், ஏறக்குறைய 20 மணி நேரம் தங்க வேண்டியதாக தான், பயண சீட்டு கிடைத்தது. அந்த நேரத்தை செலவிட, நாங்கள் மக்காவு செல்லலாம் என திட்டமிட்டோம்.
ஹாங்காங் விமான நிலையத்தில், நமது கைப்பெட்டியை வைத்து விட்டு செல்லலாம். கட்டணம் தான் ஆனை விலை குதிரை விலை. அதனால் நாங்கள் முன்னேற்பாடாக ஒரே ஒரு கைப்பெட்டி தான் எடுத்து வந்தோம். அதை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து விட்டு செல்லலாம்.
ஊருக்குள் செல்வதாக இருந்தால், சுங்கச்சாவடி (customs) சென்று முத்திரை பெற வேண்டும். ஹாங்காங் விமான நிலையத்தில், மக்காவு செல்வதற்கு பலவிதமான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். எங்களுக்கு படகில் செல்ல வேண்டும் என ஆசை இருந்தாலும் நேரத்தை விரயமாக்க கூடாது என நினைத்து எது முதலில் கிடைக்கிறதோ அதில் செல்லலாம் என நினைத்தோம். முதலில் கிடைத்தது பேருந்து தான்.
பயணச்சீட்டு எடுத்து பத்து நிமிடத்தில், பேருந்து வந்தது. எங்கள் மூவரைத் தவிர பயணிகள் யாரும் கிடையாது. எங்களுக்காக தனி பேருந்து இயக்கினார்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் சுங்கச்சாவடி வந்தது. இது ஹாங்காங்கில் இருந்து வெளியே செல்வதற்கான சுங்கச்சாவடி. அங்கு அனைத்து வேலையும் முடித்து விட்டு வெளியே வந்தால் மீண்டும் சுங்கச்சாவடி. இது மக்காவு நாட்டிற்குள் செல்வதற்கான சுங்கச்சாவடி. அங்கும் அலுவலக வேலைகளை முடித்து விட்டு வெளியே வந்தால், அங்கு நாங்கள் வந்த பேருந்து எங்களுக்காக காத்திருந்தது. அதில் ஏறி எங்கள் பயணம் தொடர்ந்தது.
இப்போது மக்காவு குறித்து சிறு குறிப்பு.
ஆசியாவின் லாஸ் வேகாஸ் என்று புகழ்பெற்ற மக்காவு, சீனாவின் தெற்கு கடற்கரையில், ஹாங்காங்கிற்கு மேற்கே 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
மக்காவு சென்று கொண்டிருந்த கப்பல் தான் புயலில் சிக்கி தான் வேளாங்கண்ணியில் கரை இறங்கியதாக வேளாங்கண்ணி ஆலய வரலாறு சொல்கிறது. 16 ஆம் நூற்றாண்டு முதல் போர்த்துகீசியர்கள் குடியேற்றமாக இருந்த மக்காவு தான், போர்ச்சுக்கலிடமிருந்து விடுதலை பெற்ற கடைசி காலனி. மக்காவு, 1999 ஆம் ஆண்டு சீனா கைவசம் வந்தது. தற்போது சீனாவின் ஒரு சிறப்பு நிர்வாக பகுதியாக உள்ளது. மக்காவு நாட்டிற்கென தனி நாணயம், அஞ்சல் தலை எல்லாம் உண்டு.
தனித்துவமான போர்த்துகீசிய சீன கட்டிடக்கலை கொண்ட மக்காவு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மக்காவு, உலகில் அதிக மக்கள் நெருக்கம், மிக உயர்ந்த தனிநபர் வருமானம் கொண்ட நாடு. லாஸ் வேகாஸை விட ஏழு மடங்கு பெரிய சூதாட்டத் தொழிலைக் கொண்ட இந்த நாட்டின் பொருளாதாரம் கேசினோ மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டது.
அதுவரை உயர்ந்த கட்டடங்களுக்கிடையில் சென்று கொண்டிருந்த பேருந்து, இப்போது கடலின் மேல் இருந்த பாலத்தின் மீது செல்லத் தொடங்கியது. அழகென்றால் அழகு; அவ்வளவு அழகு. பார்க்க இரண்டு கண்கள் போதாது என்பது போன்ற அழகு. இன்னமும், அந்த பாலத்தின் மீது மீண்டும் பயணம் செய்ய மாட்டோமா என இன்னமும் மனம் ஏங்கும் அளவிற்கு அழகு. பொதுவாக கடல் என்றால், கப்பல்கள்/ பாலங்கள் போன்ற கடல் சார்ந்தவையே நம் கண்ணிற்குத் தெரியும். ஆனால் இந்த பாலத்தின் ஒரு பக்கம் கடல் சார்ந்தவை தெரியும்; மறுபக்கம் மிக நெருக்கமாக அடர்ந்த மரங்களுடன் கூடிய மலை தெரியும். உண்மையில் கடல் பகுதி கடந்து ஊருக்குள் பேருந்து நுழைந்ததும், கடல் பரப்பு மறைந்து விட்டதே என்ற இனம் புரியாத ஏக்கம் மனதில் வந்தது.
பேருந்து, எங்களை மக்காவு பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு சென்றது. செயிண்ட் பால் கோவிலின் இடிபாடுகள் (The Ruins of Saint Paul’s)
பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் எதுவும் தெரியாது. எங்கே செல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வெனிஸ் மக்காவு (The Venetian Macau) பேருந்து வந்து நின்றது. இங்கு அனைத்து சூதாட்ட விடுதிகளும், ஊரின் பிரபலமான இடங்களுக்குத், தங்களது பேருந்துகளை இலவசமாக அனுப்புகின்றன. சூதாட்டத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும், சூதாட்ட விடுதிகளின் அருமையான தோற்றம், குறிப்பாக இரவில் விளக்குகள் செல்லும் போது, அவற்றைப் பார்ப்பது மிகவும் அழகு. ஒவ்வொரு விடுதியும் அவர்களுக்கென தனித்துவமான நிகழ்ச்சிகள் வைத்திருப்பார்கள்.
