கோமதி சுப்பிரமணியம் (1926 – 2011)

பெண்கள் கூண்டுகிளிகளாக இருந்த அந்தக் காலத்தில், எழுத்தின் மூலம் தன் சிறகுகளை விரித்து சுதந்திர வானில் பறந்தவர். அறுபத்தேழு ஆண்டுகள் அற்புதமான கதைகளை எழுதி தமிழ் படைப்புலகுக்குப் பங்களித்தவர். ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி. சிவத்தின் தாயார் என்கிற பெருமைகளுக்கெல்லாம் உரியவர் கோமதி சுப்ரமணியன். அவரின் சிறப்புகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் கோமதி சுப்ரமணியத்தின் எழுத்துகளின் மீது தீவிர ஈடுபாடு உடைய அவருடைய மகன் எழுத்தாளர் எம்.எஸ். பெருமாள்.

“திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிச்சீமையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி நம்பிராஜ பிள்ளை – சிவகாமி தம்பதியின் மகளாக 25.08.1926 இல் பிறந்தார். பள்ளிப் படிப்பு எட்டாம் வகுப்பு மட்டும். அன்றைய காலகட்டத்தில் வெளியான வார, மாதப் பத்திரிகைகள், நூலாக வந்த நாவல்கள் இவற்றை மகளுக்காகத் தொடர்ந்து வாங்கித் தந்து கதைகள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தவர் தாத்தா நம்பிராஜ பிள்ளை. அப்போது இருவருக்குமே தெரியாது, ‘சுகி’ என்கிற புனைபெயரில் எழுதும் அறிமுக எழுத்தாளர் சுப்ரமணியன் என்பவர்தான் அந்தக் குடும்பத்தின் மாப்பிள்ளையாக வரப்போகிறார் என்று. அம்மாவின் பதினைந்தாவது வயதில், 1941ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

அப்பா ‘சுகி’யின் நண்பர்கள் மீ.ப.சோமு, கே.பி.கணபதி, டி.கே.சியின் புதல்வர் தீத்தாரப்பன், சுந்தா போன்றோர் இலக்கிய ஆர்வமும் எழுத்தாற்றலும் பெற்றவர்கள். திருமண வீட்டில் அத்தனை எழுத்தாளர்களை ஒன்றுசேரப் பார்த்ததே கோமதிக்கு பெரும்வியப்பு.

அப்பாவின் நண்பர் சுந்தா (பின்னாளில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை ‘பொன்னியின் புதல்வர்’ என்கிற தலைப்பில் தொடராக எழுதியவர்.) மற்ற நண்பர்கள் எவருக்குமே தோன்றாத அளவில் இரண்டு பார்க்கர் பேனாக்களை அப்பாவிற்குத் திருமணப் பரிசாக அளித்தார். மாப்பிள்ளை சுகி, எழுத்தாளர், பேனாவைப் பரிசளிப்பதில் நியாயம் உண்டு. மணமகளுக்கும் எதற்கு பேனா?

அப்பாவின் கதைகளைப் படித்தும் வானொலி நாடகங்களைக் கேட்டும் ரசித்ததோடு, ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஒரு பெண்ணின் கோணத்தில் சில தர்க்கங்களையும் எடுத்துரைத்ததை ரசித்துப் பாராட்டும் விதமாக பார்க்கர் பேனாவில் ‘கோமதி சுப்பிரமணியம்’ என்று பெயர்பொறித்து ‘நீயும் எழுதத்தொடங்கு’ என அம்மாவிற்கு அந்தப் பேனாவைக் கொடுத்திருக்கிறார் அப்பா. திருமணத்திற்குப் பிறகு அப்பாவின் ஊக்கத்தோடு தன் முதல் கதையை எழுத ஆரம்பித்திருக்கிறார். அதன் பிறகு படிப்படியாக அடுத்தடுத்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார் அம்மா.

அம்மா எழுதிய முதல் கதை ‘மனக் கண்ணாடி’யை கல்கி இதழில் உடனடியாக வெளியிட்டதுடன், கடிதம் மூலமாகத் தன் ஆசிகளையும் வழங்கினார் ஆசிரியர் கல்கி. ‘கல்கி’ இதழ் முதன்முதலாக நடத்திய சிறுகதைப் போட்டியில் அம்மா எழுதிய ‘பாட்டி சொன்ன கதை’ இரண்டாவது பரிசு பெற்றது. அந்த உற்சாகத்திலும் வரவேற்பிலும் தொடர்ந்து கதைகளை எழுதத் தொடங்கினார்.

1943 முதல் 1953 வரை 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என ஆறு குழந்தைகளின் பிறப்பு – வளர்ப்பு என்கிற குடும்பப் பொறுப்புகளுடன் நேரத்தை ஒதுக்கி, இரவு நெடுநேரம் கண்விழித்து சிம்னி விளக்கின் ஒளியில் சளைக்காமல் எழுதுவார் அம்மா.

எழுதும்போது கடிக்க கடலைமிட்டாயும் குடிக்க கடுங்காப்பியும் பக்கத்திலேயே இருக்கும். சில நாட்கள் “ஏளா… ஆறின காப்பியெ ஏங் குடிக்க? நான் சூடா போட்டுக் கொண்டு தாரேன்’’ என்று கரிசனத்துடன் காபி டம்ளரை நீட்டுவார் பாட்டி (அப்பாவின் அம்மா).

