என் வாழ்க்கையை மாற்றிய, என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண்ணாக நான் பார்த்த புதுமைப் பெண், புரட்சிப் பெண் என் பள்ளி தலைமையாசிரியர் சகோதரி வெண்ணான்சியா. எங்கள் பள்ளியில் படித்த அத்தனை மாணவிகளுக்கும் அவர் ஒரு முன்னுதாரணம், வழிக்காட்டி. ஒரு தலைமையாசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
சூளை காளத்தியப்பன் தெருவில் அமைந்துள்ள புனித சூசையப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பல பெண் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. இந்தப் பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கப்பட்டதால், இங்கு படித்த குழந்தைகள் பெரும்பாலும் முழுமையாகப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகே வெளியே சென்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின், வறுமையில் சிக்கி வாடிய, சமுதாயத்தின் பார்வையில் குப்பைகளுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களின், அவர்களின் குழந்தைகளின் விடிவெள்ளி இந்தப் பள்ளி.
1991ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கு நாங்கள் மாற்றப்பட்டோம். அன்றுதான் புதிதாக எங்கள் தலைமையாசிரியரும் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று முதல் அந்தப் பள்ளி மாணவிகள் அனைவரும் அவர்களின் குழந்தைகளாக மாறினோம். ஆசிரியர்கள், மாணவிகள், பணியாட்கள் என்று பள்ளியே மாற்றம் கண்டது. ஐந்து வருடக் கால உழைப்பு, எங்கள் பள்ளி மட்டும் அல்ல எங்கள் வாழ்வும் மலர்ந்தது.
32 வருடங்களுக்கு முன்னால், தனி ஒருவராக நின்று பெண்கள் பயிலும் பள்ளியை வழிநடத்துவது என்பது எத்தனை பெரிய சவால். சூளை, அதனைச் சுற்றி அமைந்த பகுதிகளில் வாழ்ந்த மிகவும் எளிய, நாகரிகம் அறியாத, பாமர மக்களின் குழந்தைகளை வழிநடத்திய ஒரு சாதனைப் பெண் சகோதரி வெண்ணான்சியா. விண்ணப்பதாளில் எங்களின் முகவரியைப் பார்த்ததும் ஒதுக்கும் பள்ளிகள் நிறைந்த வேளையில் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்த கல்விதாய்.
கருணையை மறைத்து, கண்டிப்பை மட்டும் வெளிப்படுத்தி எங்களை வழிநடத்தியவர். ஒவ்வொரு வாரமும் மாணவிகள் முன்பு பேசுவார்கள். பெண் குழந்தைகள் வளர்க்கப்படும் விதம், சமுதாயத்தில் பெண்களின் நிலை, வீட்டில் பெண் குழந்தை வளர்க்கப்படும் விதம், பாலின பாகுப்பாடுகள், வேறுபாடுகள், பெண் சுதந்திரம் என்று அவர்கள் பேசிய வார்த்தைகளே எங்களுக்கு ஒரு புது சக்தியைத் தந்தது. சிறு வயதில் மனதில் அவர்கள் பதிய வைத்த அக்னி விதையே எங்கள் வாழ்வை மாற்றியது. சமுதாயத்தில் நாங்கள் தலைநிமிர்ந்து வாழ, கல்வியும் தன்னம்பிக்கையும் தந்தது.
பழைய கட்டிடங்களுக்கு நடுவில் கண்ணாம்மூச்சி விளையாடிய எங்களை முதல் முறையாக டென்னிஸ் விளையாட அழைத்தார். கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளை விளையாட மைதானங்களைக் கட்டினார். விளையாட்டையும் கற்றுத் தந்தார். புதிய வகுப்பறைகளைக் கட்டினார், மிகப் பெரிய நூலகத்தை அமைத்தார். கால அட்டவணையில் நூலகத்திற்கும் கட்டாய வகுப்பு நேரம் ஒதுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு வாசிப்பின் அவசியம் உணர்த்தப்பட்டது. பள்ளியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதற்கு எல்லாம் நிதி எங்கே இருந்து எடுக்கப்பட்டது?.
