“அம்மா” அப்படின்ற டைட்டில் கீழ என்ன வேணா பண்ணலாம்! பளார்னு அடிச்சுட்டு அம்மா பண்ணா நல்லாத்தான் இருக்கும்னு டாக்ஸிக் செண்டிமெண்ட் சரியாய் ஒர்க்கவுட் ஆன ஒரே ஆளு ஜெயலலிதாதான்!

“செல்வி”ன்னு போடலைன்னா கோச்சுப்பாங்கன்னு பத்திரிகைக்காரங்க சொல்லி கேட்ருக்கேன். அந்த அம்மா உயிரோட இருந்தா இப்படி கட்டுரையே வந்துருக்காது!அவ்வளவு ஏன்? அந்த அந்த நண்டு சிண்டு நார்த்தங்காய், ஆடியோ லான்ச் பூஞ்சுனு ஒன்னும் பண்ணியிருக்க முடியாது.

இத்தனை கூட்டத்தைப் போட்டு இத்துப்போன ஸ்கிரிப்ட் டயலாக் அடிச்சு அசிங்கமா பேசறீங்களே… எங்க ஆத்தா இருந்தா நீங்க பண்ணிருப்பீங்களா…?
கூப்புல கொய்யாலே இருடின்னு ஆடியோ லாஞ்சுல மைக்கை நிறுத்திப்போட்டு, ‘உன் வீட்டு கரண்ட் பில் கட்டுடா முதல்ல’ன்னு கையோட அரெஸ்ட் பண்ணியிருக்கும்.

ஜெயலலிதா மாதிரி அநியாயத்துக்கு ஆட்டம் போட்ட ஆளுமை யாருமே கிடையாது. அந்த அம்மா பண்ணதுலாம் பெருச்சாளி வேலை. ஆனா அந்த அம்மா போனது வருத்தம்தான். இந்த இத்து போன பசங்க பேசறதை எல்லாம் கேக்கணும்ன்னு தலை எழுத்து! விஸ்வரூபம் இல்ல… உன் ரூபமே இல்லன்னு ஆக்கிரும். பாக்கப் போனா இந்த அம்மா பயங்கர வில்லிதான். தினப்படி ஏதாவது பண்ற அதிரடி ஆக்ஷன் குயின்! ஜாதகம் சரி இல்லன்னு மந்திரிய தூக்கிரும் வீக்லி… எனக்கு என்ன ஒரு சந்தோஷம்னா இதே மாதிரி தமிழ்நாட்டோட ராகு கேது சரி இல்லன்னு ஜப்பான்ல கொண்டு போய் நம்மள வைக்கல! அது வரையும் சந்தோஷம்.

முத்து படத்துல ராதாரவி மாதிரி ஒரு பிம்பம் கடைசி வரைக்கும் மெயின்டைன் பண்ணிச்சு. அந்த அம்மா என்ன பண்ணாலும் ‘வாவ்’ அப்டின்னு செருப்படி வாங்கறவனைக்கூட நம்ப வைக்கற அதோட சக்தி சக்திமான்க்கு கூட இல்ல… எப்படி இப்படி நம்மள நிர்மா வாஷிங் பவுடர் போட்டு பிரைன் வாஷ் பண்ணுச்சோ அதுக்கே வெளிச்சம்!

அந்த அம்மா நின்னா ஹெட்லைன்ஸ், நடந்தா தண்டர் அப்டின்னு ஒரு பெண் அவென்ஜர் சீரிஸ் மாதிரி தமிழ்நாட்டை பரபரப்பா வச்சுருந்துச்சு. இப்போ ‘ஸ்டாலின் உழைப்பாளி போராளி’ன்னு சொன்னாலும், ‘அந்த அம்மா மாதிரி வருமா’ன்னு கேக்கறது யாருன்னு பார்த்தா, ‘அவ கர்வம் புடிச்ச பொம்பளை’ அப்டின்னு சொன்ன அதே பயலுவதான். ஜேஜே (ஜெஜெ)ன்னு இருந்த தமிழ்நாட்டை ஜவ்வுமிட்டாய் கணக்கா இழுக்கறானுவோ.

https://www.huffpost.com/archive/in/entry/watch-overawed-men-fall-at-jayalalithaas-feet-to-congratulate_n_10043432

அந்த அம்மா மாதிரி குசும்பு புடிச்ச பஸ்ஸிவ் அதிரடி அரசியல் யாருமே பண்ணது இல்ல. கன் பாய்ன்ட்ல பூரா ஸ்டேட்டும் இருந்துச்சு. ஆறுச்சாமி எப்படி கோடில ஒருத்தனோ, ஜெஜெ கோடில ஒருத்தி. ‘மோடியா இல்ல இந்த லேடியா?’ அப்டின்னு கேட்டுச்சு பாரு.

