பொருள் 11
‘நீ அறிவாளி என்றால் வீட்டில் இரு. மனைவியைக் காதலி. அவளுடன் சண்டையிடாதே, வாதம் புரியாதே. அவளுக்கு உண்ணக் கொடு. அவளை அலங்கரி. உடம்பு பிடித்துவிடு. அவளுடைய அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்று. அவள் மனத்தில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்து. அவளை உன்னுடனேயே வைத்திருக்கும்படி சமாதானம் செய்ய இது ஒன்றுதான் வழி. ஒருவேளை அவளை நீ எதிர்த்தால், அது உன் அழிவுக்கு இட்டுச்செல்லும்.’
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த Maxims of Ptah Hotep என்னும் நூலில் காணப்படும் அறிவுரை இது. தன் மனைவியை ஒரு கணவன் எப்படி நடத்த வேண்டும் (அல்லது நடத்தக் கூடாது) என்பதை இது அறிவுறுத்துகிறது. அப்போதைய எகிப்திய அரசரின் முக்கிய ஆலோசகராகத் திகழ்ந்த ஒருவர் தன் மகனுக்கு எழுதி வைத்த அறிவுரைகள் அடங்கிய குறிப்புகள் இவை. உன் மனைவி உன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறாள்; அவளுடன் ஒத்துப்போவதைத் தவிர உனக்கு வழியில்லை; அவளின்றி உன் மீட்சி சாத்தியப்படாது என்று தெளிவாக வரையறுக்கிறது இந்நூல்.
பண்டைய சமூகங்களில் பெண்கள் வியக்கத்தக்க உரிமைகளைப் பெற்றிருந்ததற்கான விரிவான ஆதாரங்களை வழங்குகிறார் ரோசாலிண்ட் மைல்ஸ். அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம். கிரேக்க நகரமான ஸ்பார்ட்டாவில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் பெண்களிடம் இருந்தது. அரபுப் பெண்கள் பறவைகளுக்கு உரிமையாளர்களாக இருந்தனர். அந்தப் பறவைகளுக்குத் தானியம் அளிக்கும் பணி அவர்களுடைய கணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எகிப்தில் கணவன் தன் மனைவியிடம் பண உதவி கேட்கும் வழக்கம் இருந்தது. இந்தத் தொகையும்கூட கடனாகவே கொடுக்கப்பட்டது. அவன் அதனைக் கட்டாயம் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். தேவைப்பட்டால் மனைவி தான் அளிக்கும் பணத்துக்கு வட்டியும் வசூலித்துக்கொள்ள முடியும்.
பாபிலோனில் பொயுமு 1700 வாக்கில் ஆதிக்கம் செலுத்திய ஹமுராபி சட்டத்தில் உள்ள ஒரு பகுதி இது. ‘ஒரு பெண்ணுக்கான வரதட்சணை தொகை அவளுடைய கணவனிடம் ஒப்படைக்கப்படக் கூடாது. அவளிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும். திருமணத்துக்கு முன்பு அவள் வைத்திருந்த நிலம், சொத்து அனைத்தும் திருமணத்துக்குப் பிறகு அவளிடமே தங்கியிருக்கும். மரணத்துக்குப் பிறகு அந்தச் சொத்துகள் அவளுடைய குழந்தைகளுக்குப் போய்ச் சேரும்.’
இதே பாபிலோனில் ஓர் ஆண் தன் மனைவியை அவமானப்படுத்தினால், அவள் தன் கணவன்மீது வழக்கு தொடுக்கமுடியும். தன் கணவனின் எந்தச் செய்கை அல்லது சொல் தன்னை அவமானப்படுத்துகிறது என்பதை பெண்ணே நிர்ணயம் செய்கிறார். இதையே ஒரு வாதமாக வைத்து அவளால் தன் கணவனிடம் இருந்து பிரிந்து செல்லவும் முடியும். சட்டப்படி விவாகரத்து பெற்ற பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். கணவன் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும்.
பொயுமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த டிடோரஸ் சிகுலஸ் என்னும் கிரேக்க தத்துவஞானி ஓர் எகிப்திய திருமண உறுதிமொழியைப் பதிவு செய்திருக்கிறார். இப்போது படித்தாலும் வியப்பை ஏற்படுத்தும் அந்த உறுதிமொழி கீழ்வருமாறு. தான் திருமணம் செய்யப்போகும் மணமகளை நோக்கி மணமகன் கூறும் வாசகங்கள் இவை.