ஒரு வேளை சாப்பிடுவதற்கே திணறினாலும் பெண் குழந்தைகளை படிக்க வைக்கப் போராடும் ஏழை மக்களிடமா நிதி கேட்க முடியும்? எங்கள் தலைமையாசிரியரே நிதி திரட்டினார். பள்ளியே மூலதனம். பள்ளியில் மிகப் பெரிய கண்காட்சியை நடத்தினார். மாணவிகளும் ஆசிரியர்களும் சேர்ந்து தின்பண்டங்கள், அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டுக் கூடங்கள், அறிவியல் கண்காட்சிகள், அலங்காரப் பொருள்கள் என்று பல கடைகளை அமைத்து, விற்பனை ஆரம்பம் ஆனது. பெற்றோர்களும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வியாபாரத்தின் லாபம் பள்ளி நற்பணிக்கு வழங்கப்பட்டது.
மாணவிகளை வைத்து பெண் அடிமை, பெண்ணியம் சார்ந்த மேடை நாடகங்கள் நடத்தப்பட்டு, அதனை ஒலிநாடாக்களாக மாற்றி விற்பனை செய்தார்கள். தலைமையாசிரியரின் நண்பர்கள், சமூக ஆர்வலர்களிடம், தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் நிதியைத் திரட்டினார்கள்.போதுமான நிதி சேர்ந்தது, மைதானம், பொது அரங்கம், புதிய வகுப்பறைகள், நூலகம் என்று எங்கள் பள்ளி புதுப்பொலிவுப் பெற்றது. அடுத்து மாணவிகளின் பக்கம் கவனம் திருப்பியது.
கட்டிட வேலைகளுக்கு மத்தியில், மாணவிகளின் பழக்க வழக்கங்களை மாற்றினார். ஒரு நாள் விடுப்பு என்றாலும் தலைமையாசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். கால தாமதமாக வருதல் கண்டிக்கப்பட்டது. நேர்த்தியாகச் சீருடை அணிய மாணவிகள் பழக்கப்பட்டனர். நீல பாவாடையும் சட்டையும் தாவணியும் சுடிதாராக மாற்றப்பட்டது. தினமும் குளிக்க , கரி, சாம்பலை தவிர்த்து பற்பசை, பல் துலக்கிகள் பயன்படுத்த கற்றுத் தரப்பட்டது. ஏற்ற தாழ்வுகளைக் களைய தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிய தடை விதிக்கப்பட்டது. பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் மட்டுமே மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகள் நூலகத்தைப் பயன்படுத்தும் போது, குழந்தைகளுடன் அமர்ந்து புத்தகங்களைத் தேர்வு செய்ய உதவுவார். குழந்தைகள் உண்ணும் போது அருகில் வந்து மதிய உணவின் தரம் பார்ப்பார். சிந்தாமல் உணவை உண்ண, ஐந்து விரல் கொண்டு நேர்த்தியாக உண்ண கற்றுக் கொடுப்பார். ஊட்டச் சத்து மிக்க உணவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவார். எங்களுடன் சேர்ந்து விளையாடுவார்.
எங்களுக்காக ஒரு நாள் ஒதுக்கப்படும், அன்று மேடை எங்களுடையது. ஒவ்வொரு வகுப்பும் கண்டிப்பாக ஒரு கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும். இயல், இசை, நாடகம் அனைத்தும் மாணவிகளின் கூட்டு முயச்சி. முதல் மேடையை நாங்கள் ஆளத் தொடங்கியதும், எங்களைவிட எங்கள் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் மூழ்கினர். பிறகு, ஆர்வம் உள்ள குழந்தைகளுக்குத் தனித் தனியாக இலவசமாக நடனம், பாட்டு, வீதி நாடகம், கரகாட்டம், தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்ய என்று தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களால் கற்றுத் தரப்பட்டது.
முப்பது வருடங்களுக்கு முன்பே எங்களுக்குக் கணிப்பொறி வகுப்புகள், ஆங்கிலம் பேச (ஸ்போக்கன் இங்கிலீஷ்) வகுப்புகள், பத்திரிகை துறை மற்றும் ஊடகவியல் பற்றிய விழிப்புணர்வு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவற்றைக் கையாளும் தெளிவு, தைரியம், மனப்பக்குவம், சட்டமுறைகள், மாதவிடாய் பற்றிய தெளிவு என அனைத்தும் சொல்லித் தரப்பட்டது.