அதோட தில்லு ஒருத்தனுக்கும் இல்ல. அந்த அம்மா பண்ணது பாதி அநியாயம்னு தெரிஞ்சாலும் அந்த அம்மாக்கு எப்படி இப்ப்டி சப்போர்ட்டுன்னு பாத்தா… அந்த கெத்துதான் அதோட மைலேஜ்.

முக்கால்வாசி திட்டத்தை அந்த அம்மா கண்டுபுடிச்சதாதான் நம்ம நம்பிக்கிட்டு கெடக்கோம். ‘தமிழ்நாட்டையே நான்தான் கண்டுபுடிச்சேன்’னு சொன்னாலும், ‘அட அம்மா சொன்ன சரியாத்தான் இருக்கணும்’ அப்டின்னுகூட யோசிச்சிருப்போம். ‘இந்திராவே இந்தியா’ன்னு சுட்ட வடையைவிட ஜெஜெ சுட்டதுலாம் பான் பீட்ஸா சைஸ் புருடாக்கள். அம்மா உயிரோட இருக்கறச்சே அருமை தெரியாம போன் கட்டு பண்ணிட்டு போன அப்புறம், ‘சே… என் அம்மா இருந்துருந்தா இப்டி நடந்துருக்காது’ அப்டின்னு நெனைக்க வைக்கிற சக்தி அம்மாக்கு மட்டுமே உண்டு!

‘ஜெயலலிதாவுக்கு சாக்லெட் புடிக்கும். கருணாநிதின்னு எழுதினாலே புடிக்காது’ன்னு சோசியல் மீடியால அந்த அம்மாவோட ஆவியை ஹாஃப் பாயில் போட்டுட்டு இருக்கானுவ. அந்த அம்மா இதல்லாம் பாத்துருந்தா, ‘அட இத்துப்போன நாய்ங்களா… இத்தனை மாட்டுமூளையாடா நீங்கல்லாம்? உங்களையாடா எங்க என்னை ஏறிடுவீங்களோன்னு கால்ல ஹீல்ஸ் போட்டு சுத்தினேன்? அதுக்கே இவனுங்களுக்கு தகுதி இல்லை’ ன்னு கழட்டி வீசியிருக்கும்.

என்னை பெத்த உன்னை பெத்த எந்த அம்மாவும் உத்தமி கிடையாது. ஏதோ ஒரு வகைல டாக்ஸிக்தான். என்ன அதுங்க இந்த சிஸ்டம்ல பாட்டில்ல மாட்டிக்கிட்ட பூச்சிதான். இதுல வாய் பேசாத பூச்சிதான் ஜாஸ்தி. அதுல ஒரு பூச்சி சூழ்நிலையால சிஸ்டம்ல இருந்து வெளியேறிவந்தா, அதை பாத்த மிச்ச பூச்சி தானே சாதிச்ச மாதிரி நெனச்சு வாழ்ந்துரும்.

ஜெஜெ ராட்சச வடிவமா மாறி தன்னோட சிறகை தானே வளத்துக்கிட்டு மேல வந்த ஒரு பாட்டில் பூச்சி. அது ஜெயிச்சா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு நாங்களே ஜெயிச்ச பீலிங் வரும். எவன் பாட்டில்ல அந்த அம்மாவை அடைச்சானோ, அவனே அவுங்கள பாராட்டினதுதான் அந்த அம்மாவோட பவர். All is fair in love and warன்னு சொல்லுவாங்க. We loved her war, not just her.

ஆளுமைகளுக்கு கருப்புப் பக்கம் இல்லாம இல்லை. ஜெயலலிதா ஒரு ஊழல்வாதின்னு உண்மை தெரிஞ்சாலும் அது பெருசா வெளிய வராம இருக்குதுன்னா காரணம்… இங்க ஆண்களோட பாலியல் அத்துமீறலைக்கூட பொருட்டா பாக்காம அவங்களோட கலையை கொண்டாடுறோம். அவங்க மூணு பொண்டாட்டி வச்சிருந்தாலும் கம்பீரமா பதவின்னு வந்தா ஏத்துக்கறோம். பொது வெளியில் தான் ஒரு நடிகை அப்டின்றதுக்காக ஏற்க விரும்பாத கருப்பு பக்கத்தை அவங்க உயிரோட இருந்த அப்போவே ஜெஜெ சுமந்துட்டாங்க. அவங்களோட அந்தரங்க வாழ்க்கையை வக்கிரமான கோணத்துல நோண்டி நொங்கு எடுத்த நக்கீரர் கூட அதை ஒரு பழிவாங்கும் படலம்தான்னு நெனச்சாரு.

ஒரு பெண் நிமிந்து நின்னா, கிளாஸ் எடுத்து குச்சில நீங்க அடிப்பீங்க. அதே ஸ்கேல் வாங்கி வலி தாங்காம உங்காள திருப்பி அடிச்சதே உங்களால ஏத்துக்க முடில! ஜெஜெ முதலமைச்சராக இருந்தாலும் பெண் அப்படின்ற ஒரே ஒரு விஷயம் அவங்களுக்கு பாதகமா இருந்தாலும் அதையும் சாதகமா மாத்திக்கிட்டது சாணக்கியத்தனம்தான். தன்னை தன்னோட அவமானத்தை தாங்க முடியாமல் தன்னை தற்காத்துக்க போராடிய ஒரு பெண். நான் பாத்த ரியல் ஜாக்கி சான் ஜெஜெ தான்.