‘மனைவி என்பதற்கு உனக்குள்ள உரிமைகள் முன்பாக நான் தலைவணங்குகிறேன். இன்று முதல், உன்னை ஒரு வார்த்தைகூட நான் மறுத்துப் பேச மாட்டேன். அனைவரின் முன்நிலையில் உன்னை என் மனைவியாக அங்கீகரிக்கிறேன். அதே சமயம், நீ என்னுடையவள் மட்டும்தான் என்று சொல்வதற்கான உரிமை எனக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நான் மட்டும்தான் உன் கணவன் என்றோ இணை என்றோ நான் சொல்ல மாட்டேன். விலகிச் செல்வதற்கு உனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது…. நீ எங்கே செல்ல விரும்பினாலும், அதை என்னால் தடுக்க முடியாது.’ இதைச் சொல்லிமுடித்தும் தனக்கு மனைவியாக வருபவருக்குத் தான் அளிக்கவிருக்கும் வரதட்ணைப் பொருள்களை அவன் பட்டியலிட வேண்டும்.
பண்டைய கிரேக்க நாகரிகத்தில் பெண்கள் கட்டுக்கோப்பான உடல் வாகைப் பெறுவதற்காகக் கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொண்டனர். காற்றோட்டமான திறந்தவெளியில் அத்தெடிக், ஜிம்னாஸ்டிங் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. காட்டுப்பன்றிகளை வேட்டையாடும் போட்டிகளில் பெண்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். ஸ்பார்டாவில் திருமணமகாத இளம் பெண்கள் அனுபவித்த சுதந்திரமும் பெற்றிருந்த உரிமைகளும் அப்போதே விமரிசினங்களைச் சந்தித்தன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். ‘ஸ்பார்டாவின் இளம்பெண்கள் வீடு தங்குவதேயில்லை. அவர்கள் அணியும் ஆடைகள் குறைவாக உள்ளன.
மல்யுத்தப் போட்டிகளில் இளைஞர்களுடன் அவர்களும் கலந்துகொண்டு சண்டையிடுகிறார்கள். இவையெல்லாம் அவமானகரமானவை, இல்லையா?’
ஆனால், இதனாலெல்லாம் பெண்கள் பின்வாங்கிவிடவில்லை. மேலதிக உற்சாகத்துடன் தங்கள் உரிமைகளை மேலும் மேலும் நீட்டித்துக்கொண்டார்கள். வீர விளையாட்டுகளோடு திருப்தியடையாத பல பெண்கள் போர்க்களப் பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு போர்களில் பங்கேற்கத் தொடங்கினார்கள். பல படைகள் பெண்களை முன் வரிசையில் நிற்க வைத்துப் போரிட வைத்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. செல்டிக் பிரிட்டனில் சாதாரண மகாராணிகளைவிட போரிடத் தெரிந்த மகாராணிகளுக்கு அதிக மரியாதையும் மதிப்பும் வழங்கப்பட்டன. வீரத்துடன் போரிட்டு மடிந்த பெண்கள், எதிரிகளைத் தவிடுபொடியாக்கிய பெண்கள், தன் கணவனைக் (அல்லது மகனை) கொன்ற எதிரிகளைப் பழிவாங்கிய பெண்கள் என்று பல சாகசக் கதைகள் பண்டைய வரலாற்றுப் பக்கங்களில் புதைந்துள்ளன.
ஒரே ஓர் உதாரணம். கால் என்னும் பண்டைய மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ரோமானிய வரலாற்றாசிரியர் ஒருவரின் குறிப்பு இது. ‘நம் ரோமானிய வீரர்களால் சுலபமாக கால் வீரர்களை வீழ்த்திவிட முடியும். ஆனால், ஒரே ஒரு கால் வீரன் தன் மனைவியையும் உதவிக்குப் போர்க்களத்துக்கு அழைத்துவந்துவிட்டால் அவ்வளவுதான். ஒட்டுமொத்த ரோம வீரர்கள் ஒன்றுதிரண்டு போரிட்டாலும் அவனை வீழ்த்த முடியாது.’
எகிப்திய கடவுளான ஐசிஸ் பூரிப்புடன் முன்வைத்த இந்த முழக்கத்தைப் பாருங்கள்.
‘நான் ஐசிஸ்! இந்த உலகில் உள்ள நிலங்கள் அனைத்தையும் ஆள்பவள். இந்த உலகில் உள்ள எல்லா சட்டத்திட்டங்களையும் நானே வகுத்துள்ளேன். பெண்களில் நானே தெய்வீகமானவள். சொர்க்கத்தில் இருந்து பூமியைப் பிரித்து வைத்தவள் நான். சந்திரனின் பாதையையும் நட்சத்திரங்களின் பாதையையும் வகுத்தவள் நான். ஆண்களையும் பெண்களையும் ஒன்றிணைத்தவள் நானே. நான் சட்டமாக வகுத்த எதையும் எந்தவோர் ஆணாலும் மாற்றவோ திருத்தவோ முடியாது.’
வரலாறு தொலைத்த எண்ணற்ற செல்வங்களில் ஒன்று, இந்தப் பெருமிதம்.
(தொடரும்)
படைப்பாளர்:
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.