அரசியலைப் பற்றிய புரிதல் வேண்டும் என்று, எங்களுக்குத் தேர்தல் வைத்தார். வேட்பாளர்களாக மாணவிகளை நிற்க வைத்து, ஒட்டுப் போடும் முறையைக் கற்றுத் தந்தார். பள்ளித் தலைமை மாணவி மற்றும் சட்டசபையில் உள்ளது போல் அமைச்சர் பதவிகளை ஏற்படுத்தி பொறுப்புகளை எங்களிடமே கொடுத்தார். எங்களின் ஆளுமை திறமையை வளர்த்தார்.
அரசியல்வாதிகளுடன் போராடி எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடினார். பள்ளிக்கு வரும் வழியில் ஆடவர்களால் மாணவிகள் சந்திக்கும் இன்னல்களில் இருந்து விடுபட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தினார். மாணவிகளின் மனதில் தைரியத்தை விதைத்தார்.
மாலையில் வகுப்புகள் முடிந்தவுடன் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடக்கும். அதில் நாங்கள் குழுக்களாக அமர்ந்து, பாடங்களைப் படிக்க வேண்டும். பாடம் புரியாத மாணவிகள், புரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ள முடியும். இதற்கு எங்களுக்குக் கரும்பலகைகளைப் பயன்படுத்த அனுமதி உண்டு. எங்களின் கல்வி, திறமை இதனால் வளர்ந்தது. எங்களுக்கு ஓர் ஆசிரியரின் அனுபவம் கிடைத்தது.
சிறு வயதில் காதல், திருமணம் என்று மாறும் மாணவிகளுக்கு, படிப்பின் அவசியமும் பருவ மாற்றங்களையும் புரிய வைத்து கவனத்தைச் சிதறாமல் படிக்க வழிகாட்டினார். இதனால், பெற்றோருக்குத் தெரியாமல் நடக்கும் திருமணங்கள் தடுக்கப்பட்டன. கட்டாயத் திருமணங்களும் மறுக்கப்பட்டன. ஆம், என் படிப்பு முடிந்த பிறகே என் திருமணம் என்று பேசும் தைரியம் மாணவிகளுக்கு வந்தது.
ஓங்கும் கைகளைத் தாக்கும் முன்பு தடுக்க வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். பெண் என்பவள் நெருப்பு போல் வாழ வேண்டும் என்று புரிய வைத்தார். தலை குனிந்து நடந்த எங்களைத் தலை நிமிர்ந்து நடக்க வைத்தார்.
ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் எல்லாப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும், ஆனால் நாங்கள் மட்டும் பத்து நாட்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். புத்தகங்கள் அனுமதியில்லை, வகுப்புகள் மூடப்படும், பள்ளியில் நமக்குப் பிடித்த இடத்தில், பிடித்த தோழியுடன் அமர்ந்து கதை பேசிக்கொண்டே கைவினைப் பொருட்கள் செய்யலாம். தனியாக அமர்ந்து கதை, கட்டுரை, எழுதலாம். நமது தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வர இது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
எங்கள் பள்ளி மாணவர்கள் மருத்துவராக, பொறியாளராக, ஆட்சியாளராக இருக்கின்றனர் என்பதில் எத்தனை பெருமை உள்ளதோ, அதைவிடப் பல மடங்கு பெருமை கொண்டது எங்கள் பள்ளி. காரணம் ஒன்று மட்டுமே, ஒரு வேளை உணவு உண்ணவே போராடிய குழந்தைகள் இன்று மூன்று வேளையும் நல்ல உணவு, உடை, உறைவிடம் என்று வாழ்ந்து வருகின்றனர். கல்வி அவர்கள் வாழ்வை மாற்றியது. இன்றும் எங்கள் பள்ளியில் எதிர்காலக் கனவுகளுடன் பல குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
வருடங்கள் பல கடந்துவிட்டன, எங்கள் தலைமையாசிரியரை நாங்கள் மீண்டும் சந்திக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் விதைத்த விதைகள் நாங்கள், விருட்சமாக மாறிவிட்டோம். ஒரு முறை அவரைப் பார்க்க ஆசை இன்றும் என்றும் இருக்கும். எங்களின் வழிக்காட்டி அவர். நான் சந்தித்த தலைசிறந்த பெண் , என் தலைமையாசிரியர் வெண்ணான்சியா.
படைப்பாளர்:
எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.
Nice description Vanitha. Keep it up 👍