அவங்க தனிமனிதரா சமூகத்தை எதிர்த்துப் போராடுறது கஷ்டம்ன்னு தெரிஞ்சும் கடைசி வரையும் ஜெஜெ தம் கட்டி வாழ்ந்ததே இந்த ஆணாதிக்க உலகத்துல பெரிய விஷயம்தான். அரசியல்ல அவங்கள நம்ம வெறுத்தாலும் அவங்க போராடின நிஜ எதிரி ஆணாதிக்கம்தான். ஒரு ஆண் திமிரு புடிச்ச பொண்ண என்ன வேணா பண்ணலாம்னு சொல்லி குடுத்த நம்மளை, ஒரு பெண் அத்தனை ஆணாதிக்க சக்தியையும் காலடில வச்சா அதை நம்மளோட வெற்றியா, தனிப் பெண்களோட வெற்றியா பாக்க வச்சதுதான் அவங்களோட வெற்றி!

ஒரு பெண் என்பதாலேயே தனக்கு வந்த எதிர்ப்பை, கடும் உழைப்பால் போராடி ஜெயிச்சாங்க. ஜெஜெ நடிக்கும்போது பல ட்ரீம் நடிகைகள் இருந்தாங்க. ஜெஜெ இறக்கும்போது, பலருக்கு அவர் வாழ்க்கை ஒரு ட்ரீம். பல சுமாரான ஆண்களுக்கு, மிகப் பெரும் குற்றம் செய்யற ஆண்களுக்கு தர வாய்ப்பைவிட, அது எதுமே இல்லாம தன்னையே தனக்கு ஒரு விசிட்டிங் கார்டு போட்டுக்கிட்டது தோனி அடிக்கிற எல்லா சிக்ஸரையும் விட பெருசு.

அதிரடியான முடிவுகள், ஆணவ செலவுகள், எடுத்தேன் கவுத்தேன் மாற்றங்கள், பழிவாங்கும் படலம்ன்னு அவங்க செயல்கள் மிக்சர் மாதிரி கொரகொரன்னு இருந்தாலும் அது நமுத்துப் போகாத மிக்சர்!

எத்தனையோ பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு, ஜெஜெ ஒரு இன்ஸ்பிரேஷன். எல்லா பெண்களுக்கும் புழுக்கம்னா என்னன்னு தெரியும்; அடிமையா நடத்தினா எப்படி வலிக்கும்னு தெரியும்… ஆண்கள் அவங்க கால்ல விழுறதைப் பார்க்கும்போது அந்த வலி குறைஞ்சது உண்மைதான். ஆண்கள் பெண்களுக்கு எதிரி இல்லன்னு தெரிஞ்சாலும் இப்படித் தோணுது. அடிக்கடி அடிவாங்கறப்போ ஏதோ ஒரு வகைல வெறுப்பு வர்றத ஒதுக்கற அளவுக்கு நாங்க புத்தர் இல்ல!

தலைவி அப்டின்னு சொன்னாலே அதுல இருக்க அடிமைத்தனமும் தவிர்க்க முடியாது. இவனுங்களுக்கு ஏத்த மாதிரியே முட்டும் குடுத்து இவனுங்களையே எதிர்த்து அரசியல் பண்றதுதான் அவங்களோட அரசியல் மாடல். ‘பெண்களும் ஆண்களும் இங்க சமம்’னு சொல்றதுக்கு முன்னாடி இந்த சமுதாயம் அப்டி இல்ல, இங்க மல்லுகுடுக்கணும்… இங்கேந்து வரணும்னு போராடிய ஜெஜெ ஒரு கிரேட் பெமினிஸ்ட்.

பத்து கொலை பண்றவன வில்லன்னும் அவனையும் சேத்து பதினோரு பேரையும் கொலை பண்றவனை ஹீரோன்னும் காரணமே இல்லாமல் கொண்டாடறோம். ‘இந்த அம்மா எங்க மண்ணோட மைந்தர்’ன்னு நாங்க போஸ்டர் ஒட்ட, நான் அதிமுக-காரியாகவோ, எம்ஜிஆர் ரசிகையாவோ, அம்மா திட்டத்தோட பயனராவோல்லாம் இருக்க வேண்டாம்… ஒரு பெண்ணாக இங்கே வாழ்ந்தாலே போதும்.

படைப்பு:

மீரா

மீரா. வயது முப்பது. மாநிறம். ஐடி ஊழியர். அம்பத்தூர்வாசி. காணாமல் போனால், தேடாமல் இருப்பது நல்லது. இருப்பதை உண்டு உறங்கும் உங்களைப் போல் ஒருவள்.