‘சாகாத வாழ்வுக்கு சஞ்சீவி’ என்கிற சிறுகதை, கல்கி ஆகஸ்ட் மாதச் சிறுகதைப் போட்டியிலும், ‘தியாகத்துக்கு ஒரு தனயன்’ கல்கி நெல்லை மாவட்ட சிறுகதைப் போட்டியிலும் முறையே முதல் பரிசும் இரண்டாம் பரிசும் பெற்றன. ‘குமுதம்’ பத்திரிகையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு குமுதம் நிறுவனம் நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் ‘பந்தயம்’ என்கிற சிறுகதைக்கு அம்மா கோமதி சுப்ரமணியன் முதல் பரிசு பெற்றார்.

‘ஆனந்த விகடன்’ வார இதழில் ‘துரோகமா?’, ‘பாசம் என்கிற சொல் எதற்கு?’ஆகிய சிறுகதைகள் ‘முத்திரைக்கதை’ என்கிற சிறப்புத் தகுதி மற்றும் கூடுதல் சன்மானத்துடன் பிரசுரிக்கப்பட்டன.

கலைமகள், அமுதசுரபி ஆகிய மாதப் பத்திரிகைகளிலும் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், தினமணிக் கதிர் முதலிய வார இதழ்களிலும் தொடர்ந்து இவர் படைப்புகள் பிரசுரமாகி வந்தன. பத்திரிகை ஆசிரியர்களே கடிதம் எழுதிக் கேட்டுச் சிறப்பிதழ்களிலும் தீபாவளி, பொங்கல் மலர்களிலும் ஆண்டுதோறும் கதைகளைப் பிரசுரித்தார்கள்.

அம்மா பிறந்தது திருநெல்வேலி எனினும் அப்பாவின் பணி காரணமாக சென்னை, திருச்சி என வசித்துவந்தார்கள். அப்பா திருச்சி வானொலி நிலையக் கலைஞராகவும், பின்னர் சென்னை வானொலியில் நாடகத் தயாரிப்பாளராகவும் பணியிலிருந்த காரணத்தால் அகில இந்திய வானொலி நிலையங்களுக்கு நாடகம் எழுத வேண்டாம் என்கிற சுயக்கட்டுப்பாட்டுடன் அம்மா இருந்தார். ஆனால், அதே நேரம் வானொலி நாடகம் எழுதும் முயற்சியைக் கைவிடவும் மனமில்லை. இலங்கை வானொலிக்கு கால்மணி, அரைமணி நேர நாடகங்களை எழுதி அனுப்பினார். உடனடியாக அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பாகின.

நேயர்களிடம் பெற்ற வரவேற்பு காரணமாக ‘குணநாயகத்தின் குடும்பம்’ என்கிற ஐம்பது வாரத் தொடர் எழுதும் வாய்ப்பை இலங்கை வானொலி அம்மாவிற்கு வழங்கியது. அந்த அனுபவம் வீண்போகவில்லை. அப்பா பணிநிறைவு பெற்று வானொலி நிலையத்தை விட்ட பிறகு, சென்னை – புதுவை வானொலிகளிலும் சென்னை தொலைக்காட்சியிலும் அம்மாவின் நாடகங்கள் இடம்பெறத் தொடங்கின.

குமுதம் வார இதழில் கோமதி எழுதிய ‘சட்டத்திற்கு வாழ்க்கைப்பட்டவள்’ என்கிற சிறுகதையை இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் விரும்பி வாங்கி திரைக்கதை வசனம் எழுதி இயக்கி ‘மாலதி’ என்கிற திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டார்.

நூல்வடிவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

சரஸ்வதி ராம்நாத் இந்தியில் மொழிபெயர்த்து பதிப்பித்த சிறந்த சிறுகதைகளின் தொகுப்பில் கோமதியின் படைப்பு ‘மம்தா’ என்கிற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சரஸ்வதி ராம்நாத் எழுதிய ‘தமிழ்நாட்டு பெண் எழுத்தாளர்கள்’ என்கிற இந்தி நூலில் அம்மாவின் படைப்புகள் பற்றிய கட்டுரையும் கதைச் சுருக்கங்களும் வெளிவந்துள்ளன.

கோமதி பெரிதும் விரும்பிப் படித்த கதைகள் வை.மு.கோதைநாயகி, லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா ஆகியோர் எழுதியவையே.

கோமதியின் நெருங்கிய தோழிகள் பாடகி டி.எஸ். பகவதி, லலிதா பாரதி, எழுத்தாளர்கள் கிருஷ்ணா, கோமகள், சரோஜா ராமமூர்த்தி, அனுராதா ரமணன் ஆகியோர். இவர்கள் சந்தித்தால் ஒவ்வொருவர் எழுத்துகளிலும் உள்ள கதைக்கரு, நடை, பாத்திரப்படைப்பு எல்லாம் தீவிரமாக அலசப்படும். ஒவ்வொரு சந்திப்பும் ஒவ்வொருவர் வீட்டில் நடைபெறும். காரசாரமான விவாதத்தின் முடிவில் அவரவர் கைப்பக்குவதில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளும் சிற்றுண்டிகளும் சித்திரான்னங்களும் சந்திப்பை இனிமையாக்கும்.

அம்மா எழுதிய கதைகள் பெரும்பாலும் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே அமைந்திருக்கும். குறிப்பாக, பெண்ணின் பெருமிதங்கள் தூக்கலாக இருக்கும். மண்ணின் மகத்துவம், உழைப்பின் மேன்மை, பெண்ணியத்தின் எல்லைக்கோடு, பணிபுரியும் பெண்களின் சாதனை, மூத்த குடிமக்களின் அனுபவச்சுரங்கம் ஆகியவற்றை அடிப்படியாகக் கொண்டிருப்பதால் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றதில் வியப்பொன்றுமில்லை! அம்மா 23.5.2011 அன்று காலமானார்.”

படைப்பாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

­­