நாங்கள் வெனிஸ் மக்காவு பேருந்தில் ஏறி, வெனிஸ் மக்காவு வந்து சேர்ந்தோம். இது தான் உலகின் மிகப்பெரிய கேசினோ ரிசார்ட்டாம். ஆனால் அதுவெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. உள்ளே வெனிஸில் மாலை வானம், கால்வாய், கடைகள் என மிக அழகாக இருந்தது. வெனிஸில் மாலை வானத்தின் நிறம், கால்வாய் உள்ளது. வெனிஸ் நகரினுள் சுற்றி வரும் படகு போல இங்கும் படகு சவாரி இருந்தது. நீண்ட வரிசை இருந்ததால், நேரமின்மையால், நாங்கள் படகு சவாரி செய்யவில்லை.
சூதாட்டத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும், சூதாட்ட விடுதிகளின் அருமையான தோற்றம், குறிப்பாக இரவில் விளக்குகள் செல்லும் போது, அவற்றைப் பார்ப்பது மிகவும் அழகு. ஒவ்வொரு விடுதியும் அவர்களுக்கென தனித்துவமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு விடுதியும் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின், மாதிரியாக இருக்கும். இதனால், ஒரே இடத்தில் பல ஊர்களுக்குச் சென்ற அனுபவம் கிடைக்கும். ஐரோப்பா மாதிரி குளிராக இல்லாததால், நமது பெரியவர்கள் ஒரு பத்து நாள் வந்து தங்கி செல்வதற்கு உகந்த இடம். மிக நல்ல கட்டமைப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து வசதியுடன் இருப்பதால், மாலை, காலை ஊருக்குள் நடந்து செல்வதே இனிமையான அனுபவமாக இருக்கும். ஆங்காங்கே ஹோட்டல்களின் இலவச பேருந்துகள் இருப்பதால், பெரும்பாலாலும் வாடகை கார் தேவைப்படாது.
நேரம் கருதி, நாங்கள் அங்கிருந்து வாடகை கார் பிடித்து 338 மீட்டர் உயரம் கொண்ட மக்காவு கோபுரம் (Macau Tower) சென்றோம். bungee jumping, Skywalk போன்றவை உள்ளன. நாங்கள் சும்மா சுற்றிப் பார்த்து விட்டு வந்து விட்டோம். உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஊர் பிரமாண்டமாக இருந்தது.
அங்கிருந்து வாடகை கார் பிடித்து செயிண்ட் பால் கோவிலின் இடிபாடுகள் (The Ruins of Saint Paul’s) சென்றோம். இந்த கோவில், 1640 ஆம் ஆண்டு, இயேசு சபை குருக்களால், கட்டப்பட்டது, இது அந்த காலகட்டத்தில், ஆசியாவின் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்று. இது 1835 ஆம் ஆண்டு, சூறாவளியினால் ஏற்பட்ட தீவிபத்தால் அழிந்தது. இந்த கோவிலில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள், இங்கு ஒரு சிறிய கண்காட்சியாக வைக்கப் பட்டுள்ளது.
ருவா டோ குன்ஹா (Rua do Cunha) நடைபாதையில், போர்த்துகீசிய சீன பாரம்பரிய உணவுப் பொருட்கள் கொண்ட கடைகள் நிரம்பி வழிந்தன. உணவு பிரியர்களுக்கு இது விருந்தாக அமையும்.
செனாடோ சதுக்கம் (Senate Square) மக்காவின் வரலாற்று மையம். சதுக்கத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான கட்டிடங்கள் ஐரோப்பிய பாணியில் உள்ளன. அது சீன புத்தாண்டு காலகட்டம் என்பதால் சிவப்பு நிற விளக்குகள் மற்றும் அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அங்கு பலரும் முக கவசம் அணிந்திருந்தனர். பொதுவாகவே ஹாங்காங் விமான நிலையத்தில் தெர்மாமீட்டருடன் பலர் உலவுவர். அங்குமிங்குமாக முக கவசம் அணிந்தவர்களையும் பார்க்கலாம். அது போல தான் இங்கு உள்ளவர்கள், அவர்களை விட முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள் என நினைத்தேன். அமெரிக்கா வந்து இறங்கிய பின்பு தான், கோவிட் பற்றிய செய்தியே தெரிந்தது. அந்த சீன புத்தாண்டுக்குப் பின் முக கவசம் அணியத் தொடங்கிய உலகம் இன்னமும் கழற்றவில்லை. நல்லவேளை நாங்கள் கொரோனா தொற்றைக் கொண்டு போகவில்லை.
அங்கிருந்து பேருந்து பிடித்து FISHERMAN’S WHARF சென்றோம். அங்கு கொலேசியம் போன்ற பல வடிவமைப்பில் கட்டிடங்கள் உள்ளன. இங்கிருந்து பார்த்தால், ஹாங்காங்-ஜுஹாய்-மக்காவோ பாலம் (Hong Kong-Zhuhai-Macao bridge) மிக அழகாகத் தெரிகிறது.
பின் அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு (Legend Palace Hotel) சென்று திரும்ப ஹாங்காங் செல்வது எப்படி என தகவல் கேட்கலாம் என சென்றோம். அவர்களே பேருந்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மீண்டும் சுங்கச்சாவடி (customs) தொடர்பான அனைத்து அலுவல்களையும் முடித்து விமான நிலையம் வந்தடைத்தோம்.
கட்டுரையாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.